காவிரி வழக்கில் கைகொடுத்தவர்!கோமல் அன்பரசன் - 12

எஸ்.கோபாலரத்னம்

‘‘உங்க அப்பா பெரிய வக்கீலாக இருந்தார். நீயும் வக்கீலாத்தான் வரணும்...’’ ‘‘அதெல்லாம் முடியாதும்மா… நான் விஞ்ஞானியாகப் போறேன். சட்டம் படிக்கிறதுல விருப்பமில்லை!’’ ‘‘இல்லேயில்ல… கண்டிப்பா நீ ‘லா காலேஜ்ல’ சேரணும்...’’ ‘‘மாட்டேன்மா! ரசாயனத்தில் மேல் படிப்பு படிக்கப் போறேன்!’’ ஆறு வயதில் தந்தையைப் பறிகொடுத்திருந்த கோபாலரத்னம், தாயின் வார்த்தையை மீறி பிடிவாதமாக இருந்தார்.

கோபாலரத்னத்தின் அப்பா சுவாமிநாத அய்யர் கும்பகோணத்தில் பெயரெடுத்த வழக்கறிஞர். அவரது மகனுக்கு வக்கீல் படிப்பு மீது அவ்வளவு ஆர்வமில்லை. கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலிலும், அரசு கலைக்கல்லூரியிலும் படித்துவிட்டு, சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்பை முடித்த கோபாலரத்னம், அங்கேயே பட்டமேற்படிப்புக்குப் போக ஆசைப்பட்டார். அதற்குத்தான் அம்மா குறுக்கே நின்றார்.

கடைசியில் பிள்ளையின் பிடிவாதமே வென்றது. இப்போதிருப்பதைப் போல 1940களில் மேற்படிப்பை வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வெழுதி முடிக்க முடியாது. ஆராய்ச்சி அடிப்படையில்தான் படிக்க முடியும். அப்படித்தான் கோபாலரத்னம் எம்.எஸ்ஸி சேர்ந்தார். ஆனால், அவருக்கு வழிகாட்டியாக இருந்த கிறித்துவக் கல்லூரியின் வேதியியல் துறைத்தலைவர் டாக்டர்.பார்நெஸ் பாதியிலேயே திடீரென மரணமடைந்தார். கோபாலரத்னம் தடுமாறி, தவித்துப்போனார். படிப்பு தடைப்பட்டது. அம்மாவுக்கும் மகனுக்கும் மீண்டும் போராட்டம். ‘‘இப்போதாவது சட்டம் படிக்கப் போயேன்...’’ ‘‘ம்ஹூம்… நான் விஞ்ஞானியாத்தான் ஆவேன்!’’

படிப்பில் இடைவெளி விழுந்தது. ஏறத்தாழ ஓராண்டு வீட்டில் இருந்தார். அப்போது ஒரு நாள் தந்தையின் அறைக்குள் சென்று சட்ட விவரங்கள் அடங்கிய ‘லா ரிப்போர்ட்ஸை’ எடுத்துப் படித்தார். அதில் அன்றைக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றமான லண்டன் பிரிவு கவுன்சில் மேற்கொண்ட முக்கியமான முடிவுகளைப் பற்றி படித்தவுடன் கோபாலரத்னத்திற்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.

அப்பா சேர்த்து வைத்திருந்த மற்ற புத்தகங்களையும் வாசிக்கத் தொடங்கினார். வேதியியல் படித்து விஞ்ஞானியாகும் ஆசையை அழுத்திவிட்டு சட்டம் படிக்கும் எண்ணம் மேலெழுந்தது. அந்த எண்ணம் அதீத ஈடுபாடாக மாறியது. வக்கீலுக்குப் படித்தார். அது வெறும் படிப்பாக இல்லை. ‘இதோ என்னுடைய வகுப்பில் இருக்கும் சர்.அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர்’ என்று சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணமேனன் போற்றும் அளவுக்கு படிக்கும் காலத்திலேயே புகழ்பெற்றார்.

