காடுகளுக்கும் வீட்டுத் தோட்டத்துக்கும் இருக்கும் வேறுபாடுகள்



ஹோம் அக்ரி 11

மன்னர் மன்னன்

காடுகளில் தாவரங்கள் தன்னிச்சையாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  பாடங்கள் என்ன? ஓர் எச்சரிக்கை: இப்படி காட்டின் பாடங்களை நாம் நடைமுறைப் படுத்தும் போது ‘புலியைப் பார்த்து  பூனை சூடு போட்டது போல’ எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்த முயற்சி செய்யக்கூடாது. நம் தோட்டச் சூழல்,  காட்டுச் சூழலைக்காட்டிலும் பெருமளவு வேறுபட்டது என்பதை மனதில் கொண்டு சில விஷயங்களை மட்டும்  நடைமுறைப் படுத்த முயற்சி செய்யவேண்டும்.

1. காடுகளை யாரும் உழுவதில்லை: நாம் முன்னரே பார்த்ததுபோல் உழுவது என்பது மேலுள்ள மண்ணை கீழ் கொண்டு  வரவும், காற்றோட்டத்துக்கும், களைகளையும் களை விதைகளையும் வெளிக் கொணர்ந்து அழிப்பதற்குமாகும். காடுகளில் இந்த வேலைகளை மண்புழுக்களும், எறும்பு, பாம்பு, கறையான் போன்ற ஊர்வனவும், சில பூச்சி /  கிருமிகளும் செய்கின்றன. மண்புழுக்களும், பாம்பு, வண்டுகள், தவளை, எலி, எறும்பு போன்றவையும் மண்ணைத்  துளையிட்டு காற்றோட்டத்தையும், மண்ணைப் புரட்டும் வேலையையும் பார்க்கின்றன.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை: மண் புழுக்களும், பாம்புகளும் இருக்கும் சூழலை நம் தோட்டத்தில்  உருவாக்க வேண்டும். எலிகள் சேதம் விளைவிக்கக்கூடியவை என்பதால், அவைகளை ஊக்கப்படுத்தத் தேவையில்லை. பயிரிடாத சமயங்களில் கறையான்களை தோட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் உற்பத்தி செய்யவேண்டும்.  மண்புழுக்களை அழிக்கக்கூடிய களைக்கொல்லிகளையும், அளவுக்கு அதிகமாக  பூச்சி மருந்து உபயோகிப்பதையும்  தவிர்க்க வேண்டும். நிலத்தை தரிசாகப் போட்டாலும், ஏதாவது ஒரு பகுதி எப்போதும் ஈரமாக இருக்குமாறு  பார்த்துக்கொள்ள வேண்டும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் போது, தேவைக்கு அதிகமாக உபயோகப்படுத்தக்  கூடாது. அடியுரமாக இடும் இயற்கை தொழுவுரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

2. காடுகளில் யாரும் நீர் பாய்ச்சுவதில்லை: மானாவாரி பயிர்களைத் தவிர, வேறு பயிர்களை நீர் பாய்ச்சாமல் நாம்  விளைவிக்க இயலாது. ஆனாலும், இந்த உண்மையிலிருந்து ஒருசில விஷயங்களை நாம் விவசாயத்தில்  நடைமுறைப்படுத்த முடியும். காடுகளில், மேற்கண்ட காரணங்களால், மண் பொல பொலவென இருப்பதால், வேர்கள்  எளிதில் ஆழமாகச் செல்கின்றன. ஆக, நீர் எப்போதும் கீழ் மண்ணிலிருந்து கிடைக்கிறது.

மேலும், மரம் மற்றும் தாவரங்களிலிருந்து விழக்கூடிய இலைகளும் மற்ற கழிவுகளும் அங்கேயே கிடப்பதால் மண்ணின்  மேல் சூரிய ஒளி நேரடியாக விழாது. இது மண் சூடாவதையும், நீர் ஆவியாகி மேல் செல்வதையும் தடுக்கிறது. இதை நாம் மூடாக்கு என்று சொல்கிறோம். இப்படி மண்ணின் மேல் தங்கும் தாவரக்கழிவு களும், மிருகங்களின்  கழிவுகளும் நாளடைவில் நுண்ணுயிர்களால் மக்கி எருவாவதால், காடுகளின் மேல் மண்ணில் அதிகப்படியான  ‘Humus’ போன்ற கரிமப்பொருட்கள்  இருக்கின்றன.

