Pain Killer மருந்து நிறுவனங்களின் கொடூர லாப வேட்டை!



ச.அன்பரசு

கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் என எந்தவொரு விளையாட்டிலும் வீரர்களுக்கு திடீரென அடிபட்டுவிட்டால் உடனே இன்ஸ்டன்டாக பிசியோதெரபி சிகிச்சை அவர்களுக்கு அளிக்கப்படுவதை பார்த்திருப்பீர்கள். இதன் பிறகு தசைகிழிவு முதல் எலும்பு முறிவு ஆபரேஷன் வரை அவர்கள் வாழ்வதே பெய்ன் கில்லர் மருந்துகளில்தான் என்பதை அறிவீர்களா?

இன்று புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் வலியைக் குறைக்க உதவும் பாலியேட்டிவ் கேர் என்னும் வலி நிவாரணி சிகிச்சையே இன்றைய மெடிக்கல் மார்க்கெட்டில் செம ஹாட். ஆனால், நம் உடல், வலி நிவாரணிகளுக்கு மெல்ல அடிமையாகி விட்டால் என்னாகும் தெரியுமா?

வலி நிவாரணிகளாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆக்ஸிகான்டின் அல்லது ஹைட்ரோகோடோன் ஆகியவை முதலில் வலியைப் போக்குவதாக இருந்தாலும், பின்னாளில் ஏற்படும் பக்க விளைவுகள் அலற வைக்கின்றன. தாறுமாறாகும் டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பு, குமட்டல், மலச்சிக்கல் வரை பிரச்னைகள் நீள்கின்றன. இதற்கும் தீர்வாக ஸ்ப்ரே டூ மாத்திரைகள் வரை மார்க்கெட்டில் கிடைக்கின்றன. என்ன... பர்ஸில்தான் கொஞ்சம் கனம் தேவை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க மருந்துக் கம்பெனிகளுக்கு பல பில்லியன் டாலர்கள் லாபத்தை அள்ளித் தருவதே பெய்ன் கில்லர் பிஸினஸ்தான். இதன் மறுபக்கம் ஒளியின் நிழல் போல் இருளானது. 2015ம் ஆண்டு மட்டும் வலி நிவாரணியை அதிகமாக உட்கொண்டதால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரம்! இப்போது அரசின் விதிகளுக்குட்பட்டு அதீத வலி நிவாரணி பயன்பாட்டை குறைக்க, நோய்க்குரிய மருந்துகளோடு வலி நிவாரணிகளை இணைத்து கொடுத்து ஓவர்டோஸ் பிரச்னைகளை தீர்க்கின்றனர்.



மருந்துக் கம்பெனிகளைப் பொறுத்தவரை பெய்ன் கில்லர்கள் என்பவை அட்சயபாத்திரத்துக்கு சமமானவை. அப்படி யிருக்க காசு பார்க்காமல் விடுவார்களா? சென்ற ஆண்டு, அதாவது 2016ம் வருடம், 336 மில்லியன் பிரிஸ்கிரிப்ஷன் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 8.6 பில்லியன் டாலர்கள் என்கிறது QuintilesIMS அமைப்பின் தகவல் அறிக்கை.

‘‘பிரிஸ்கிரிப்ஷனில் ஏராளமான வலி நிவாரணிகளை எழுத வைத்து பல பில்லியன் டாலர்களை மருந்துக் கம்பெனிகள் சம்பாதித்து விடுகின்றன. இப்போது அதிகளவிலான ஓவர்டோஸ் சிகிச்சை மருந்துகளிலும் நல்ல லாபம் பார்க்க தொடங்கியுள்ளனர்...’’ என உண்மையை போட்டு உடைக்கிறார் பிராண்டெய்ஸ் பல்கலையின் மூத்த அறிவியலாளரும், வலி நிவாரணி வல்லு நருமான டாக்டர் ஆண்ட்ரூ கொலோட்னி.

வலி நிவாரணி மற்றும் வலி நிவாரணியின் பக்கவிளைவுகளுக்கான மருந்துகள் என இரண்டையும் டூ இன் ஒன் பிஸினஸாக மருந்து நிறுவனங்கள் பார்ப்பதால் விஷம் போல விலையை ஏற்றிவைத்து பணத்தைப் பிடுங்குகிறார்கள். இதுதான் இப்போதைய ட்ரெண்ட். ‘‘ஏழைகளுக்கு குறைந்த விலையில், வரித் தொல்லைகளின்றி மருந்து கிடைக்க வேண்டும். அதுதான் இன்றைய மனிதநேயத் தேவை...’’ என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கிறார்கள். அதை காது கொடுத்து கேட்கத்தான் யாருக்கும் இங்கு நேரமில்லை.

வலி நிவாரணி அதிகமாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இப்பிரச்னையை தீர்க்க அமெரிக்க அரசு களத்தில் இறங்கியது. Naloxone (1985), Buprenorphine (1970) ஆகிய இரு மருந்துகளையும் வெளிப்படையாக சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்து அரசு சுகாதாரத்துறையோடு மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் இருக்கும் மருத்துவர்கள் இந்த மருந்துகளை பரிந்துரைப்பதற்கான சட்டத் தடைகளை மெல்ல நீக்கியது.

