பிட்டு படம்



பா.சரவணகுமரன்

காசி ராஜன் தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். திருமணம் ஆகவில்லை. சிந்தாதிரிப்பேட்டை மேன்ஷனே போக்கிடம். ஒரே அறையில் மூன்று பேர். மூவருக்கும் வெவ்வேறு நேரத்தில் பணிகள். அறையில் வாசம் செய்யும் நேரங்களில் ஆண்ட்ராய்டுதான் அவனது நண்பனாக இருந்தது. ஆண்ட்ராய்டு செல்போன்களுக்கு மவுசு கூடிவிட்டது. தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்குவதால் பெரும்பாலானவர்களின் கையில் விதவிதமாக அவை மின்னுகின்றன. எல்லாவற்றிலும் இணையதள வசதி இருக்கிறது. யு டியூப்பில் படங்கள்.

கூகுளில் நுழைந்தால் விதவிதமான வாய்ப்புகள். குறிப்பாக ஆபாசப் படங்களும் அவனது கண்முன்னே வரிசை கட்டத் தொடங்கின. ஏற்கெனவே ஓரளவு அந்த மாதிரியான படங்களைப் பார்த்து காசிராஜனுக்கு பழக்கம் இருந்தது. பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில்தான் முதன் முதலாக அது மாதிரிப் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உடலெங்கும் ஒருவித கிளர்ச்சி பரவியது. வியர்த்துக் கொட்டியது. அவனைவிட இரண்டு வயது அதிகமான, அருகில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. வரலாறு படித்த கதிரேசன் அண்ணன்தான் ஏற்பாடு செய்தார்.

இவர்களோடு தியாகுவும் முரளியும் சேர்ந்து கொண்டார்கள். காசி ராஜனின் கிராமத்தில் இருந்து நகரமும் கிராமமும் அல்லாத ஏரியாவில் தியாகுவின் வீடு இருந்தது. அவனது அப்பா, அம்மா, தங்கை உட்பட மூன்று பேரும் கோடையில் ஆன்மிக சுற்றுலா சென்றிருந்தனர். கதிரேசனுக்குத் தெரிந்த ஒருவர்தான் திருமண கொண்டாட்டங்களிலும் கோயில் விழாக்களிலும் வீடியோ படங்கள் காட்டி வந்தார்.

அவரிடம்தான் அந்த மாதிரியான வீடியோ கேஸட்டுகளும் இருந்தன. கதிரேசனுக்கு அந்தப் படங்களை சிலமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் மற்ற மூவருக்கும் ஆசை வார்த்தை கூறி ஏற்பாடு செய்வதாக சொன்னார். ஒரு வீடியோ கேஸட்டுக்கு நாற்பது ரூபாய். மூன்று பேரும் பங்கு பிரித்துக் கொடுப்பதாக ஏற்பாடு.

ஒரு பொன்மாலைப் பொழுது முடிந்து இரவு தொடங்கி சற்றே கடந்திருந்தது. பக்கத்து வீட்டு ஆரவாரமும் அடங்கிய நிலையில் டிவி பெட்டி, வீடியோ கேஸட், வீடியோ பிளேயரை சைக்கிளில் வைத்து கட்டிக் கொண்டு கதிரேசனின் நண்பர் வந்துவிட்டார். மற்ற மூவரும் படம் பார்க்கும் ஆவலில் உற்சாகமாக இருந்தார்கள். அவன் வீடு என்பதால் தியாகுவுக்குத்தான் சற்றே படபடப்பாக இருந்தது.

வீடியோ பிளேயர் இத்யாதிகளை வீட்டுக்குள் கொண்டு வந்தவுடன் உள்தாழ்ப்பாள் போட்டனர். வீடியோ செட் உரிமையாளர் ஆன் செய்துவிட்டு ஓரமாக உட்கார்ந்து கொண்டார். அவருக்கு அடிக்கடி பார்த்து திகட்டியிருந்தது. அனைத்துமே ஆங்கில கேஸட்டுகள். தேமல் நிறத்து நங்கையரின் பழுப்பேறிய தலைமுடிகள்... எதிர்மாறாக வாட்டசாட்டமான கருப்பர்கள்...