1944ல் சட்டம் முடித்தவுடன் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான கே.பாஷ்யம் அய்யங்காரிடம் தொழில் பழகுநராக சேர்ந்தார். பாஷ்யம், ஒருநாள் பழைய வழக்கின் விவரங்களைத் தேடி மண்டையை உடைத்துக்கொண்டிருந்தபோது அதைப்பற்றி பளிச்சென சொன்னார் கோபாலரத்னம். அவ்வளவுதான்! அன்று முதல் குருவின் மனங்கவர்ந்த சீடரானார். அப்போதெல்லாம் சட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஓராண்டு தொழில் பழகிய பிறகே வழக்கறிஞராக பதிவு செய்ய முடியும்.

ஆனால், தொழில் பழகுநராக இருந்த கோபாலரத்னம் வழக்கு விசாரணைகளில் தனக்கு உதவியாக இருப்பதற்கு உயர்நீதிமன்ற அமர்வில் சிறப்பு அனுமதியே வாங்கினார் பாஷ்யம். கோபாலரத்னத்தின் திறமையின் மேல் அந்தளவுக்கு அவருக்கு நம்பிக்கை இருந்தது. வக்கீலாக பதிவு செய்துவிட்டு சொந்த ஊரான கும்பகோணத்திற்கே போய் தொழில் செய்யும் திட்டத்தில் இருந்தார் கோபாலரத்னம். கூடவே அரசியலின் மீதும் கொஞ்சம் ஆர்வம் இருந்தது. இந்த இரண்டையும் பாஷ்யம் தடுத்துவிட்டார்.

சென்னையிலேயே தங்கிவிடுமாறு அவரிடம் சொன்ன பாஷ்யம், ‘முதலில் அரசியல் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு, தொழிலைக் கவனி. உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது’ என்றார். 7 ஆண்டுகள் ஜூனியராக இருந்த கோபாலரத்னத்தைத் தனியாக தொழில் நடத்துமாறு பாஷ்யம் அறிவுறுத்தினார்.

‘தேவைப்படும் போதெல்லாம் நான் உனக்கு உதவுவேன். அதே நேரத்தில் நீ, உன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என பரந்த மனதோடு பாஷ்யம் அய்யங்கார் வாழ்த்தினார். மூத்த வழக்கறிஞர்களான டி.ஆர்.சீனிவாசன், ஆர்.விஸ்வநாத அய்யர் போன்றவர்களோடு கோபாலரத்னம் தொழில் நடத்தினார். அன்றைக்கு 30 வயதைக்கூட தொடாத இளைஞராக இருந்த போதும் மூத்தவர்களின் முழு நம்பிக்கையைப் பெறுமளவுக்கு திறமைகளை வளர்த்துக்கொண்டார்.

கிடைக்கிற நேரத்தை உயர்நீதிமன்ற நூலகத்தில் செலவிட்டார். மதிய உணவு இடைவேளையில் கூட துரிதமாக சாப்பிட்டு முடித்துவிட்டு, நூலகத்திற்குப் போய்விடுவார். அது போக, தன்னுடைய வீட்டிலேயே அற்புதமான சட்ட நூல்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கி, சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பவராக மாறினார். தலைமை நீதிபதி உட்பட எல்லா அமர்வுகளிலும் வாதங்களை முன்வைக்கும் வல்லமையைப் பெற்றார்.

வி.கே.திருவேங்கடாச்சாரி, வி.சி.கோபால்ரத்னம், மோகன் குமார மங்கலம் போன்ற முன்னணி வழக்கறிஞர்களின் அன்பைப் பெற்றவராகவும், சில வழக்குகளில் அவர்களே அழைத்து ஆலோசனை கேட்கும் அளவுக்கு திறமையாளராகவும் வளர்ந்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பதிந்து, பல வழக்குகளில் வாதாடினார். அங்கே இந்துமத தத்தெடுப்புச் சட்டம் பற்றி அவர் நடத்திய வழக்கு புகழ் பெற்றது. இயல்பிலேயே அபார நினைவாற்றல் கொண்ட கோபாலரத்னம், எதையும் ஒருமுறை படித்துவிட்டால் மறக்காதவர்.

தேவைப்படுகிற இடத்தில், சரியான நேரத்தில், அவற்றை முறையாக நினைவுகூர்வதிலும் வல்லவர். வழக்குகளை, வாதாடிய வழக்கறிஞர்களை, விசாரித்த நீதிபதிகளை, கட்சிக்காரர்களின் பெயர்களை, அவர்களின் கிராமத்துப் பெயர்களைக்கூட பளீரென சொல்வார். இதனால், ‘நடமாடும் என்சைக்ளோபீடியா’ என்று அழைக்கப்பட்ட கோபாலரத்னம் நீதிபதிகளுக்கே பழைய வழக்குகளைப் பற்றி சொல்லும் சட்டக் களஞ்சியமாக திகழ்ந்தார்.

