அன்று ஒரே ஒரு சைக்கிள்... இன்று ஒரு கோடி டர்ன் ஓவர்!!



விஷன் டைம் ராமமூர்த்தியின் சக்சஸ் ஸ்டோரி

வெள்ளிவிழா கொண்டாடும் சன் டிவியின் தொடக்க நாளிலிருந்து இன்று வரை அதனுடன் பயணிக்கும் பெருமை  ராமமூர்த்திக்கு உண்டு. இப்படிச் சொல்வதை விட ‘விஷன் டைம்’ ராமமூர்த்தி என்றால் சட்டென்று அனைவருக்கும்  புரிந்து விடும்.தூர்தர்ஷன் மட்டுமே இருந்த காலத்தில் தொடங்கிய அவரது மீடியா மார்க்கெட்டிங் கேரியர், சன் டிவி  வந்தபின் தனி அடையாளமாக வளர்ந்தது.விளம்பரங்கள், மீடியா மார்க்கெட்டிங் தவிர ‘தங்கம்’, ‘மகாலட்சுமி’,  ‘பொன்னூஞ்சல்’, ‘வம்சம்’, ‘அழகு’ என 30க்கும் மேற்பட்ட சீரியல் தயாரிப்புகள், ஈவென்ட் மேனேஜ்மென்ட்... என  சின்னத்திரையில் விடாமல் ஸ்கோர் செய்து வருகிறார் ராமமூர்த்தி.

‘‘1993ல சன் டிவி தொடங்கினதுலேந்து அவங்க மார்க்கெட்டிங் உலகத்துல நாங்களும் ஓர் அங்கமா இருக்கோம்.  இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும் சொல்லுங்க? முதல் நாள் ஒளிபரப்பை மறக்கவே முடியாது. நாலு  கிளையன்ட்டோட விளம்பரங்கள், அதாவது மூவாயிரம் செகண்ட்ஸ் டேப்பை கொடுத்திருந்தேன். டெலிகாஸ்ட்டுக்காக  அந்த டேப்பை சன் டிவியின் சேர்மனே சிங்கப்பூருக்கு எடுத்துட்டுப் போனார்! அந்தத் தருணத்தை வாழ்நாள்ல என்னால  மறக்கவே முடியாது...’’ என்று நெகிழும் ராமமூர்த்தி சன் டிவி சேர்மனுக்கு தன் மீது அளப்பரிய அன்பு இருப்பதாலேயே  தன்னால் இந்தளவுக்கு வளர முடிந்தது என்கிறார்.

‘‘வெறும் மூணே மூணு தொழிலாளர்களோட ‘விஷன் டைம்’ தொடங்கினேன். இப்ப 140 குடும்பங்களா  வளர்ந்திருக்கோம்! இந்த நிமிஷம் வரை நான் எது கேட்டாலும் சன் டிவி சேர்மன் இல்லைனு மறுத்ததே இல்ல. திடீர்னு  ஒருநாள் கூப்பிட்டு, ‘சன் நியூஸ்’, ‘ஆதித்யா’ சேனல்களை எங்ககிட்ட கொடுத்து ‘இனி இந்த ரெண்டு சேனல்களின்  மார்க்கெட்டிங்கையும் நீங்களே பண்ணிக்குங்க’னு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார்! இத்தனைக்கும் சன் நெட்  ஒர்க்கிலேயே மார்க்கெட்டிங்குக்கு பெரிய துறை இருக்கு. ஆனாலும் நாங்களும் நல்லா இருக்கணும்னு இதைச் செய்தார்.  அவருக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன்!’’ என்று சொல்லும் ராமமூர்த்தியின் வாழ்க்கை ரூ.130  சம்பளத்துடன்தான் தொடங்கியிருக்கிறது.

