ஊரையே சொர்க்கமாக மாற்றியிருக்கும் தனிமனிதர்
-நா.கதிர்வேலன்
‘‘பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த காடன்குளம் நீங்க இப்ப பாக்கிற மாதிரியில்லை. வறண்டு போய்க்கிடக்கும். குடிக்கிற தண்ணிக்கு அலையணும். கருவை மரம்தான் ஊரெல்லாம். அதுபாட்டுக்கு நிலத்தடி தண்ணீரை ஒட்ட உறிஞ்சிரும். இன்னிக்கு ‘அப்படியா இருந்துச்சு’ன்னு கேக்குற அளவுக்கு இந்த ஊரையே மாத்திப்புட்டாரு மனுஷன். எந்தப் பக்கம் பார்த்தாலும், மரமும், காடுமா மாறிக்கிடக்கு. நாங்க சாதிய உணர்வுகளை மறக்க, தியானத்துக்கு கூட்டிட்டு போனாரு. தியானமும் அமைதிக்கான பாதைதான்னு சொல்லிக் கொடுத்தாரு.
 நாள் விடாமா நாங்களும் இப்ப தியானம் பண்ணிகிட்டு இருக்கோம். ஊர் ஒற்றுமைக்கு ஒண்ணா இணைஞ்சு நிற்கிறோம். வட்டித் தொழிலை விட்டுட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டோம். ஊரையே பேர் சொல்ற மாதிரி வளர்த்துப்புட்டாரு...’’ காடன்குளம் எல்லையிலேயே ரமேஷின் புகழைப் பாடத் தொடங்கி விடுகிறார்கள் மக்கள். சாதி, மதம், இனம், அரசியல் என எதிலும் சிக்கிவிடாமல் பிறந்த ஊரையே சோலைவனமாக்கி இருக்கிறார் ரமேஷ். உணவகத்தில் வரும் வருமானத்தின் பாதியை இதற்கே ஒதுக்குகிறார்.
 ‘‘இந்த பூமி உருண்டையை தூணா நின்னு தாங்குறது மரங்கள்தான். ஒரு நாளைக்கு சராசரியா 80 ஆயிரம் மரங்கள்ங்கிற வேகத்துல நம்மாளுக வெட்டிக்கிட்டு இருக்காங்க. மரம் இல்லேன்னா மனுஷன் இல்ேல. மனுஷன் இல்லேன்னாலும் மரம் இருக்கும். நாம் வாழ்வோம் மரங்களுடன்...’’ ஆழமாக பேசத் தொடங்குகிறார் ரமேஷ். ‘‘அப்பா திருவேங்கடம் முதற்கொண்டு எங்கள் குடும்பத்தையே மாத்தி மாத்தி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்காங்க. என் மூதாதையர் வாழ்ந்த பகுதி இப்படிக் கிடக்கேன்னு ஆரம்பிச்சது, மக்களின் மீதான கவனமா திரும்பிவிட்டது.
 ஊரெல்லாம் முள்ளுக்காடு. மனசு தாங்கலை. நாகர்கோயிலில் வசதியாக இருந்தது உறுத்தியது. அப்படியே ஊர் பக்கம் வந்திட்டு இருந்தவன், இவங்களுக்கு ஏதாவது செய்தாகணுங்கிற மனநிலைக்கு வந்திட்டேன். நான் இங்கே வந்தபோது காரை திறந்தால், கருவமரத்துலத்தான் இடிச்சுக்கணும். முதலடி நாம எடுத்து வைப்போம்னு நினைச்சு என் செலவிலேயே லட்சக்கணக்கில் மரங்களை நட்டேன். ஊர் எல்லையில ஆரம்பிச்சு ஊர் முழுக்க வேப்ப மரங்கள், புளிய மரங்கள், பூ மரங்கள், பழ மரங்கள்னு எல்லா மரங்களையும் கொண்டு வந்து நட்டேன்.
