யார் நல்லவன், யார் கெட்டவன்னு தேடித் திரிகிற போராட்டம்தான் கதை! அசுரவதம் சீக்ரெட்ஸ்




‘‘அதுதான் தலைப்பே சொல்லுதே, ‘அசுரவதம்’! அசுரர்களை வதம் செய்வதுதான் கதை. எதற்காக, ஏன், எப்படி  என்பதுதான் உள்ளே இருக்குற விஷயம். ஒவ்வொரு மனுஷனுமே ஒரு கதைதான். அவனோட கனவு, ஆசை, நிராசை,  கொண்டாட்டம், துயரம், ஏமாற்றம் இப்படி எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும், அழகுமே சொல்லி  மாளாது. நிறைய சினிமா பார்த்தோம், நிறைய சினிமா எடுத்தோம் என்பதெல்லாம் விஷயமே இல்லை. எழுதுவதோ,  படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள் ஒரு மாற்றம் நிகழ்த்தணும். இந்த உள் மாற்றம்தான் மனவிசாலம். ‘அசுரவதம்’ படத்தில் என் கோபம், படம் பார்க்குற எல்லோர் கோபமாகவும் மாறும். ‘அசுரவதம்’ அப்படிப்பட்ட  இடத்தில் இருக்கு. என்னைச் சீண்டாத எதையும் நான் இப்போது சினிமாவாக எடுப்பதில்லை...’’ தீர்க்கமாகப்  பேசுகிறார் நடிகர் சசிகுமார். நெகிழ்வும், இறுக்கமும் கொண்டு நட்பின் கனத்த பக்கங்களைச் சொன்ன அவரது  ‘சுப்ரமணியபுரம்’ இன்றைக்கும் புத்தம் புதுசு.

எப்படி வந்திருக்கு ‘அசுரவதம்’?


இயக்குநர் மருது பாண்டியன்கிட்டே ஒரு கதை இருக்கு. அது உங்களுக்குச் சரியா இருக்கும். கேட்டுப் பாருங்கன்னு  ஒளிப்பதி வாளர் பிரேம் சொன்னான். கதையைக் கேட்டதும் நானே செய்றேன்னு முடிவுக்கு வந்திட்டேன். திண்டுக்கல்,  கொடைக்கானல் பக்கமா நடக்கிறது. அரபு நாட்டில் போய் வேலை பார்த்திட்டு திரும்பினவனின் கதை. நான்  இதுவரைக்கும் செய்யாத ஜானர். படத்தில் ஒரு கோபம் இருக்கு. மண் சார்ந்த அசல் தன்மையும் கூடவே இருக்கு.  இப்போ எது நடந்தாலும் ‘ஐயோ’ன்னு சொல்ல ஆள் இல்லாமல் போயிடுச்சு. வேகமும், காலமும், மனுஷங்களும்  மாறிப் போய்க்கிட்டே இருக்காங்க. அவ்வளவு வேலைகள், பிரச்னைகள், யோசனைகள்னு மருகிக்கிட்டு இருக்கோம். எனக்கு மெனக்கெடல் போடும்படியாக ‘அசுரவதம்’ இருந்தது. ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோடு முடிஞ்சிடக்  கூடாது. அது பார்த்தவரின் மனதில் தொடங்கி வளரணும்.

மற்றவர்கள் நலன் நோக்கி ஒரு புன்னகை, ஒரு கையசைப்பு, ஒரு கைப்பற்றுதல் கூட இல்லாமல் போயிடுச்சே என்ற  ஏக்கம்தான் இந்தப் படம். எனக்கு படத்தில் மண்ணின் வாசமும், மனிதனின் சாயலும் இருக்கணும். புதுமழை பெய்த  வாசனையை உணர்ற மாதிரி நீங்க ஃபீல் ஆகணும். அது இந்தப் படத்தில் கிடைக்கும் என்பது என் தீராத நம்பிக்கை.
சில கட்டங்களில் வாழ்வின் ஆதாரங்களை அசைச்சுப் பார்க்கிற படம் இது. ஆக்‌ஷன் த்ரில்லர். நான் பேசினதை விட  திலீப் சுப்பராயன்கிட்டே உழைச்சதுதான் அதிகம். இதன் தயாரிப்பாளர் லலித்குமார் என்னை வைச்சு படம்  தயாரிக்கணும்னு ஆசைப்பட்டார். கடைசிவரைக்கும் கதையைக் கூட கேட்கலை. ‘உங்க மேலே இருக்கிற நம்பிக்கையே  எனக்கு போதும்’ என்று சொன்ன அருமை மனிதர். அவர் படத்தில் முதலீட்டோடு மனசையும் போடுகிறவர். இதற்குப்  பிறகுதான் அவர் நம்பிக்கையை மாசுபடாமல் காப்பாத்தணும்னு கொஞ்சம் பயம் வருது.

