கால்கள் இல்லை கைகளும் இல்லை ஆனால் இலக்குகள் உள்ளன!



ஒரு நம்பிக்கையின் கதை

ப்ரியா

‘ஷாலினி சரஸ்வதி மாரத்தான் ஓடுகிறார்...’ என்றால் அதில் என்ன விசேஷம் என்று கேட்பீர்கள். ஷாலினிக்கு இரண்டு கால்களும், இரண்டு கைகளும் இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி உற்சாகமான பெண். துறுதுறுவென எப்போதும் ஓடியாடி வேலை செய்பவர். கண நேரமும் முடங்கிக்கிடந்தது இல்லை. அலுவலுகம், வீடு, நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு என பட்டாம்பூச்சியாக எப்போதும் சுற்றிக்கொண்டிருப்பார்.

எல்லா பெண்களையும் போலவே ஆயிரம் கனவுகள் சுமந்து மண வாழ்க்கைக்குள் நுழைந்தார். எதிர்பார்த்தது போலவே மனதுக்கு ஏற்ற அன்பான கணவன்... குதூகலத்துக்குக் கேட்கவா வேண்டும்? சிறகு முளைத்த பறவைகளாக உலகெங்கும் பறந்து திரிந்து கொண்டிருந்தனர் இருவரும். திடீரென ஒருநாள் அவர்கள் வானம் இருண்டது. வாழ்க்கையே சூன்யமாகிப் போனது. இனி ஷாலினியின் சொற்களிலேயே கேட்போம் வாருங்கள்...   



‘‘2013-ம் வருடம் என் வாழ்க்கைப் பயணத்தையே முற்றிலும் புரட்டிப் போடும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அந்த ஆண்டு நான் சந்தோஷத்துடன் இருந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எங்கள் மணநாளைக் கொண்டாட நாங்கள் கம்போடியாவுக்குச் சென்றோம். இரண்டாவது, நான் கருவுற்றிருந்தேன். என் குழந்தை இந்த பூமிக்கு வரும் நாளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

என்னுடைய அந்த இரண்டு சந்தோஷமும் நெடுநாட்கள் நீடிக்கவில்லை. அனைத்துமே குலைந்து போன அந்த இருண்ட நாளும் என் வாழ்வில் வந்தது. திடீரென ஒருநாள் நல்ல காய்ச்சல். நினைவே இற்றுப் போகும்படியாகப் படுத்த படுக்கை. அடித்துப்போட்டது போல உடலெங்கும் வலி. தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டேன். ஓரிரு நாட்களில் ஓரளவு குணமானது போல் இருந்தது. ஆனால், மீண்டும் அதிக வீரியத்துடன் காய்ச்சல் வந்தது. சமாளிக்கவே முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையே வீடானாது. நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அதுகூட கவலை இல்லை. தொடர்ந்து ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் எடுத்துக்கொண்டதால் கருவின் வளர்ச்சி பாதித்தது. என் குழந்தையை நான் இழந்தேன்.

தாங்க முடியாத வேதனை. என் வயிற்றில் மலர்ந்த பிஞ்சு உயிர் அது. சரி, இவ்வளவுதான் துயரம் என்று நினைத்திருந்தேன். பிறகுதான் விதியின் விளையாட்டே ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயல் இழக்க ஆரம்பித்தன. மருத்துவர்களுக்கே குழப்பம். பலவித ஆய்வுகளுக்குப் பிறகு எனக்கு வந்துள்ள நோய்க்குக் காரணம் ‘ரிக்கெட்சியல்’ (Rickettsial) என்ற பாக்டீரியா தொற்று என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

இதைச் சொன்ன டாக்டர் நான் உயிர்பிழைக்க ஐந்து சதவிகித வாய்ப்பே இருப்பதாகச் சொன்னார். மொத்த குடும்பமும் தளர்ந்துபோனது. நானோ முழுமையாக உடைந்துபோனேன். என் இடதுகையில் இருந்து மெல்லிய நாற்றம் வரத் தொடங்கியது. விரல்கள் தொடங்கி மெல்ல என் முன்கை வரை அழுகத் தொடங்கியது. ‘இது தொடர்ந்தால் முழுக்கையும் அழுகும் வாய்ப்பு உள்ளது... பிறகு அது மொத்த உடல் உறுப்புகளையும் பாதிக்கும். எனவே, இடது கையை அகற்ற வேண்டும்’ என்றார் டாக்டர்.

என் மூளை மற்றும் மனம் இந்த உண்மையை ஏற்றுக் கொள்வதற்குள் என் நோய் தீவிரமாகிக்கொண்டே இருந்தது. இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்று டாக்டர்கள் என் இடது கையை வெட்டி எடுத்து விட்டார்கள். அதில் இருக்கும் செத்த செல்களை நீக்கும் போதுகூட அவர்கள் எந்தவித மயக்க மருந்தையும் கொடுக்கவில்லை. அப்போது வலியால் நான் துடித்ததைப் பார்த்து என் கணவர் மட்டும் அல்ல, மொத்த மருத்துவமனையே கலங்கியது.



அந்தக் காயம் குணமாவதற்குள் தொற்று என் வலது கைக்கும் பரவியது. வேறு வழியின்றி அந்தக் கையையும் நீக்கினோம். அதில் இருந்து வெளியே வருவதற்குள் இரண்டு கால்களும் அழுக ஆரம்பித்தன. எனக்கு இன்னமும் நினைவுள்ளது. நான் மருத்துவமனைக்குச் செல்லும்போது என் கால் விரல்களில் நெயில் பாலிஷ் போட்டிருந்தேன். ஆனால், திரும்பி வரும்போது எனக்குக் கால்களே இல்லை...வாழ்க்கையே வெறுத்துப்போனது. இதில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறேன் என்றே தெரியவில்லை.

