மீசையமுறுக்கு



குங்குமம் விமர்சனக்குழு

பொறுப்பில்லாதவனோ என நினைக்க வைக்கிற மிடில் கிளாஸ் பையன் உழைத்து முன்னுக்கு வருவதே ‘மீசைய முறுக்கு’. இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கிறார்கள் நண்பர்கள் ஆதியும், விக்னேஸ்காந்தும். படிப்பை விடவும் ஹிப்ஹாப் இசையில் மட்டுமே ஆதிக்கு ஈடுபாடு. படித்து முடித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்பது அப்பா விவேக்கின் அறிவுரை. தன் உழைப்பால், நண்பர்களின் ஒத்துழைப்பால், அவமானங்களைக் கடந்து எப்படி ஸ்டார் ஆகிறார் என்பதே பின்கதை.

அட, முழுக்க கல்லூரி களம். தமிழ் சினிமா அதில் பல களம் கண்டு, இப்போது கண்டுகொள்ளாமல் விட்ட ஏரியா. அதில் நேரம் பார்த்து இறங்கியிருக்கிறார் ஆதி. கதை? ‘அதெல்லாம் எதுக்கு’ என்று கலகல காதல், காமெடி, கல்லூரி கலாட்டா, ரகளை... என கலக்கி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, நடிப்பு, டைரக்‌ஷன் என்று மூச்சு வாங்கும் வகையில் பொறுப்பேற்றும் களிப்பேற்றுகிறார்கள்.

முற்றிலும் புதியவர்களாக வைத்துக்கொண்டு கலகலப்பு ஊட்டியது, சமூகத்தின் பல விஷயங்களை கேலி செய்து நிஜம் சொல்லி, புரிய வைத்து, கலாய்த்து அதிகமாகவே இளைஞர் முகம் காட்டியதில் சினிமா புது ட்ரெண்டில் பயணிக்கிறது. மிடில் கிளாஸ் பையனாக கச்சிதமாகப் பொருந்துகிறார் ஆதி. வீட்டிற்கு அடங்கிய பையனாகவும், அப்பாவின் அறிவுரையோடு சேர்ந்து வளர்கிறவராகவும் அருமையான அறிமுகம். காதலில் விதவிதமாக முயன்று, தோற்று, ஜெயிப்பதில் அசால்ட் ஆதி.

அடங்கிய பையனாக இருந்துகொண்டு, பிறகு கல்லூரியில் சேர்ந்து ஆத்மிகாவிடம் காதலை எதிர்பார்க்கும் விடலை வேகத்தை பிரமாதமாக ஸ்கிரீனில் கொண்டு வருகிறார். கல்லூரி சீனியர்களின் ஆரம்ப அடாவடிக்கு அடிபணிந்து, பின்பு அவர்களுக்கே தலைவராகும் மொமென்ட் சிரிப்பு மேளா! பிரதானமான கேரக்டர்களை ‘நச் நச்’ என அறிமுகப்படுத்தி ஐந்தாவது நிமிடத்திலேயே படத்தினுள்ளே நம்மை இழுத்து விடுவதுதான் சாமர்த்தியம்.



சமயங்களில் சீனுக்கு சீன் நம்மை சிரிக்க வைத்தால் போதும் என தொடர்ந்து இறங்கியும் அடிக்கிறார்கள். ஆத்மிகா செம ஜில்! பார்க்கிற பார்வையிலும், படபட பேச்சிலும், போட்டிருக்கும் அழகு உடைகளிலும் போதை ஏற்றுகிறார். சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் அழகு. ஆதியோடு ஆதி - அந்தம் வரை வருகிற விக்னேஸ்காந்த் காமெடியில் புது வரவு. இன்னும் நண்பர்களாக வருகிற ஷாரா, அன்பு, சுதாகர், கோபி குறிப்பிடத்தக்கவர்கள். மகனை அரவணைத்துச் செல்லும் அப்பாவாக விவேக் கிளாஸ்.

மிகை குறைத்து, அசல் அப்பாவாக அழகு. காதல் மாதிரி ஆகப் பழைய கதையி–்ல் அப்ரோச் மட்டுமே புதுசு. கதையமைப்பில் வித்தியாசம் இல்லையென்றாலும் சலிக்கவில்லை. கதை தேங்கிவிடாமல் நகர்வது ப்ளஸ். கல்லூரி கலாட்டாக்களில் யு.கே.செந்தில்குமார் - கீர்த்திவாசனின் ஒளிப்பதிவில் கலகலப்பு. அடிக்கடி பாடல்கள் எட்டிப்பார்த்தாலும் அலுக்கவில்லை. ஆதியின் முந்தைய ஹிட்டுகள் படத்திற்கு இப்போதும் பொருந்துகின்றன. ஆங்காங்கே தன்னம்பிக்கை வசனங்களுக்கு பலமான கைதட்டல். இப்போதைய இளைஞர்களைப் புரிந்துகொண்டு எடுத்த படம்.