சாதிப் பிரச்னையை பேசியிருக்கோம்... பெர்லின் ஃபிலிம் பெஸ்டிவல்ல விருது வாங்கியிருக்கோம்... கமர்ஷியலா எடுத்திருக்கோம்!



திரைப்பாடல்களில் கிராமத்து மண்வாசனையை சாரலும் தூறலுமாகக் கொண்டு வருபவர் ஏகாதசி. ‘குட்டிப்புலி’யில் ‘ஆத்தா ஓஞ்சேல...’, ‘ஆடுகள’த்தில் ‘ஒத்த சொல்லால...’, ‘அசுர’னில் ‘கத்திரிப் பூவழகி...’, ‘சண்டக்கோழி 2’ல் ‘கம்பத்துப் பொண்ணு...’, ‘செம’வில் ‘உருட்டுக்கண்ணால...’ என பல ரசனை மின்னும் இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர், எழுதிவருபவர்.

‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த ஏகாதசி, இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் ‘அருவா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதை ‘திமிரு’தருண்கோபி தயாரித்திருக்கிறார். பெர்லினில் நடந்த விழா ஒன்றில் ‘சிறந்த சமூகப் படம்’ என்ற விருதையும் அள்ளியிருக்கிறது ‘அருவா’.

‘‘சின்ன வயசுல இருந்தே கவிதைகள் எழுதுவேன். அப்புறம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்துக்கு நாடகங்களும், மேடைப்பாடல்களும் எழுதிருக்கேன். சினிமால இயக்குநராகணும்னு சென்னைக்கு வந்தேன். இங்க எனக்கு பாட்டும் எழுதத் தெரியும்னு யார்கிட்டயும் சொல்லலை. ஏன்னா, அறிவுமதி,கலைக்குமார், நா.முத்துக்குமார்னு பலரும் இயக்குநர் ஆக நினைச்சவங்க.

ஆனா, சூழ்நிலை காரணமா அவங்க பாடலாசிரியர் ஆனதால அவங்களால திரைப்படங்களை இயக்க முடியாமயே போயிடுச்சு. அதே நிலைமை எனக்கும் வரக்கூடாதுனு இருந்தேன். ஆனா, நான் எழுதின மேடைப்பாடலே எனக்கான டெமோவாகி, பாடல் எழுதும் வாய்ப்பை தேடிக் கொடுத்திடுச்சு! என் இலக்கில் நான் தெளிவா இருந்ததால, இயக்குநராகவும் முடிஞ்சது.

ஏழெட்டு வருஷ இடைவெளிக்குப் பின் இப்ப ‘அருவா’ எடுத்திருக்கேன். பாடல் எழுதுறதையும் தொடர்றேன். ரெட்டைக் குதிரை சவாரி சிரமம்தான். ஆனா, இதுவும் பழகிடுச்சு. இப்ப ‘சூரரைப் போற்று’ உட்பட ஒரு டஜன் படங்களுக்குப் பாட்டு எழுதிட்டிருக்கேன்...’’ அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் ஏகாதசி.

எப்படி உருவாச்சு இந்தப் படம்?

இயக்குநரும் நடிகருமான தருண்கோபிகிட்ட நான் உதவியாளரா ஒர்க் பண்ணியிருக்கேன். அந்த டைம்லயே இந்த ‘அருவா’ கதையை சொல்லியிருக்கேன். என்னோட முதல்படமா இந்தப் படத்தை நான் பண்ணுவேன்னு அவர் நினைச்சிருக்கார். அதுக்கான வாய்ப்பு அமையல. சில ஹீரோக்கள்கிட்டேயும் இந்தக் கதையைச் சொல்லியிருக்கேன். இந்தக் கதையில் சாதி ரீதியான பிரச்சினைகள் இருக்கறதால, அவங்க பின்வாங்கினாங்க.
சமீபத்துல தருண்கோபியை சந்திச்சப்ப, ‘என்னாச்சு உங்க முதல் கதை’னு கேட்டார். யாருமே அதைத் தயாரிக்க விரும்பலைனு சொன்னேன்.

அது அவர் மனசை பாதிச்சிடுச்சு. ‘சமூக அக்கறையோடு உள்ள இந்தக் கதையை நானே தயாரிக்கறேன் ஏகாதசி’னு முன்வந்து தயாரிச்சிருக்கார்.  
படம் ரெடியாகிடுச்சு. இடையே, ஜெர்மன்ல நடந்த பெர்லின் ஃபெஸ்டிவல்ல ‘சிறந்த சமூக அக்கறைக்கான’ படமா கௌரவமான ஒரு விருதும்
வாங்கியிருக்கோம்.

இது அவார்ட்டு ஃபிலிமா?

இல்ல. இயல்பும் யதார்த்தமும் மின்னும் கதை இது. அதை கமர்ஷியல் பேட்டர்ன்ல சொல்லியிருக்கேன். ‘அருவா’ங்கற டைட்டிலுக்குக் கீழே, ‘கையில் எடுத்தவருக்கெல்லாம் சொந்தம்’னு முக்கியமான ஒரு கேப்ஷனும் போட்டிருக்கேன். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துகிட்ட எவ்ளோ காலம்தான் மிதியை தாங்கிக்கிட்டு இருக்க முடியும்? காலகாலமாக நடக்கற ஒரு பிரச்னையை தொட்டிருக்கேன். இன்னிக்கு எவ்வளவோ டெக்னாலஜி இருக்கு. ஆபரேசன் பண்ணாம லேசர் மூலமா பண்ண முடியுது. பல தொழில்நுட்பங்கள் ஆச்சரியமூட்டுது.

