ICF - அறிந்த இடம் அறியாத விஷயம்



பேராச்சி கண்ணன்

ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 473 ஏக்கர். இரண்டு டிவிஷன்கள். தவிர, டிசைன் கட்டிடமும், மியூசியமும் வேறு. நிச்சயமாக ஒரே நாளில் சுற்றி வர முடியாத ஓர் இடம் இந்த ஐ.சி.எஃப் (Integral Coach Factory). நாம் சுகமாக பயணம் செய்யும் ரயில்பெட்டிகளை விதவிதமாகத் தயாரிக்கும் நிறுவனம். வெப்பம், இரைச்சலுக்கு நடுவே தங்கள் உடலை உருக்கி ரயில்பெட்டிகளை உருவாக்குகிறார்கள் பணியாளர்கள்.

சென்னை பெரம்பூரில் இயங்கிவரும் ஐ.சி.எஃப்புக்குள் நுழைந்தோம். முதலில் வரவேற்றது ஷெல் டிவிஷன். பொது மேலாளர் அலுவலகத்துடன் இணைந்திருக்கும் பகுதி. கோச்சின் கூடு மட்டும் உருவாக்கப்படும் இடம். அதனாலேயே இதனை ‘ஷெல்’ பகுதி என்கிறார்கள். ஷெல்லுக்குத் தேவையான வடிவங்களில் இரும்புகளைக் கிடத்தி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு வருகிறது ஒரு பிரமாண்ட கூடாரம்.

ஏ ஷாப், பி ஷாப், சி ஷாப் என வேலை வாரியாக இதனைப் பிரித்து வைத்துள்ளனர். தலையில் மஞ்சள் தொப்பியுடனும், கையுறை அணிந்தும் சில தொழிலாளர்கள். சத்தமான இடங்களில் காதில் ஹெட்செட் போன்ற கருவியை மாட்டியபடி இன்னும் சிலர். வெல்டிங் பகுதிகளில் கண்ணாடியுடன் வேலை... பரபரப்பாக இயங்குகிறது ஐ.சி.எஃப்.

‘‘நீங்க வெளில இருந்து முழு கோச்சைத்தான் பார்த்திருப்பீங்க. ஆனா, இங்க எல்லாப் பகுதியும் தனித்தனியா இருக்கும். அதை இணைச்சு ஒரு கூடு ரெடி பண்றது எங்க வேலை...’’ என்கிறார் வெல்டிங் பணியாளர். கண்காணிப்பு பணியிலிருந்த இன்னொருவர், ‘‘இந்த ஏ ஷாப் பகுதில கோச்சின் இரண்டு பக்கமும் வர்ற ‘side wall’ம், இரண்டு பக்கத்துக்குமான ‘End wall’ம் பண்றோம்.

எங்க நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்ட மெட்டீரியல் வெளியிலிருந்து வரும். அத வெல்டிங் எல்லாம் பண்ணி கோச் வடிவத்துக்கு தயாராக்குவோம். அந்தப் பக்கத்துல உள்ள பி ஷாப்ல மேற்கூரையும், கீழ் பகுதியும் ெரடியாகும்...’’ என்றவர், அந்தந்த பகுதிகளுக்கே நம்மை அழைத்துச் சென்றார். கீழ் பகுதி எனப்படும் அண்டர் ஃப்ரேம், இரும்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்மேல் தகர ஷீட்டுகளைப் பொருத்துகின்றனர். இந்த ஷீட்டு களையெல்லாம் மேலிருந்து க்ரேன் மூலம் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இந்தப் பகுதியில் நான்கைந்து அண்டர் ஃப்ரேம்கள் செய்வதைப் பார்த்தோம். பிறகு இதனை மேற்கூரை, சைடு மற்றும் எண்ட் வாலுடன் ‘பாடி ஷெல் அசெம்பிளி ஜிக்’ என்ற பகுதிக்கு அனுப்பி வெல்டிங் மூலம் இணைக்கிறார்கள்.