சிக்கலான வழக்குகளில் ஏதேனும் சந்தேகம் வந்தால், சத்தமில்லாமல் கோபாலரத்னத்தை அழைத்து தெளிவு பெறுவதை நீதிபதிகள் பலரும் வழக்கமாக வைத்திருந்தனர். எந்த வழக்காக இருந்தாலும் அதற்கான தயாரிப்புகளை முழுமையாகவும் அக்கறையோடும் செய்வதையே விரும்புவார். அப்படி அல்லாமல், அரைகுறையாக வழக்கைப் பற்றி அறிந்து, தொழிலை அலட்சியப்படுத்தும் வக்கீல்களை மிகக்கடுமையாக வறுத்தெடுத்து விடுவார்.

அவரது வார்த்தைகளில் காரம் இருந்தாலும், வழக்கறிஞர்கள் தொழிலில் நேர்த்தியானவர்களாக, பக்தி மிகுந்தவர்களாக திகழ வேண்டுமென்பதே அதன் அடிநாதமாக அமையும். அப்படிப்பட்ட ‘புரபொஷனல் லாயராகவும்’, அதற்கேற்ற வகையில் அசரடிக்கும் உழைப்பாளியாகவும் அவரே வாழ்ந்து காட்டினார். பல அமைப்புகளுக்கு சட்ட ஆலோசகராக திகழ்ந்த கோபாலரத்னம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வழக்கறிஞராக இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தார்.

பாரம்பரிய சிறப்பு வாய்ந்த ‘லா ஜெர்னல்’ இதழின் ஆசிரியர் குழுவில் முதன்மையானவராக 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். ஆசிரியர் குழுவை வழிநடத்தும் பொறுப்பில் கோபாலரத்னம் இருந்தபோது, இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களாலும் வழக்கறிஞர்களாலும் அந்தப் பத்திரிகை பெரும் பாராட்டைப் பெற்றது. அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய அற்புதமான கட்டுரைகள், வக்கீல்களும் சட்ட மாணவர்களும் என்றைக்கும் போற்றி பாதுகாக்க வேண்டிய புதையலைப் போன்றவை.

80 வயதிலும் தொடர்ந்து சிறப்பாக வழக்காடிய கோபாலரத்னத்திற்கு அதற்குரிய சட்ட நிபுணர் விருதினை அப்போதைய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி வழங்கினார். ‘லிவிங் லெஜன்ட்’ என்ற விருதினை 1998ல் மெட்ராஸ் பார் அசோசியேசன் அளித்தது. 50 ஆண்டுகள் வழக்கறிஞர் சேவையாற்றியதற்கான சிறப்பு விருதினையும் அவர் பெற்றார். என்.ஆர்.ராகவாச்சாரி எழுதிய ‘ஹிந்து லா- பிரின்சிபல்ஸ் அண்ட் பிரசிடெண்ட்’ என்ற நூலை ஆர்.சீனிவாசனுடன் சேர்ந்து, கூடுதல் தகவல்களுடன் கோபாலரத்னம் எழுதினார்.

அதற்கு நீதிபதி எஸ்.எஸ். சுப்ரமணி அளித்த அணிந்துரையில், “கோபாலரத்னம் ஒரு நடமாடும் சட்டப் புத்தகம். எந்த நேரமும் சட்ட சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் திறன் வாய்ந்தவர். புதிய செய்திகளைத் தெரிந்துகொள்வதில் அவர் காட்டும் ஆர்வமும் அதற்கான உழைப்பும் மிகவும் போற்றத்தக்கவை’’ என்று குறிப்பிட்டுள்ளார். சட்டத்தைத் தாண்டி பல துறைகளிலும் சிறப்பான அறிவைப் பெற்றிருந்தார்.