ஆனால், அதீத வலி நிவாரணி பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்களை, உலுக்கினால் காசு கொட்டும் பணமரமாகவே கணித்த மருந்து நிறுவனங்கள், மெல்ல அம்மருந்துகளை தங்கள் வெவ்வேறு பிராண்டுகள் வழியாக கொள்ளை லாபத்துக்கு தந்திரமாக விற்கத் தொடங்கின. இன்று நாலோக்ஸோன் மருந்தின் சந்தை மதிப்பு மட்டும் 1.3 பில்லியன் என்பதை நினைவில் கொள்வது நல்லது.



கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின் 35 மாநிலங்கள் இன்டிவியர் என்ற மருந்துக் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். வலி நிவாரணியான சபோக்‌ஸோன் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்து பிற போட்டியாளர்களை அழிக்கிறது என்பதுதான் அதன்மீதான குற்றச்சாட்டு. 2002ல் போட்டியின்றி வலி நிவாரணியை விற்க லைசென்ஸ் வாங்கி அது முடியும்போதே, ஃபிலிம் வகை வலி நிவாரணியை 2023 வரையில் பேடன்ட் வாங்கி விற்பனைக்கு கொண்டுவந்ததோடு, மாத்திரை வடிவிலும் குறைந்த விலையில் அந்நிறுவனம் விற்கிறது.

இதன் மூலம் 61% சந்தையை தன் பாக்கெட்டில் வைத்திருப்பதோடு, 1 பில்லியன் டாலரையும் தன் பேங்க் அக்கவுண்டில் ஏற்றியிருக்கிறது. ‘‘எங்கள் மருந்துகள் நன்றாக வேலை செய்வதால் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான்...’’ என இக்குற்றச்சாட்டுக்கு பதில் சொல்கிறது இன்டிவியர் நிறுவனம்.  

‘‘மருந்துக் கம்பெனிகள் நோயை உருவாக்கி விட்டு அதை குணப்படுத்தும் மருந்தையும் நம்மிடம் விற்கின்றன...’’ என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வலி நிவாரணி வல்லுநரான டாக்டர் மார்க் பப்ளிக்கர். ‘‘இதற்கான தீர்வாக, குறிப்பிட்ட விலையில் அரசு மொத்தமாக மருந்துகளை கொள்முதல் செய்வது அல்லது மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது ஆகிய சாத்தியங்கள் உள்ளன.

சரியான ராயல்டிக்கு மருந்துகளை நிறுவனங்கள் தயாரித்து மக்களுக்கு வழங்குவதற்கு இதுவே வாய்ப்பு...’’ என்கிறார் phRMA வணிக அமைப்பின் உறுப்பினரான கெய்ட்லின் கரோல். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும். இதெல்லாம் அமெரிக்காவில் நடப்பதுதானே? எதற்காக தமிழர்களான எங்களை பயமுறுத்துகிறீர்கள்..?

நல்ல கேள்வி. இதற்கான விடையை உங்கள் பகுதியில் இருக்கும் நிஜமான மக்கள் மருத்துவரிடம் கேட்டுப் பாருங்கள். அல்லது உங்களுக்கோ உங்கள் உறவினர்களுக்கோ மருத்துவர்கள் எழுதித் தரும் பிரிஸ்கிரிப்ஷனை உன்னிப்பாக படியுங்கள். எவ்வளவு வலி நிவாரணி மருந்துகள் அதில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது புரியும். இதன் பின்னால் இருக்கும் அரசியலைப் புரிய வைக்கவே அமெரிக்காவை முன்வைத்து  இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இதையே இப்படியும் சொல்லலாம். அமெரிக்காவிலேயே இப்படி என்றால்... இந்தியாவில்... தமிழகத்தில்..?                              

மார்க்கெட் மதிப்பு!

அதீத வலிநிவாரணி சந்தை மதிப்பு - 4.4 பில்லியன் டாலர்கள் (2015).

2024ல் சந்தை மதிப்பு - 12.4 பில்லியன் டாலர்கள்

பாலியேட்டிவ் கேர் மருந்து விற்பனை (உலகளவில்) -  1.9 பில்லியன் டாலர்கள் (2014).

2022ல் இதன் வளர்ச்சி - 2.8 பில்லியன் டாலர்களாக இருக்கும்!

மாத்திரை விலையுயர்வு!

ஹாஸ்பைரா (Pfizer) - 2300% (9 - 220 டாலர்கள்).

நாலோக்ஸோன் (Amphastar) - 175% (120 - 330 டாலர்கள்).

எவ்ஸியோ (Kaleo) - 550% (575 - 3750 டாலர்கள்).

தவறான பயன்பாடு

தினசரி வலி நிவாரணி பயன்பாடு - 1 மில்லியன்.

போதை இறப்புகள், 2005ம் ஆண்டு - 22,400 (இதில் 38.2% வலிநிவாரணியால் நிகழ்ந்தது).

போதை இறப்புகள், 2015ம் ஆண்டு - 52,000 (இதில் 33,000 மரணங்கள் வலிநிவாரணியால் சம்பவித்தது).

எதிர்கால வலிநிவாரணி இறப்பு வளர்ச்சி (2027) - 94,000

பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் - அமெரிக்கா, தெற்காசியா, ஐரோப்பா, தெற்கு ஆப்பிரிக்கா.

(drugfreeworld.com, UN Narcotics Control Board)