அழகான ஒரு கூடு நச்சென தயாராகிவிட்டது. பிறகு, இங்கிருந்து சி ஷாப் செல்கிறது. அதற்குமுன் ஜன்னலுக்கான ஃப்ரேமும், படிக்கட்டுகளும் உருவாக்கப்பட்டு விடுகின்றன. நிறைவுப்பகுதியில், போகியுடன் இணைக்கிறார்கள். போகி என்பது நான்கு சக்கரங்கள், பிரேக், விட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட அமைப்பின் பெயர். ஒரு கோச்சின் இரண்டு பக்கமும் பொருத்தப்படும் இந்தப் போகிதான் கோச்சைத் தாங்கிச் செல்லும் சுமைதாங்கி!

இப்போது முழுக் கூடும் ரெடி. அடுத்ததாக, இந்தக் கூடு வில்லிவாக்கம், அண்ணாநகர் ரயில்பாதை வழியாக ஃபர்னிஷிங் டிவிஷனைச் சென்றடைகிறது. அதென்ன ஃபர்னிஷிங்? ஒன்றுமில்லை. நியூ ஆவடி சாலையின் இடதுபுறத்தில் இருக்கும் இந்த டிவிஷனில் பயணிக்களுக்கான வசதிகள் அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. கோச்சினுள் ஒவ்வொரு பகுதியாகப் பிரிப்பது முதல் சீட், லைட், ஃபேன், கழிப்பறை, ஏசி போன்றவை பொருத்துவது வரை வேலைகள் ஜரூராக நடக்கின்றன.



இந்த டிவிஷனுடன் இணைந்து டிசைன் பிரிவையும் வைத்துள்ளனர். உள்ளே நுழைகிறோம். பச்சைப் பசேல் எனப் புல்வெளி. சுவர்களில் அழகழகான ஓவியங்கள். வேஸ்ட்டான இரும்புப் பொருட்கள் ஆக்கபூர்வ வடிவங்களில் மாற்றப்பட்டுள்ளன. இங்கே இரண்டு பக்கமும் வரிசையாக பத்துப் பதினைந்து தண்டவாள ஷெட்டுகள். இதிலொரு பக்கம் முழுவதும் அசெம்பிள் செய்யும் பகுதி.

இன்ெனாரு பக்கத்தில் இறுதிக்கட்ட வேலைக்கான இடம். இந்த இரண்டு பக்கங்களையும் டிராவர்சர் (traverser) என்கிற பெரிய இயந்திரம் ஒன்றின் வழியாக இணைத்துள்ளனர். இந்த இயந்திரம் ஒரு பக்கமுள்ள கோச்சை மற்றொரு பக்க தண்டவாளத்திற்கு எளிதாகக் கடத்திவிடும். அடுத்து பெயின்டிங் பகுதி. ஷெல் டிவிஷனில் இருந்து வரும் ரயில்பெட்டிகள் முதலில் பெயின்டிங் பகுதிக்குத்தான் கொண்டு வரப்படுகின்றன.

இங்கே, க்ரே கலரில் பெயின்ட் அடிக்கப்படுகிறது. சுவருக்குப் பட்டி அடிப்பது போல! பிறகு, இங்கிருந்து அசெம்பிள் பக்கமாக எடுத்து வருகிறார்கள். வயரிங், மோல்டிங், ஃபிட்டிங், சீட் அரேஞ்ஜ்மென்ட் என பத்து ஸ்டேஜ்கள் வரிசை கட்டுகின்றன. ஒவ்வொன்றிலும் அததற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. சமையலறை கோச்சை தனியாக டிசைன் செய்கிறார்கள். அதற்குள் வரவேண்டிய விஷயங்களுக்கு ஏற்ப அசெம்பிளிங் நடக்கிறது.

இதுபோல, ஸ்பெஷல் ரயில்கள் எல்லாவற்றுக்கும் டிசைனுக்கு ஏற்றபடி பணிகளைச் செய்து முடிக்கிறார்கள். பிறகு, ஃபேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் சென்றோம். ஒவ்வொரு ஃபேனையும் சரியான இடத்தில் பொருத்திவிட்டு வயரிங் பகுதிக்கு அனுப்புகிறார்கள். இந்த வயரிங் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்களுக்கு மட்டும் தனிக் கட்டிடம் அமைத்திருக்கிறார்கள்.



