விருச்சிக லக்னம் - செவ்வாய் , சந்திரன் சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் - 74

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

காவிய அழகியல் கிரகமான சுக்கிரனும், வசீகரனான சந்திரனும் சேரும்போது வாழ்க்கை இன்பங்களால் நிறைகிறது. சந்திரன் கொடுக்கும் சிந்தனையைச் சிற்பமாக்கி கொலுபீடத்தில் சுக்கிரன் ஏற்றுகிறது. குப்பைக் கூடையைக்கூட அழகாகச் செய்யும் ரசனையை சுக்கிரனும் சந்திரனும் தந்து விடுகின்றனர். இந்த ராசியில் பிறந்தவர்களில் நிறைய பேர் இன்டீரியர் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் பிரகாசமாக இருப்பார்கள். வாடகை வீட்டில் இருப்போர்கள் கூட நாலஞ்சு நாள் விடுமுறையில் தோப்பு தொரவு என்று மனசுக்கு இதமாக சென்று தங்கிவிட்டு வருவார்கள். இசை, ஓவியம், கீபோர்ட் வாசித்தல் என்று கற்றுக்கொண்டு தேறிவிடுவீர்கள்.

உலக இன்பத்தையும், உயர் பதவிகளையும் ஒருங்கே தரும் அமைப்பே இது. மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்தின் பொதுவான பலன்களாகும். இப்போது லக்னாதிபதியான செவ்வாயும், சந்திரனும் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா. லக்னத்திலேயே அதாவது விருச்சிக ராசியிலேயே செவ்வாயோடு சந்திரன் இருந்தால் கற்பனை மிதப்பிலேயே இருப்பார்கள்.

தன்னை மீறி எதுவும் நடக்காது என்று நினைப்பார்கள். இங்கு அடிப்படையிலேயே சந்திரன் நீசமாவதால் எதிரியை இரண்டு சுற்று வரை விட்டுவிட்டு மூன்றாவது சுற்றில் பிடிப்பார்கள். சதா தன்னை புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு வயது தெரியாது. தோற்றப் பொலிவோடு காணப்படுவார்கள். ஆண்டாள் மாதிரி அழகா இருக்கா, அற்புதமா அபிநயம் பிடிக்கிறா என்று பார்ப்பவர்களெல்லாம் பாராட்டும்படி இருப்பார்கள். சந்திரனால் பேச்சிலும், செயலிலும் துரிதம் காணப்படும்.

எதிரியின் எதிரியை நண்பராக்கிக் கொள்ளும் பகடைக்காய் தந்திரம் தெரியும். அன்புப் பேச்சாலும், நிர்வாகத் திறனாலும் நிர்வாகத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பார்கள். இரண்டாம் இடமான தனுசு ராசியில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் பேசுவதே கவிதைபோல் இருக்கும். சொல்லில் காந்தத்தின் ஈர்ப்பிருக்கும். பேச்சாலும், எழுத்தாலும் காயப்படுத்தாது அணைத்துப் பேசும் ஆறுதல் இருக்கும். அயல்நாட்டிற்குச் சென்று உயர்கல்வி முடிப்பார்கள்.

பெரிய நிறுவனம், தொழிற்கூடங்கள் வைத்து நடத்துபவராகவும் இருப்பார்கள். படித்தவுடனேயே வேலை கிடைக்கும். ஆனால், தாமதப்படுத்தி வேலைக்குச் செல்வார்கள். உணவு சம்மந்தப்பட்ட துறைகளில் முன்னேற்றம் காண்பார்கள். அதிலும், சாட் ஐயிட்டம், வட மாநில உணவகங்கள் தொடங்கி வெற்றி காண்பார்கள். போக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு. மூன்றாம் இடமான மகர ராசியில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து அமர்ந்தால் இவர்களின் இளைய சகோதரர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையோடும் வலம் வருவார்கள்.

மூன்று முயற்சி ஸ்தானத்தை குறிப்பதால் எடுத்த காரியத்தை தொடர்ந்து போராடி முடிக்கும் வல்லமை இருக்கும். படர்ந்த செவியிருக்கும். அலை அலையாய் புரளும். நாலு வார்த்தை பாராட்டிப் பேசினால் மயங்கி விடுவார்கள். இவர்களுக்கு அவ்வப்போது கல்வி தடைபட்டுக் கொண்டேயிருக்கும். அல்லது பேச்சிலர் டிகிரி ஒன்றாகவும், பி.ஜி. டிகிரி வேறொன்றாகவும் கோர்ஸ் மாற்றி படிப்பார்கள். சந்திரன் தேய்ந்து, வளர்ந்து, மறைந்து என்று பல நிலைகளை உடையது. ஒரு காரியத்தை முடிக்க சாம, தண்ட, பேதம் என அனைத்து யுக்திகளையும் கையாளுவார்கள்.

