மலேசியாவில் இந்திய மியூசியம் அமைத்திருக்கும் தமிழர்!
மலேசியாவில் வாழ்ந்த தமிழர்களின் பாரம்பரியத்தையும் மரபையும் வரும் தலைமுறைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மலேசிய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களைச் சேகரித்து அவற்றை ஒரு அருங்காட்சியகமாக அமைத்துள்ளனர் பிரகாஷ் ஜெகதீசன் - புனிதா தம்பதியினர். இவர்கள் மலேசியாவில் வாழும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.‘‘இங்க இந்தியர்கள் அதிகம். ஆனா, நம்ம பாரம்பரியம் பத்தி தெரியாமயே இருக்காங்க...’’ என வருத்தத்துடன் பேச ஆரம்பித்தார் பிரகாஷ்.
 ‘‘சொந்த ஊர் பட்டுக்கோட்டை பக்கத்துல ஒரத்தநாடு. திருமணமானதும் அப்பா மலேசியாவுல செட்டிலாகிட்டார். நான் இங்கதான் பொறந்தேன், வளர்ந்தேன், படிச்சேன். கோலாலம்பூர்ல அண்ணன் டாக்டரா இருக்கார்.இங்கிலாந்துல நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சுட்டு அங்கயே ஒரு ரெஸ்டாரன்ட்ல அஞ்சு வருஷங்கள் வேலை பார்த்தேன். அப்புறம் பினாங்கு ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்தேன். இப்ப கல்லூரில விரிவுரையாளரா இருக்கேன். 2007ல திருமணமாச்சு. மனைவி புனிதா மருத்துவமனைல நர்ஸா இருக்காங்க. ரெண்டு பேருக்குமே பினாங்குல வேலை. அதனால இங்கயே செட்டிலாகிட்டோம்...’’ என்று சொல்லும் பிரகாஷ், சிறுவயதில், தான் பயன்படுத்திய கிண்ணம், அரைஞாண் கயிறு, கொலுசு, பவுடர் டப்பி... என சகலத்தையும் பாதுகாத்து வருகிறார்.
 ‘‘பினாங்குல சொந்த வீடு வாங்கி மரத்தால அதை அழகு படுத்தினோம். அப்ப என் மனைவி, ‘சின்ன வயசுல டிபன் கேரியர்ல சாப்பாடு கொண்டு போவேன். அந்த நினைவா ஒரு டிபன் கேரியரை அழகுக்காக வாங்கி வைக்கலாம்’னு சொன்னாங்க. உடனே இரண்டு டிபன் கேரியரை பழைய பொருட்கள் கடைல வாங்கினோம். பொதுவா தீபாவளி அப்ப இங்க கண்காட்சி நடக்கும். அதுல இந்தியப் பழம்பொருட்களை ஒருவர் விற்பார். அவர்கிட்ட டிசைன் டிசைனா டிபன் கேரியர்ஸ் இருந்தது. ஆர்வமா அதைப் பார்த்தேன். அப்ப அவர், ‘கேரியர்ல selamat angkat, selamat makanனு (பத்திரமா சாப்பிடுங்கள் என்று அர்த்தம்!) பொறிக்கப்பட்டிருந்தா அது 1920ல பயன்படுத்தப்பட்ட கேரியர்’னு தகவல் சொன்னார்.
 அப்ப அதை நான் பெருசா எடுத்துக்கலை. வீட்டுக்கு வந்ததும் சமையல் அறைல இருந்த டிபன் கேரியர் கண்ல பட்டது. அதுல அவர் சொன்ன வாக்கியம் பொறிக்கப்பட்டிருந்தது!‘ஆஹா... நம்ம வீட்லயும் பழம்பொருள் இருக்கே’னு பெருமையா இருந்தது. இதுவே தேடலாவும் மாறிச்சு. இப்ப என்கிட்ட 200 டிபன் கேரியர்ஸ் இருக்கு!’’ என்ற ஆச்சர்யத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் பிரகாஷ், ‘மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ விருதைப் பெற்றிருக்கிறார், அதிக டிபன் கேரியர் சேகரிப்புக்காக! ‘‘2008ல இருந்து நானும் என் மனைவியும் டிபன் கேரியர் சேகரிக்க ஆரம்பிச்சோம். இதுவே ஒரு கட்டத்துல மலேசியாவுல வாழற இந்தியர்கள் பயன்படுத்தின பாரம்பரிய பொருட்களை கலெக்ட் பண்ணத் தூண்டுச்சு. இதுக்கு விதை போட்டது எங்க வீட்டு வரவேற்பறைல இருந்த வெத்தலைப் பெட்டி! ஒரு தருணத்துல சும்மா அழகுக்காக வாங்கினது அது.இப்படியே சேகரிக்க ஆரம்பிச்சு 1800க்கு மேல பொருட்கள் சேர்ந்துடுச்சு. ஆரம்பத்துல வீட்ல அங்கங்க வைச்சோம். அப்புறம் தனி அறை ஒதுக்கினோம். அப்படியும் இடம் போதலை. பொருட்களும் சேர்ந்துகிட்டே போச்சு.
