ரிச்சி ஸ்ட்ரீட்...அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

மாலை மணி நான்கு. எறும்புகளைப் போல் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருக்கும் அண்ணாசாலையில் சிக்கியிருந்தோம். எந்தப் பக்கம் நுழைவது... வண்டியை எங்கு பார்க் செய்வது?

‘பாஸ், வாலர்ஸ் ரோடுதான் பெஸ்ட்!’’ சட்டென முடிவெடுத்த போட்டோகிராஃபர், குறுகிய சாலைக்குள் நுழைந்தார். வலது காலை அடியெடுத்து வைப்பது போல் முன்பக்க டயர் வாலர்ஸ் ரோடுக்குள் மூக்கை நுழைத்ததுமே ஜாங்கிரியும், குளோப் ஜாமூனும், சமோசா அயிட்டகளும் நாசியை வருடின. ஒருவர் மட்டுமே அமரக்கூடிய அந்தக் கடையின் முன்னால் சாலையை மறைத்துக் கொண்டிருந்தது மக்கள் திரள்.

‘‘இருபது ரூபாக்கு குறையாது சார்...’’ கட் அண்ட் ரைட்டாக கத்தியபடி ஜாங்கிரியை தராசில் அள்ளிப் போடுகிறார் முதியவர் ஒருவர். இரு பக்கமும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்ஸை தாண்டிச் செல்ல முடியவில்லை. மீண்டும் அண்ணா சாலை. ‘‘போலீஸ்காரங்க பிடிக்க மாட்டாங்க. தைரியமா நிறுத்துங்க...’’ முகம் தெரியாதவரின் உறுதிமொழியை ஏற்று வண்டியை ஒதுக்குப்புறமாக நிறுத்தினோம். ‘லாக்’கினோம். நடராஜா சர்வீஸில் ஜாங்கிரி, குளோப் ஜாமூன், சமோசா அயிட்டங்களை பெருமூச்சுவிட்டபடி கடந்தோம்.

நீண்டு செல்லும் அந்த குறுகிய சாலை, போலீஸ் பூத் அருகே நான்காக பிரிகிறது. இதில் வலப்பக்கம் நூறு மீட்டர் தூரமே இருக்கும் ‘தம்மாத்துண்டு’ தெருவுக்குப் பெயர்தான் ரிச்சி! பத்து, இருபது கடைகள் அலப்பறையில்லாமல் அமைதியாக இயங்குகின்றன. இதுதான், இந்த குறுகிய தெருதான், ‘எலெக்ட்ரானிக்ஸ் உலகின் நம்பர் ஒன்’ ஸ்ட்ரீட். 

யார் இந்த ரிச்சி? சென்னை உயர்நீதிமன்ற பதிவாளராக இருந்தவர் என்கிறது ஒரு குறிப்பு. ஆனால், ஹென்றி டேவிஸன் லவ் என்பவர், ‘Vestiges of old madras’ நூலில், ‘ரிசசி, 1780களில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கடல் சர்வேயராக இருந்தவர்’ என்கிறார். ‘ரேடியோ சிட்டி’யாக சென்னை மாற ஆரம்பித்த 1950களில் பழுதாகும் ரேடியோக்கு ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்பட்டது. அதை பூர்த்தி செய்ய இத்தெரு முற்பட்டது. முதல் விதை அதுதான். 

வெறும் ஐந்தாறு கடைகளே தொடக்கத்தில் இயங்கின. 1970களுக்குப் பிறகு டிவி, டேப் ரிக்கார்டர் என நிறைய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்தைக்குள் வர, ரிச்சியும் தன்னை வளர்த்துக் கொண்டது. தனி மரமும் தோப்பாக மாற ஆரம்பித்தது. சுற்றி இருந்த நரசிங்கபுரம் தெரு, மீரான் சாகிப் தெரு, முகமது ஹுசைன் சாகிப் தெரு, வாலர்ஸ் ரோடு என அனைத்தும் ‘ரிச்சி ஸ்ட்ரீட்’ ஆனது. ‘549 ரூபாய்க்கு செல்’, ‘ஆயிரம் ரூபாய்க்கு டச் ஸ்கிரீன்’, ‘3,499 ரூபாய்க்கு ப்ராண்டர்ட் டேப்லெட்’ என நூலில் தொங்கும் விளம்பரங்கள் சகல மனிதர்களையும் இருகரம் கூப்பி வரவேற்கின்றன.