நான்காம் இடமான கும்பத்தில் மாதுர் ஸ்தானமாகிய நான்காம் வீட்டில் செவ்வாயும் சந்திரனும் அமர்கிறார்கள். தாயார் அவ்வப்போது நோய்வாய்ப்படுபவராகவும் இருப்பார். எனவே, தாயார் குறித்த விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும். இவர்கள் பாட்டி, தாத்தா வளர்ப்பில் இருப்பார்கள். தாய்க்கும் உங்களுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கும்.

இருப்பதிலேயே நல்ல இடம் எதுவோ அதைத்தான் இவர்கள் வாங்குவார்கள். இவர்கள் இரு சக்கர வாகனங்களில் கியர் இல்லாத வண்டியை உபயோகப்படுத்தாது இருப்பது நல்லது. இவர்கள் வசிப்பிடத்தில் தரைத் தள வீடுகளைத் தவிர்ப்பதும் நல்லது. ஒரு பக்கம் புகழ் வந்தாலும் இவர்களைப்பற்றி தவறாகப் பேசுவதற்கென்றே ஒரு கூட்டமும் இருக்கும். மீனம் ராசியான ஐந்தாம் இடத்தில் சந்திரனும், செவ்வாயும் அமர்ந்தால் பெரும் யோகமுள்ளதாக அது இருக்கும். அத்தை, புத்தி, வித்தை, அம்மான், தாய் மாமன், குலதெய்வம் போன்ற இடத்தைக் கூறும் இடமாக இது இருக்கிறது.

எனவே, தாய் வழி குலதெய்வத்தையே இவர்கள் வழிபடுவார்கள். கொஞ்சம் காலதாமதமாகத்தான் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து சம்மந்தமாக ஏதேனும் செலவு இருந்து கொண்டேயிருக்கும். பூர்வீகச் சொத்தையே ஒரு கௌரவத்திற்காக வைத்திருப்பார்கள். நகரத்திலேயே கிராம வீட்டில் வசிப்பதுபோன்ற அமைப்பை ஏற்படுத்துவார்கள். பொதுவாகவே எந்த விஷயத்திற்கும் மிகையாகவே உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள்.

மேஷம் ராசியான ஆறாம் இடத்தில் செவ்வாயும், சந்திரனும் சேர்ந்திருந்தால் எதிரிகளை வரவேற்று மோதிப் பார்ப்பார்கள். ஜாதகத்திலுள்ள நவாம்சத்திலும், பாவகத்திலும் செவ்வாய் வலுவிழந்து காணப்பட்டால் எத்தனை திருமணம் முடித்தாலும் இல்லற வாழ்க்கை தொடராது. பெண்களாக இருப்பின் மாதவிடாய் பிரச்னை, கருக்குழாயிலேயே குழந்தை வளருதல் முதலான பிரச்னைகள் இருக்கும்.

தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள். யாரை இவர்கள் பெரியாளாக மாற்ற வேண்டுமென்று நினைக்கிறார்களோ அவர்களை வளர்த்து விடுவார்கள். பெரியாளாக்குவார்கள். உங்களுக்கு எதிரி வெளியாட்களோ, பக்கத்திலுள்ளவர்களோ இருக்க மாட்டார்கள். நீங்களே உங்களுக்கு எதிரி. ரிஷப ராசியான ஏழாம் இடத்தில் சந்திரனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் சுருண்ட முடி, பரந்த விழி, துறுதுறுப்பு, பரவசப்படுத்தும் பேச்சோடும் வசீகரிக்கும் தன்மையோடும் விளங்குவார்கள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதுபோல நல்ல மனைவி அமைவார். இல்வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் உங்களைவிட திறமையாக இருப்பார்கள். ராஜதந்திரம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். கறாரான அறிவுக்கூர்மையோடு விளங்குவார். வாழ்க்கைத் துணைக்கும் இவர்களுக்கும் கருத்து வேற்றுமை வந்தாலும் இவர்கள் விட்டுக் கொடுத்துப் போய்விடுவார்கள். பொதுவாகவே இவர்களின் வாழ்க்கைத் துணைவர் சமூகத்தில் ஏதேனும் முக்கியஸ்தராக விளங்கும் வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம் ராசியான எட்டாம் இடத்தில் சந்திரனும், செவ்வாயும் இணைந்திருப்பதென்பது அவ்வளவு நல்ல அமைப்பல்ல. தாயை இழத்தல், தந்தை மறுமணம் புரிதல் என்றெல்லாம் ஏற்படும் வாய்ப்புண்டு. பெண்களெனில் கர்ப்பப்பை கோளாறு வந்துபோகும். இவர்களுக்கு சூட்சுமத்தை உணரக்கூடிய புத்தியிருக்கும். பூமியினடியில் ஓடும் நீரோட்டம் அறிதல், புதையல் கண்டுபிடித்தல் என்று இறங்குவார்கள்.

