இது Graffitti உலகம் பாஸ்!



-ஷாலினி நியூட்டன்

‘‘டேய் மச்சான் போலீஸ் வந்துடப் போகுதுடா… சீக்கிரம் மச்சி.... ஓட்றா... மாப்ள… போலீஸ்டா..!” இரவோடு இரவாக சுவர்களில் படம் வரைந்துவிட்டு ஸ்ப்ரே பெயிண்ட் கேன்களோடு ஓடிவிடும் இளசுகளைப் பார்த்திருக்கிறீர்களா? சென்னையின் முக்கிய பகுதிகளில் இருக்கும் சுவர்களில் சில ஸ்டைலான எழுத்துகளில் பெயர்களைக் கூட பார்க்க முடியும்.

இவை எல்லாமே ரிஸ்கை ரஸ்காக எடுக்கும் கிரஃபிட்டி (Graffitti) குழுவின் கைவண்ணம்தான்! இந்த ராத்திரி ஸ்வீட் ராஸ்கல்ஸை ஒருவழியாக பகலில் பிடித்து, ‘பாஸ் கொஞ்சம் பேசலாமா’ என்றோம். ‘‘ஒய் நாட்? வாங்க எங்க ஏரியாவுக்கு போகலாம்...’’ என கைப்பிடித்து சென்னையின் சுண்ணாம்புக் காவாய் பகுதியின் ‘ஆல் ஃபார் ஒன்’ கிரஃபிட்டி மற்றும் டான்ஸ் குழுவினர் அழைத்துச் சென்றனர்.

விஜய், தினேஷ், கார்த்திக், வெங்கட், இன்னொரு கார்த்திக் என ஐந்து பேர் கொண்ட இக்குழுவின் தலைவர், விஜய். ‘‘ஏதோ கிறுக்கிட்டு இருக்கோம்... எங்களையா பார்க்க வந்தீங்க? இது பத்தியா கேட்கப் போறீங்க? அப்படிப்போடு! இந்த சுவரு ஓகேவா?’’ என்று கேட்ட விஜய், பதிலுக்கு காத்திராமல் ‘‘வெப்பன்ஸை எடுங்கடா...’’ என குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான். அருண், லியோ, வெங்கட், ஷாம், விநாயகம், மௌலி என இன்னொரு நண்பர்கள் டீம் ஸ்ப்ரே கேனுடன் ஆஜராகிவிட்டனர். பிறகென்ன? ஜமா களை கட்டத் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் டீம் போலவே ஒரு சின்ன மீட். அவர்களுக்குள் ரகசியமாக ஏதேதோ பேசிவிட்டு, ‘‘லெட்ஸ் ஸ்டார்ட்...’’ என பாய்ந்தனர். விஜய் சுட்டிக் காட்டிய கடையின் சுவரை முதலில் சுத்தம் செய்தனர். பிறகு சாம்பல் நிற பெயிண்ட்டை அடித்துவிட்டு ‘‘தெறிக்க விடு மச்சி...’’ என விஜய்யை பார்த்து கண்ணடித்தனர்.

‘‘ம்... ம்...’’ என்றபடி ஃப்ரீ ஸ்டைலில் வெள்ளைக் கலர் ஸ்ப்ரே பெயிண்டில் அவர் வரையத் தொடங்க... மற்றவர்களும் உடன் இணைந்தனர். எங்கெங் கோ இழுத்தார்கள். வளைத்தார்கள். சுழித்தார்கள். மொத்தத்தில் ஸ்ப்ரேபெயிண்டை வைத்து மேஜிக் ஷோவையே நிகழ்த்தினார்கள். பார்த்துக் கொண்டிருந்த நமக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்தபோதோ பிரமிப்பு ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் எழுதிய வார்த்தை ‘Women’.

வியப்பை வெளிப்படுத்து வதற்குள் அழகிய இளம் பெண்ணின் கூந்தல் பறந்து வந்து அந்த சொல்லின் மீது விழுந்தது. தொடர்ந்து அவர்களது கைகள் சடுகுடு ஆடின. மேலே, ‘Respect’. கீழே ‘Be a Man’ என அனைத்தையும் ஒரு மணி நேரத்துக்குள் அவர் எழுதி முடிக்கும் வரையில் நாம் திறந்த வாயை மூடவேயில்லை! கோர்வையாக படித்து முடித்துவிட்டு ஆச்சர்யத்துடன் அவர்களைப் பார்த்தோம். பின்னே... ‘Respect WOMEN’. Be a Man’. ஓரமாக அவர்ளின் குழுவின் பெயரான ‘All for One’. 

‘கலக்கிட்டீங்க...’ என கைகொடுத்தோம். ‘‘தேங்க்ஸ்...’’ என வெட்கப்பட்ட விஜய், இதன் சரித்திரத்தை விளக்கினார். ‘‘இதுவும் ஒரு ஆர்ட்தான். 1960கள்ல அமெரிக்காவுல ஆரம்பிச்சது. நான் படிச்சது, இன்ஜினியரிங். கிராஃபிட்டே, டான்ஸ் இது ரெண்டும்தான் என் வாழ்க்கை. நாலு வருஷங்களா வரையறேன். நிறைய ப்ராஜெக்ட் செய்திருக்கோம். இந்திய அளவுல எங்களுக்கு ஸ்பான்சர்ஸ் இருக்காங்க.