நந்திதா முதல் தடவையா உங்க படத்தில்...


அருமையாக நடிச்சிருங்காங்க. அவங்ககிட்டே இருக்கிற திறமைக்கு இன்னும் அவங்க வெளியே வந்திருக்கணும்.  ஆட்டம், பாட்டம்னு போகாமல் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிச்சு இருக்கிறாங்க. அப்படியொரு உழைப்பு. இந்தப் படமே எளிய மனிதர்களின் மனித மாண்பை மீட்டெடுக்கிற முயற்சிதான். முன்னேறத் துடிக்கிற ஒவ்வொரு  மனுஷனுக்கும் சரியா பொருந்தின மாதிரியிருக்கும். இதில் விசுவாசமும் இருக்கு, துரோகமும் இருக்கு. அன்பும்  இருக்கு, அரக்கத்தனமான கோபமும் இருக்கு. எல்லாமே சரிவிகிதத்தில் வரும். திகட்டாது. மருதுபாண்டியன் ரொம்ப  நிதானிச்சு, தன் உணர்வையும், மனசையும் எரிபொருளாக எரிச்சு கொண்டு வந்திருக்கிற கதை. நானே இதில் இரண்டறக்  கலந்திருக்கேன். எழுத்தாளர் வசுமித்ராவுக்கு முக்கியமான ரோல். வில்லன்னு சொல்லிட முடியாது. யார் நல்லவன்,  யார் கெட்டவன்னு தேடித் திரிகிற போராட்டம்தான் கதை.

புது இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இருக்காங்க...

பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்கக் கதை’, பிரேம்குமாரின் ‘96’ முதற்கொண்டு அவர்தான் மியூசிக். இன்னும் அவர்  படங்கள் ரிலீஸாக ஆரம்பிக்கல. ட்யூன்களைக் கேட்கும்போது அவர் புதியவராக இல்லை. எக்கச்சக்க திறமை  கொண்டவர். அடுத்த சில மாதங்களில் அவர் பெரிய இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பிருக்கு. படத்திற்கு எஸ்.ஆர்.கதிர்  ஒளிப்பதிவாளராக அமைஞ்சது பெரிய பலம். ‘உன் மனசில் இருக்கிறதை சொல்லு, எடுத்துத் தருகிறேன்’ என்று  சொன்ன மாதிரி மருதுபாண்டியனுக்கு பக்கத் துணையாக இருந்தார். இன்னிக்கு முக்கியமாக இருக்கிற ஒரு சமூகப்  பிரச்னையும் இதில் இருக்கு. இதை இந்தச் சூழலில் சொல்லியே ஆகணும். அதுவும் நல்லபடியாக வந்திருக்கு.

உங்க பிரச்னைகளிலிருந்து மீண்டு வந்துவிட்டீர்களா பிரதர்...


சொன்னபடி எல்லோருக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும். ஆனால், அதுக்கு என்னை கொஞ்சம் எந்திரிச்சு ஓட  விடுங்க. நான் உங்களுக்காகத்தான் இதில் இறங்கி ஓட நினைச்சிருக்கேன். எல்லோரும் ஒரே நேரத்தில் பிடிச்சு  அமுக்கினால் எப்படி நான் எழுந்து ஓட! எனக்கொரு ஸ்பேஸ் கொடுங்க. நான் மீண்டு வருவேன். நல்ல நம்பிக்கை  இருக்கு. என்னை கொஞ்சம் ஃப்ரீயா இருக்கவிட்டு மூச்சைப் பிடிக்காமல் இருந்தால் எல்லாத்தையும் சரி  பண்ணிடுவேன்.

யாரையும் ஏமாத்திட்டு நடையைக் கட்டணும்னு ஒரு நாளும் மறந்துகூட நினைச்சதில்லை. அப்படியொரு பாதையில்  என்னிக்கும் நான் பயணப்பட்டு வந்ததில்லை. திரும்பி சம்பாதிக்க முடியுமான்னு சந்தேகமும் வந்ததில்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களுக்கு தனியாக அழுது அனுபவிக்க எனக்கு உரிமை இருக்கு. எனக்கு ஏற்பட்ட  சோகத்தையும், பிரிவையும் நான் சிவன் மாதிரி எடுத்து விழுங்கியிருக்கேன். நான் பெரிய குற்றங்கள் செய்யவில்லை.  சின்ன பிழைகள் இருக்கலாம். எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கும். என்னை கொஞ்சம் எழுந்து நடக்கவிட்டால்,  ஜெயித்து, உங்களுக்குத் தரவேண்டியதைத் திருப்பித் தருவேன். என்னைப் பொறுத்தவரைக் கும் எனக்குன்னு நேர்மை  இருக்கு. அதை நான் கடைப்பிடிக்கிறேன்!                

- நா.கதிர்வேலன்