கவிதை வனம்



துளிர்க்கும் காதல்

செல்லும்போது
ஒரு தலையாட்டல்
திரும்பி வரும்போது
ஒரு புன்னகை
எவ்வளவு
எளிமையாகத் துளிர்க்கிறது
மலையாய் கனக்கும் காதல்.

- அமுதன் நீலகண்டன்

நீளும் ஏக்கங்கள்

என் மேனி
எங்கும் பரவிக்கிடக்கின்ற
வாசத்தை நுகர்ந்து
கொண்டிருக்கிறது மனசு
படுக்கை விட்டெழுதல்
பாரமானது
பக்கமாய் இல்லாதது
பதறவைத்தாலும்
நினைவுகளுக்கு தீனி
போடுகிறது உன் வாசம்
எச்சில் புரண்டு கிடக்கிற
கன்னத்தைத்
தடவிப்பார்க்கிறேன்
உன் உதட்டின்
இரு வரிகள்
ஒட்டிக்கொண்டதாய்
நோட்டமிடுகிறேன்
மீண்டும் எப்போது
தொடர்வாய் என்பது
கேள்வியாயினும்
இந்த ஒரு இராத்திரி
பல இராத்திரிகளின்
உஷ்ணத்தைப்
போக்கிச் செல்லும்.

- திலகா அழகு