+2வுக்குப் பிறகு...எதிர்காலம் உள்ள எஞ்சினியரிங் படிப்புகள்!



நான்கே ஆண்டுகள்... படிப்பு முடிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை உறுதியாகிவிட வேண்டும். கல்லூரியிலிருந்து காலை வெளியில் எடுத்து வைக்கும் கடைசி நாளுக்கு அடுத்த நாளே வேலைக்குச் சென்றுவிட வேண்டும். எஞ்சினியரிங்கை நோக்கிக் குவியும் பெரும்பாலான மாணவர்களின் இலக்காக இதுவே இருக்கிறது! இது சரியா, தவறா என்ற விவாதத்துக்குப் போவதை விட, எப்படித் தேர்ந்தெடுத்துப் படித்தால் இந்தக் கனவை சாத்தியமாக்கலாம் எனப் பார்க்கலாம்!



கெமிக்கல் எஞ்சினியரிங் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதிலிருந்து உதித்த சில கிளைப் படிப்புகள் மாணவர்கள் மத்தியில் கவனம் பெறாமலேயே இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத் தகுந்தது Ceramic Technology. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது செராமிக். குழாய்கள், தரை, கூரை ஓடுகள், கட்டுமானப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், குளியலறைத் தளவாடங்கள், மருத்துவ சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள், ஏவுகணைகள் என எல்லாவற்றிலும் செராமிக்கின் பயன் உண்டு. செயற்கை எலும்புகளாகக் கூட செராமிக்கை பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் நிறைய! 

Food Technology படிப்பும் அப்படித்தான். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தஞ்சாவூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராப் பிராஸசிங் டெக்னாலஜி, மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் மருத்துவத்துறை, ஹோட்டல்கள், உணவு ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றலாம். 

Textile Technology படிப்புக்கும் மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. ஃபேஷன் சார்ந்து மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சித் துறைகளிலும் இந்தப் படிப்பை முடித்தவர்கள் பணியில் இணையலாம். எஞ்சினியரிங் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது Computer Science and Engineering. இந்தத் துறையைப் பற்றி ஏராளமான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆனால், இன்றளவும் எவர்கிரீனாக, படித்தவுடன் வேலை பெற்றுத் தருவதாக, நம்பிக்கை அளிக்கக்கூடிய படிப்பாக இருப்பது இதுதான்.

ஒருகாலத்தில் இந்தத் துறையில் இந்தியாவுக்குப் போட்டியே இல்லை. இன்று பல்வேறு நாடுகள் அவுட்சோர்சிங் பணியில் நம்மோடு போட்டியிடுகின்றன. வேலை தரும் மேலை நாடுகள் இந்தப் போட்டியைப் பயன்படுத்திக் கொண்டு நமக்குத் தரும் விலையைக் குறைத்து விட்டன. அதனால் சற்று மந்தம் நிலவுகிறதே தவிர, மோசமான பாதிப்பு இல்லை என்பதே எதார்த்தம். அதனால் வேலைவாய்ப்புக்கெல்லாம் எந்த பங்கமும் இல்லை.

ஆனால், வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து தேர்ச்சி பெற்று நிராயுதபாணிகளாக வரும் மாணவர்களுக்கு இங்கு இடமில்லை. துறை சார்ந்த நடைமுறை அறிவு, சமகால முன்ேனற்றங்கள், பணித்திறன், மொழித்திறன், தேவையான சாஃப்ட்வேர்கள், பேச்சுத்திறன் என சகல ஆளுமைகளோடு வருபவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.

Information Technology, Communication and Computer Engg, Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Technology and Management ஆகியவை கம்ப்யூட்டர் சயின்ஸில் இருந்து உருவான தனித்துறை சார்ந்த படிப்புகள். சில கல்வி நிறுவனங்களில் Computer  Communication Engg. என்ற படிப்பும் வழங்கப்படுகிறது. எதையும் நல்ல கல்வி நிறுவனத்தில், ஈடுபாட்டோடு படிப்பவர்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

கடந்த ஆண்டில் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்த படிப்புகளில் ஒன்று Electrical and Electronics Engineering. இந்தத் துறைதான் பிற அனைத்துத் துறைகளுக்கும் அடிப்படை. அதனால் இப்படிப்பை முடித்த மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு துறையின் கீழே குவிந்து நிற்கத் தேவையில்லை. மருத்துவம், மோட்டார், ரேடார், கப்பல், தொலைத்ெதாடர்பு, மின் உற்பத்தித் துறை என எந்தத் துறையிலும் வாய்ப்பு தேடலாம். சில கல்லூரிகளில், தொழிற்சாலைப் பயிற்சியுடன் இணைந்த 5 ஆண்டு கால B.E. EEE படிப்பும் வழங்கப்படுகிறது.