அப்போதுதான் காசிராஜனுக்கு வியர்த்துக் கொட்டியது. தியாகுவுக்கும் முரளிக்கும்கூட அப்படித்தான். கதிரேசன் மட்டும் சாதாரணமாக இருந்தார். இப்படியெல்லாம்கூட நடக்குமா என்றான் முரளி. ஒரு கட்டத்தில் பழுப்பேறிய கூந்தல் பெண்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பார்த்து முடித்தபிறகு வீடியோ பிளேயரை அட்டைப் பெட்டியில் வைத்து மூடி உரிமையாளர் புறப்படத் தயாரானார். அவரிடம் 80 ரூபாய் கொடுத்த கதிரேசன் மீதித் தொகையை பிறகு தருவதாகக் கூறினார்.

ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற பயம் தியாகுவுக்கு இருந்தது. ஒரு வழியாக எல்லோரும் புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அதன் பிறகு வீடியோ கேஸட் உரிமையாளருக்கு மீதித்தொகை கொடுக்கவில்லை. அவர் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். கெட்ட வார்த்தையிலும் திட்டினார். கதிரேசனிடம் கொடுத்துவிட்டதாகக் கூறி மூவரும் நழுவிக் கொண்டனர். பிறகு அவரும் மீதித் தொகை கேட்பதை நிறுத்திக் கொண்டார்.

அதன் பிறகு காசி ராஜனுக்கு என்ன காரணத்தினாலோ அது மாதிரியான படங்களைப் பார்க்கப் பிடிக்கவில்ைல. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது அருகில் உள்ள பாண்டியன் தியேட்டரில் ஷகிலா நடித்த ‘சில்பி என் காதலி’ ஓடுவதாகக் கூறி நண்பர்கள் அழைத்துச் சென்றனர். நகரமெங்கும் சில இடங்களில் அந்தப் படத்தின் ேபாஸ்டர்கள் அரைகுறை உடையோடு ஷகிலாவின் பருத்த உருவத்தோடு ஒட்டப்பட்டிருந்தன. ைட்டிலுக்குக் கீழே ‘இவளை எந்த ஆணாலும் கட்டுப்படுத்த முடியாது’ என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

அன்று கல்லூரியை கட் அடித்துவிட்டு, நண்பர்களோடு சென்றான். தமிழில் டப் செய்யப்பட்டிருந்தது. இடைவேளை வரை சொல்லிக் கொள்ளும்படி கண்ணைக் கவரும் எந்தக் காட்சிகளும் இல்லை. படத்தோடு சம்பந்தப்படாத அந்த மாதிரியான காட்சிகளை தனியாக இடைவேளைக்குப் பிறகு காட்டுவார்கள் என்று நண்பர்கள் கூறினர். அதை நம்பி காசிராஜனும் உட்கார்ந்திருந்தான்.

ஆனால், இடைவேளையின்போது கழிப்பறைக்குச் சென்றவன் மயங்கி கீழே விழாத குறை. அங்கு எங்கோ பார்த்தபடி அவனது ஊரைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் மணி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அவர் மிக இளைய வயதிலேயே வார்டு கவுன்சிலர் ஆனவர். இவனது வீடு உள்ள தெருவுக்கு அடுத்த தெரு. அண்ணன் என்றுதான் அழைப்பான். திருமணமாகி ஓரிரு வருடங்களே ஆகியிருந்தன. நான்கு நாட்கள் முன்புகூட செல்லும் வழியில் கல்லூரி வாசலில் அவர்தான் பைக்கில் கொண்டுவந்து இறக்கிவிட்டார். காசிராஜனின் தந்தையுடன் நெருக்கம் அதிகம்.

அவர் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்... வீட்டில் ரணகளமே நடக்கும் என்று நினைத்தவன் மறைவாக நின்றபடி நைசாகத் திரும்பிப் பார்த்தான். அவர் இவனைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சிகரெட்டை அணைத்துவிட்டு தியேட்டருக்குள் சென்றுவிட்டார். அவ்வளவுதான். நண்பர்களிடம் கூட சொல்லாமல் காசிராஜன் விடுவிடுவென்று தியேட்டரைவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டான். கூடவே வார்டு கவுன்சிலர் மணி மீது அவன் வைத்திருந்த மதிப்பும் குறைந்தது.

ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை ஊரில் இருந்த தனது சகாக்களிடமும் காசிராஜன் கூறினான். அவர்களோ, ‘‘இப்பதான் தெரியுமா? பாண்டியன் தியேட்டர்ல பிட் படம் போடும்போதெல்லாம் மணி பார்க்கப் போவார். நாமதான் சின்னப் பசங்க... இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சு... ஏன் இந்த வேலை?’’ என்றனர். அதன்பிறகு மணியின் மனைவியைப் பார்க்கும் போதெல்லாம் காசிராஜனின் மனதில் பல காட்சிகள் தோன்றி சிரிப்பு வந்தது.

இவனது நண்பர்களும், ‘‘படம் பார்த்துவிட்டு அது மாதிரி மணி அண்ணனும் பிராக்டீஸ் பண்ணுவார் போலிருக்கு. வெளியிலேயும் பொம்பளைங்ககிட்ட போய்ட்டு வருவாராம்...’’ என்றனர். மணி அண்ணனின் மனைவி அழகாக இருப்பார். இவனை தம்பி என்று அழைப்பார். இவனது அம்மாவுடன் அவ்வப்போது வந்து பேசிக்கொண்டிருப்பார். அப்படிப்பட்ட மணிக்கு இப்படிப்பட்ட மனைவியா என்றெல்லாம் அப்போது நினைக்கத் தோன்றும்.

அந்த மாதிரியான சில படங்களுக்கு திரைத் துறையில் சற்றே மார்க்கெட் குறைந்த நடிகைகளின் அரைகுறை படத்தை அச்சிட்டு போஸ்டர் ஒட்டியிருப்பார்கள். பார்வையாளர்களை இழுக்கும் தந்திரம் அது. ஆனால், படத்தில் அவர்கள் காட்சியே இடம் பெற்றிருக்காது. அதைப்போல ஒருமுறை ‘மீ’யில் தொடங்கி ‘னா’வில் முடியும் நடிகையின் படத்தைப் போட்டு ‘A’ என்ற கொட்டை எழுத்தில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அப்போது காசிராஜன் ‘A’ என்றாலே அதுமாதிரியான படங்கள்தான் என்று நினைத்திருந்தான்.



பிறகுதான் வன்முறைக் காட்சி படங்களுக்கும் ‘A’ சர்டிபிகேட் கொடுப்பார்கள் என்று தெரிந்தது. ‘மீ’யில் தொடங்கி ‘னா’வில் பெயர் முடியும் நடிகை காசி ராஜனின் ஆஸ்தான நடிகையாக இருந்தார். இவனது பல நாள் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார். முன்னணி கதாநாயகர்களோடு நடித்தவர். இப்போது மார்க்கெட் குறைந்திருப்பதால் இது மாதிரியான படங்களில் நடிக்கிறாரோ என்று நினைத்தான்.

நண்பர்களிடம் சொன்னபோது ஒரு நாள் சேர்ந்து போகலாம் என்றார்கள். மணி அண்ணனை நினைத்து பயமாக இருந்தது. கழுகுக்கு வியர்ப்பது போல் வந்துவிடுவாரோ என்று நினைத்தான். அந்தப் படங்களைத்  திரையிடும் பாண்டியன் தியேட்டருக்கு சற்றுத் தள்ளி போஸ்ட் ஆபீஸ் இருந்தது. உறவினர் ஒருவருக்கு மணியார்டர் அனுப்பச் சொல்லி அப்பா பணம் கொடுத்திருந்தார். அதை அனுப்புவதற்குச் சென்றபோது பாண்டியன் தியேட்டர் உள்ள திசையிலிருந்து மணி அண்ணன் டி.வி.எஸ். 50யில் வந்து கொண்டிருந்தார்.

