காதல் கொஞ்சம்... ஃப்ரெண்ட்ஷிப் அதிகம்!-மை.பாரதிராஜா

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ அப்டேட்ஸ்

நாட்டுல இருக்கலாம்... வூட்டுல இருக்கலாம் ஆயிரம் ஃப்ரெண்டு இவன் அட்டாக்கு ஃப்ரெண்டு இவன் அயோக்கிய ஃப்ரெண்டு மண்ணெண்ணை வேப்பெண்ணை விளக்கெண்ணை இவன் எக்கேடு கெட்டாத்தான் எனக்கென்ன..! - கோபி கிருஷ்ணாவின் எடிட் ஷூட் ஸ்பீக்கர்களில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பாடல் அதிர்கிறது. சென்னை பாய்ஸ் கொயருடன் முகேஷ், டோலக் ஜெகன் கானாவுக்கு மானிட்டரில் கருணாகரன், காளிவெங்கட், நவீன் மூவரும் ஜெய்யை கலாய்த்து குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஹீரோவை இப்படி வெச்சு செய்றாங்களே?’ என படத்தின் அறிமுக இயக்குநரான மகேந்திரன் ராஜமணியிடம் கேட்டால், சிரிக்கிறார். சந்தானத்திடம் பட்டை  தீட்டப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘வாழ்க்கைல நல்ல நண்பர்கள் அமையறது வரம். எல்லாருக்குமே அப்படி ஓர் அதிர்ஷ்டம் அமையறதில்ல. நல்ல நண்பர்கள் கிடைச்சவனுடைய வாழ்க்கை எப்பவும் சிறப்புதான்.

நண்பர்கள்தான் எப்பவும் நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவாங்க. நாம என்ன பாடு படுத்தினாலும் தாங்குவாங்க. ஏன்னா, நண்பர்கள் எப்பவும் அன்புக்கு அடிமையானவங்க. அதனாலதான் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’னு பொருத்தமா ஒரு டைட்டில் வச்சிருக்கோம். படத்துல காதல் வெறும் பத்து சதவிகிதம்தான். மத்ததெல்லாம் ஃப்ரெண்ட்ஷிப்தான்...’’ எனர்ஜியாக பேசுகிறார் மகேந்திரன் ராஜமணி.

டைட்டிலுக்கு விளக்கம் சொல்லிட்டீங்க... அப்படியே கதையையும் சொல்லுங்க..?
ஹை... இது நல்லா இருக்கே! நீங்க கேட்டதால ஒன்லைன் மட்டும் சொல்றேன். லவ் ஃபெயிலியர் ஆன ஹீரோவுக்கு மூணு ஃப்ரெண்ட்ஸ். ஹீரோவை அவங்க மூணு பேரும் படுத்துற ஜாலி கேலி டார்ச்சர்ஸ்தான் படம். முழுக்க முழுக்க காமெடி ஃபிலிம். ஆனாலும் ஒரு அழகான மெசேஜும் சொல்லியிருக்கேன். காதல்ல தோத்தா நாம சாகக் கூடாது. காதலிச்ச அந்த பொண்ணை சாகடிக்கவும் கூடாது. நாம லவ் பண்ணின பொண்ணே, ‘அடடா... இப்படி ஒரு நல்ல பையனை மிஸ் பண்ணிட்டோமே’னு ஃபீல் பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டணும்.

அதான் வாழ்க்கை. இப்ப உள்ள ஐ.டி. டிரெண்ட் லவ்வை யார் மனசையும் குத்திக்காட்டாம ஜாலியா சொல்லியிருக்கேன். சாஃப்ட்வேர் என்ஜினீயர் ஜெய். அவரோட வொர்க் பண்றவர் ப்ரணிதா. நண்பர்களான கருணாகரன் பேங்க் கேஷியர், காளி வெங்கட் ஷேர் ஆட்டோ டிரைவர். இன்னொரு ஃப்ரெண்ட் நவீன், கஸ்டமர் கேர்ல வொர்க் பண்றவர். இவங்க தவிர குத்துச்சண்டை வீரர் ‘கறுப்பு ராக்’ரசிகரா ‘மொட்டை’ ராஜேந்திரன், சைக்கியாட்ரிஸ்ட்டாக தம்பிராமையானு நிறைய நட்சத்திரங்கள் கலக்கியிருக்காங்க.