‘‘என்னது 549 ரூபாய்க்கு செல்போனா?’’ புருவத்தை உயர்த்தினால், ‘‘இருக்குண்ணா... உனக்கு இன்னா வேணும்? சைனா செல் அந்த ரேஞ்ச்தான். அதுல ஆரம்பிச்சு ஐபோன் குவாலிட்டி வரைக்கும் எல்லாம் நம்மட்ட இருக்கு’’ எனச் சொல்லி அதிர வைக்கிறார் ஒரு கடைக்காரர். இன்ெனாரு கடை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துத் தருவது போல ‘பத்து நிமிடங்களில் ெசல் சர்வீஸ் செய்து தரப்படும்’ என மிரட்டுகிறது.

இடதுபக்கம் இருக்கும் நரசிங்கபுரம் தெரு, அதிகபட்சம் பதினைந்து அடிதான் இருக்கும். இதற்குள் குட்டி யானை முதல் டூ வீலர்ஸ் வரை பாம்புகளைப் போல் வளைந்து வளைந்து செல்கின்றன. ‘‘ஹெல்மெட் கேப் இருபது ரூபா... ஹெல்மெட் கேப் இருபது ரூபா...’’ தலைக்கு மேல் குல்லாவை தூக்கிக் காட்டியபடி வெயிலை பொருட்படுத்தாமல் விற்றுக்கொண்டிருக்கிறார் ஒருவர்.

அவருக்கு எதிரில் ‘ஸ்பைடர்மேன் காரை’ சத்தமில்லாமல் பலகையில் உருட்டிக் காட்டி ‘வாங்க வாங்க’ என அழைக்கிறார் இன்னொருவர். மூன்றாமவரோ விதவிதமாக செல்போன் கவர்களை தனக்கென ‘ஒதுக்கப்பட்ட’ ஏரியாவுக்குள் பரப்பி வைத்திருக்கிறார். அனைவருமே நான்கு டூவீலர்களை ஒன்றிணைத்து, அதில் ஒரு பலகையை போட்டு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கிறார்கள்.

‘‘பவர் பேங்க் 350 ரூபா. படிக்க வசதியா இதுல குட்டி நைட் லேம்பை வைச்சிக்கலாம். லேம்புக்கு தனி ரேட். 50 ரூபா...’’ உற்சாகத்துடன் கூவிக்கொண்டிருந்தவரிடம் தமிழ் தெரியாத டிப் டாப் வட இந்தியர் ஒருவர் பேரம் பேசத் தொடங்கினார். ‘‘ெஹள மச்?’’ ‘‘த்ரீ ஃபிப்ட்டி...’’ ‘‘ஹௌ சார்ஜ்?’’ ‘‘நார்மல் போன் சார்ஜ்’’ ‘‘பவர் பேங்க் சார்ஜ்?’’ ‘‘அதான் சொன்னேன்ல நார்மல் சார்ஜ்னு...’’

புரிந்து கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்த வட இந்தியர், கடைசியில் செல்ஃபி ஸ்டிக்கை சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றார்! சார்ஜ் செய்யும்படியான எல்இடி எமர்ஜென்சி பல்புகளை விற்பவர், ‘pay tm’ல் வணிகம் செய்கிறார். பெயர் பாபு. ஊர் தூத்துக்குடி. ‘‘வாண்ணே... வாண்ணே... இந்தத் தம்பிய நல்லா போட்டோ எடுத்துப் போடுண்ணே... டிஜிட்டல்னு அரசு சொலிடுச்சு.

மாறிட வேண்டியதுதானே? இதுல பொருளை வாங்கிட்டு நீங்க ஸ்கேன் பண்ணினா போதும். பணம் என் கணக்குல வந்துடும்...’’ கைகுலுக்கியபடியே கேஷ்லெஸ் எகானமியை விளக்குகிறார். ‘‘பாரிஸ்லேந்து எல்லா சாமானையும் வாங்கிட்டு வர்றேன். ஒரு நாளைக்கு அறுநூறு ரூபா கிடைக்கும். வெள்ளி, சனினா ஆயிரம் பாக்கலாம்...’’ என்கிற பாபு சரளமாக ஐந்து மொழிகளில் பேசுகிறார்.

‘‘முன்னாடி இருக்கிற கடைகள்ல ரேட்டு அதிகமா இருக்கும். காரணம், கடை வாடகை. நீங்க, கம்மி ரேட்டுக்கு வாங்கணும்னு நினைச்சா சோம்பேறித்தனம் பாக்காம காம்ப்ளக்ஸ் உள்ள போங்க. மூணாவது, நாலாவது மாடி ஏறுங்க. சீப்பா கிடைக்கும்...’’ செவியில் ரகசியத்தை கசிய விடுகிறார் ஒரு நடுத்தர வயதுக்காரர். இங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் மீரான் சாகிப் தெருவுக்குள் நுழையலாம்.