இந்த கரிமப் பொருட்கள் நீரைப் பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையுள்ளவை. இதனாலும் நீரானது மழைக்குப்பின்  நீண்ட நாட்களுக்கு செடிகளுக்கு மேல் மண்ணிலிருந்தே கிடைக்கிறது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியவை:  தொழிற்சாலை போல் செயல்படும் சில ‘hi-tech’ தோட்டங்களிலும், தக்காளி, மிளகாய் போன்ற பணப்பயிர்  பயிரிடும் சில பெரு விவசாயிகளிடமும் ஓர் அம்சம் வெளிப்படுகிறது. அது, மூடாக்கு இல்லாமல் அவர்கள் விவசாயம்  செய்வதில்லை. இது நீரின் தேவையைப் பெருமளவில் குறைப்பதுடன், களைகளை முற்றிலும் வளர விடாமல்  செய்கிறது. தென்னை,  கொய்யா போன்ற பயிர்களுக்கு இயற்கை தோட்டக்கழிவுகளை மூடாக்காக இடலாம்.
இந்தத் தோப்புகளிலேயே மூடாக்கு பொருட்கள் கிடைக்கும்.

நெருக்கமாக இருக்கும் காய்கறி பயிர்களுக்கு, பொதுவாக இதற்காகவே கிடைக்கும் நெகிழி பாய்கள் (mulching  sheets) பயன்படுத்தப்படுகிறன. நாம் வீட்டுச் சூழலில் தென்னை மட்டை, காய்கறிக் கழிவுகள் போன்றவற்றை உபயோகப்படுத்தலாம். காட்டின் இந்த வகையான நீடித்த நிலையான பயிர் வளர்ச்சி சூழலிலிருந்து கற்றுக் கொள்ளக்  கூடிய மற்றவிஷயங்களை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். இப்போது வேறு சில விஷயங்களை அறியலாம்.பாத்தி வகைகளும், நீர் பாய்ச்சும் முறைகளும்: வாய்க்கால்கள் மூலமாக நீர் பாய்ச்சும் முறைதான் இன்றும் அதிகமாகப்  பயன்படுத்தப்படுகிறது.

நீர் குறைந்த பகுதிகளில் இது சரியான முறை இல்லை என்று தெரிந்தும் கூட பெரும்பாலான விவசாயிகள் இந்த  முறையையே நம்பி வாழ்கிறார்கள். இதுபோக சொட்டு நீர், தெளிப்பு நீர் என்ற வேறு இரண்டு முறைகளும்  பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகின்றன. எந்த முறையை நாம் பின்பற்ற வேண்டும் என்பது நமக்கு இருக்கும்  நீரின் அளவு, நாம் என்ன பயிர் பயிரிடப் போகிறோம், எவ்வளவு செலவிடத் தயாராக இருக்கிறோம், எவ்வளவு நேரம்  செலவிட முடியும் என்பதையெல்லாம் பொறுத்து அமையும். வீட்டுத்தோட்டங்களுக்கு மூன்று முறைகளுமே  ஏற்றவைதான். ஆனாலும் கூட, சிறிய தோட்டமாக இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு செடிக்கும் தனித்தனியாக தண்ணீர்  ஊற்றுவது, நமக்கு ஒவ்வொரு செடியையும் தனிப்பட்ட முறையில் கவனிப்பதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்.

முதலில் வாய்க்கால் முறையில் நீர் பாய்ச்சுவதைப் பற்றி பார்ப்போம். இந்த முறையில் ஆரம்பத்திலிருந்து பாத்தியின்  கடைசி செடி வரை நீர் தானாகப் பாயும்படி பார்களும் பாத்திகளும் அமைக்கவேண்டும். தானாகப் போக வேண்டும்  என்றால் படிப்படியாக மட்டம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். நீர் வேகமாகவும் பாயக்கூடாது, மிகவும் மெதுவாகவும்  பாயக்கூடாது. நீர் பாயும்போது மண் அரித்துக் கொண்டும் போகக்கூடாது. ஒரு பாரிலிருந்து மற்றொரு பாருக்கு மாற்று  வதற்கும், ஒரு பாத்தியிலிருந்து மற்றொரு பாத்திக்கு மாற்றுவதற்கும் சிறு மடைகள் அமைத்திருக்க வேண்டும். நீரின்  வேகம், நாம் நீர் பாய்ச்சும் இடைவேளை இவற்றைப் பொறுத்து நீரை நிறுத்தியோ, வேகமாகவோ பாய்ச்ச வேண்டும்.

