நிர்வாகத்துறையின் கை ஓங்குகிறதா..? நீதித்துறை பலவீனமடைகிறதா..?



அண்டை நாடுகளைப் போலன்றி நம்நாட்டில் ஜனநாயகம் பிழைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஒரு வலுவான நீதித்துறை நிலவுவதே.
அரசியலமைப்பின் நிறுவனர்கள் குடிமக்களைக் காக்கக்கூடிய சுதந்திரமான நீதித்துறை ஒன்று நிலவவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தனர்.
அப்படியொரு வலுவான, சுதந்திரமான நீதித்துறை இன்று உள்ளது என்று நாம் கூறமுடியுமா?

நீதித்துறை படிப்படியாக பலவீனமடைந்து தனது சுதந்திரத்தை இழந்து வருவதே பயங்கரவாதம், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை விட இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்து. நிர்வாகத் துறையிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ வரும் தாக்குதலிலிருந்து குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டியது நீதித்துறையே. நிர்வாகத்துறை அத்துமீறல்களிலிருந்து குடிமக்களை இப்போது வரை பாதுகாத்து வந்தததும் நீதித்துறைதான்.

அரசியல், பணம் அல்லது வேறு ஏதேனும் ஒரு வெளிப்புற அழுத்தங்களிலிருந்து குடிமக்களை மட்டுமல்ல நீதிபதிகளையும் பாதுகாக்க ஜனநாயகம் முயல்கிறது.நீதிபதிகள் பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய இடம் எது தெரியுமா? ஒரு குறிப்பிட்ட வழக்கில் அவர்களின் தீர்ப்புகளில் இருக்க வேண்டிய தெளிவான, பொது, சட்டக் காரணிகள்.

மேலும், ஒரு வழக்கின் இரு வாதங்களையும் கேட்டபின் ஏன் சில வாதங்களை ஏற்றுக் கொள்கிறார், மற்றவற்றை ஏன் நிராகரிக்கிறார் என்பதை விளக்க வேண்டும். சட்டபூர்வமாக இதை நியாயப்படுத்தத் தவறினால் அதன் உண்மைத் தன்மை பாதிக்கும். இது ஜனநாயகத்தையே படுகுழியில் தள்ளும்.
சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறதா?

அவசரநிலையின் போது உச்சநீதிமன்றம் அளித்த ஜபல்பூர் ADM வழக்கு போன்ற சில விதிவிலக்குகள் இருந்தாலும், நீதித்துறை குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தை எப்போதும் பாதுகாத்தே வந்துள்ளது. ஆனால், இன்று நிலைமை மாறியுள்ளது. தனிநபர் சுதந்திரத்தை காக்க வேண்டிய தனது கடமையிலிருந்து நீதித்துறை தவறிவிட்டதோ என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் நிர்வாகத்துறையின் கை ஓங்கியுள்ளது. நீதித்துறையின் ஒரு பகுதி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் நிர்வாகத் துறையின் கீழ் உள்ளதோ என்ற அச்சம் நிலவுகிறது.இதற்கு ஆதாரம் இல்லாமலில்லை. இந்தத் தோற்றத்தை நீதித்துறைதான் களைய வேண்டும். அவசரநிலையின்போது நீதியரசர் ஹிதாயத்துல்லா, ‘நமக்கு முன்னோக்கிய பார்வை கொண்ட நீதியரசர்கள்தான் தேவை. எதிர்பார்ப்பு கொண்ட நீதியரசர்கள் அல்ல’ என்று கூறினார். இப்போது சில நீதியரசர்கள் ஏதிர்பார்ப்புடன் இருப்பதையே நாம் காண்கிறோம்.

அரசியல் சட்டம் 1950ல் நடப்புக்கு வந்தபோது ஓய்வுபெற்ற நீதியரசர்களுக்கு கவர்ச்சிகரமான பதவி எதையும் அளிப்பதற்கான வாய்ப்பு நிர்வாகத்துறைக்கு இருக்கவில்லை. இன்றோ நிலைமை மாறியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகளால் மட்டுமே நிரப்பப்படக்கூடிய ஏராளமான பதவிகள் அரசுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற விஷயங்களோடு இதுவும் சேர்ந்து நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தியுள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் நீதிபதிகள்உயர்நீதிமன்றங்களில் இருக்கும் காலியிடங்கள், ஆபத்தான விகிதத்தை எட்டியிருக்கின்றன. பல உயர்நீதிமன்றங்களில் காலியிடங்களுக்கான விகிதம் ஐம்பது சதவிகிதமாக இருக்கிறது.ஒவ்வொரு நீதிபதியும், இரண்டு நீதிபதிகளின் வேலையைச் செய்கின்றனர். சில நீதிபதிகள் பல தினங்கள் மாலை ஆறு மணி வரை வேலை செய்கிறார்கள். இப்படி இருந்தால் சட்ட இலக்கியம் படிக்கவும், தீர்ப்பு எழுதவும் எங்கே நேரம் கிடைக்கும்? அதனாலேயே சில தீர்ப்புகள் ஒரு வருடத்திற்கு மேலாகத் தள்ளி வைக்கப்படுகிறது.

