பிரெட் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்!



நம்மூரில் உடம்பு சுகமில்லாதவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் சாத்வீக உணவு பிரெட். கள்ளமில்லாத வெள்ளை உணவு என நாம் நினைத்திருந்த இதுதான் புற்றுநோயை உருவாக்குவதாக டெரர் கிளப்பியிருக்கிறது டெல்லியைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பு. உலகளவில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட பொட்டாசியம் ப்ரோமேட் (Potassium bromate), பொட்டாசியம் அயோடேட் (potassium iodate) எனும் இரு வேதிப் பொருட்கள் கலந்து பிரெட் தயாரிக்கப்படுவதுதான் இந்த ஆபத்துக்குக் காரணமாம்!



சி.எஸ்.இ எனப்படும் சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட் என்ற அமைப்புதான் இந்த விஷயத்தில் களத்தில் இறங்கியது. டெல்லியில் விற்கப்படும் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளான 38 வகை பிரெட் பாக்கெட்களை வாங்கி இந்த அமைப்பு சோதித்தது. அதில் 32 பிராண்ட்களில் இந்த வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உணவுகளில் சேர்க்கப்படும் (additives) வேதிப்பொருட்களின் அளவை பார்ட்ஸ் பெர் மில்லியன் (பி.பி.எம்) என்ற அளவையில் கணக்கிடுகிறார்கள்.

இந்தியாவில் விற்கப்படும் பிரெட்களில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் அயோடேட்டின் அளவு சுமார் 1.15 முதல் 22.54 பி.பி.எம் வரை இருந்திருக்கிறது. கொடுமை என்னவென்றால், இந்திய உணவுக் கட்டுப்பாட்டு அமைப்பே இந்த கெமிக்கல்களை இந்த அளவுக்கு உணவில் சேர்க்க பூரண சம்மதத்தை வழங்கியிருக்கிறது என்பதுதான். இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைக் கண்காணிப்பது ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இண்டியா (FSSAI) எனும் அரசு அமைப்புதான்.

இந்திய உணவுகளில் பொட்டாசியம் ப்ரோமேட் 50 பி.பி.எம் வரை இருக்க இது அனுமதிக்கிறது. ‘பல நாடுகள் இந்த வேதிப்பொருளையே தடை செய்திருக்கும்பட்சத்தில் இந்தியா இவ்வளவு அனுமதித்திருப்பது ரொம்ப ஓவர்’ என்கின்றன சுற்றுச்சூழல் அமைப்புகள். இப்போது ஒரு தனியார் அமைப்பு ஆய்வு செய்து அபாயமணி அடித்தபிறகு, ‘‘பொட்டாசியம் ப்ரோமேட்டை இனி உணவுப்பொருட்களில் பயன்படுத்தக்கூடாது என அறிவிக்கப் போகிறோம்’’ என்கிறார் FSSAI தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால்.

அப்படியென்ன வேதிப் பொருள் இது? இதை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?
‘‘உணவை மிருதுவாக்கவும் அதிக நாள் கெடாமல் தாக்குப் பிடிக்கும்படியும் ஆக்கத்தான் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் அயோடேட் போன்ற வேதிப் பொருட்கள் பேக்கரி பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதில் அயோடேட் எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. ப்ரோமேட்தான் நமது கிட்னியைத் தாக்கி காலப்போக்கில் புற்றுநோயை விளைவிக்கும்!’’ என்கிறார் உணவு நிபுணர் ஜே.சாய்பாபா. சென்னை தரமணியில் உள்ள ‘வேளாண் ஆய்வு நிறுவனம்’ என்ற தன்னார்வ நிறுவனத்தின் உணவுப் பாதுகாப்பு ஆய்வுப் பிரிவின் அறிவியல் பிரிவுத் தலைவர் இவர்.

‘‘குறிப்பாக இந்த ப்ரோமேட் உணவின் அளவைக் கூட்டிக் காண்பிக்கும். ஒரு பிடி மாவைக் கூட பலூன் போல உப்பச் செய்து பெரிதாகக் காட்டும். எனவே வர்த்தகக் காரணங்களுக்காக இது பிரெட்டில் சேர்க்கப்படுகிறது. 1982ல் ஜப்பான்தான் இந்த பொட்டாசியம் ப்ரோமேட் பற்றிய ஆய்வை நடத்தியது. எலிகளுக்கு இந்த வேதிப்பொருள் கேன்சரை உண்டாக்கியது அதில் தெரிய வந்தது. அதன் பிறகுதான் பல நாடுகள் இந்த கெமிக்கலை உணவில் சேர்க்க தடை விதித்தன. ஜப்பான், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த வேதிப்பொருளைத் தடை செய்துவிட்டன. இப்போது இது இந்தியாவின் முறை!’’ என்கிறார் அவர் தெளிவாக!