இங்கே ஒரு குழு எவ்வளவு தேவை என்பதை ஏற்கனவே கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் வயர்களை கட் செய்து அடுக்கி வைத்திருக்கிறது. வயரிங் பணியில் இருப்பவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக இப்படியொரு ஏற்பாடு. இந்த ஃபர்னிஷிங் பகுதியின் கடைசியில் புதிய வரவாக LHB கோச் தயாரிக்கும் யூனிட்டை இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெர்மன் முறை கோச் தயாரிப்பான Linke Hofmann Busch (LHB) என்கிற முறையில்தான் இனி அனைத்து கோச்சுகளையும் ஐ.சி.எஃப் தயாரிக்க உள்ளது.

இந்தப் பகுதிக்குள்ளும் சுற்றினோம். வழக்கமான கோச்சுகளை விட 2 மீட்டர் நீளமாக இருக்கிறது. இந்த முறையில் கூடுதலாக ஒரு ‘பே’ உருவாக்க முடியும் என்றார் அங்கிருந்த பணியாளர். ‘‘அதாவது 72 சீட் பெர்த்தில் இனி 80 பெர்த்கள் இருக்கும். முன்னாடி மைல்டு ஸ்டீல்னு சொல்ற இலகுவான எஃகுவால் தயாரிக்கப்பட்டுச்சு. இப்ப, முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்தான்.

இதனால வெயிட் கம்மியாவும், வேகம் முன்பைவிட அதிகமாவும் இருக்கும்...’’ என்கிறார். இந்த ரயில்கள் எல்லாம் சிவப்பும், க்ரேவும் கலந்த நிறத்தில் ஜொலிக்கின்றன. எல்லாப் பணிகளும் முடிந்த பிறகு அந்தப் பக்கமுள்ள பகுதியில் இறுதிக் கட்டமாக ஃபினிஷிங் நடக்கிறது. அதன்பிறகு, பெயின்ட்டிங். இதில் ஒவ்வொரு கோச்சுக்கும் ஒவ்வொரு கலர் இருக்கிறது. சாதாரண ரயில் கோச் ஊதா கலரும், ராணுவத்திற்கு என்றால் பச்சை நிறமும், மெடிக்கல் வேன் என்றால் ரெட் கலருடன் ப்ளஸ் குறியீடும் அடிக்கிறார்கள். பிறகு? அழகான சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில் பச்சைக்கொடி காட்டி வழியனுப்பி வைக்கப்படுகிறது!                 

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

டேட்டா

* ஐ.சி.எஃப்., 1952ல் ஆரம்பிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து எஞ்சினியர்கள் இதற்கான பணிகளை ஏழாண்டுகள் தங்கியிருந்து செய்து கொடுத்திருக்கிறார்கள். 1955ல் அப்போதைய பிரதமர் ஜவகர்ஹால் நேரு இதனைத் திறந்து வைத்தார்.
* ஆரம்பத்தில் ஷெல் மட்டும் தயாரித்து அந்தந்த ரயில்வே கோட்டத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். பிறகு 1962ல் ஃபர்னிஷிங் யூனிட் தொடங்கியுள்ளனர்.
* இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்பெட்டிகளைத் தயாரித்து லிம்கா சாதனை புக்கில் இடம் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறது ஐ.சி.எஃப்!
* 2016 - 17 காலத்தில் மட்டும் 2277 கோச்சுகள் தயாரித்துள்ளனர். இதுதான் ஐ.சி.எஃப் வரலாற்றில் ஓராண்டில் அதிகபட்ச தயாரிப்பு.
* வரும் ஆண்டில் 2400 கோச்சுகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.
* 11 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். தவிர, மறைமுகமாகப் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இதைவிட 4 மடங்கு அதிகமிருக்கும் என்கிறார்கள்.
* ஐ.சி.எஃப் நிறுவனத்தை பொதுமக்களும் பார்வையிடலாம். இதற்கு அனுமதி பெற்று, கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும்.
* தொழிற்சாலை என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.



திட்டங்கள்

* பொதுவா ஐ.சி.எஃப்பில் ஏசி, ஸ்லீப்பர் கோச்சுகள் மட்டுமே தயாரிக்கிறாங்கனு நினைச்சிருப்பீங்க. ஆனா, நாங்க டீசல் மல்டிபிள் யூனிட், எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட், மெட்ரோ ரயில், எஞ்சின் இல்லாமல் ரன்னாகும் செல்ஃப் புரொபல்டு கோச், பேன்ட்ரினு 87 வெரைட்டிகளில் கோச்சுகள் தயாரிக்கிறோம். தவிர, ராணுவத்திற்கு நிறைய கோச்சுகள் செய்றோம். அப்புறம், லங்கா, தான்சானியா, பங்களாதேஷ்னு வெளிநாட்டு ஆர்டர்களும் பண்ணிட்டு இருக்கோம்.

