கோடிட்ட இடங்களை நிரப்புக-குங்குமம் விமர்சனக்குழு

வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்புகிற இளைஞனின் அனுபவங்களே ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. ஃபாரீனில் வேலை செய்துவிட்டு செட்டிலாக சென்னைக்கு வருகிறார் சாந்தனு. அவருக்குப் பலவிதங்களில் உதவுகிறார் ரியல் எஸ்டேட் தரகர் (!) பார்த்திபன். சாந்தனுவின் முழு விருப்பங்கள் அறிந்து, அவரை சந்தோஷப்படுத்த நினைக்கிறார். ஒரு கட்டத்தில் பார்த்திபனின் மனைவி பார்வதி நாயரும், சாந்தனுவுமே நெருங்கி வர, இறுதித் திருப்பத்தில் சாந்தனு - பார்வதி நாயர் காதல் (!) நெருக்கம் என்னவாயிற்று? என்பதே ‘கோ.இ.நி’வின் க்ளைமேக்ஸ்.

‘புதிய பாதை’யிலிருந்து வந்த பாதையை அனேகமாக மாற்றிவிட்டார் பார்த்திபன். சினிமாவுக்குள்ளேயே சினிமாவுக்கு கதை தேடிப் பிடிக்கிற கதையை இதற்கு முன்படமாக செய்த பார்த்திபன், இதில் உறவுகளின் புதுமுகம் காட்டுகிறார். காட்சிகளில், வார்த்தைகளில் தெறிக்கிற உண்மைகள் மின்னுகின்றன. ஆனால் பழைய ‘உள்ளே வெளியே’ பாணியில் இறங்கி அடிப்பது தான் வீக்னெஸ். பார்த்திபனின் பலமும், பலவீனமும் வார்த்தைகளால் மாறிப்போவதே துயரம்.

முன்புபோல் இல்லாமல் சாந்தனு மிகவும் நம்பகமான வளர்ச்சி. பார்வதி நாயரின் விளையாட்டில், நெருக்கத்தில் மிரள்வதையும், மயங்குவதையும், அடுத்தடுத்து பக்குவமாக பாவனைகளில் கொண்டு வருகிறார். படிப்படியாக பார்வதியிடம் நெருங்கி வருகிற இடங்களிலும் அனுபவ நடிகருக்கான இயற்கை. பெரிதாக நடிப்பை கொண்டு வராமல் இருப்பதே இதில் நடிப்பு என்பதால் சாந்தனு கச்சிதம்.

அந்த கேரளத்து பியூட்டி பார்வதி நாயர் கணவர் பார்த்திபனின் அன்புக்கு கட்டுப்படுவதும், சாந்தனுவின் ஆறுதலுக்கு ஏங்குவதுமாக வெற்றிக்கோட்டை தொட்டே விடுகிறார். சாந்தனுவை நெருங்கும் இடங்களில் எல்லாம் டீன்ஏஜ் இதயங்களில் நிச்சயம் திடுக்திடுக் நிமிடங்களுக்கு கேரண்டி!

காலை ஒரு பக்கம் இழுத்து இழுத்து நகரும் பார்த்திபனின் ரோல் நிஜமாகவே பூரணம்! நடித்து நடித்து கைவந்து, அபூர்வமான இடத்தில் வந்து நிற்கிறார் அவர். ஆனாலும் விட்டுப்போன இரட்டை அர்த்தத்தை திரும்ப கொண்டு வருவதுதான் கொஞ்சம் வலிக்கிறது. சின்னச் சின்ன கலகல வசனங்களில் படத்தை நகர்த்திக் கொண்டு, தோள் மீது சுமந்து போவதில் மனிதர் நிஜமாகவே ரசனை அத்தியாயம்!

சென்ற படத்தில் மின்னிய தம்பி ராமையா, இந்தப் படத்தில் தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரிதான். ஆனாலும் ஓடிப்போன மனைவி தொடர்பான நகைச்சுவை சற்றே பச்சை என்றாலும் அடியாழத்திலிருந்து சிரிப்பு மேலிடுகிறது. படத்தில் சிம்ரனின் நுழைவு ஆச்சர்ய என்டரி! ஆனாலும் சாந்தனுவுக்கு வெளிநாட்டில் இருந்துகொண்டே காதல் டிப்ஸ் தரும் வேலையை மட்டுமே செய்கிறார்.

சத்யாவின் பாடல்களில் ‘என் ஒருத்தியே’ இனிமை. பின்னணி இசையும் ஸ்கோர் செய்கிறது. ஆனால் அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே, ஏன் சத்யா! அர்ஜுன் ஜெனாவின் கேமரா பக்குவமாக காட்சிகளைக் கடத்துகிறது. படத்தின் க்ளைமேக்ஸ் சற்றும் எதிர்பார்க்கவே முடியாத விதம்... பார்த்திபனின் தனிப்பட்ட அட்ராக்‌ஷன். அவரின் கேரக்டரை துணை கொண்டே ஒரு தனிப்படம் உருவாக்க முடியும் போல் தோன்றுகிறது. பதட்டமான கதை அமைப்பில் உள்ள திரைக்கதையை கடைசியில் பலே டுவிஸ்ட்டில் கலகலக்க வைப்பதுதான் பார்த்திபனின் சாமர்த்தியம்.