இந்த ப்ரோமேட் எப்படி கேன்சரை உண்டாக்குகிறது? ஊட்டச்சத்து நிபுணரும், உணவுக் கட்டுப்பாடு நிபுணருமான தாரணி கிருஷ்ணன் அதை விளக்குகிறார்... ‘‘உணவுகளைப் பொங்கச் செய்ய சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் போன்றவை போதும். ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள் இன்னும் பெரிதாக பொங்கி வர வேண்டும். ஆறியதும் அமிழ்ந்துவிடாமல் அப்படியே உறுதியாக நிற்க வேண்டும்.



இதற்காகத்தான் இப்படிப்பட்ட வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. பெரும்பாலும் இப்படிப்பட்ட வேதிப் பொருட்களை நாம் உட்கொள்ளும்போது நமது உடல் அதை வேண்டாத நச்சுப் பொருளாகத்தான் பார்க்கும். இப்படிப்பட்ட நச்சுகளைப் பிரித்தெடுத்து வெளியேற்றுவதுதான் நமது கிட்னியின் முக்கிய செயல்பாடு. ஒருவர் அதிகமாக இந்த வகை பேக்கரி பொருட்களை உண்ணும்போது கிட்னிக்கு வேலைப் பளு அதிகரிக்கும்.

இதனால் உடலின் மற்ற நச்சுப் பொருட்களை அகற்றும் செயலுக்கு நேரமில்லாமல்கூடப் போகும். எனவே கிட்னியின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படலாம்; அல்லது செயல்படாமல் நிறுத்தலாம். அப்போது இந்த நச்சுகள் கிட்னியில் போய்த் தங்கி கட்டிகளை உருவாக்கலாம். இந்தக் கட்டிகள்தான் பிறகு கேன்சராக மாறும் அபாயம் கொண்டவை!’’ என்கிற தாரணி கிருஷ்ணன், இதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் அடுக்குகிறார்.

‘‘அரசு இந்த ஆய்வைக் கணக்கிலெடுத்து முடிவெடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறது. மகிழ்ச்சி. தற்போது பாக்கெட் உணவுகளின் வியாபாரம் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. பெரிய கம்பெனிகள், பிரபல பிராண்ட் என்று நம்பி நம் மக்கள் பாக்கெட் உணவுகளை வாங்குகிறார்கள். ஆனால், அதிக நாள் கெடாதபடி தயாராகும் அந்த உணவை விட லோக்கல் கடைகளில் அன்றே செய்து அன்றே பரிமாறப்படும் உணவுகள் ஆபத்து குறைந்தவையாக இருக்கும்.

நம் கண்ணுக்கு முன்னே செய்யும் உணவின் மீதும், சில மணி நேரங்களில் உண்ணக்கூடிய உணவின் மீதும் நமது மக்கள் அதிக மதிப்பு வைக்கும்போது இதுபோன்ற ஆபத்தான உணவுகள் காணாமலே போய்விடும்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையாக! ‘பிரெட் சாப்பிடாதே’ என்பது இனி ‘சரக்கடிக்காதே’ என்று சொல்வதற்கு சமம் போல!

உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐ.ஏ.ஆர்.சி (International Agency for Research on Cancer) அமைப்பு புற்றுநோய் பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகிறது. இதன் கண்டுபிடிப்புகளை வைத்துத்தான் பல நாடுகள் தங்களது சுகாதாரக் கொள்கைகளை வகுக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள் மற்றும் வேதிப்பொருட்களை அதன் தீவிரத்துக்கும் ஆபத்துக்கும் ஏற்ப இந்த அமைப்பு கிரேட் 1 முதல் கிரேட் 4 வரை பட்டியலிடுகிறது.

ஓர் உணவுப் பொருள் கிரேட் 1 பட்டியலில் இருந்தால் அது மிக ஆபத்தானது. கிரேட் 2, கிரேட் 3 என்றால் படிப்படியாக ஆபத்து குறையும். பிரெட்டில் கலக்கப்படும் பொட்டாசியம் ப்ரோமேட், இந்த லிஸ்ட்டின்படி கிரேட் 2வில் இருக்கிறது. அதைவிட அதிர்ச்சியான சங்கதி, நாம் காலை முதல் மாலை வரை குடித்துத் தள்ளும் காபி இந்தப் பட்டியலில் கிரேட் 2வில் இடம்பெற்றிருப்பதுதான். நமது ஊரில் ஆரோக்கிய அமிர்தமாகக் கருதப்படும் கற்றாழை கூட இந்த கேன்சர் பட்டியலில் வருவதால் உலக நாடுகளில் இதற்குத் தடை உண்டு.

- டி.ரஞ்சித்
படம்: ஆர்.சி.எஸ்