சிறு விஷயங்களுக்கும் நிலைகுலைந்து போவார்கள். எனவே, பதட்டத்தை வென்றெடுத்து வர வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உள்ளது. சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். உயரமான இடங்களுக்குச் செல்லும்போது விளையாடல் கூடாது. கடகம் ராசியான ஒன்பதாம் இடத்தில் சந்திரன் உச்சமாகிறார். ஆனால், செவ்வாய் நீசமாகிறார். தந்தை உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை இழிவுபடுத்துவதாக உங்களின் சகோதர, சகோதரி வகையில் நினைப்பார்கள்.

அப்பாவைப்பற்றி அம்மாவிடமும், அம்மாவைப்பற்றி அப்பாவிடமுமாக எதுவும் கோள் சொல்லும் விதமாக பேசக்கூடாது. இன்னொரு வகையில் பார்த்தால் தந்தையின் கனவை இவர்களே நிறைவேற்றுவார்கள். தந்தை செய்த பூர்வ புண்ணியமெல்லாம் இவர்களுக்கு இந்த அமைப்பால் வந்து சேரும். குளத்தை தூர் வாரும் கைங்கரியத்தை மிகுந்த ஈடுபாட்டோடு செய்வார்கள்.

சிம்ம ராசியான பத்தாம் இடத்தில் செவ்வாயும் சந்திரனும் இருந்தால் முதல் தரமான ராஜயோகம் உண்டாகும். தடாலடி முடிவை எடுப்பார்கள். ஏதேனும் ஒரு முடிவை சட்டென்று எடுத்து செயல்படத் தொடங்கி விடுவார்கள். அரசியலில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள். எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆவார்கள். பலர் சி.ஏ. படித்துவிட்டு ஆடிட்டராக பணிபுரிவார்கள். அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராவார்கள்.

கன்னி ராசியான பதினோராமிடத்தில் சந்திரனும் செவ்வாயும் அமர்ந்தால் ஷாம்பூ தொழிற்சாலை, நவீன சலூன், குழந்தைகள் விளையாடும் பொம்மை தொழிற்சாலைகளை தொடங்குவார்கள். மூத்த சகோதர, சகோதரிகளாலும் நன்மைகள் அதிகமுண்டு. பலவிதங்களில் வருமானம் செய்யும் தந்திரத்தை தெரிந்து வைத்திருப்பார்கள். சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வந்தாலும் சொந்த ஊர் பாசம் தொடர்ந்தபடிதான் இருக்கும். அரசியலில் ஈடுபடுவார்கள். சிற்றின்ப விஷயங்களில் அத்துமீறக் கூடாது. எச்சரிக்கை தேவை.

துலாம் ராசியில் பன்னிரெண்டாம் இடத்தில் செவ்வாயோடு இருந்தால் புகழ்ச்சிக்கு மயங்குபவராக இருப்பார்கள். இந்த விஷயத்தில் இவர்களுக்கு நிதானம் வரவில்லையெனில் குறிக்கோளற்ற வாழ்க்கையையே வாழ்வார்கள். இவர்களில் பலருக்கு சமஸ்கிருதத்தில் ஆர்வம் வந்து படிக்கத் தொடங்குவார்கள். ஜோதிடத்தில் நியூமராலஜி, ஜெம்மாலஜி என்று தெரிந்து வைத்திருப்பார்கள்.

உங்களின் சொந்த ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் பலவீனமாக இருந்தாலோ அல்லது தீமையைத் தரும் கிரகங்களின் சேர்க்கையோடு இருந்தாலோ நீங்கள் செல்ல வேண்டிய தலமே தஞ்சாவூர் - திருச்சி சாலையிலுள்ள வல்லம் தலமாகும். இத்தலத்தில்தான் ஏகௌரி அம்மன் எனும் திருப்பெயரோடு அம்மன் அருள்கிறாள். இவளே தஞ்சாசுரனை அழித்து தஞ்சாவூர் எனும் பெயர் வரக் காரணமாவாள். தீச்சுடர் பறக்கும் கேசங்களோடு எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருளைப் பொழிகிறாள்.

வாழ்க்கையில் நொடிந்து போனவர்கள் இவளின் சந்நதியை அடைந்த நேரத்தில் ஏற்றம் தருவாள். ‘ஏற்றம் தருவாள் ஏகௌரி அம்மன்’ என்றே கூறுவார்கள். தஞ்சாவூர் மற்றும் திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவிலுள்ள வல்லத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் ஆலக்குடி சாலையில் 1 கி.மீ. தொலைவில் பயணித்தால் ஏகௌரி அம்மன் ஆலயத்தை அடையலாம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்