இளசு புதுசு!



ஸ்வீட் நியூ ஹீரோயின்களின் படையெடுப்பால் ஸ்தம்பித்து நிற்கிறது கோலிவுட். முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகக்கூட புதுப்புது பெண்கள் வந்திருக்க, ‘யப்பா! யார்றா இந்தப் பொண்ணு’ எனக் கேட்க வைக்கும் சிலரின் பியூட்டிடேட்டா...

நான் ரஹ்மான் ரசிகை!

மலையாளத்தில் ‘பிரேமம்’, தமிழில் ‘காதலும் கடந்து போகும்’ படங்களில் கவனிக்க வைத்த ஹோம்லி பூங்கொத்து மடோனா செபாஸ்டியன். பூர்வீகம் கேரளா, எர்ணாகுளம். படித்தது, வளர்ந்தது பெங்களூரு. பி.காம் முடித்திருக்கும் மடோனா நல்ல பாடகியும் கூட! ‘‘சின்ன வயசுல இருந்தே  கர்னாட்டிக், வெஸ்டர்ன்னு கிளாஸ் போக ஆரம்பிச்சிட்டேன். நல்ல சிங்கர்னு பெயர் எடுத்திருக்கேன். மலையாளத்தில் டி.வி. ஷோக்கள்ல நிறைய பண்ணியிருக்கேன். என்னோட ஷோ பார்த்துதான் அல்போன்ஸ் புத்திரன் சார் ‘பிரேமம்’ சான்ஸ் கொடுத்தார்!’’ - என ஃப்ளாஷ் பேக் சொல்லி சிரிக்கிறார் மடோனா.



‘‘ ‘பிரேமம்’ல என்னோட கேரக்டர் பெயர் செலின். அந்தப் படத்தை பார்த்த எல்லாருமே என்னை ‘செலின்’னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அந்தப் படத்தோட சவுண்ட் டிசைனர்தான் நலன் குமாரசாமி சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். அப்படி வந்ததுதான் ‘காதலும் கடந்துபோகும்’. மியூசிக்ல எனக்கு பயங்கர ஆர்வம். ராஜா சார், ரஹ்மான் பாடல்கள் கேட்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகை நான். மியூசிக் ஆல்பங்கள் பண்ற ஐடியாவும் இருக்கு. நான் மலையாளத்தில் பாடிய பக்திப் பாடல்கள் அங்கே செம ஹிட். ஒரு நடிகையா மட்டுமில்லாமல் நல்ல பாடகியாகவும் என்னை நான் நிரூபிக்கணும். அதை நோக்கியே பயணிப்பேன்!’’

புரூஸ்லீ பொண்ணு!

கன்னடம், தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோயின் கிருதி ஹர்பந்தா. டெல்லியில் பிறந்த பஞ்சாபி பன்னு! இந்தப் பொண்ணுக்கும் புரூஸ்லீக்கும் அப்படியொரு பொருத்தம். தெலுங்கில் ராம்சரணின் ‘புரூஸ்லீ’யில் நடிச்ச கிருதி, தமிழில் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக அறிமுகமாகும் படத்தின் பெயரும் ‘புரூஸ்லீ’!

‘‘பிறந்தது டெல்லினாலும், நான் படிச்சு, வளர்ந்தது பெங்களூருவில். ஜுவல்லரி டிசைனிங் கோர்ஸ் கூட முடிச்சிருக்கேன். ஜாலியா மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு விளம்பர போர்டுல சிரிச்சுக்கிட்டு இருந்த என் முகத்தைப் பார்த்துட்டு தெலுங்கில் ‘போனி’ பட வாய்ப்பு வந்தது. ‘போனி’ பார்த்து கன்னடத்தில் ‘சிரு’ படம் மூலம் என்ட்ரி ஆனேன். தெலுங்கு, கன்னடத்துல 15 படம் முடிச்சாச்சு. இப்போ ஒரே நேரத்துல ஐந்து கன்னடப் படங்கள்ல நான் பிஸி!’’

‘‘தமிழில் அறிமுகமானது எப்படி?’’
‘‘தெலுங்கில் என்னோட படங்கள் பார்த்துதான் தமிழ்ல ஆஃபர் வந்துச்சு. அங்கே நான் நடிச்ச படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைச்சிருக்கார். அவரே ஹீரோன்னதும் ஹேப்பியாகிடுச்சு. ‘புரூஸ்லீ’ ஷூட்டிங்கில் ஒருநாள், எனக்கு ஃபுட் அலர்ஜி ஆகிடுச்சு. டைரக்டர் பிரசாந்த் பாண்டிராஜ், ஜி.வி.பிரகாஷ்னு யூனிட்ல இருந்த எல்லாரும் பதறிட்டாங்க. அன்னிக்கு படப்பிடிப்பை ஒத்தி வச்சாங்க. அதுக்காக எல்லார்கிட்டயும் ஸாரி கேட்டுக்கறேன். அடுத்து இந்தியில் விக்ரம் பட் டைரக்‌ஷன்ல ‘ராஸ் ரீபூட்’ல கமிட் ஆகியிருக்கேன். ஷூட்டிங் போயிட்டிருக்கு!’’