மூட் அப்செட்ல இருந்தார் ஜெய்னு கிசுகிசுக்கள் சுத்திட்டிருந்துச்சே... அவரை எப்படி பிடிச்சீங்க?
ஸ்கிரிப்ட் எழுதும்போதே, ஜெய்தான் மனசுல வந்தார். புரொடக்‌ஷன் மேனேஜர் சுப்பு மூலமா அவரை சந்திச்சு கதையை சொன்னேன். ‘பண்ணலாம் பாஸ்’னு உடனே சம்மதிச்சு வந்தார். செம கலகலப்பா வொர்க் பண்ணினார். ஸ்பாட்டுல ஒருநாள் கூட ஸ்கிரிப்ட் பேப்பர் கேட்கலை. நான் சொல்றதைக் கேட்டு அப்படியே பிரமாதப்படுத்துவார். ரொம்ப கோபமா பேசுற ஒரு லென்த் சீன்ல டயலாக் எல்லாம் நான் ஒரு தடவைதான் அவர்கிட்ட சொன்னேன். அதை மனசுல உள்வாங்கி அப்படியே வெளுத்துக் கட்டியிருக்கார்.

என்ன சொல்றாங்க ப்ரணிதா?
தெலுங்குல அவங்க பிஸி ஹீரோயின். நான் போன்லதான் அவங்களுக்கு கதை சொன்னேன். ‘காமெடி ஜானர்ல ஒரு படம் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை’னு சொல்லி கமிட் ஆனாங்க. கொடைக்கானல் பக்கம் ஒரு மலைப்பகுதியில ஷூட்டிங். ஜீப் கூட அங்கே போறது கஷ்டம். அந்த லொகேஷனுக்கு நடந்தே வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. அவ்ளோ சிம்பிள்.

படத்துல வேற என்ன ஸ்பெஷல்?
பிரமாதமான கேமராமேன் அமையறது ஒரு புதுமுக இயக்குநருக்கு பெரிய பலம். மகேஷ் முத்துசாமி, ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’னு நல்ல படங்கள் பண்ணினவர். படத்துக்கு இசை, சந்தோஷ் தயாநிதி. நான் சந்தானத்தோட ‘இனிமே இப்படித்தான்’ல அசோஸியேட்டா வொர்க் பண்ணும் போதே அவர் ஃப்ரெண்ட் ஆனார். மெலடி ஸாங்ஸ் அதிகம் அவர்கிட்ட எதிர்பார்க்கலாம். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடண்ட்.

விஜய்சேதுபதி நடிச்ச ‘சேதுபதி’ படத்தை தயாரித்த ஷான் சுதர்சன்கிட்ட இந்தக் கதையை சொல்லப் போனப்ப, ஏற்கெனவே ரெண்டு பெரிய இயக்குநர்கள் கதை சொல்ல வந்திருந்தாங்க. அவங்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் எனக்கு கிடைச்சிருக்கு. இந்த படம் பெரிய ஹிட் ஆனா, அடுத்தடுத்து நிறைய புது இயக்குநர்களுக்கு படம் கிடைக்கும்.

நீங்க சந்தானம் டீமில் தானே இருந்தீங்க? அப்புறம் ஏன் ஜெய்க்கு கதை ரெடி பண்ணுனீங்க?
‘தமிழ்ப்படம்’ முடிச்சுட்டு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ படங்கள்ல அசோசியேட்டா வேலை பார்த்தேன். இந்த கதை ரெடியானபோதே, ஜெய்தான் மனதில் வந்தார். அடுத்ததா சந்தானத்துக்குதான் கதை ரெடி பண்ணுவேன். நான் அவர்கிட்ட இருந்து வெளியே வந்ததும், ‘உன் திறமை மேல நம்பிக்கை இருக்கு. இங்க படம் கிடைக்கறது ஈஸி. அதை சக்சஸ் பண்ணிக் காட்டறது அவ்வளவு சுலபமில்ல’ன்னார். அவர் காமெடி நடிகரா இருக்கும் போதே, நூறு சதவிகிதம் உழைப்பை கொடுப்பார். இப்போ ஹீரோவாகி ஆயிரம் சத
விகிதம் உழைக்கறார். அந்த உழைப்பை கொடுக்க நானும் முயற்சி பண்ணியிருக்கேன்!

Behind the scenes

* 35 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடந்திருக்கிறது.
* ‘கண்ணாடி பூவுக்கு...’ பாடலை கொடைக்கானலில் ஹெலிகேம் வைத்து ஷூட் செய்திருக்கிறார்கள்.
* படத்தில் டூயட் கிடையாது. ‘ஒன்றோடுதான் ஒன்றாக...’ பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.
* பாண்டிச்சேரி ஷூட்டிங்கில் காளி வெங்கட்டின் ஷேர் ஆட்டோவின் பின்னால், ‘மலையோடு மோது... தலையோடு மோதாதே’ என எழுதியிருப்பதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் நிறைய பேர் குவிந்துவிட, யூனிட் மகிழ்ந்திருக்கிறது.
* தம்பி ராமையாவிடம் இரண்டு நாட்கள் கால்ஷீட் கேட்டு, ஒரே நாளில் அவரது போர்ஷன் முழுவதையும் முடித்திருக்கிறார்கள்.
* கிளைமாக்ஸை பட்டினப்பாக்கத்தில் ஷூட் செய்திருக்கிறார்கள்.