ஊர்ப் பொண்ணுங்க ரொம்ப தூரம் நடந்து போய் தண்ணி ெகாண்டு வந்து ஊத்துனாங்க. அதையும் பார்க்கப் பிடிக்காமல் ஆழமா ஃபோர் போட்டு கொடுத்தோம். மனித இனத்துக்கே தாய்ப்பால் தண்ணீர்தான். அதையும் கெடுத்து வைச்சிட்டோம். அந்த தாய்மையின் கருணையை மதிக்கத் தவறிட்டோம். அதுவும் புரிஞ்சுது எனக்கு. இதை செய்ய தூண்டி, என்னை ெநறிப்படுத்தியவர் செளந்தர் அண்ணன். அவர் என் வாழ்வின் மிகவும் மதிப்புமிக்க மனிதர். இனி ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் முடிஞ்ச அளவுக்கு காடு வளர்க்கணும். இல்லேன்னா வீடுமில்லை. நாடுமில்லை.. நாமளும் இல்லை.
அரசியல் கட்சிகள் என்னை இழுக்கப் பார்த்தார்கள். மதம், கட்சி, அரசியல் என ஈடுபாடு எனக்கில்லை. அதனால எந்த அழைப்பும் என்னிடம் செல்லுபடியாகவில்லை. பெற்றோர்கள் கூலி வேலைக்குப் போய்விட, குழந்தைகள் சத்துணவு இல்லாமல் இருந்தார்கள். என் பெரிய வீட்டை எல்லோரும் வந்துபோகும் ஓப்பன் ஹவுஸ் மாதிரி மாற்றிவிட்டேன். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தினமும் மாலை வந்து சத்துணவு பால் குடிச்சிட்டுப் போகலாம்.
5 லட்சம் ரூபாய் செலவில் எனது கிராமத்தையொட்டிய எட்டு கிராமங்களில் சீமை கருவேல் மரங்களை பொக்லைன் கொண்டு அகற்றினேன். இன்றைக்கு நான் வைத்த மரங்கள் காற்றையும், நிழலையும், என் பிரியத்தையும் சேர்த்து அந்த மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இப்படிச் செய்வதன் மூலம் இந்தப் பயணம் எனக்கு அற்புதமான அடுத்த கட்டத்தை அளிக்கிறது. மக்கள் எனக்குத் தருவதை நானே அவர்களுக்கு திருப்பித்தருகிறேன்.
கடந்து வரவும், புரிந்து வரவும் ஒரு காலம் எல்ேலாருக்கும் இருக்கிறது... எல்லோருக்கும்...’’ என நெகிழும் ரமேஷ், இயற்கை விவசாயத்தையும் தன் மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களது வருமானத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் வழிவகை புரிந்திருக்கிறார். ‘‘என் கிராமத்து மக்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள்தான். அவர்கள் ஒரு நாள் அரசு அலுவலகங்களுக்கு வேலை விஷயமாகச் ெசன்றாலும் சம்பாதிப்பது பாதிக்கும்.
அதனால் மனுக்களை கொண்டு போய் தருவதற்காக ஒருவரை நியமித்து, அவர்களுக்கு வேண்டிய காரியங்களை செய்து தருகிறேன். இதனால் அவர்கள் அரசு அலுவலகங்களின் வராந்தாக்களில் நின்று புலம்ப வேண்டிய நிலையை தவிர்த்திருக்கிறேன். பெண்களுக்கு வீட்டிலேயே கழிப்பறைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருந்தது. அதனால் அந்தக் குறையில்லாமல் நானே சொந்தச் செலவில் செய்து கொடுத்தேன். வருஷத்துக்கு ஒரு தடவை எங்க ஊர் குழந்தைகளை எல்லாம் நாலைந்து வண்டிகளில் பத்திரமாக வெளியே கூட்டி வந்து, ஏதாவது ஒரு நல்ல ஊரில் அவர்களை தங்க வைத்து கொண்டாடுவேன்.