இதிலிருந்து உருவான கிளைப் படிப்புகளில் ஒன்று, BE Instrumentation and Control Engineering. இது பல்துறைப் பொறியியல் பிரிவு. இதை முடித்தவர்கள் ரயில்வே, கட்டுமானம், தொலைத்தொடர்பு, ஆட்டோமொபைல், பெட்ரோலியம், வேதிப்பொறியியல் முதலிய துறைகளில் பணியாற்றலாம். சில கல்லூரிகளில் மட்டும் பி.இ. பிரிவில் Electrical Engineering - Power என்ற படிப்பு  வழங்கப்படுகிறது. இதிலும் தயக்கமின்றி சேரலாம். 

கடந்தாண்டு மாணவர்களை பெரிதும் ஈர்த்த அடிப்படைத் துறைகளில் மற்றொன்று, Electronics and Communication Engineering. கடந்த சில வருடங்களாக இப்படிப்பை முடித்தவர்களுக்கு ஐ.டி. துறையில் கணிசமாக வேலை கிடைத்து வருவதே மாணவர்களின் ஆர்வத்துக்குக் காரணம். மினிமம் கியாரண்டி படிப்பு இது. தைரியமாகத் தேர்வு செய்யலாம். இதிலிருந்து உதித்த படிப்புகள், Electronics and Instrumentation, Applied Electronics and Instrumentation, Electronics, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication.

எலெக்ட்ரானிக்ஸ் துறை கடந்த பத்தாண்டுகளோடு ஒப்பிடும்போது பெருமளவு வளர்ந்திருக்கிறது. அந்நிய முதலீடுகளும் இத்துறையில் ஏராளம் குவிந்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பல்லாயிரம் கோடி வருவதற்கும் வாய்ப்புள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் இல்லாமல் எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை. உற்பத்தித் துறைகள், சேவைத்துறைகள் என சகல துறைகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கான தேவை இருக்கிறது. வெளிநாடுகளிலும் இப்படிப்பை முடித்த பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குவிந்திருக்கின்றன. அதனால் மாணவர்கள் தயக்கமின்றி இப்படிப்பில் சேரலாம்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக Electronics and Telecommunication படித்தவர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. இப்படிப்பை முடித்தவர்கள் அரசுப்பணிகளையும் எதிர்பார்க்கலாம். பொறியியலில் பாரம்பரியமிக்க படிப்பென்றால், அது Mechanical Engineering படிப்புதான். ஒருகாலத்தில் இதனை மாணவிகள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்று மாணவிகளை ஈர்க்கும் துறையாக இது மாறியிருக்கிறது.

வேலைவாய்ப்பில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதால் மாணவிகள் குவிகிறார்கள். பேருந்து முதல் விண்வெளி ஓடங்கள் வரை வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றுவது மெக்கானிக்கல் எஞ்சினியர்கள்தான். துரதிர்ஷ்டம் என்னவென்றால், நம் பாடத்திட்டம் சற்று பின்தங்கியிருப்பதால் வெளிநாடுகளில் நம் பொறியாளர்கள் பின்னடைவைச் சந்திக்கிறார்கள். நல்ல கல்லூரிகளில், தொழிற்சாலை பயிற்சியோடு இணைந்த பாடத்திட்டத்தைப் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் நிச்சயம்.

இதிலிருந்து ஏகப்பட்ட கிளைப் படிப்புகள் உருவாகியிருக்கின்றன. Automobile, Industrial, Manufacturing, Marine, Mechanics and Automation, Mechatronics, Mining, Mining Machinery, Production, Robotics... 5 ஆண்டுகால Mechanical Sandwich படிப்பும் சில கல்வி நிறுவனங்களில் உண்டு. பொறியியல் படிப்பு பற்றி ஏராளமான எதிர்மறைக் கருத்துகள் நிலவுகின்றன. திறனுள்ள மாணவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நல்ல கல்லூரிகளில் ஈடுபாட்டோடு படித்து திறமையை வளர்த்துக்கொண்டு வெளிவரும் மாணவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது!



இதெலலாம புதுசு!

Marine Engineering படிக்க இந்த ஆண்டு முதல் கூடுதல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. +2ல் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் சராசரியாக 60% மதிப்பெண்கள் தேவை. அதோடு 10ம் வகுப்பு அல்லது +2ல் ஆங்கிலத்தில் 50%  மதிப்பெண் எடுத்திருக்கவும் வேண்டும். 25 வயதுக்கு மிகாமலும், எடையில் 48 கிலோவுக்கும், உயரத்தில் 157 செ.மீ.க்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கண்பார்வையில் குறை கூடாது. இதற்கு கட்டணம் கூடுதலாக இருக்கும். ஆனால் எதிர்காலம் வண்ணமயமாக இருக்கும்.

கடந்த ஆண்டு வரை Mining Engineering படிப்பில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டு விதிகளை சற்றுத் தளர்த்தி பெண்களுக்கும் இடம் அளிக்கப்படுகிறது. இத்துறை சற்று கடினமானது என்பதால் பெண்கள் யோசித்து எடுப்பது நல்லது.

- வெ.நீலகண்டன்