மனது முழுதும் பாரமாக கனத்தது. எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டத்தைக் கடவுள் கொடுத்தார் என்று மனதுக்குள் குமுறினேன். இரண்டு வருடங்கள் இந்த சிகிச்சைக்காகப் படுக்கையில்தான் என் வாழ்க்கை கழிந்தது. என்னால் என்னுடைய வேலையைக் கூட செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் மற்றவர்களையே நாட வேண்டும் என்று நினைக்கும்போது மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாவேன்.

கணவரும் பெற்றோரும்தான் என்னை சமாதானம் செய்வார்கள். என் நிலையை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால், எதிர்கால வாழ்க்கை படுக்கையிலேயே முடங்கிவிடும் என்று எனக்குள் ஒரு அலாரம் ஒலித்தது. இயல்பானவளாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். எப்படி என்றுதான் தெரியவில்லை. ஆனால், என்னிடம் நம்பிக்கை இருந்தது.

நான் செய்வதற்கு என சிறிய சிறிய இலக்குகளை வைத்துக் கொண்டேன். புத்தகங்களை என் கைகளில் தாங்கிப் பிடிக்கப் பழகினேன். மன அழுத்தத்தில் இருந்து விடுபட கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு வரச் செய்து அவர்களுடன் நேரத்தைச் செலவழித்தேன். கை கால் இல்லை என்றால் என்ன... மூளை நல்ல முறையில்தானே செயல்படுகிறது? அதனால், மறுபடியும் வேலைக்குச் சேர்ந்தேன்.

நான் முன்பு வேலை பார்த்த இடத்திலேயே எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தார்கள். வேலைக்குப் போக ஆரம்பித்ததும் எனக்குள் ஒருவித புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. கார்பன் ஃபைபர் கொண்ட பிளேட் அமைப்பில் செயற்கைக் கால்களைப் பொருத்திக் கொண்டேன். முதன் முதலாக என் பிளேட் கால்களைத் தரையில் பதித்தபோது வலி உயிர் போனது. முட்டிப் பகுதியில் உள்ள தசைகள் எல்லாம் மிகவும் மிருதுவானவை.



கொஞ்ச நாட்களில் அந்த இடமே ரணமாகிவிட்டது. வலியும் ரணமும் நீங்கி உடல் அந்த புதிய செயற்கை உறுப்புக்குப் பழக சில நாட்களானது. மெல்ல நடக்கப் பழகினேன். நடக்க நடக்க உற்சாகமாக இருந்தது. என்னால் ஓடவும் முடியும் என்று தோன்றியது. ஓடவும் செய்தேன். ஆனால், மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தபோது வீட்டிள் உள்ளவர்கள் முதலில் யோசித்தார்கள். பிறகு, என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

மாரத்தானுக்காக முறையாகப் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். பலருக்கும் எப்படி, என்ன மாதிரியான பயிற்சியை எனக்கு அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் ஐயப்பா என்ற பயிற்சியாளர் எனக்குக் கிடைத்தார். தினமும் காலை ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளித்தார். ஆரம்பத்தில் ஓடியபோது என் உடல் துவண்டது. சோர்வு அழுத்தியது. இந்த கால்களைக் கொண்டு பேலன்ஸ் செய்து நிற்கக்கூட முடியவில்லை.

கோச் முதலில் என் உடலை வலுவாக்கும் பயிற்சி கொடுத்தார். தீவிரமான டயட்டில் இறங்கினேன். எடை கணிசமாகக் குறைந்தது. என் உடலும் மனமும் மாரத்தானுக்குத் தயாரானது. கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்றேன். 10 கி.மீ தூரம் கடக்க வேண்டும். போட்டியில் வெல்வதைவிட என்னை நானே வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் அல்லாமல் எல்லோருக்குமான பொதுவான போட்டியிலேயே பங்குகொண்டேன். கடைசியாக இலக்கை அடைந்தபோது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. என் ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் பாராட்டும் விதமாக எனக்கு ‘பிலிவர்’ விருது கிடைத்தது. இப்போது பல்வேறு மேடைகளில் மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதைப் பேசிவருகிறேன்.

தொண்டு நிறுவனங்கள் அமைக்கும் எண்ணம் ஏதும் இப்போதைக்கு இல்லை. ஆனால், மாற்றுத்திறனாளிகளும் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர்களுக்கு எதிர்காலம் குறித்த தன்னம்பிக்கையைத் தர வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, அவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் உள்ள உள்ளார்ந்த திறனை மேம்படுத்தி வாழ்வில் உயர உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

மாற்றுத்திறனாளிகள் மேல் மக்களிடம் உள்ள தவறான எண்ணம் மாறவேண்டும். வெறும் அனுதாபமும்; அற்பத்தனமான கேலியும் வேண்டாம். மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்தி; உற்சாகப்படுத்தும்போது பல விஷயங்களை சாதிக்க முடியும். அடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்தான் என் லட்சியம்.

இதில் பங்கு பெற்று நம் நாட்டுக்கு விருது பெற்றத் தர வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்காகக் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எனக்குக் கால்கள் இல்லைதான்; ஆனால், இலக்குகள் இருக்கின்றன. எனவே, நிற்க நேரம் இல்லை. ஓடத்தான் வேண்டும். ஓடுவேன். சாதிப்பேன்!