‘‘பூர்வீகம் மாயவரம் பக்கம் செம்பனார்கோயில். அப்பா சுப்ரமணியம், அரசுப்பள்ளில எச்.எம். அம்மா சாரதா,  இல்லத்தரசி. நாலு அக்கா, ரெண்டு அண்ணன், ரெண்டு தம்பினு எங்க குடும்பம் பெருசு. அப்பா வருமானத்துலதான்  நாங்க வாழ்ந்தோம். அப்ப வீட்டு வாடகை பத்து ரூபாதான். அப்பாவுக்கு அரசாங்க வேலை. அதனால ஊர் மாறிக்கிட்டே  இருந்தோம். பள்ளிப் படிப்பு சீர்காழில. பத்தாவது முடிச்சதும் சென்னைக்கு ரயிலேறிட்டேன். அண்ணன்ங்க இரண்டு  பேரும் சென்னைல ஒரு அட்வர்டைசிங் கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தாங்க. அந்த நிறுவனத்தோட  தலைமையகம் கல்கத்தாவுல இருந்தது. திருவல்லிக்கேணி வைஷ்ணவா லாட்ஜுல தங்கினோம். நான் வேலை தேட  ஆரம்பிச்சேன். எதுவும் செட் ஆகல. அண்ணன்கள் வேலை பார்த்த நிறுவனத்துலயே 1971ல மீடியா அசிஸ்டென்ட்டா  சேர்ந்தேன். சம்பளம் ரூ.130. அந்த வேலை ரொம்பவே பிடிச்சிருந்தது...’’புன்னகைக்கும் ராமமூர்த்திக்கு இத்துறையில்  ரோல் மாடல் என யாரும் இல்லை. இதன் பிறகு ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

‘‘முதல்ல வேலை பார்த்த அந்த கல்கத்தா கம்பெனி அண்ணா சாலைல, ‘எக்ஸ்பிரஸு’க்கு பக்கத்துல இருந்தது.  அதனால ‘எக்ஸ்பிரஸ்’ல வேலைபார்த்த பலர் நட்பானாங்க. என் அண்ணனோட நண்பர் கோயங்காவுக்கு நல்ல  ஃப்ரெண்ட். அவர் வழியா ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மார்க்கெட்டிங்குல வேலைக்குச் சேர்ந்தேன். அதே சம்பளம்தான்.  ஆனா, மனசுக்குப் பிடிச்ச வேலை!சம்பளம் போட்டதுமே பக்கத்துல இருந்த மெஸ்ஸுல அந்த மாசத்துக்கான சாப்பாட்டு  டோக்கனை மொத்தமா வாங்கிடுவேன். மாசக் கடைசில காசில்லாம தவிச்சாலும் சாப்பாட்டுக்கு பிரச்னை இருக்காது.

ஏற்கனவே விளம்பரத்துறைல அனுபவம் இருந்ததால சீக்கிரமா வேலையைக் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல  ‘எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தோட ‘ஸ்க்ரீன்’ல ஆரம்பிச்சு மத்த வட இந்திய பத்திரிகைகளின் டிஸ்பியூட்ஸ்,  விளம்பரங்கள்னு எல்லாத்தையும் டீல் பண்ணத் தொடங்கினேன். மும்பைல இருந்த கோயங்கா கூட நேரடியா பேசற  பணியாளரா வளர்ந்தேன்...’’ கண் சிமிட்டும் ராமமூர்த்திக்கு இந்தக் காலகட்டத்தில்தான் திருமணமாகி  இருக்கிறது.‘‘இதுக்குப் பிறகுதான் கோயங்கா சார் என் சம்பளத்தை ரூ.740 ஆக உயர்த்தினார்! இதுக்குள்ள சைக்கிள்  ஒண்ணு வாங்கியிருந்தேன். அதுலதான் வேலை விஷயமா சுத்துவேன். உண்மையை சொல்லணும்னா இன்றைய  ராமமூர்த்தியோட வளர்ச்சியில அந்த சைக்கிளுக்குத்தான் பெரும் பங்குண்டு!

