பசித்து புசி!



உயிரமுது

தமிழர் உணவுகளின் உன்னத சுவை - 12

-ராஜமுருகன்

உடல் ஆரோக்கியம்தான் இந்த வாழ்வின் உயிர்நாடி. கனிந்த பழங்களையும், பசுமையான காய்கறிகளையும் சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவர்களின் உணவுமுறையில் கஞ்சிக்கும் கூழுக்கும் முக்கியப் பங்கு உண்டு. அந்த உணவுதான் மருந்தாக இருந்து எந்த நோயும் அவர்களை அண்டாமல் தடுத்து நிறுத்தியது. ஐரோப்பிய ஆலிவ் ஆயிலுக்கும், ஆஸ்திரேலியா ஓட்ஸ்க்கும் அவர்கள் ஆசைப்படவில்லை. மரம் நடுங்கும் பனி விழும் மார்கழி மாதத்தில் குளிரை சமாளிக்க கேழ்வரகை உணவாக எடுத்துக் கொண்டனர். கீரை, நெய், நல்லெண்ணெயையும் சேர்த்துக் கொண்டனர்.

அதற்கு அடுத்து வரும் தரை நடுங்கும் பனி விழும் தை மாதத்தில் புதுப் பச்சை அரிசியில் பொங்கலை சாப்பிட்டனர். பனியை சற்று ஓய்வெடுக்கச் சொல்லும் மாசி மாதத்தில் சுண்டல் வகைகளும், அந்த மாதத்தில் அறுவடைக்கு தயாராக படர்ந்திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும்தான் அவர்களின் விருப்பமான உணவு. காலத்துக்கு ஏற்ற உணவு மட்டுமில்லாமல் சாப்பிடும் முறையையும் சரியாக கையாண்டு வந்தனர்.

காலையில் வெறும் வயிற்றில் வெண்ணெயெடுத்த மோரையும், தண்ணீரையும் கலந்து குடித்தனர். மற்ற நாட்களில் பழைய சோற்றின் நீராகாரத்தையும், மோரையும் உப்புடன் கலந்து குடித்து வயிற்றையும், உடலையும் குளிர்ச்சியாக வைத்திருந்தனர். இது அவர்களுக்கு மற்ற உணவில் கிடைக்கப்பெறாத ஊட்டச்சத்துக்களை கொடுத்தது. உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளித்தது. காலையில் கஞ்சியோ, கூழோ குடிப்பதுதான் சிறந்த உணவுப் பழக்கம்.

இதனால் காலை உணவின் ஜீரணமாகும் தன்மையும், மதிய உணவின் பசி நேரமும் சிறப்பாக இருக்கும். இதுதான் உடல் என்னும் மெஷினுக்கு சரியான ப்ராசஸ். பசிக்கு அலாரம் அடித்ததும் அதே போல சூடற்ற சோற்றுடன் ஏதோ ஒரு காய்கறி குழம்பு சேர்த்து உண்பர். இது அவர்களுக்கு சரியான புரதத்தையும் மாவுச் சத்தையும் தந்துள்ளது. இரவு உணவு இருட்டுக்கு முந்தியே முடிந்து விடும். விளக்கு வைத்த பின் சாப்பிடக்கூடாது என நம்பினார்கள். இரவு உணவை சூடாகவும், சில சமயம் வெறும் காய்கறிகளை வேக வைத்து உப்பு கலந்தும் உண்டனர்.

காலை உணவு சத்துள்ளதாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மதிய உணவு காய்கறிகளுடன், நெல்லரிசி அல்லது சிறுதானிய அரிசியாக இருக்க வேண்டும். இரவு உணவு ஆவியில் வேக வைத்ததாகவும், பழங்களாகவும் இருப்பது அவசியம். இடையில் பப்ஸ், முட்டை போண்டா, காளான் சில்லி, மிளகாய் பஜ்ஜி என உள்ளே தள்ள வேண்டியிருந்தால் அது ஜீரண மண்டலத்தை பாதிக்கும். இது போல நொறுக்குத் தீனிகளை உணவு உண்ணும் போது ஆசைக்காக அளவாக எடுத்து கொள்வதுதான் நல்லது.

வாரத்துக்கு ஒரு முறையேனும் வாழை இலையில் உண்ண வேண்டும். இலையில் விழும் சூடான சோறு ஜீரணத்தை சீராக்கும். பழைய சோற்றுக்காக பித்தளை, வெண்கல பாத்திரத்தையும், மண்கலயத்தையும் பயன்படுத்தலாம். அது உணவின் தன்மையை மாற்றாமலும், சத்துக்களை இழக்கச் செய்யாமலும் இருக்கும்.

குழந்தைகளுக்கு சோறூட்டும்போது மண் பாத்திரத்தை பயன்படுத்தினால், உணவின் இயல்பு மாறாமல் இருக்கும். மண்சட்டியைப் பயன்படுத்தி சமைப்பதனாலும் சரி, அதைப் பயன்படுத்தி உணவுப் பொருளை சேமித்தாலும் சரி உணவின் தன்மை, மணம், சுவை மாறாமல் அதே தன்மையில் இருக்கும். இயற்கை அளித்த இந்த உடலுக்குத் தேவையான ஆரோக்கியம் இயற்கையிடமே இருக்கிறது. ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதுபோல மறுபடியும் நம் முன்னோர்களின் உணவு முறைக்கே திரும்பி போனால்தான் இழந்த நம் ஆரோக்கியத்தை மீட்க முடியும்.

(பருகுவோம்...)

நுரை பீர்க்கங்காய் கடைசல்

தேவையானவை:

நுரை பீர்க்கங்காய் - 1 கப் நறுக்கியது.
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி.
பூண்டு - 3 பல்.
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்.
சீரகம் - ½ ஸ்பூன்.
மல்லி விதை - ¼ ஸ்பூன்.
மஞ்சள் தூள் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் - 3 தேக்
கரண்டி.
கடுகு - சிறிது.
கருவேப்பிலை - 1 கொத்து.
எலுமிச்சை சாறு - 1 பழம்.

செய்முறை:

தாளிக்க வேண்டிய பொருளைத் தவிர மற்ற பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் நன்கு கடைந்து விடவும்.எண்ணெயில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்த கடைசலுடன் சேர்த்து, கடைசியாக எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். சுவையான நுரை பீர்க்கங்காய் கடைசல் ரெடி.

செய்ய வேண்டியவை

* எண்ணெய் வகைகளை அடுப்புக்கு அருகில் வைக்கக் கூடாது.
* பாட்டிலில் எண்ணெயை சேமிக்கலாம்.
* சுரக்குடுவையில் சேமிக்கப்படும் எண்ணெய்யின் தன்மை ஆண்டுகள் பல ஆனாலும் மாறாது.
* எண்ணெயில் கருவேப்பிலையைத் தாளிக்கும் போது நச்சு முறிந்துபோகும்.
* சூரியனை வழிபட்டு பச்சரிசி பொங்கலை சாப்பிடும்போது உடல் சுறுசுறுப்பாகும்.