இந்திய வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை பெண்கள் ஓட்டுகிறார்கள்!-ச.அன்பரசு

இந்திய ராணுவப் பணிகளில் 1980 - 1991 காலங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தாலும் - சென்ற ஆண்டு ஜூன் 18 அன்றுதான் மிகப்பெரிய மாற்றமே நிகழ்ந்தது. யெஸ். அவானி சதுர்வேதி (மத்தியப்பிரதேசம்), பாவனா காந்த் (பீகார்), மோகனா சிங் (ராஜஸ்தான்) என எக்கச்சக்க கனவுகளுடன் 20 வயதில் காலடி எடுத்து வைத்த மூன்று பெண்கள் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக போர் விமானங்களை ஓட்டுவதற்கான அனுமதியை பெற்றார்கள்.

‘நல்ல முடிவை தாமதித்து எடுத்திருக்கிறார்கள்...’ என எனர்ஜி பேச்சில் மகிழ்கிறார் கஞ்சன் சக்சேனா. இவர், 1996ம் ஆண்டு ஹெலிகாப்டரை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர். பெண்களுக்கு முதலில் கொடுக்கப்பட்ட ஒற்றை எஞ்சின்  ஹெலிகாப்டர்கள் மாறி இப்போது எம்ஐ 8 விமானங்கள் வரை அவர்கள் முன்னேறியதற்கு ஒரே காரணம் தடைகளைத் தகர்த்து பயணிக்கும் தளராத உழைப்பு மட்டுமே.

சரி இதற்கு முன்னர் எப்படி?
விமானப் பணிகளில் பெண்களுக்கு நோ அட்மிஷன் என கறார் காட்டிய இந்திய அரசு, விமானங்களில் பறக்கும்போது ஈர்ப்பு விசை மாறுபாட்டால் ரத்தம் உடலில் வேகமாக இடம் மாறும். மாதவிடாய், கர்ப்பம் உள்ளிட்ட உடல் பிரச்னைகளைக் கொண்ட பெண்கள் இச்சூழலில் எப்படி தாக்குப்பிடிப்பார்கள்? பயிற்சி, விமானம் என கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவழிக்கும் நிலையில் பெண்களை எப்படி நம்புவது... என்றெல்லாம் பட்டியலிட்டது.

‘நான் ஏர்ஃபோர்ஸ் விமானியானபோது என் அம்மா, ‘உயரம் குறைத்து, மெதுவாக ஓட்டு’ என்றாள் வெகுளியாக. அவள் கூறிய இரண்டு யோசனைகளும் எவ்வளவு ஆபத்தானவை என்று எனக்குத்தான் தெரியும். ஆனால், அதுதான் அவளது உலகம். வரும்காலத்தில் என்னுடைய மகள் நிச்சயம் இப்படி சிந்திக்க மாட்டாள்...’ என உற்சாகமாக பேசத் தொடங்கினார் ஐஏஎஃப் விமானப்பயிற்சி இயக்குநர் எஸ்.ஆர்.கே.நாயர்.
 
பெண்களை விமானிகளாக அங்கீகரித்ததால் சோவியத்யூனியன், அமெரிக்கா, சீனா ஆகிய பெண் விமானிகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கும் ஓர் இடம் ரிசர்வாகி இருக்கிறது. தரைப்படை, கப்பல்படையில் பெண்களுக்கு இன்றும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தாலும் அரசின் புதிய முடிவுக்கு பூங்கொத்துகள் கொட்டுகின்றன. கர்நாடகாவின் பிடார் பகுதியில் 43 ஆண்களோடு இந்த மூன்று பெண்களும் அணுவளவு சமரசமும் இன்றி வானில் சுழன்று நிலையாக பறப்பது குறித்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மனநலன், உடல்திறன் இரண்டையும் சோதிக்கும் பலகட்ட கடும் பயிற்சிகளுக்குப் பிறகு, விமானம் ஏறும் பெண்களுக்கு பூமியின் ஈர்ப்புவிசையைவிட 5 மடங்கு அதிக ஈர்ப்புவிசையிலும், ஆண்களுக்கு 9 மடங்கு அதிக ஈர்ப்பு விசையிலும் உச்சகட்ட பயிற்சிகள் உண்டு. அடிப்படை பயிற்சிகளை பிளாடஸ் பிசி7 விமானத்தில் 55 மணி நேரமும், அடுத்த கட்டப் பயிற்சிகளை கிரண்மார்க் 2 விமானத்திலும் மூவரும் பெற்றிருக்கிறார்கள்.

‘கிரண் விமானத்தில் 20 ஆயிரம் அடியில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட பயத்தை எப்படி விவரிப்பது? இன்று பயந்தால் அதன் பிடியிலிருந்து என்றுமே மீளமுடியாது என என்னை நானே தைரியப்படுத்திக் கொண்டு வானில் சுழன்று மீளும் டெக்னிக்கை கற்றேன்...’ என வானில் உணர்ந்த மேஜிக் தருணங்களை பரவசமாக பகிர்கிறார் பாவனா காந்த். அவானி, மோகனாவுக்கு விமானம் என்பது குடும்ப பாரம்பரியம் என்றால் பாவனாவுக்கு வாழ்நாள் லட்சியமே இதுதான்.

‘இம்மூவருமே வெவ்வேறு விதமான குணங்களைக் கொண்டவர்கள். என்றாலும் போர் விமானங்களை கையாள்வதில் குறையாத பேரார்வம் கொண்டவர்கள்...’ என தனது மாணவிகளை துல்லியமாக மதிப்பிடுகிறார் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே.நாயர். இரண்டாம் உலகப்போரின்போது பெண்களை மட்டுமே கொண்ட 3 படையணிகளை உருவாக்கிய ‘ரஷ்யாவின் நாயகி’ என்று போற்றப்படும் மரியா ரஸ்கோவா போல இவர்களும் இருளிலுள்ள இந்தியப் பெண்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக இருப்பார்கள் என்பது நிச்சயம்!