14 வருஷங்கள் ‘எக்ஸ்பிரஸ்’ல வேலை பார்த்துட்டு வீடியோ அட்வர்டைசிங் துறைக்குள்ள நுழைஞ்சேன். 1986 - 87ல  வீடியோ கேசட்ஸ் பிரபலமா இருந்துச்சு. ஏற்கனவே பிரின்ட் மீடியாவுல ஏகப்பட்ட க்ளையன்ட்ஸ் அறிமுகம் இருந்ததால  புது பிசினஸ் சுலபமாச்சு. சாட்டிலைட் சேனல்ஸ் வராத காலம். அப்ப தூர்தர்ஷன்ல 14 சீரியல்ஸ் வந்துட்டு இருந்தது.  அதுல 12க்கு நான் மார்க்கெட்டிங் பண்ணினேன். புதுப்புது சினிமா நிகழ்ச்சிகளை அவுட் ரேட்டுல வாங்கி தூர்தர்ஷனுக்கு  கொடுத்தேன்.  இந்த நேரத்துல ‘நியூட்ரின்’ சாக்லெட் கம்பெனில இருந்த அச்சுத ரெட்டி நட்பு கிடைச்சது. என்  வாழ்க்கைல திருப்புமுனை ஏற்படுத்தின நண்பர்னு அவரைச் சொல்லலாம்.

அவர் வழியா ‘ஆசை’ சாக்லேட் விளம்பரம் பண்ற வாய்ப்பு கிடைச்சது. லாபம் மட்டுமே இதுல பத்தாயிரம் கிடைச்சது.  அந்த செகண்ட்ல ஒரு கோடி ரூபாய்னு டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி உழைக்க ஆரம்பிச்சேன்.இதுல ரூ.97 லட்சத்தை ரீச்  பண்ண முடிஞ்சுது. இதையே பெரிய சாதனையாதான் நினைக்கறேன். இதெல்லாம் நிகழும்போது கூட அதே  சைக்கிள்லதான் பயணப்பட்டேன். ஒருநாளைக்கு 18 மணி நேரம் வரை உழைச்சேன். ‘ஒளியும் ஒலியும்’ல அஞ்சு  பாடல்கள் ஒளிபரப்பானா அதுல நாலு நான் கொடுத்ததா இருக்கும். ஒரு பாடல் ஒளிபரப்ப ரூ.15 ஆயிரம் கொடுக்கணும்.  தூர்தர்ஷனுக்கு போய் க்யூல நின்னு, நான்கு பாடல்களுக்கான தொகையைக் கட்டிட்டு வந்திருக்கேன்!’’ என்று  சொல்லும் ராமமூர்த்தி, சன் டிவியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு தனக்கு வழங்கப்பட்ட தங்கக் காசை எடுத்துக்  காட்டுகிறார்.

‘‘சேர்மன் கையால வாங்கினேன்! சன் நெட் ஒர்க் தவிர வேறு யாருக்கும் மார்க்கெட்டிங் பண்றதில்லைங்கிற  எத்திக்ஸோட இருக்கேன். மார்க்கெட்டிங் மட்டுமே பண்ணிட்டிருந்த நாங்க சீரியலையும் தயாரிக்கிற அளவுக்கு  உயர்ந்ததுக்குக் காரணம் சன்தான். ‘தங்கம்’ல ஆரம்பிச்சு இப்ப ‘கல்யாணப் பரிசு’, ‘அழகு’ வரை சீரியல்  தயாரிப்பாளராகவும் பயணப்படறோம்.நிறுவனத்தை இப்ப என் மனைவி வைதேகி கவனிச்சுக்கறாங்க. என் முதுகெலும்பே  அவங்கதான்!’’ என்று சொல்லும் ராமமூர்த்திக்கு தினேஷ் ராமமூர்த்தி, ராஜா ராமமூர்த்தி என இரண்டு மகன்கள்  உள்ளனர். இருவருமே அமெரிக்காவில் வசிக்கிறார்கள்!

-மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்