வசிப்பது தெரு ஓரத்தில்... ஜெயித்தது ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில்!




‘‘எங்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட யோசிச்சவங்க இப்ப எங்களைப் பெருமையா பாராட்டிட்டுப் போறாங்க...’’கண்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்க பேசுகிறார்கள் இந்தக் கால்பந்து பெண்மணிகள். தெருவில்தான் வாழ்க்கை.  சரியான முகவரி கிடையாது. குடும்பம் கிடையாது. ஒருசிலருக்கு அப்பா, அம்மாவும் கிடையாது.இப்படிப்பட்ட பெண்  குழந்தைகளை மீட்டெடுத்த கருணாலயா அமைப்பு, அவர்களுக்கு கல்வி மட்டுமின்றி முறைப்படி கால்பந்து பயிற்சியும்  கொடுத்து ரஷ்யாவில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான ஃபுட்பால் போட்டியில் இந்தியர்கள் சார்பில் பங்கேற்க  வைத்திருக்கிறது.கோப்பை? வேறு யாருக்கு... இவர்களுக்குத்தான்!  

‘‘குடிச்சுக் குடிச்சு அப்பா எங்களை மொத்தமா விட்டுட்டார். அம்மா வேலைக்குப் போறாங்க...’’ என்று பேச  ஆரம்பித்தார் அணியின் கேப்டனான சங்கீதா.‘‘எங்களுக்கு வீடு கிடையாது. ரோட்டோரத்துலதான் தங்கியிருக்கோம்.  9வது படிக்கிறப்பவே வேலைக்குப் போயிட்டேன். அப்பதான் கருணாலயாவுல இருந்து டீச்சருங்க வந்து எனக்கும் என்  அம்மாவுக்கும் கவுன்சிலிங் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் இங்க வந்தேன். அப்பவும் படிப்புல ஆர்வம் இல்ல. அப்பதான்  கால்பந்து பயிற்சி கொடுத்து ‘இது வேணும்னா படிக்கணும்’னு ரூல் போட்டாங்க! படிப்பு மேல ஆர்வம் காட்ட  ஆரம்பிச்சேன். நான் மட்டுமில்ல... இங்க இருக்கிற எல்லாருமே தெருவோரப் பிள்ளைங்கதான்...’’என்று சங்கீதா  முடிக்க, கனத்த குரலில் பேச ஆரம்பித்தார் ஷாலினி. “அம்மா இறந்துட்டாங்க. அப்பா இன்னொரு கல்யாணம்  பண்ணிக்கிட்டாரு. 13 வயசுல வெறும் ரூ.2 ஆயிரத்துக்கு என்னை கல்யாணம் செய்து வைக்க எங்க சித்தி பார்த்தாங்க.

தப்பிச்சு ஓடி வந்துட்டேன். அப்புறம் ரோடுதான் வீடு. வேலைக்குப் போயிட்டு வாழ்ந்துட்டு இருந்தேன். கருணாலயா  அமைப்பு என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க...”ஷாலினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஸ்வரி இடையில்  புகுந்தார். ‘‘நானும் அம்மாவும் பூ விற்போம். போதுமான பாதுகாப்பு இல்லாம அம்மா என்னை பயந்து பயந்து  வளர்த்தாங்க. அப்ப கருணாலயா பத்தி தெரிஞ்சு என்னை இங்க படிக்க அனுப்பினாங்க. டீம் கோல் கீப்பர் நான். ரெண்டு  முறை பெஸ்ட் கோல் கீப்பர் விருது வாங்கியிருக்கேன்...’’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஈஸ்வரி.

‘‘நான் கோமதி. அப்பா பூ விற்கிறார். கருணாலயா சம்மர் கேம்ப் மூலமா கால்பந்து விளையாட ஆரம்பிச்சு இப்ப  இங்கயே படிக்கறேன். நான்லாம் சென்னையவே முழுசா பார்த்தது கிடையாது. அப்படியிருக்கிறப்ப ரஷ்யா போயிட்டு  வந்திருக்கேன்னு நினைக்கிறப்ப பெருமையா இருக்கு...’’கிட்டத்தட்ட அணியில் இருக்கும் அனைவரது கதையும்  இதுவேதான். சாலையோர வாழ்க்கை... ஆண்களால் தொல்லை... இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பையும்  கல்வியையும் கருணாலயா அமைப்பு கொடுத்திருக்கிறது. அத்துடன் திறமையானவர்களை இனம் கண்டு சர்வதேச  கால்பந்து வீராங்கனைகளாகவும் வளர்த்திருக்கிறது.

‘‘ரேஷன் கார்டுக்கும், ஆதார் கார்டுக்கும் நடையா நடந்தோம். அலையா அலைஞ்சோம். அப்படியும் கிடைக்கலை. இது  இல்லாம பாஸ்போர்ட் கிடைக்காதே... ஒருகட்டத்துல ஸ்காட்லாந்து, ரஷ்யா எல்லாம் வெறும் கனவுனு நினைச்சோம். நாங்க கார், பங்களா கேட்கலை. இந்த நாட்ல பிறந்தவங்க என்பதற்கான அடையாளம் மட்டும்தான் கேட்டோம். அதுக்கு  இழுத்தடிச்சாங்க. நல்லவேளையா கருணாலயா எங்களுக்கு பக்கபலமா இருந்ததால பாஸ்போர்ட் வாங்க முடிஞ்சது.  ஆனா, எங்களை மாதிரியே திறமையோடு இருக்கிற பல தெருவோரப் பிள்ளைகளுக்கு எல்லாமே எட்டாக் கனியா  இருக்கு...’’ என்று தன் ஆற்றாமையை கொட்டித் தீர்த்த சங்கீதா, சட்டென்று உடைந்தார்.

‘‘சரியான வீடு இல்லாம பெண் குழந்தையா இருப்பது எவ்வளவு வேதனை தெரியுமா? குடிச்சுட்டு பக்கத்துல பக்கத்துல  வந்து படுத்துப்பாங்க. ரோட்டோரத்துலதான் வாழறோம். அதுக்காக தன்மானம் இல்லாமயா வாழறோம்..?’’ பொங்கிய  சங்கீதாவை சமாதானப்படுத்தியபடி பேசத் தொடங்கினார் கருணாலயாவின் நிர்வாகி யான மருத்துவர் பால்.‘‘இப்படி ஏராளமான குழந்தைங்க இருக்காங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சோகம், வேதனை.  ஒவ்வொருத்தருக்கும் எங்களால முடிஞ்ச கல்வியையும், வாழ்க்கையையும் கொடுக்க முயற்சி செய்யறோம். போன  வருஷம் இதே ரஷ்யப் போட்டிக்கு பசங்க போனாங்க. இந்த முறை பெண்கள். அடுத்து தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கப் போகுது. அதுக்கும் ஒரு குழு தயாராகிட்டு இருக்கு.வட இந்தியாவுலயும்  ஓர் அமைப்பு இருக்கு. அவங்களோடு சேர்ந்து ஒரு குழுவா குழந்தைகளை அனுப்ப முடிவு செய்திருக்கோம்...’’  என்றார்.            

- ஷாலினி நியூட்டன்

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்