நரசிங்கபுரம் தெரு போல் அத்தனை பரபரப்பு இல்லை. என்றாலும் சிசிடிவி கேமரா, எல்இடி டிவி, செல்போன் சர்வீஸ்... என இங்கும் புதிது முதல் செகண்ட் ஹேண்ட் வரை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிதுங்கி வழிகின்றன. வாலர்ஸ் ரோட்டில் இருக்கும் பள்ளிவாசல் எதிரில் சிக்கன் சமோசாவுடன் நோன்பு கஞ்சியும், ஆட்டுக்கால் சூப்பும் இருவர் விற்கிறார்கள். சிங்கானா செட்டித் தெரு, முகமது ஹூசைன் சாகிப் தெரு... என எட்டு திசையிலும் கம்ப்யூட்டர் அயிட்டம்ஸ். உண்மைதான் சென்னைக்குள் அல்ல... இந்தியாவுக்குள் இருக்கும் ‘எலக்ட்ரானிக் சிட்டி’ சந்தேகமேயில்லாமல் ரிச்சி ஸ்ட்ரீட்தான்!          

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

ரிச்சி பிட்ஸ்

* ஏறக்குறைய 3 ஆயிரம் கடைகள் இங்கிருக்கின்றன.
* காலை 10 மணிக்கு மேல் ஒவ்வொரு கடைகளாக திறக்கும் ரிச்சி, மதியம் 12க்குப் பிறகுதான் சூடிபிடிக்கிறது.
* இங்கு மட்டும் வருடத்துக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் turn over ஆகிறதாம். இதனால், ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தமிழக அரசின் நிதித்துறை நேரடியாக இந்த கடைகளின் அசோசியேஷினிடம் பேசுகிறது.
* இங்குள்ள பொருட்கள் தில்லி, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற இடங்களில் இருந்து வருகின்றன.
* 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இங்கு வேலை செய்கின்றனர்.

இந்தியாவின் ஒரே எலக்ட்ரானிக்ஸ் மையம்

இப்படி சின்னதும் பெரியதுமாக கடலென ரிச்சி ஏரியாவில் கடை பரப்பியிருக்கும் வணிகர்களுக்கு என தனி சங்கம் இருக்கிறது. கோவிந்த் நாக்பால், இதன் சேர்மேன் ஆக இருக்கிறார். 1980கள் முதல் இங்கு கடை வைத்திருக்கிறாராம். இவர் சார்ந்திருக்கும், ‘ஆல் இந்தியா ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்’ கூடிய சீக்கிரமே ‘ஆல் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷனாக’ மாறப்போகிறதாம். 

‘‘ரேடியோ ஸ்பேர் பார்ட்ஸுக்காக ஆரம்பிக்கப்பட்ட மார்க்கெட், இன்னிக்கி எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்களுக்கான மையமா வளர்ந்திருக்கு. அதனாலதான் பெயரை மாத்தலாம்னு இருக்கோம். எனக்கு தெரிஞ்சு இந்தியாவுல இந்த மாதிரி எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கிடைக்கிற மொத்த மையம் வேற எங்கயும் இல்ல. முதல்ல தில்லில இருந்துச்சு. இப்ப அங்க இருந்த கம்ப்யூட்டர்ஸுக்கான கடைகளை வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. அதனாலதான் நாம ஃபர்ஸ்ட் ஆக இருக்கோம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரினு எல்லா தென் மாநிலங்களுக்கும் இதுதான் ‘ஹப்’.

இங்க சின்ன ‘சிப்’ல தொடங்கி ‘சிசிடிவி’ வரை எல்லாமும் கிடைக்கும். எல்லாத்துக்கும் சர்வீஸூம் இருக்கு. பன்னாட்டு நிறுவனங்கள் கூட இங்க இருக்கிற கடைகளுக்கு டீலர்ஷிப் கொடுத்திருக்காங்க. பெரிய பிரச்னை பார்க்கிங். இதுக்காக பல திட்டங்கள போட்டு சென்னை மாநகராட்சி கிட்டயும், போலீஸ் கமிஷனர்கிட்டயும் கொடுத்திருக்கோம். சீக்கிரத்துல நல்லது நடக்கும்னு நம்பறோம். அப்புறம் பொதுக் கழிப்பிடம் கட்டணும். இதுக்காகவும் பேசிட்டு இருக்கோம்’’ என்றார்.