விக்ரம் வேதா



குங்குமம் விமர்சனக்குழு

தாதாக்களை வேட்டையாடும் என்கவுன்ட்டர் மாதவனின் துப்பாக்கி, விஜய் சேதுபதியை பழிவாங்கியதா என்பதே ‘விக்ரம் வேதா!’ சட்டத்துக்கு இடையூறாக இருப்பவர்களைச் சாமர்த்தியமாக செக் வைத்து போட்டுத் தள்ளுகிறார் மாதவன். அதை கேள்வி கேட்க விடாமல் செய்கிறார். இத்தகையவர்களை பூமிக்கு பாரம் என்று முடித்து வைப்பவருக்கு இப்போது கிடைப்பது ரவுடி விஜய் சேதுபதியை சுட்டுத் தள்ளுகிற வேலை.

நண்பர்களின் துணை கொண்டு, ரகசியமாக அவர் வேட்டையாட நினைக்க, சேதுபதியே நேரில் ஆஜராகிறார். வேதாளம் கதை சொல்வது போல பிரச்னைகளை எடுத்து வைக்கிறார். மாதவனின் சூழ்ச்சிகளுக்கும், சூதுகளுக்கும் இரையாகாமல் சேதுபதி தப்பினாரா என்பதே டிக்டிக் திக்திக் க்ளைமேக்ஸ்! வழக்கமான போலீஸ் - தாதா மோதலை வேறுபடுத்தி காட்டியிருக்கும் வகையிலும், கைபிடித்து கதை சொன்ன விதத்திலும் ஆரம்ப விறுவிறுப்பிற்கு ஏற்ற பவர்ப்ளே ஏரியா அமைந்துவிட்டது.

சமயங்களில் லாஜிக் உதைத்தாலும், தியேட்டரில் இருக்கும்வரை எந்த சந்தேகமும் எழாத வகையில் பரபர திரைக்கதையில் அசரடிக்கிறது புஷ்கர் - காயத்ரி யின் இயக்கம். விறைப்பும், முறைப்பும், கொஞ்சம் கேலியுமாக கேரக்டருக்கு உயிர்கொடுக்கிறார் மாதவன். என்கவுன்ட்டருக்கு முன்னால் ரிலீஃப் மூடில் இருக்கும்போதும், எதிரியை நெருங்கியபோதும், படபடத்து, மொத்தப் பேரையும் வீழ்த்தும் போதும் அனல் பட்டாசு.



அடுத்தடுத்து பன்ச் வசனம் பேசாமல், அதே சமயம் ஸ்டைலாக கைதட்டல் வாங்குகிறது மாதவனின் மேனரிசங்கள். தன்னை கொல்ல முயன்ற சிறுவனை ஆரத்தழுவி, கசிந்துருகும் இடம் மாதவனின் அனுபவத்திற்கானது. மிகவும் சிரமம் கொண்ட கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பின்னியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த மாதிரி அலட்சியமும், தெனாவெட்டும், வார்த்தைகளில் விளையாடுவதும் அவருக்கு கை வந்த கலை. மாதவனுக்கு சவால் கொடுக்கும் க்ளவர் ப்ளஸ் டெரர் கேரக்டரில் வரும் சேதுபதி பார்வையிலேயே பாதி கம்யூனிகேஷனை முடித்துவிடுகிறார்.

நல்ல காட்சியமைப்புகள் படம் நெடுக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. வக்கீல் மனைவியோடு மாதவன் முரண்படுகிறவிதம், சேதுபதியின் கேள்விகள் போடுகிற முடிச்சு, தம்பியின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் சேதுபதி தவிக்கிற இடம் - என எல்லாமே போலீஸ் - தாதா கதையில் யோசிக்க வைக்கிற இடங்கள். ஷ்ரத்தா, மாதவனுக்கு நடிப்பில் ஈடு கொடுக்கிறார்.

கொஞ்சமே கொஞ்சமாக வரும் வரலட்சுமியும் பிரமாதப்படுத்தி இருக்கிறார். மொத்த போலீஸ் யூனிட்டையும் துள்ளலும், துடிப்பும் பதமுமாக நடிக்க வைத்திருப்பது சிறப்பு. படத்தின் பெரும் பலம் வசனம். அதற்குப் பொறுப்பான மணிகண்டனுக்கு சபாஷ்! பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு, தாதா - போலீஸ் உலகத்தை அப்படியே தெளிவாகக் காட்டுகிறது. சாமின் பாடல்களும், பின்னணியும் ஈர்க்கின்றன.

அசர வைக்கும் உணர்ச்சிப் பிரவாகங்களில் விலகி நின்று பார்க்கிறது அவரின் இசை. சுற்றிச் சுற்றி வட்டமடிப்பது கொஞ்சம் இழுக்கிறது. அதை ஈடு செய்வதில் நிற்கிறது இயக்குநர்களின் திறமை. தாதாக்கள் என்றால் அவர்கள் வெறும் கொடுமையானவர்கள் என்பதற்கு மேலான பதிவு புதுசு. இரட்டையர்களின் அடுத்த படைப்புக்குக் காத்திருக்கலாம்.