நகரத்துக்கு கிளம்பிய கிராமம்
-ஸ்ரீதேவி மோகன்
அதிகாலை ஐந்து மணிக்கு வயலுக்கு நீர் பாய்ச்சப் போன வேணு மாமா மோட்டருக்குப் பக்கத்திலே விழுந்து கிடந்தார் மாரடைப்புதான் என்றார்கள் ஊரே திரண்டு வந்து அழுத பின் எரித்தார்கள்
 மறுநாள் மகன் சொன்னான் மாடுகன்னுகளை கன்னியப்பனுக்கு கை மாத்தி விட்டுறலாம்மா பார்த்துக்க யாரு இருக்கா?
கயிறு அவிழ்த்துப் போகும் கன்றுக்குட்டியை ஓரக்கண்ணால் பார்த்தபடி முந்தானையால் முகம் துடைத்தாள் அத்தை.
காரியத்தன்று நிலத்தை வெங்கடேசன் அண்ணாவுக்குக் குத்தகை விடுவதைப் பற்றிப் பேச்சு வந்தது. பார்த்துக்க யாரு இருக்கா? மறுபேச்சுப் பேசாமல் தலை அசைத்தாள் அத்தை
முப்பதாம் நாள் பெட்டிப் படுக்கையுடன் சென்னையில் இருக்கும் மகன் வீட்டுக்குப் புறப்படுகையில் கோழிகளையும் கோழிக்குஞ்சுகளையும் பக்கத்து வீட்டு சுப்பக்காவிடம் கொடுத்தாள்... பார்த்துக்க யாரு இருக்கா?
ஒரு குடும்பத்தின் மரணத்தை மனதில் சுமந்தபடி கண்ணீரோடு மாமாவின் ஒற்றைத்துண்டெடுத்து ஒயர்க் கூடையின் மேல் போட்டு மூடினாள் அத்தை
அதில் ஒட்டி இருந்த ஓரிரு நெல்லோடு அவரது கிராமம் நகரத்திற்கு கிளம்ப தயாராகியது.
|