இந்த வித்தையை ஆன்லைன்ல ஷெவா (Sheva) கிட்ட கத்துக்கிட்டேன். அவர் அமெரிக்காவுல இருக்கார். ஒயில்ட் ஸ்டைல் ஆர்டிஸ்ட். நான் கத்துக்கிட்டதை நம்ம ஏரியா பசங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். இந்தப் பகுதி முழுக்க எந்த சுவரு காலியா இருந்தாலும் வரைஞ்சு தள்ளிடுவோம். தொடக்கத்துல திட்டினாங்க. இப்ப அவங்களாவே வந்து, ‘எங்க வீட்டு சுவரு காலியா இருக்கு தம்பி’னு சொல்லிட்டு போறாங்க...’’ கண்களை சிமிட்டியபடி சிரித்த விஜய், கிரஃபிட்டில் நிறைய டைப் இருக்கிறது என்கிறார். பட்டியலிடச் சொன்னோம். டேட்டாவை கொட்டினார்.

‘‘ஒரு கலர் வெச்சு ஆர்டிஸ்ட் பேரோ இல்ல அவங்க ஆர்ட் பேரோ எழுதிட்டு எஸ்கேப் ஆகிடுவோம். எங்க முகம் கூட தெரியாது. முழுக்க மறைச்சுக்குவோம். இதுதான் டாக் (Tag). த்ரோ அப் (Throw Up)ல ரெண்டுக்கும் மேற்பட்ட கலர்ஸை பயன்படுத்துவோம். எழுத்துக்கள் பார்க்க பலூன் டைப்ல இருக்கும். கொஞ்சமான நேரத்துல பெரிய பெரிய எழுத்தா எழுதி ஒரு பெரிய சுவத்தையே மறைக்கறது ப்ளாக் பஸ்டர் (BlockBustor).

ஒயில்ட் ஸ்டைல் (Wild Style)லதான் இதோ இங்க ‘Women’ எழுதினோம். படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். இதவிட புரியாம கூட எழுதுவோம். ஹெவன் (Heaven), கிரஃபிட்டி ஆர்ட்டிஸ்ட்டுக்கு ரிஸ்க்கான ஒண்ணு. ஒரு பில்டிங்கோட மேல வரையறது. ‘எப்படிடா எழுதினாங்க’னு சக ஆர்டிஸ்ட்டையே குழப்பறது. இதை வரையப் போய் நிறைய பேர் செத்திருக்காங்க. ஸ்டென்சில் (Stencil), ஃப்ரீ ஸ்டைல் ஓவியம். மனுஷன், மிருகங்கள்னு எல்லாத்தையும் சேர்த்து மெசேஜ் சொல்றது.

இதுதவிர போஸ்டர், பீஸஸ், ஸ்டிக்கர்னு வீட்லயே ரெடி பண்ணி ஒட்ற ஈஸி கிரஃபிட்டிஸும் இருக்கு. இது எல்லாமே அரசியல் நடவடிக்கைகள்தான். அமெரிக்காவுல கறுப்பின மக்கள் இதை தங்களுக்கான ஆயுதமா பயன்படுத்தினாங்க. 1967ல பிலடெல்பியாவை சேர்ந்த ஹை ஸ்கூல் ஸ்டூடண்ட் கான்ப்ரெட் (Cornbread), இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனார். வேற ஒண்ணும் இல்ல... சப்வே, ரோட்டோர சுவர்கள்ல தன்னோட கேர்ள் ஃப்ரெண்டை இம்ப்ரஸ் பண்ண வரைஞ்சாரு.

இதுலேந்துதான் கிரஃபிட்டி சகலத்துக்கும் பயன்பட ஆரம்பிச்சது. ஒண்ணு தெரியுமா? சென்னைல இந்த கிரஃபிட்டி வரையற பொண்ணுங்க கூட இருக்காங்க. தயவு செஞ்சு இதை தெரு ஓவியத்தோட குழப்பிக்காதீங்க. அது வேற. இது வேற. எங்களுக்குள்ள ரூல்ஸ் உண்டு. ஒரு ஆர்டிஸ்ட் வரைஞ்சிருக்கிற சுவர்ல போய் எங்க பெயரை எழுத மாட்டோம். அப்புறம் எங்களுக்கே ‘சின்னப்புள்ளத்தனமா’ தெரியற இன்னொரு ஆர்டிஸ்ட் பேரு மேல ஒரு X மார்க் போட்டுட்டு வருவோம்! அது கிரஃபிட்டி போட்டிக்கான சவால்!

அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஓரிடத்துல கூடி நீதிபதிகளை நியமிச்சு ஆளுக்கு ஒரு சுவத்துல வரைவோம். யார் பெஸ்ட்டுனு காட்டுவோம்...’’ மூச்சு வாங்க விஜய் சொல்லி முடிக்க நமக்கு மூச்சு வாங்கியது! தமிழ் சினிமா ரைட்டர்ஸ்... உடனே கிரஃபிட்டியை மையமா வச்சு ஒரு படத்தை எடுங்க! 

படங்கள்: ஆ. வின்சென்ட் பால்