குவிந்து கிடக்கும் வழக்குகளை முடித்து தீர்ப்பளிக்க பல வருடங்கள் ஆகலாம் என்பதுதான் எதார்த்தம். வழக்குகள் திரும்பத் திரும்ப ஒத்திவைக்கப்
படுகின்றன. தில்லி உயர்நீதிமன்றத்தில், மூன்று நான்கு மாதங்களுக்குள் ‘அடுத்த விசாரணை தேதி’யைப் பெறுவதே கடினம். ஒரு வழக்கு விசாரிக்கப்படும்போது, அதைத் தொடர்ந்து விசாரிக்க முடிவதில்லை. புது வழக்குகள் சில நிமிடங்கள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. இதனால் நீதிபதிகள் உட்பட அனைவரும், அதிருப்தியையும், ஏமாற்றத்தையும்தான் உணர்கின்றனர்.

தேங்கி நிற்கும் திட்டங்கள்

பாஜக அரசு வெளியிட்டிருக்கும் 2017 - 18ம் ஆண்டுக்கான ‘எக்கனாமிக் சர்வே’யில் பல்வேறு புதிய புராஜெக்ட்கள் ஆரம்பிப்பது தாமதமாவதற்கு நீதிமன்றங்களில் அவை தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து, எரிசக்தி, சாலைப் போக்குவரத்து, பெட்ரோலியம், சுரங்கம், ரெயில்வே ஆகிய ஆறு அமைச்சகங்களைச் சேர்ந்த 52,081 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 திட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன என்று அதில் குறிப்
பிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு முக்கிய காரணம் ஏராளமான நீதிபதி பதவிகள் காலியாக இருப்பதுதான்.1.9.2015ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி உயர் நீதிமன்றங்களில் 392 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அது, 2016ல் 485 உயர்ந்தது. 01.05.2018 நிலவரத்தின்படி இந்தியாவில் மொத்தமுள்ள 1079 உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளில் 413 பதவிகள் காலியாக இருக்கின்றன.

நீதித் துறையின் உயர் அமைப்புகளில் மட்டுமன்றி, கீழமை நீதிமன்றங்களிலும்கூட ஏராளமான பதவிகள் காலியாக இருக்கின்றன. 2018 பிப்ரவரி நிலவரப்படி 5925 நீதிபதி பணியிடங்கள் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ளன என்று தெரியவந்துள்ளது.

மதிக்கப்படாத உத்தரவுகள்

பல மாநில அரசுகள் நீதிமன்றத்தின் ஆணைகளைக்  கிடப்பில் போட்டுள்ளன. முல்லைப் பெரியாறு அணை (கேரளா அரசு), காவிரி நதிநீர்பங்கீடு (கர்நாடக அரசு) ஆகியவை குறித்த ஆணைகள் சம்பந்தப்பட்ட அரசுகளால் முழுமையாக ஏற்றுச் செயல்படுத்தப்படவில்லை.
சட்லெஜ் - யமுனா கால்வாய் குறித்த ஆணைகளைப் பஞ்சாப் அரசு மதிக்காமல் நடந்துகொண்டதால் அதற்கு இன்னமும் தீர்வு காண முடியவில்லை. சட்லெஜ் பிரச்னையில் அரியானா, தில்லி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

தில்லி நகரத்தில் வணிக வளாகங்களை மூடுவது போன்ற வழக்கில் அரசும், பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாலியும், நீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொண்ட விதம் சர்ச்சையைத் தூண்டியது.

ஒருமுறை கேரள அமைச்சர், “பணத்தின் கனத்தைக் கொண்டே நீதி கிடைக்கிறது” என்று வெளிப்படையாகவே பேசினார். உத்தரப்பிரதேச முதல்வராக முலாயம் சிங் யாதவ் இருந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மகனுக்கு நொய்டாவில் வீட்டுமனை ஒதுக்கியது நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உளவு பார்க்கப்பட்டார்கள் என்று தொடங்கியதிலிருந்து இன்றுவரைக்கும் நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளைச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது.இப்படியான ஆரோக்கியமற்ற நிலையில் நீதித் துறை இருந்தால் மக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்?                  

நீதித் துளிகள்

*“தீர்வுகள் இருக்கும்போதுதான் உரிமைகள் என்பவை மெய்யானவையாக இருக்க முடியும். தனது உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்படும் ஒருவர் சட்டபூர்வமான தீர்வைப் பெறமுடியாவிட்டால் உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் நமது அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் உரிமைகளை உத்தரவாதப்படுத்துகிற அதே நேரத்தில் அந்த உரிமைகளை நமது நாட்டின் நிர்வாக அமைப்போ, சட்டமன்ற-பாராளுமன்றங்களோ பறித்துவிடாதபடி தடுக்கவேண்டியது அவசியமானது. அந்தப் பொறுப்பு நீதித்துறையிடம் விடப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட உரிமைகளின் பாதுகாவல் நீதிமன்றங்கள்தான்...”
- அம்பேத்கர்

* தனிநபர் சுதந்திரமென்பது அரசியல் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு குடிமகன் அல்லது குடிமகளின் மிகவும் போற்றிப் பேணப்படும்
அடிப்படை உரிமையாகும்.

* நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் தெரிய வேண்டும்.
 
* நீதித்துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கான 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குப் பிறகு, அதாவது 01.04.2017 முதல் 31.03.2020 வரை,  ரூ. 3,320 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அன்னம் அரசு