COFFEE TABLE



குங்குமம் டீம்

விம்பிள்டனில் காஜல் அகர்வால்!

அஜித் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விஜய்யின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு இன்னும் தேதி சொல்லவில்லை. அப்புறமென்ன... ஃப்ரீ ஆன காஜல் கிடைத்த இடைவெளியில் இங்கிலாந்தில் நடந்த விம்பிள்டன் போட்டியை கண்டு ரசித்திருக்கிறார்! ‘‘கிரிக்கெட்தான் என் ஃபேவரிட். ஆனால்,, டென்னிஸ் விளையாட்டை ரசிக்க ரொம்பவே பிடிக்கும். அதுவும் விம்பிள்டனை நேரில் ரசிப்பது தனி சுகம்!’’ என ஃபீல் ஆகிறார் காஜல்.             

கணவன் எப்படி இருக்கணும்?

உங்களுக்கு வரப்போகிற கணவன் எப்படிஇருக்க வேண்டும்? தமிழக பெண்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட சர்வே ஆண்களிடையே பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. ‘லுக்’கை விட, வாங்குற சம்பளம்தான் முக்கியம், தினமும் ஆபீசுக்கு டிராப் செய்ய வேண்டியதில்லை, தங்களின் பெற்றோரை மதிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக இருக்கிறது. மட்டுமல்ல, கணவர்கள் வீட்டு வேலைகளில் உதவியாக இருக்கவேண்டும், திருமணத்துக்குப் பிறகு வேலையை விட வேண்டும் என்று எங்களை நச்சரிக்கக்கூடாது எனவும் உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள்.              



வாய்ஸ் பிரிட்ஜ்

இனி லேண்ட்லைன் போனை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆம்; உங்களின் லேண்ட்லைனை ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் வாய்ஸ் பிரிட்ஜ் என்ற கருவியை இன்வோக்சியா என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லேண்ட்லைன் போனுடன் வாய்ஸ் பிரிட்ஜ் கருவியை இணைத்துவிட்டால், அது வை-ஃபை அல்லது மொபைல் டேட்டா உதவியுடன் ஸ்மார்ட் போனை தொடர்பு கொள்ளும். அதற்குப்பிறகு லேண்ட்லைன் போனுக்கு வரும் அழைப்புகளை ஸ்மார்ட் போனிலேயே பெற முடியும். எந்த நேரத்திலும், எங்கிருந்தும் லேண்ட் லைன் அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.

லேண்ட் லைன் போனுக்கு வந்த மிஸ்டு கால்கள் பற்றிய அறிவுறுத்தலும் ஸ்மார்ட் போனுக்கு வந்துவிடும். வாய்ஸ் பிரிட்ஜ் கருவியின் வசதிகளைக் கையாள அதற்கான மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை நிறுவ வேண்டும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் இந்த அப்ளிகேஷன் கிடைக்கிறது. அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ள வாய்ஸ் பிரிட்ஜ் கருவியின் விலை 99 டாலர்கள்.    



சீனாவின் கிஃப்ட்!

அமீர் கானின் ‘தங்கல்’ சீனாவில் மெகா ஹிட் அடித்துள்ளது. சீன ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் ‘Dhaakad’ பாடலுக்கு மியூசிக் வீடியோ உருவாக்கி தங்களின் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை சீனாவின் பல இடங்களில் ஷூட் செய்துள்ளனர். அதை ‘Dangal|Gift from China|Aamir Khan’ என்ற தலைப்பில் யூடியுப்பில் பதிவிட பார்வையாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சங்களைத் தாண்டிவிட்டது. ‘‘தேர்ந்த நடனக் கலைஞர்களைப் போல பாடலுக்குத் தகுந்த மாதிரி நடனமாடுகிறார்கள்...’’ என்று கமென்ட்டுகள் குவிகின்றன.

பிரேஸ்லெட் மேக்கிங்

கைகளில் விதவிதமான கயிறுகளில் பிரேஸ்லெட்கள் கட்டிக்கொள்வது இளசுகளின் ஃபேஷன். அதுவும் கட்டுறுதியான லைட் வெயிட் நைலான் கயிறு பிரேஸ்லெட்டுக்கு மவுசு அதிகம். இதை நம் கைவண்ணத்திலேயே செய்வது எப்படி? செய்முறை விளக்கம் அளிக்கிறது வீடியோ ஒன்று. அதை ஃபேஸ்புக்கின் ‘now l’ve seen everything’ என்ற பக்கத்தில் ‘Paracord bracelet is amazing survival tool’ என்ற தலைப்பில் பதிவிட, சொன்னால் நம்ப மாட்டீர்கள்... 80 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு லட்சத்தை நெருங்குகிறது ஷேர்கள்.