ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
கே.என்.சிவராமன் : 7
காபாலிகனின் முகத்தில் பல்வேறு உணர்வுகள் தாண்டவமாடின. அவன் மனக்கண்ணில் எண்ணற்ற காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அலைமோதின. புருவங்கள் முடிச்சிட்டுப் பிரிந்தன.இவை அனைத்துமே சில கணங்கள்தான். பின்னர் அவன் முகம் தெளிந்தது. ஒருவழியாக காபாலிகன் உண்மையைப் புரிந்துகொண்டான் என்பதை அறிந்த வல்லபனின் உதட்டில் புன்னகை அரும்பியது. ‘‘நமது ஒற்றர் ஒருவழியாக நிதர்சனத்தை உணர்ந்து விட்டதாகத் தெரிகிறது...’’ என்றான்.ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த காபாலிகன், பல்லவ மன்னரை ஏறிட்டான். ‘‘மன்னா... சிவகாமி என்றால்...’’ ‘‘அவளேதான்!’’ இடையில் வெட்டி வாக்கியத்தை முடித்தார் பரமேஸ்வர வர்மர். ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அறிந்துகொண்ட உண்மையைப் பகிரங்கப்படுத்தாதே. உனக்குள் அதை புதைத்துவை. சமயம் வரும்போது அதுவாக வெடித்துச் சிதறும். அப்போது உலகுக்கு சிவகாமி யார் என்று தெரியட்டும்! அதுவரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!’’‘‘உத்தரவு மன்னா...’’ காபாலிகன் தலைவணங்கினான்.
 ‘‘அப்படியானால் இனி ஆகவேண்டியதைப் பார்க்கலாம்!’’ என குரல் கொடுத்தபடியே அங்கு வந்து சேர்ந்தார் புலவர் தண்டி.‘‘ஆச்சார்ய தேவோ பவ...’’ என முன்னால் வந்து அவரை வணங்கினார் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மர்.இதனைத் தொடர்ந்து வல்லபனும் பின்னர் காபாலிகனும் புலவரை வணங்கினார்கள். ‘‘தீர்க்காயுஷ்மான் பவ...’’ என மூவரையும் ஆசீர்வதித்த புலவர் தண்டி, சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.‘‘கதம்ப இளவரசர் இரவிவர்மனை மல்லை அரண்மனையில் சேர்ப்பித்து விட்டாய் அல்லவா?’’ ‘‘தங்கள் ஆணையை நிறைவேற்றி விட்டேன் ஆச்சார்யரே...’’ வல்லபன் பதில் அளித்தான்.
‘‘நல்லது. இனி அவரை சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர், தன் திட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார். அதற்குள் கரிகாலனும் சிவகாமியும் வெகுதூரம் சென்றிருப்பார்கள்...’’ வளர்ந்திருந்த தன் தாடியைத் தடவியபடி புன்னகைத்தார் புலவர்.‘‘திட்டத்தின் அடுத்த படிக்கு இனி செல்லலாமா ஆச்சார்யரே..?’’ பயபக்தியுடன் பல்லவ மன்னர் கேட்டார்.‘‘அதிலென்ன சந்தேகம் மன்னா? உன் கனவு எந்தளவுக்கு விரிந்தது... மானுட சமுதாயத்தைத் தழுவியது... என்பதை விரைவில் பல்லவ நாடு மட்டுமல்ல... சாளுக்கிய நாடும் உணரும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளைச் செய்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன்...’’
‘‘ஆச்சார்யார் சொல்வது...’’‘‘நாம் இருவரும் வகுத்த திட்டத்தைத்தான் மன்னா...’’ சொன்ன புலவர், மூவரையும் அருகில் அழைத்தார். பல்லவ மன்னர் அவருக்கு அருகில் வந்தார். வல்லபன், பரமேஸ்வர வர்மருக்கு ஓரடி தள்ளியும், காபாலிகன் ஈரடி தள்ளியும் நின்றார்கள்.‘‘ஒற்றர்களை எட்டு திசைக்கும் அனுப்பியிருக்கிறேன். மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அவர்கள் இரண்டறக் கலந்து, ‘பல்லவர்கள் படை திரட்டி வருகிறார்கள்...’; ‘விரைவில் சாளுக்கியர்களுடன் போர் நடக்கப் போகிறது...’; ‘காஞ்சி மீண்டும் கைப்பற்றப்படும்...’ என பேச ஆரம்பிப்பார்கள். ‘மழையில்லாமல் ஏற்கனவே தவித்து வரும் நாம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பல்லவ மன்னர் காஞ்சியை விட்டு வெளியேறினார்... இதனால் காஞ்சிச் செல்வங்கள் மட்டுமல்ல... நமது வாழ்வாதாரங்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன...’ என எடுத்துச் சொல்வார்கள்...’’