அவங்களுக்கு வேற ஒரு உலகம் பார்த்தமாதிரி இருக்கும். ஏதாவது அவங்களுக்கு ஒரு சின்ன ஒளிக்கீற்று தெரிந்தால் போதும். பண்டிகைகளில் எல்லோரும் ஒன்றாகக் கூடுகிறோம். அது ஒரு மகிழ்ச்சியான தருணம். அன்றிரவும் ஆட்டம், பாட்டு, இசை எல்லாம் ஒலிக்கும். சினிமா பாட்டல்ல. அவர்களாக தயாரிக்கிற, அழகான தவறுகளோடு கூடிய நாடகங்கள். ‘டேய், இந்த வசனம் நான்தான்டா பேசணும்’ என்று கூட இடையில் கேட்கும்.
அம்மாவும், மனைவியும், குழந்தைகளும் என்னை இப்படியே இருக்க அனுமதிக்கிறாங்க. அவர்களின் பரிவும், தலையசைப்பும் இல்லாமல் நான் இப்படியெல்லாம் காரியம் செய்ய முடியாது. அலாவுதீனும் அற்புத விளக்கும் கிடைச்சும் ஒண்ணும் செய்யாமல் விட்டுட்டோம்னு பின்னாடி நினைக்கக் கூடாது. இதை என் மகன் என்னிடமிருந்து தோள் மாத்தி எடுத்திட்டு போவான்னு தெரியாது. எதுவும் நடக்கலாம். எல்லோருக்கும் விவேகானந்தரைப் பிடிக்கும். ஆனால் நம் வீட்டிலிருந்து ஒருத்தர் அதுமாதிரி வருவதை விரும்பமாட்டோம்.
என் மகன் துறவி பயிற்சிக்கு போறேன்னு சொன்னான். நான் அவனை வழியனுப்பி வச்சிருக்கேன். ஒரு தந்தையா நான் அவனுக்கு கொடுக்கிற சொத்து அதுதான். அதேமாதிரி எனக்காகவும் இந்த உலகத்துக்காகவும் அவன் செய்கிற கடமையாக அது இருக்கும். நல்ல மனுசன் உருவாகறதுக்கும் கெட்ட மனுஷன் வந்ததற்கும் நாமேதான் காரணம். வழி வகுக்கிறதும், வழி அடைக்கிறதும் நாமதான். என் பங்குக்கு சிறிய ஒளியை ஏத்தி வைச்சிருக்கேன். யாராவது அதை கையில் ஏந்திட்டுப் போனால் எனக்கு மகிழ்ச்சி...’’ கண்களை மூடி சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்.
தன் வருமானத்துக்காக நாகர்கோயிலில் ‘ஆர்ய பவன்’ உணவகத்தை நடத்துகிறார். அங்கே எழுத்தாளர்களுக்கு முதல் மரியாதை. தெய்வங்களுக்கு பதிலாக ஓவியர் மருது வரைந்த தமிழ் மன்னர்களின் வீரம், கருணை, காதல், கம்பீரம், கர்ஜனை அடங்கிய ஓவியங்களையே அங்கு வைத்திருக்கிறார். ஒவ்வொரு உணவகத்தின் பிரிவையும் திறக்கும்போது அவருக்கு நாஞ்சில் நாடன், மருது போன்றவர்களே தேவைப்படுகிறார்கள். ஜெயமோகனும், ‘காலச்சுவடு’ கண்ணனும் அவரது வெகுநாளைய வாடிக்கையாளர்கள். இங்கே வாய்ப்பேச்சு போராளிகளால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை. நமக்கு ரமேஷ் மாதிரி செல்லும் பாதையை எல்லாம் வெளிச்சமாகும் மானுட அன்புதான் தேவைப்படுகிறது. இல்லையா?
படங்கள்: ச.தங்கராஜ்
|