கவிதை வனம்



ஏன் வதைக்க வேண்டும்

தனிமையை வருடிச் சென்ற
இராக்குருவியின் பாடலில்
எழுத இயலாச் சோகம்
இழையோடிக் கரைந்தது
அடர்இருளின் புதைகுழிக்குள்
மூழ்கியும் மூழ்காமலும் கிடந்த பொழுதில்
மனதிற்குள் கீறல்கள் வரைந்துபோனது அப்பாடல்
தாளலயத்திற்குள் அடங்கா அப்பாடலுக்குள்
விழுந்த ஞாபகங்கள் தகிக்கத் தொடங்கின.
எதற்குப் பாடிச்செல்ல வேண்டும்
அப்பறவை இந்நேரம் எனும்
வலைக்குள் அகப்பட்டு
அப்படியும் இப்படியும் புரண்டுபார்த்தும்
அகப்படவில்லை விடையேதும்.
அதன்போக்கில் அது பாடித்தான் சென்றது
என்னை ஏன் வதைக்கவேண்டும்
இரவும் பகலுமாய் அப்பாடல்?

- சென்னிமலை தண்டபாணி



அருளே திருளே

தன்னோடு தான் புலம்பிக்கொண்டே
தைப்பவனின் வயித்தெரிச்சலுக்கு
காதுமலர்த்திக் கிடக்கிறது உதிரிச்செவ்வரளி
பலகையிடுக்கில் கிளைத்துப்பூத்து
சாம்பலுதிர்க்கும் ஊதுவத்தி
நதிக்கரை மரத்தடி என்றொரு
பொய்யை சாக்கடை மேல் விரிக்கப் பார்க்கிறது
கழற்றிக் கொடுத்துவிட்டு
சுகமாய் கடித்தடத்தை வருடியபடி
அட்டணங்காலிட்டமர்ந்திருக்கிறார் பாபா
‘சும்மாவேனும் சொல்லுங்கள் சாயிநாதா
அவன் காதோர பீடித்துணுக்கு
நிம்மதிப் பெருமூச்சாக
எவ்வளவு நேரமாகும்?’

- ஜான் சுந்தர்