விவரித்துக்கொண்டே வந்த புலவர், பேசுவதை நிறுத்திவிட்டு வல்லபனையும் காபாலிகனையும் மாறி மாறிப் பார்த்தார். தான், சொல்வதைத் தவிர வேறு சிந்தனைகளுக்குள் அவர்கள் செல்லாதபடி மானசீகமாகக் கட்டிப் போட்டுவிட்டுத் தொடர்ந்தார்.‘‘இவற்றில் எதுவுமே பொய்யில்லை; மிகையில்லை. உண்மையைத்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒற்றர்கள் புரிய வைக்கப் போகிறார்கள். ஏனெனில், எந்த நாடுமே எந்த மன்னரின் ஆட்சிக்குக் கீழும் தொடர்ச்சியாக இருந்ததில்லை. ஆதி நாள் முதலே அடிக்கடி கைமாறிக் கொண்டேதான் இருக்கிறது; இருக்கும். குறிப்பாக காஞ்சி மாநகரம்...’’ நிறுத்திய புலவரின் கண்களில் கடந்த காலம் விரிந்தது. அதனுள் பயணித்தபடியே தொடர்ந்தார்.‘‘சோழர்களின் ஆளுகைக்குக் கீழ் காஞ்சி தொண்டை மண்டலமாக இருந்தது. அப்போது பல்லவர்கள் வடக்குப் பக்கம்தான் ஆட்சி செய்து வந்தார்கள். பின்னர் காஞ்சியைக் கைப்பற்றி தங்கள் தலைநகரமாக அறிவித்தார்கள். இடையில் சிலகாலம் காஞ்சி மற்றவர்கள் கையில் இருந்தது.
பின்னர் மீண்டும் பல்லவர்கள் வசம் வந்தது. அந்த வகையில் இப்போது சாளுக்கியர்கள் பிடியில் காஞ்சி இருக்கிறது. இந்த வரலாறு மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, ஆட்சியாளர்கள் மாறுவது குறித்த அச்சமோ குழப்பமோ அவர்களுக்கு இருக்காது. ஆனால்...’’நிறுத்திய புலவர் தன் முன்னால் நின்ற மூவரையும் ஏறிட்டார். ‘‘இழந்த நாட்டை ஒரு மன்னன் மீண்டும் அடைய வேண்டுமென்றால் அதற்கு படை பலத்தை விட இன்னொரு பலம் அவசியம். அதுதான் மக்களின் நம்பிக்கை! இது மட்டும்தான் எந்தவொரு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித் தரும். நம் மன்னர் மீண்டும் காஞ்சியின் அரியாசனத்தில் அமரப் போவது அந்த பலத்தால்தான்!’’சொல்லி முடித்த புலவர், நிகழ்காலத்துக்கு வந்தார். ‘‘மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘சாளுக்கியர்களுக்கு பயந்து பல்லவ மன்னர் கோழையைப் போல் போர் புரியாமல் காஞ்சியை விட்டு ஓடி விட்டார்...’ என்றுதான் நினைக்கத் தோன்றும்...’’
‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரும் இந்த பிரசாரத்தைத்தான் மேற்கொள்ளப் போகிறார் ஆச்சார்யரே...’’ நிதானமாகச் சொன்னார் பல்லவ மன்னர்.‘‘இதை முன்பே நாம் ஊகித்ததனால்தானே மன்னா நம் தரப்பு நியாயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம்...’’ கண்சிமிட்டிய புலவர், தொடர்ந்தார்.‘‘இதனுடன் கூடவே பல்லவ இளவரசர் பெரும் ஆயுதங்களுடன் வந்துகொண்டிருக்கும் தகவலையும், வந்திறங்கிய அரபிப் புரவிகளின் அருமை பெருமைகளையும் கசியவிடப் போகிறோம். அதுமட்டுமல்ல...’’நிறுத்திய புலவர் கணத்துக்கும் குறைவான நேரத்தில் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரின் கண்களைச் சந்தித்தார். நான்கு விழிகளும் எதையோ உரையாடின.
