பைரவா-குங்குமம் விமர்சனக்குழு

படிக்கிற மாணவியையே பலி கொடுத்து கல்லூரி வளாகத்தை காப்பாற்றத் துடிக்கிற மோசடி கல்வித் தந்தையை தீர்த்துக் கட்டுபவனே ‘பைரவா’. கடன்களை வசூலிக்கும் பேங்க் ஏஜெண்ட்தான் விஜய். நண்பனோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருப்பது மீதி வேலை. சிநேகிதியின் திருமணத்துக்காக சென்னை வந்த கீர்த்தி சுரேஷ், விஜய்யின் கண்ணில்பட... அப்புறம் என்ன?

காதல்தான். திருநெல்வேலிக்கே திரும்ப முடியாமல் கீர்த்தி கோயம்பேடு மார்க்கெட்டில் துரத்தப்பட, காப்பாற்றுகிறார் விஜய். அங்கேயே வைத்து கீர்த்தி முன்கதை சுருக்கம் சொல்ல... அதில் கல்வித் தந்தையாக முரட்டு ஜெகபதிபாபு அவதாரம் எடுக்க... எதிர்பாராத இன்னொரு களத்தில் பயணிக்கிறது கதை. ஹீரோ பில்ட்-அப், அடிதடி, பஞ்ச் டயலாக்கைத் தொடர்ந்து கல்வித் தந்தையை முந்திரி மாதிரி வறுத்தெடுக்கிறார் விஜய்.

ஆக்‌ஷன் கொக்கியில், சென்டிமென்ட் செயினை கோர்ப்பதில் பரதன், கில்லாடி! வரிசையாக வார்த்தைகளை அடுக்கி வசனம் எழுதியதில் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே! பழைய கதையே என்றாலும் பி அண்ட் சி ஏரியாவை மயக்குகிற விஷயங்களைத் தெளிவாகத் தூவியிருக்கிறார். வித்தியாசமான புது ஹேர் ஸ்டைல், லேசர் பார்வை, இறுக்கிய உடம்பு, சிறுத்தை ஓட்டம் என மாஸ்ஸில் ரசிகர்களை  அள்ளுகிறார் விஜய்.

கோயம்பேட்டில் நடக்கிற ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், அதிரடிக்கும் விஜய் காட்டுகிற கோபத்திற்கும், தோரணைக்கும், அலறுகிறது தியேட்டர். இதையே கையில் வைத்துக் கொண்டு பயணிப்பதில் திரைக்கதையில் ஏகப்பட்ட தடைக்கற்கள். விஜய் முன்னைவிட அழகாக இருக்கிறார். விஜய் - கீர்த்தி இணையில் கூடுதல் வசீகரம். உதட்டைச் சுழித்தும், கண்களில் மின்னல் வெட்டியும் படபடவென கீர்த்தி சுரேஷ், விஜய்யிடம் பேசிக் கொள்ளும் காட்சிகளில் கலர்ஃபுல் காதல். அவ்வளவு அமைதியாக இருப்பவர், கல்வித் தந்தையை ேகாபம் ெதறிக்க எடுத்தெறிந்து பேசும்போது பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

மறுபடியும் என்ட்ரி ஆகியிருக்கும் ஜெகபதிபாபுவிற்கு வழக்கமான கோடம்பாக்கம் வில்லன் கேரக்டர்! ஓங்கு தாங்கான உயரத்தில், மிடுக்கில், கோபத்தில், உறுமினாலும், சாதாரண விஜய்யை தாக்குப் பிடிக்க முடியாதது எல்லாம் ரொம்ப ஓவர்! டேனியல் பாலாஜி ‘காக்க காக்க’ முறைப்பை, திமிரைக் காட்டுவார் என்று பார்த்தால், கொஞ்சமாக மிரட்டி விட்டு நிறைய இடங்களில் காணாமல் போகிறார்.

ஆனாலும் விஜய் அவ்வப்போது இரண்டு வில்லன்களோடு மோதுகிற ரணகள சண்டைக் காட்சிகளில் ஆக்‌ஷன் தர்பார். மாஸ்டர் அனல் அரசுக்கு தனி சபாஷ். வைரமுத்துவின் வைர வரிகளில் சுவிஸ் பாடல் காட்சியும், ஆக்‌ஷனில் தடதடவென புகுந்து புறப்படும் லாவகமுமாக ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கேமராவும் நேர்த்தி.

காமெடியில் விஜய்க்கு கை கொடுக்க சதீஷ், தம்பி ராமையா நினைத்திருக்கிறா–்ரகள். கடைசியில் சிரிப்பு வாயுவை வைத்துத்தான் தம்பி ராமையாவாலேயே சிரிக்க முடிகிறது. சதீஷுக்கு வார்த்தை ஜாலம் மட்டுமே போதாது... கொஞ்சம் உடல்ெமாழியும் அவசியம் நண்பா! சந்தோஷ் நாராயணனிடம் இன்னும் ‘கபாலி’ வாசம். ‘மஞ்சள் மேகம்’ பக்கா மெலடி. படத்தின் நீளத்தை குறைத்திருந்து திரைக்கதையை இன்னும் இறுக்கிப் பிடித்திருந்தால் ரசிப்பதில் ஆர்வம் கூடியிருக்கும்!