சிம்பு ரொம்ப ஃப்ரெண்ட்லி!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மஞ்சுமா மோகன்.  ‘பிரேமம்’ ஹீரோ நிவின்பாலிவுடன் நடித்த ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ மூலம் மல்லுவுட் மக்களின் மனம் கொய்தவர். கௌதம்மேனன் - சிம்பு காம்பினேஷனில் உருவாகிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’தான் மஞ்சுமாவின் தமிழ் அறிமுகம். இந்தப் பட ரிலீஸுக்கு முன்பே விக்ரம்பிரபு, உதயநிதி படங்களில் கமிட் ஆகிவிட்டார் மஞ்சுமா.



‘‘அதென்ன மஞ்சுமா?’’
‘‘பியூட்டிஃபுல்னு அர்த்தம். பிறந்தது கேரளாவில். காலேஜ் படிச்சது சென்னையில். அதனாலேயே சென்னை மக்களைப் பிடிக்கும். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமா நான் அறிமுகமான படம், ‘களியூஞ்சல்’. சைல்டு ஆர்ட்டிஸ்டா கேரள அரசின் விருதுகள் கூட வாங்கியிருக்கேன். அங்கே நான் நடிச்ச படங்கள் பார்த்து கௌதம் மேனன் சார் என்னை செலக்ட் பண்ணினார்.

கௌதம் சார் ஷூட்னாலே, டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸ்டா வொர்க் பண்ண முடியும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் இந்தப் படம் ரெடியாகுது. ஒரே எக்ஸ்பிரஷனை அடுத்தடுத்து பண்ணி நடிக்க வேண்டியிருந்தது. அதுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அதனால இனி, ஃப்யூச்சர்ல பைலிங்குவல் படம் பண்ண யோசிப்பேன்!’’

‘‘சிம்பு..?’’
‘‘சிம்பு சார், செம பிரில்லியன்ட். ஷூட்டிங் தொடங்கும்போது, சிம்புன்னதும் கொஞ்சம் பயந்தேன். ஆனா, அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி. சினிமாவில் நிறைய விஷயங்கள்ல எக்ஸ்பர்ட்டா இருக்கார்!’’

ஐயெம் எ லக்கி கோள்!

‘‘ஒரு காபி ஷாப்பில்தான் கௌதம் மேனன் சார் அறிமுகம் ஆனார். சின்னதா ஒரு ஸ்கிரீன் டெஸ்ட் எடுத்தாங்க. ‘நீங்க செலக்ட் ஆகிட்டீங்க’னு கௌதம் சார் சொன்னதும், ஆச்சரியமாகிடுச்சு. ஆனா, என்ன படம்? யார் ஹீரோ?னு எதுவும் தெரியல. அப்புறம், ஷூட்டிங் போனால் அங்கே தனுஷ்! ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆகிடுச்சு பாஸ்!’’ - செம ஃப்ரெஷ் சிரிப்பில் மிதக்கிறார் மேகா ஆகாஷ். அறிமுகப் பட ரிலீஸுக்கு முன்பே, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’வில் தனுஷின் ஜோடியாக ப்ரொமோஷன் ஆகியிருக்குது பொண்ணு!

‘‘சின்னதா ஒரு இன்ட்ரோ...’’
‘‘நான் சென்னை பொண்ணு. அப்பா ஆகாஷ், அம்மா பிந்து ஆகாஷ்... ரெண்டு பேரும் விளம்பர நிறுவனத்துல வொர்க் பண்றாங்க. டபிள்யு.சி.சி. காலேஜ்ல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிருக்கேன். பாலாஜி தரணீதரன் டைரக்‌ஷன்ல காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்கக் கதை’ மூலம் அறிமுகமாகுறேன்!’’

‘‘எப்படி இருந்தது துருக்கி அனுபவம்?’’
‘‘சூப்பர்ப். எனக்கு ட்ராவலிங் ரொம்பப் பிடிக்கும். அதுவும், என்னோட ரெண்டாவது படமே வெளிநாட்டில் ஷூட்டிங்னதும் இன்னும் சந்தோஷமாகிடுச்சு. முதல் தடவையாக ஃபாரீன் ஷூட் போயிட்டு வந்திருக்கேன். அதுவும் தனுஷ் சார் காம்பினேஷன்ல நடிச்சது இன்னும் அழகான விஷயமாகிடுச்சு!’’

‘‘அடுத்து..?’’
‘‘சுசீந்திரன் சார் இயக்கத்தில் உதயநிதி, விஷ்ணு நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருக்கேன்!’’

- மை.பாரதிராஜா