COFFEE TABLE



நிவேதா ஹேப்பி

இன்ஸ்டாகிராமில் 8 லட்சம் ஃபாலோயர்களை நெருங்கிவிட்டார் நிவேதா பெத்துராஜ். துபாய் சொகுசு கார், சென்னை  ஷாப்பிங்... என தூள் கிளப்பும் பதிவுகளை அள்ளி வீசுவதால் லைக்குகள் குவிகின்றன.சமீபத்தில் அவரது மினி  கார்டனில் மழைத் தூறலுடன் காற்று சிலுசிலுக்க, மெய்மறந்து அதில் மூழ்கிவிட்டார். அந்த இனிய தருணங்களைக்  குட்டியூண்டு வீடியோவாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தட்டி விட்டிருக்கிறார். போதாதா... ஹார்ட்டின்கள் வரிசை கட்டு  கின்றன!

கார் வாஷ் லேடி

தலைகீழாக ஜிம்னாஸ்டிக் செய்தபடி கார் வாஷ் செய்யும் ஓர் இளம்பெண், கண்களைக் கட்டிக்கொண்டு குறிபார்த்து  அம்பு விடும் வீரர் ஒருவர், பிரமாண்டமான ட்ராக்டர் டயரைக் கொண்டு இடுப்பில் ரிங் விளையாடுபவர்... என  வியக்கவைக்கும் நபர்களின் திறமைகளைத் தொகுத்து ஒரு மினி வீடியோவாக வெளியிட்டிருக்கிறது ஃபேஸ்புக்கின்  ‘People are Awesome’ என்ற பக்கம். அதில் ‘Weird Skills & Odd Talents’ என்ற தலைப்பில் இந்த  வீடியோ தொகுப்புள்ளது. இதை ஒரு கோடிக்கு மேலானோர் பார்த்து வைரலாக்கி வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஏழை படும் பாடு


‘‘இந்தியாவில் மருத்துவத்துக்காக செய்த செலவினால் சுமார் 5.5 கோடிப் பேர் ஏழைகளாகிவிட்டனர்...’’ என்று  திடுக்கிட வைக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘‘அதில் 3.8 கோடிப் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே  தள்ளப்பட்டிருக்கின்றனர்...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘புற்றுநோய், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் சர்க்கரை  நோய்க்குத்தான் இந்தியர்கள் அதிகளவில் செலவு செய்கின்றனர்...’’ என்கிற நிபுணர்கள், ‘‘அத்தியாவசிய  மருந்துகளுக்கான விலையை அரசு குறைத்தாலும், அந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது அரசு  மருந்துக் கடைகளிலோ கிடைப்பதில்லை என்பதால் சாதாரண மக்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது...’’  என்கின்றனர்.

மலிவு விலையில் ஒரு ஸ்மார்ட்போன்!

‘லெனோவா’ நிறுவனம் நடுத்தர மக்களை மனதில் வைத்து ‘கே8 பிளஸ்’ என்ற புதிய ஸ்மார்ட்போனை சந்தையில்  இறக்கியுள்ளது. 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்பில்ட் மெமரி, 4000 mAh பேட்டரி திறன், 8 எம்.பி செல்ஃபி கேமரா, 13  எம்.பி பின்புற கேமரா, 5.2 இன்ச் டிஸ்பிளே என்று சகல வசதிகளும் இதிலுள்ளது. ‘‘இவ்வளவு வசதிகளுடன்  மலிவான விலையில் கிடைக்கின்ற ஒரே ஸ்மார்ட் போன் எங்களுடையதுதான்...’’ என்று ‘லெனோவா’ பெருமிதம்  கொள்கிறது. இதன் விலை ரூ. 8,999.                 ஸ்ரீ

சூது கவ்வும்


உலகக் கோப்பை கால்பந்து ஜுரத்தை ஒரு மாதத்துக்குக் கட்டுப்படுத்த முடியாது. போட்டிகளைக் காண்பதற்காக  ரசிகர்கள் சாரை சாரையாக ரஷ்யாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆட்டம், பாட்டம்,  கொண்டாட்டத்துக்குப் பஞ்சமில்லாத இப்போட்டிகளில் சூதாட்டமும் கொடிகட்டிப் பறக்கும். இந்நிலையில் தாய்லாந்து  ரசிகர்கள் யானைகளை வைத்து கால்பந்து போட்டியை நடத்தி வித்தியாசமாக சூதாட்டத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்திருக்கின்றனர். இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி விட்டது.

- குங்குமம் டீம்