ஆன்மீகத்திலும் கர்நாடக சங்கீதத்திலும் அளப்பரிய ஈடுபாடு அவருக்கு இருந்தது. ஆங்கில இலக்கியங்களிலும் சமஸ்கிருதத்திலும் ஆழங்கால் பட்ட ஞானம் கொண்டிருந்தார். வேதங்களையும் இதிகாசங்களையும் விரும்பி படித்தார். கோபாலரத்னத்திற்கு லலிதா என்ற மனைவியும் ஒரு மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். மகன் சுவாமிநாதன் அமெரிக்காவில் வசிக்கிறார். கடைசி மகள் ரேணுகாவும் அவரது கணவர் ஆர்.எல்.ரமணியும் இப்போது சென்னையில் வழக்கறிஞர்களாக உள்ளனர்.

82 வது வயதில் 2005 ஆம் ஆண்டு கோபாலரத்னம் காலமானபோது, ‘எங்களுடைய குருவை, தந்தையை, சகோதரரை, உண்மையான நண்பரை இழந்துவிட்டோம்’ என அன்றைய மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கே.ஆர்.தமிழ்மணி கூறிய வார்த்தைகளை, பல வழக்கறிஞர்களும் நீதியரசர்களும் அப்படியே வழிமொழிந்தனர்.

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

காவிரி வழக்கில் கைகொடுத்தவர்

காவிரி நதிநீர்த் தீர்ப்பாயத்தில் தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான வழக்கு ஒரு முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, பழைய சென்னை மாகாண அரசுக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் 1924ல் கையெழுத்தான ஒப்பந்தம் செல்லாது என்று கர்நாடக வழக்கறிஞர் வாதிட்டார். கவர்னர்- இன்- கவுன்சிலின் ஒப்புதலை அந்த ஒப்பந்தம் பெறவில்லை என்பதே அதற்கு அவர் சொன்ன காரணம்.

இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் முன்னிலையான சிறந்த சட்ட நிபுணரும் அட்வகேட் ஜெனரலுமான என்.ஆர்.சந்திரன், கர்நாடகாவின் வாதம் குறித்து கோபாலரத்னத்திடம் ஆலோசித்தார். உடனடியாக பழைய இந்திய அரசாங்கத்தின் சட்டத் தொகுப்பு ஒன்றை அவரிடம் எடுத்துக்கொடுத்த கோபாலரத்னம், கவர்னர் ஒப்புதல் இன்றியே ஒப்பந்தம் செல்லுபடியாகும் என்பதையும் சுட்டிக்காட்டினார். அதன்படியே வாதிட்டதை, கோபாலரத்னத்தின் 80 வது பிறந்தநாள் விழாவில் நினைவுகூர்ந்தார் என்.ஆர்.சந்திரன்.

‘பட்டம் கொடுக்காமல் விட்டதெப்படி?’

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மகனையோ, கனடாவின் டொரன்டோவில் இருக்கும் மகளையோ பார்க்க போகும்போதெல்லாம் கோபாலரத்னம் அங்குள்ள நூலகங்களைத் தேடிப் போய்விடுவார். அந்த நாட்டின் நீதித்துறை செயல்பாடுகள், சட்டத்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான நூல்களைப் படிப்பார். அதோடு அங்குள்ள சட்ட வல்லுநர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் போன்றோரிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டு விவாதிப்பார்.

சென்னையில் கோபாலரத்னத்தின் 50 ஆண்டுகால வழக்கறிஞர் பணியைப் பாராட்டி விருது வழங்கியபோது, அவர்கள் அங்கிருந்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். அமெரிக்க பயணம் முடித்து திரும்பிய பிறகு, அந்நாட்டு சட்டம் மற்றும் நீதித்துறையின் பங்களிப்பைப் பற்றி சென்னை பல்கலைக்கழகத்தில் இரண்டு உரைகளை ஆற்றினார். அதனை நேரில் கேட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் ‘இவ்வளவு நாளும் இவருக்கு எப்படி கௌரவ டாக்டர் பட்டம் வழங்காமல் விட்டார்கள்?’ என வியப்போடு கேள்வி எழுப்பினார்.

‘லா சேம்பர் நெ.21’

புதிதாக தொழிலுக்கு வரும் இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து உற்காசப்படுத்துவதில் கோபாலரத்னம் ஆர்வம் காட்டுவார். அதிலும் வழக்கறிஞர் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டவர்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும். சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘லா சேம்பர் நெ.21’ வாசலில் அமர்ந்து மற்ற வழக்கறிஞர்களோடு கோபாலரத்னம் பேசி மகிழும் காட்சிகள் அலாதியானவை.