இவனைப் பார்த்தவருக்கு சற்றே அதிர்ச்சி. ‘‘என்னடா இந்தப் பக்கம்?’’ என்றவரிடம் ‘‘போஸ்ட் ஆபீஸ் வந்தண்ணே...’’ என்றவன் ‘‘நீங்க எங்கண்ணே இந்தப் பக்கம்?’’ என்றான். எச்சிலை விழுங்கியவர், ‘‘பாண்டியன் தியேட்டர் மானேஜர் எனக்கு பழக்கம். சும்மா பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்...’’ என்று கூறியபோது வந்த சிரிப்பை காசிராஜன் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

இனி அடுத்த படத்திற்குத்தான் பாண்டியன் தியேட்டருக்கு மணி அண்ணன் வருவார் என்று நினைத்தவன் மறுநாள் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றான். நினைத்தது போலவே போஸ்டரில் படத்தைப் போட்டு ஏமாற்றி விட்டார்கள். மேன்ஷன் அறையில் ஆண்ட்ராய்டு செல்போனில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த காசி ராஜனுக்கு திடீரென வார்டு கவுன்சிலர் மணி அண்ணன் ஞாபகம் வந்தது.

சில வருடங்களுக்கு முன் அருகில் உள்ள நகரத்தில் பெரிய வீடு கட்டி குடும்பத்துடன் அங்கே செட்டிலாகி இருந்தார். கடந்த முறை ஊருக்குச்  சென்றபோது அம்மா பக்கத்து வீட்டு சுமதி அக்காவிடம் பேசிக் ெகாண்டிருந்தாள். பயணக் களைப்பில் கட்டிலில் படுத்திருந்த காசி ராஜன் அரைத் தூக்கத்தில் இருந்தான். அம்மா பேசியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவன் விழித்து ‘‘என்னம்மா சொல்றே..?’’ என்றான்.

‘‘மணி பொண்டாட்டி செத்துப் போயி ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு. பாவம் மணி...’’ என்றவள், சுமதி அக்கா பக்கம் திரும்பி, ‘‘மணியோட கொழுந்தியா ஒருத்தி இருக்கா... அவளை ரெண்டாந்தாரமா கல்யாணம் செய்து வைக்கிறோம்னு சொல்றாங்க. ஆனா மணி, என் பொண்டாட்டி இருந்த இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க விரும்பலேனு சொல்லி வேண்டாம்னுடுச்சு... பாவம் தாடி வச்சுகிட்டு பைத்தியம் மாதிரி இருக்கு!’’ என்றாள். மேன்ஷன் அறையில் அதன் பிறகு காசிராஜன் உறங்கவில்லை.

ஒரே கண்ணில் 27 லென்ஸ்கள்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணிக்கு திடீர் கண் வறட்சி, உறுத்தல். டாக்டர் செக் செய்தபோது, அவரின் கண்ணில் மீன் வலைபோல பின்னிக்கிடந்தது ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தம் 27 கான்டாக்ட் லென்ஸுகள்! அம்மணி டாக்டரிடம் செக் அப்புக்கு போய் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறதாம்.

கணவர்களை காப்பாற்றும் சீனா மால்!

சீனாவின் குளோபல் ஹார்பர் மாலில் ஷாப்பிங் செய்ய லேடீஸுடன் வரும் ஜென்ட்ஸுக்கு போரடிக்காமல் இருக்க, குறைந்த விலையில் ‘ஹஸ்பண்ட் பாட்’ என்னும் விளையாட்டு அறை ரெடியாகியுள்ளது. ‘சீட் சூடாகுது, ஏசி போடுங்க!’ என சில கணவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

மானைக் காப்பாற்றிய நாய்!

நியூயார்க்கைச்சேர்ந்த மார்க் ப்ரீலே, பீச்சில் தன் கோல்டன் ரெட்ரீவர் இன நாயுடன் ஹாயாக நடந்தபோது, திடீரென கடல் நீரில் தத்தளித்த மானின் அபயக் குரல் கேட்டது. உடனே மார்க்கின் நாய் கடலில் குதித்து மானைக் காப்பாற்றியுள்ளது.