 அப்பதான் இதையே மியூசியமா வைச்சா என்னனு தோணிச்சு. மலேசியாவுல நிறைய அருங்காட்சியகங்கள் இருக்கு. ஆனா, இந்தியர்களோட பாரம்பரியத்தைக் குறிக்கிற மாதிரி எதுவும் இல்ல. அதனால எங்க கோரிக்கையை அரசுக்கு தெரிவிச்சோம். இந்து அறப்பணி வாரியம், ஓர் இடத்தை இலவசமா ஒதுக்கித் தந்தாங்க. அதோட உள்ளமைப்பையும் நாங்க விரும்பின மாதிரியே வடிவமைச்சுக் கொடுத்தாங்க.போதாதா? சந்தோஷமா மியூசியத்தை தொடங்கினோம். இப்ப இலவசமாதான் செயல்பட்டு வருது. பள்ளி, கல்லூரி மாணவர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமா வந்து பார்த்துட்டுப் போறாங்க...’’ என்று சொல்லும் பிரகாஷ், ஒவ்வொரு பொருளை வாங்கியபிறகும் அதுகுறித்த விவரங்களைச் சேகரிப்பாராம்.
‘‘கிடைக்கிற விவரங்கள் மேல மேல கலெக்ட் பண்ணத் தூண்டும். டிபன் கேரியர் சீனர்களோட கலாசாரம்னுதான் முதல்ல நினைச்சேன். அப்புறம்தான் அது இந்தியர்களோடு தொடர்புடையதுனு தெரிஞ்சது. ஆரம்பத்துல எனாமல்லதான் டிபன் கேரியர் வந்தது. அப்புறம் செம்பு, வெண்கலம்னு மாறி இப்ப எவர்சில்வர்ல தயாரிக்கப்படுது. ஒவ்வொரு டிபன் கேரியர்லயும் ஒவ்வொரு விதமா அடுக்குகள் இருக்கும். சிலதுல மூணு, சிலதுல நாலு, ஒன்றிரண்டுல அஞ்சு. சில கேரியர்ல பக்கத்துல இலை வைக்கவும் வசதி இருந்திருக்கு!
சீனர்கள் இதை அழகிய மலர்கள், பீனிக்ஸ் பறவைனு ஓவியம் வரைஞ்சு பீங்கான்ல கொண்டு வந்தாங்க. இந்தியர்கள் சாப்பாட்டை அடித் தட்டுல வைப்போம். மலேசியாவுல அதை மேல் தட்டுல வைக்கிறாங்க...’’ என்று சொல்லும் பிரகாஷ், பழைய கடைகளிலும், வீட்டை இடித்துக் கட்டுபவர்களிடம் இருந்தும் பழைய பொருட்களை வாங்குவாராம்.‘‘இதுக்குனே தரகர்கள் இருக்காங்க. நமக்கான தகவலை அவங்க கொடுப்பாங்க. ஆரம்பத்துல கண்ல பட்டதை எல்லாம் வாங்கினோம். அப்புறம்தான் ஒழுங்குக்கு வந்தோம். இதை எல்லாம் வாங்கவே மனைவி நகைகளை அடகு வைச்சேன். அந்தப் பிரச்னைல இருந்து இப்பதான் மீண்டிருக்கோம்!
இடைத்தரகர்கள் வழியா வாங்கறப்ப அதிகம் செலவாகும். அதனால இப்ப நாங்களே நேரடியா வாங்கறோம். ஓலைச்சுவடி, டைப்ரைட்டர், டீ பாய்லர், எழுத்தாணி, நடைவண்டி, கொப்பறை, தராசு, தண்ணீரை சுட வைக்கும் பாய்லர், பழைய இரும்புப் பெட்டி, பித்தளைக் குடம், தூக்குச்சட்டி, பீங்கான் வாளி... இப்படி எல்லாத்தையும் தேடித் தேடி வாங்கினோம். எங்ககிட்ட இருக்கிற 80% பொருட்கள் மலேசிய இந்தியர்கள் பயன்படுத்தினது. மீதி 20% சிங்கப்பூர், தமிழகத்துல வாங்கினோம். மலேசிய பண மதிப்புல இதுவரை நான்கு லட்சம் வெள்ளியை சேகரிப்புக்காகவே செலவு செய்திருக்கோம். வருங்காலத் தலைமுறைக்கு நம்ம முன்னோர்கள் எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரிய இந்தப் பொருட்கள் எல்லாம் ஒரு வழிகாட்டியா இருக்கும்!’’ என்கிறார் பிரகாஷ் ஜெகதீசன்.ஸ்ரீ
- ப்ரியா
|