* அப்புறம், high speed self propelled accident reliefனு ஒரு ரயில் கோச் தயாரிக்கிறோம். இது எலக்ட்ரிக் ட்ரெயின் மாதிரி எஞ்சின் இல்லாம ரன்னாகும். விபத்து பகுதிகள்ல நிவாரணப் பணிக்காக பண்றோம். இதுல, மூணு கோச்சு இருக்கும். ஒண்ணுல ஊழியர்கள் இருப்பாங்க. அடுத்ததுல, நிவாரண வேலைக்கான கருவிகளும், பிறகு, மூணாவதுல மினி ஆஸ்பிட்டலும் இருக்கும்.

* இன்னும் இரண்டு மாசத்துல, இதுவரை ஐ.சி.எஃப் பண்ணின கோச்சுகள் எல்லாம் முடிஞ்சிடும். அதுக்கப்புறம் LHB டிசைன்படி பண்ணப்ே பாறோம். இப்ப இருக்குற கோச்சுகளின் ஆயுள்காலம் 25 வருஷங்கள்தான். இந்த டிசைன்ல 35 வருஷ ஆயுள் கிடைக்கும்.

* இப்ப, விசாகப்பட்டினம் டூ அரக்குவேலிக்காக ‘vistadome’னு ஒரு சுற்றுலா கோச் பண்ணியிருக்கோம். மொத்தம் 40 சீட்கள். பெரிய கண்ணாடி ஜன்னல்களால் ஆனது இந்த கோச்! மேலேயும் தேவையான ஒரு சுவிட்ச் மூலம் கண்ணாடியா மாத்தி வானத்தை பார்க்கலாம். சீட்கள 180 டிகிரியில சுற்றலாம். எந்தப் பக்கம் ரயில் போகுதோ அந்தப்பக்கம் மாற்றி எதிரே இருக்கிறவங்ககூட உரையாடலாம். டிவிகள், பேன்ட்ரி, நின்னு பார்க்குற மாதிரியான இடவசதி, மேற்கத்திய கழிப்பறைனு ரொம்ப சொகுசாக அமைச்சிருக்கோம். இப்ப, வெயிட்டிங் லிஸ்ட்ல போயிட்டு இருக்கு. இதேமாதிரி, நீலகிரி மலை ரயிலுக்கு பண்ணப் ேபாறோம்.

* இப்போ மத்திய அரசு high speed train விடணும்னு சொல்லியிருக்காங்க. அதனால, ஒரு மணி நேரத்துக்கு 160 கிமீ வேகத்துல போற, சர்வதேசத் தரத்திலான ரயில்கள் தயாரிக்கப் போறோம். அதுக்காக ‘train 18’னு ஒரு பெயர் கொடுத்து வேலை பார்த்திட்டு இருக்கோம்.
* சென்னை மெட்ரோ மாதிரி நாங்க கொல்கத்தாவுக்கு மெட்ரோ ரயில் பண்ணிக் கொடுத்திருக்கோம்.

* அதிவேக ரயில் தயாரிக்கிற திட்டம் இருக்கு. இவை எலெக்ட்ரிக் ரயில் மாதிரி எஞ்சின் இல்லாம வெகுதூரம் போகிற ரயில்களாக இருக்கும் - நம்பிக்கையுடன் சொல்கிறார் ஐ.சி.எஃப் செயலாளர் கே.என்.பாபு.

மியூசியம்

* ஐ.சி.எஃப் ஃபர்னிஷிங் பகுதியில் இருக்கும் மியூசியத்தில் விதவிதமான பழைய ரயில் என்ஜின்களையும் அந்தக் கால கோச்சுகளையும் மக்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்.
* குழந்தைகள் குதூகலமடைய உள்ளே ஒரு டாய் ட்ரெயின் ஓடுகிறது. இதில் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.
* பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.25 கட்டணம். பொதுமக்களுக்கு ரூ.40. காலை 9.30 முதல் 6 மணி வரை மியூசியம் திறந்திருக்கும். திங்கட்கிழமை விடுமுறை.