ஒரு வருடத்துக்கு கெடாத ஆப்பிள்!



அமெரிக்காவின் முக்கிய செய்தியாகிவிட்டது ஓர் ஆப்பிள் வகை. இதன் சிவப்புத் தோலின் மீது படர்ந்திருக்கும் வெள்ளைப் புள்ளிகள், இரவுநேர வானத்தைப் பிரதிபலிப்பதால் ‘காஸ்மிக் கிரிஸ்ப்’ எனப் பெயர் சூட்டியிருக்கின்றனர்.  இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து இந்த ஆப்பிளை அறுவடை செய்திருக்கின்றனர்.

ஆராய்ச்சிக்காக மட்டும் 70 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது.தவிர, இந்த ஆப்பிள் விவசாயத்துக்குக் கடுமையான சட்டதிட்டங்களை வகுத்திருக்கின்றனர். அதாவது அடுத்த பத்தாண்டுகளுக்கு வாஷிங்டன் விவசாயிகள் மட்டுமே இதனைப் பயிரிடமுடியும். வேறு யாருக்கும் அனுமதியில்லை.

மற்ற வகை ஆப்பிள்களுடன் ஒப்பிடும்போது இதன் சுவையும், மிருதுத்தன்மையும் அதிகம். ஒரு வருடத்துக்குக் கெட்டுப்போகாமல் இருப்பதோடு அதன் சுவையும் திடமும் குறையாமல் இருப்பது ஆச்சர்யம். வாழைப்பழத்துக்குப் பிறகு அதிகமாக ஆப்பிளையே அமெரிக்கர்கள் நுகர்கின்றனர். அதனால் காஸ்மிக் கிரிஸ்ப்பிற்கு அங்கே நல்ல கிராக்கி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.சக்திவேல்