வல்லபனும் காபாலிகனும் இதை கவனிக்கவே செய்தார்கள். பேச்சின் உட்பொருள் அவர்களுக்குப் புரிந்தது. என்றாலும் புலவரே அதை வெளிப்படுத்தட்டும் என அமைதி காத்தார்கள்.அதற்கேற்ப புலவரே அதை வெளிப்படுத்தினார். ‘‘சிவகாமி குறித்த ரகசியத்தை வதந்திகளாகப் பரவவிட ஏற்பாடு செய்திருக்கிறோம்... ‘சாளுக்கிய மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவள்தான் அவள்...’; ‘பல்லவர்களை நேர் வழியில் வீழ்த்த முடியாது என்பதால் சாளுக்கிய போர் அமைச்சரான ஸ்ரீராமபுண்ய வல்லபர் சிவகாமியை பல்லவ மன்னரின் குடும்பத்துக்குள் ஊடுருவ விட்டிருக்கிறார்...’; ‘அவள் வழியாக ஆயுத ரகசியங்களை அறிந்து சாளுக்கியர்கள் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்...’ என்றெல்லாம் விரைவில் மக்கள் பேசப் போகிறார்கள்...’’
‘‘சிவகாமி விஷயம் நமக்கு சாதகமாக அமையாது என்று தோன்று கிறது புலவரே...’’ வல்லபன் இடைமறித்தான்.‘‘எதனால் அப்படிச் சொல்கிறாய்?’’ புருவத்தை உயர்த்தியபடி பல்லவ மன்னர் கேட்டார்.‘‘கதம்ப இளவரசருக்கு அவளைப் பற்றிய உண்மை தெரிந்திருக்கிறது மன்னா...’’‘‘அதனால் என்ன? ஸ்ரீராமபுண்ய வல்லபருக்கும்தான் அது தெரியும்...’’ சட்டென்று புலவர் பதில் அளித்தார்.வல்லபனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அந்தக் குழப்பம் அடுத்து அவன் பேசியபோது வெளிப்பட்டது. ‘‘எனில் நாம் கிளப்பிய வதந்தியை ஸ்ரீராமபுண்ய வல்லபர் உடைக்க மாட்டாரா..?’’‘‘அவரால் மட்டுமல்ல... ஒருவராலும் முடியாது வல்லபா... வதந்திகளுக்கு அந்தளவு சக்தி இருக்கிறது. அதன் ரிஷிமூலத்தைக் கண்டவர் மட்டுமல்ல... அதை அழிப்பதற்கான வழியை அறிந்தவரும் இந்தப் பிரபஞ்சத்திலேயே எவரும் இலர். அதனால்தான் ‘அர்த்த சாஸ்திரம்’ எழுதிய கவுடில்யர், வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்லி முடித்த புலவர், அதன்பிறகு நேரத்தைக் கடத்தவில்லை.
‘‘காபாலிகனே... காற்றைவிட விரைவாக சோழ நாட்டுக்குச் சென்று சோழ மன்னரிடம் இந்த ஓலையை நீ கொடுக்க வேண்டும்...’’‘‘உத்தரவு ஆச்சார்யரே...’’ பயபக்தியுடன் அந்த ஓலையை வாங்கி தன் இடுப்பில் மறைத்து வைத்த காபாலிகன், புலவரையும் மன்னரையும் வணங்கிவிட்டு வந்த வழியே சுரங்கத்தை விட்டு வெளியேறினான்.அவன் செல்லும்வரை காத்திருந்த புலவர், பல்லவ மன்னரை நோக்கி கண்களால் உரையாடிவிட்டு வல்லபன் பக்கம் திரும்பினார்.கட்டளையை ஏற்க சித்தமாக அவர் அருகில் பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி வந்தான்.‘‘கரிகாலன் இப்போது சிவகாமியுடன் நடு நாட்டில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து ‘சிவகாமி ஆபத்தானவள்... பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக நல்லவள் போல் வேடமிட்டிருக்கிறாள்... அவளிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி’ நான் சொன்னதாகத் தெரிவித்துவிடு! முடிந்தால் உன் கற்பனை வளத்தைக் கலந்து சிவகாமி குறித்து மேலும் சில புகார்களை என் பெயரில் தெரிவி!’’ என்றார் புலவர்.
