ரகுராம் ராஜனின் ஆசிரியர்!



-த.சக்திவேல்

சிறு உதவி செய்துவிட்டாலே செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு லைக்ஸை அள்ள  துடிக்கிறது டிஜிட்டல் மனது. இச்சூழலில் கடந்த 32 வருடங்களாக சத்தமே இல்லாமல் பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்ந்து வருகிறார் 64 வயதான அலோக் சாகர். ஒல்லியான தேகம். சவரம் செய்யாத முகம். மேலாடை இன்றி காட்சியளிக்கும் அலோக் சாகர், தில்லி ஐஐடியில் முதுகலை பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

80களில் ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்த இவரிடம் பாடம் பயின்றவர்தான் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜன். வேலையை துறந்த பிறகு ஆரம்பத்தில் மத்தியப் பிரதேசத்திலுள்ள பெதுல் மற்றும் ஹொஷன்காபாத் மாவட்டங்களில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய பணிகளைச் செய்யத் தொடங்கினார். அந்த வகையில் அப்பகுதிகளில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். கடந்த 26 வருடங்களாக மின்சார வசதியோ, சாலை வசதியோ இல்லாத ‘கோச்சமு’ எனும் பின்தங்கிய கிராமத்தில் பழங்குடி மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் அவருக்கு ஒரு சல்யூட்!