(வளரும்)

Q & A

* இடிதாங்கி மரங்கள் உண்டு என்பது உண்மையா?
- எம்.சுரேஷ், வேதாரண்யம்.

ஆத்தி மரம் இடி தாங்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. பலரும் அதனால் ஆத்தி மரத்தை வளர்க்கிறார்கள். இது  விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதுபோல கருங்காலி மரங்கள் இடியிலிருந்து காத்துக் கொள்வதற்காக  சோழர்கால பாய்மரக்கப்பல்களின் பயன்
படுத்தப்பட்டன.

* உளுந்து, துவரை, சோயா, தாமரைப்பூக்கள் ஒரேயளவில்தான் பூக்குமா? இவற்றை எங்கு பெறலாம்?
- எஸ்.ஜோதிகா, சீர்காழி.

இல்லை. அளவில் வேறுபடும். வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு நிறங்களில் இருக்கும். தாமரையின் தளிர் இலைகள்,  பூவின் இதழ்கள், தண்டு, விதை, கிழங்கு இவை அனைத்தும் உண்ணக்கூடியவை. தாமரைப் பூவின் இதழ்கள், குறிப்பாக  வெண் தாமரையின் இதழ்கள் இருதயக் கோளாறுகளைச் சரிசெய்யக் கூடியவை. இது விஞ்ஞான பூர்வமாகவும்  நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இதற்கான ஆராய்ச்சி நடைபெற்றது. தாமரை பற்றிய ஒரு  விசேஷமான உண்மை,  இவற்றின் பூக்களுக்கு உள்ளே 30 - 35 செல்ஷியஸ் அளவுக்குள்தான் எப்போதும் வெப்பம்  இருக்கும். வெளியில் வெப்பம் -5 ஆக இருந்தாலும், +50 ஆக இருந்தாலும் இந்த வெப்பம் மாறாது. இந்த உண்மை  1980களில் ஓர் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தால் அறியப்பட்டு ‘Nature’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. இதில்  ஆச்சர்யம் என்னவென்றால், இந்த உண்மை பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ‘குறுந்தொகை’யில்  சொல்லப்பட்டிருப்பதுதான்! 

*கொட்டைகள், தானியங்கள், பருப்புகள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன?
- எஸ்.மலர்வளவன், நாகை.

கொட்டைகள் என்பவை பொதுவாக ஒன்று அல்லது ஒன்றிரண்டு விதைகள் மட்டும் கொண்ட பழங்கள். இவைகளின்  மேல் ஒரு கடினமான தோல் இருக்கும். அதை நீக்கிய பிறகே உண்ண முடியும். உதாரணம்: பாதாம், நிலக்கடலை,  முந்திரி, பிஸ்தா போன்றவை.விதைகள் பழங்களின் உட்புறத்திலிருந்து பெறப்படுபவை. பொதுவாக எண்ணிக்கை  அதிகமாகக் காணப்படும். இவற்றை நேரடியாகப் பயன்படுத்தலாம். கடினமான தோல் ஏதும் இல்லாதவை. உதாரணம்: எள், பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை.தானியங்கள் புல் வகைச் செடிகளிலிருந்து வளரும்  விதைகள். இவற்றின் மேற்பரப்பிலுள்ள உமியை நீக்கினால் மட்டுமே உண்ண முடியும். இவை மாவுச்சத்து நிறைந்தவை. உதாரணம்: நெல், கோதுமை.சிறுதானியங்களும் பருப்புகளும் வேர் முடிச்சுள்ள பயரினத் தாவரங்களில் வளர்பவை.  பகிளைகளுடன் வளரும் இந்தத் தாவரங்களில் பல விதைகள் ஒரு மேற்புறத் தோலுடன் இருக்கும். மேல்தோலை நீக்கி  விதையாகவோ, பருப்பாகவோ உபயோகிக்கலாம். இவை புரதச்சத்து நிறைந்தவை.