வல்லபனுக்குத் தலை சுற்றியது. வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளித்த கவுடில்யர் மேல் கோபம் வந்தது. எது நிஜம்... எது பொய்... என்று பிரித்துப் பார்க்க முடியாத மாயச்சூழலில் தன்னையும் புலவர் சிக்க வைத்திருப்பதை உணர்ந்தான். என்றாலும் உருட்டப்படும் பகடையின் இறுதி இலக்கு பல்லவ நாட்டை மீட்பது என்பதால் தன்னைச்சமாளித்துக் கொண்டு மன்னரையும் புலவரையும் வணங்கிவிட்டு விடைபெற்றான்.‘‘பாவம்... எனது புரவிப்படைத் தளபதி அதிர்ச்சியிலிருந்து மீள நாளாகும்...’’ அவன் சென்ற திக்கைப் பார்த்தபடியே பல்லவ மன்னர் முணுமுணுத்தார்.‘‘எல்லாம் பல்லவ நாட்டின் நன்மைக்குத்தான்...’’ கம்பீரமாக அறிவித்த புலவர், ‘‘விடைபெறுகிறேன் மன்னா. புலவர்களைக் கைது செய்யும் துணிச்சல் எந்த மன்னனுக்கும் இல்லை. சாளுக்கியன் விக்கிரமாதித்தனும் அதற்கு விதிவிலக்கல்ல. காஞ்சியில் எனது மாளிகையிலும், கடிகையிலும் இருப்பேன். எப்போது வேண்டுமானாலும் நம் வழக்கப்படி என்னைத் தொடர்பு கொள்ளலாம்...’’
‘‘நல்லது ஆச்சார்யரே... திட்டப்படி காய்களை நகர்த்தப் புறப்படுகிறேன்...’’ என்ற பரமேஸ்வர வர்மர் குனிந்து புலவரின் காலைத் தொட்டு வணங்கினார். ‘‘ஜெயம் உண்டாகட்டும்!’’ பல்லவ மன்னரின் தலையைத் தொட்டுப் புலவர் ஆசீர்வதித்தார். ‘‘ஆச்சார்யரே... ஒன்றே ஒன்று கேட்கலாமா?’’‘‘கேள்மன்னா!’’‘‘உண்மையிலேயே கரிகாலனும் சிவகாமியும் இப்போது நடு நாட்டில் இருக்கிறார்களா?’’‘‘இல்லை மன்னா! வல்லபன் அவர்களைச் சந்தித்து விடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன்!’’‘‘அப்படியானால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்..?’’ பரமேஸ்வர வர்மர் கேட்க நினைத்தார். ஆனால், மவுனமாக விடைபெற்றுச் சென்றார்.
‘‘பல்லவ நாட்டை ஆள நீயே தகுதி வாய்ந்தவன் பரமேஸ்வரா... உனது இப்போதைய மவுனம் அதை நிரூபிக்கிறது. கரிகாலனும், சிவகாமியும் உன் கனவை நிறைவேற்றுவார்கள்..! ’’மனதுக்குள் சொல்லிக் கொண்ட புலவர் அந்த இடத்தை விட்டு கடைசியாக அகன்றார். எப்போதும்போல் அப்போதும் அவர் உள்ளம் கரிகாலனைத்தான் நினைத்துக் கொண்டிருந்தது. ‘ஆமாம்... இப்போது அவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? சிவகாமியின் சபதத்தைக் கண்டறிந்திருப்பானா..?’புலவரின் கணிப்புப் படியே சிவகாமியின் ரகசியத்தைத்தான் அந்தக் காட்டின் மறைவிடத்தில் கரிகாலன் அறிந்து கொண்டிருந்தான். ஆனால், அவள் செய்த சபதத்தை அல்ல; மாறாக, அவளது வழுவழுப்பை!இருவரும் மெய்மறந்திருந்த அந்த நிலையை மறைவாக இருந்தபடி ஓர் உருவம் பார்த்துக் கொண்டிருந்தது!
(தொடரும்) ஓவியம்: ஸ்யாம்
|