ஆனா, இன்னிக்கும் மலம் அள்ளுற வேலையை கையாலதான் பண்ணிட்டிருக்காங்க. மலமும், மூத்திரமுமான தொட்டிக்குள் மூச்சுத் திணறி இறந்தவங்க எத்தனையோ பேர்... பலமான ஒரு மெஷினை பயன்படுத்தினால், பெரிய பாறையைக் கூட எளிதா ஊதித் தள்ளிடும்.

ஆனா, மலம் அள்ள அப்படி மெஷினை ஈடுபடுத்த அரசாங்கமே விரும்பறதில்ல. ‘ஒரு குறிப்பிட்ட சாதியினர் அப்படித்தான் இருக்கணும்’னு அரசாங்கமும் நினைக்குது போல.

கையால மலம் அள்ளுறதை எதிர்த்து போராட்டங்கள் ஆங்காங்கே நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. அதுக்கு எங்களோட பங்களிப்பா, கலைவடிவத்துல இந்த படத்தைக் கொண்டு வந்திருக்கோம்.

கேமராமேன் சுகுமாரின் உதவியாளர் தீபன், கதைநாயகனாக அறிமுகமாகிறார். ஹீரோயினா பெங்களூரு பொண்ணு அக்‌ஷயா நடிச்சிருக்காங்க. இவங்க தவிர வேல ராமமூர்த்தி, பொன்குமார், பவுன்ராஜ்னு பலரும் நடிச்சிருக்காங்க. ஜெய கே.தாஸ் இசையமைக்கிறார். இவர் ‘நாய்க்குட்டி’, ‘ஆரம்பமே அட்டகாசம்’ படங்களுக்கு பண்ணினவர். கேமராமேன் சுகுமாரின் அசிஸ்டென்ட்டான மூவேந்தர் படத்துக்கு ஒளிப்பதிவு பண்றார்.

உங்க பாடலாசிரியர் பயணத்தை சொல்லுங்க..?

தாராளமா! என்னோட ஆல்பத்து பாடல்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூட நன்கு பரீட்சயம். மதுரைக்கு பக்கம் உள்ள பணியான் கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரா இருக்கேன்.

சென்னை வந்ததும் உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடி அலைஞ்சேன். முயற்சி வீண்போகல. இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், ஜி.மாரிமுத்து, ஜீவன், பிரபுசாலமன், தருண்கோபி... இவங்ககிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன். ஆனா, என் இயக்குநர்கள்கிட்டக் கூட எனக்கு பாடல்கள் எழுதத் தெரியும்னு சொன்னதில்ல.

2004ல எனக்கு திருமணமாச்சு. அந்த டைம்ல ‘ஆயுள் ரேகை’ படத்துல என்னோட பழைய ஆல்பத்துல உள்ள ‘கொலைகாரி வர்றா... எனை கொல்லத்தானே போறா...’ பாடலை பயன்படுத்திக்க கேட்டு வந்தாங்க. அப்ப நான் புதுசா கல்யாணமானவன், பொருளாதார தேவை இருந்ததால, பாடலாசிரியர் வாய்ப்பை மறுக்க மனசில்ல. அதே படத்துல இன்னொரு பாடலையும் எழுதிக் கேட்டாங்க. கொடுத்தேன்.

அடுத்து ‘வெயில்’ல ஒரு துண்டுப்பாடலை எழுதினேன். ஜி.வி.பிரகாஷிடம் அது முதல் படம். அப்ப ஆரம்பிச்ச எங்க நட்பு இப்ப வரை தொடருது.
2010ல என் இயக்குநர் கனவு நனவாச்சு. 2011ல ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ ரிலீஸாச்சு. அப்புறம் பாட்டெழுதும் வாய்ப்புகள் வரவே, ஸ்கிரிப்ட் எழுதுறதுல கவனம் செலுத்த முடியாமப் போச்சு. இயக்குறதை தள்ளிப்போட்டுக்கிட்டே வந்தேன். தருண்கோபியால இப்ப மறுபடியும் இயக்குநராகிட்டேன்.

எப்படி போகுது உங்க ‘ஒரு கப் டீ’ யூ டியூப் சேனல்..?

நல்லா போயிட்டிருக்கு. இப்ப ரெண்டரை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் கிடைச்சிருக்காங்க. இது ஒன்மேன் ஷோ. நானும் என் மொபைலும்தான் ஆபீஸ்னு சொல்லலாம். சினிமால சாத்தியப்படாத விஷயங்களை இதுல சாத்தியப்படுத்துறேன். கஜா புயல், அப்பா, அம்மாவை பத்தி, ஒரு கல்யாணமாகாத
கன்னிப்பெண், தண்ணீர் பிரச்னைனு எழுதறேன். பாடல் எழுதின பிறகு நண்பர் சர்க்கிள்ல உள்ள இசையமைப்பாளர்கள், எடிட்டிங்னு பக்காவா ரெடி செய்து யூ டியூப்ல பதிவிடறேன். தவிர எனக்கு பிடிச்ச புத்தகங்களை வாங்கி, அதையும் விமர்சிக்கறேன்.

‘முதல் தூறல்’, ‘பூவும் தீயும்’ ‘மீறல்’, ‘ஹைக்கூ’னு இதுவரை ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கேன். 12 புத்தகங்கள் அச்சுக்கு தயாரா இருக்கு. அடுத்து ஒரு காதல் கதை எழுதி இயக்கப்போறேன். ஒரு வருஷமா செதுக்கிச் செதுக்கி கதையை கொண்டு வந்திட்டிடுக்கேன். விதார்த்துக்கு பொருத்தமான கதை. இப்படி பயணம் தொடருது!

மை.பாரதிராஜா