பாதங்களில் அவள் வசந்தம்...



ஹை ஹீல்ஸ், வெட்ஜ், கட் ஹீல்ஸ், கட் ஷூஸ், ஃப்ளாட்ஸ், ஸ்கை ஹை ஹீல்ஸ்... வாரே வாவ். செருப்புகளில்தான் எத்தனை வெரைட்டிஸ். இது போதாதென்று இதோ அடுத்த வகைகள் தயார். மொஜாரி, ஜூட்டி என இவை எல்லாமே வட இந்திய வரவுகள்! வெல்வெட் துணி, அழகான எம்பிராய்டரி, அல்லது ஸரி வேலைப்பாடுகள். இல்லையேல் கற்கள் என இந்த செருப்புகள் தென்னிந்திய பெண்களை இப்போது ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றன.

மாடர்ன் மேக்ஸி கவுன் முதல் பாந்தமான பட்டுப் புடவைகள் வரையென இந்த ப்ளாட் செருப்புகள் பொருந்தும் என்பதுதான் ஹைலைட். ‘‘பஞ்சாப், கான்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்படும் இந்த செருப்புகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது. முக்கியமாக 18 டூ 30 வயதுள்ள பெண்களின் விருப்பமாக இவையே இருப்பதால் இப்போது உள்ளூரிலேயே இந்த வகைகள் தயாராகத் தொடங்கிவிட்டன...’’ என்கிறார்கள் அக்பரும், தப்ரெஸும். 

மொஜாரி

மேற்புறம் வெல்வெட் அல்லது மங்கிய தோல். இதன் மேல் எம்பிராய்டரி, கற்கள் அல்லது ஸரி வேலைப்பாடுகளுடன் கூடிய ஷூக்கள். இதுதான் மொஜாரி. ஆண்கள் அணியும் வகையிலும் இவை வருகின்றன. வட இந்திய அரச குடும்பத்தினர் அணியும் காலணி என்பதால் அணிந்ததுமே ‘ராஜ லுக்’ வந்துவிடும்! ஷெர்வானி, பைஜாமா அல்லது ஜோத்பூரி சூட்டுகளுக்கு இந்த ஷூக்களை பயன்படுத்தலாம். பெண்கள் காக்டெயில் கவுன்கள் தொடங்கி ஜீன்ஸ், லெஹெங்கா, புடவை, சல்வார் என சகலத்துக்கும் பயன்படுத்தலாம்.

ஜூட்டி

பெண்களுக்கான சிறப்பு வகை செருப்புகள் என்றால் அது ஜூட்டிதான். அதிகம் வெல்வெட் துணி கொண்டு உருவாக்கப்படும் ஃப்ளாட் செருப்புகள். ஹோம்லி லுக் உடைகள் எதுவாக இருந்தாலும் சிம் கார்டுக்கு ஏற்ற செல்போனாக நச் என்று பொருந்திவிடும். அதிலும் அதீத வேலைப்பாடுகள் கொண்ட லெஹெங்கா, சல்வார்கள், சேலைகளுக்கு இந்த காலணிகள் செம மேட்ச். பின்பக்கம் கவர் செய்த வகை, பெல்ட் வகை, சாதாரண செருப்பு மாடல் வகை, ஒட்டிக்கொள்ளும் வகை என இந்த ஜூட்டிஸின் வெரைட்டி வாய் பிளக்க வைக்கின்றன. வெல்வெட் துணிகளை அதிகம் பயன்படுத்துவதால் எந்த வண்ணங்களிலும் இருக்கும் உடைகளுக்கு இது செட் ஆகும். 

நன்றி: ஏஞ்சல்ஸ் காலணிகள், ஸ்பென்சர் மால். 

ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்