தொல்(லைக்) காப்பியம்



வாயால் வடை சுடும் பைத்தியங்கள்!

கோபுரங்கள் உயரமாக இருக்கும். காலிலே மிதிபட்டு கீழே கிடக்குற குப்பைகளோ காற்றடிக்கிற நேரத்துல கோபுரத்தை விட உயரத்திற்கு பறக்கும். அதுக்காக குப்பைகள் கோபுரத்தை விட தரத்தில் உயர்ந்தவைகளாகிடுச்சுன்னு சொல்லிட முடியுமா?

அது போலத்தான் காலம் அறிவற்றவர்களையும் அடிமைகளையும் அரசாள வைத்து அழகு பார்க்கும். அதற்காக அவர்கள் ஆளுமைகளாகவும் ஆகிவிட மாட்டார்கள், அறிஞர்களாகவும் ஆகிவிட மாட்டார்கள்.நடக்கிற ஸ்டைல் ஒரே மாதிரி இருக்கிறதுனால செவுத்துல ஊருற பல்லி முதலைகளாகி விட முடியாது. முறைக்கிற ஸ்டைல் ஒரே மாதிரி இருக்குன்னு காட்டுல மேயுற கழுதை புலிகள் வரிப்புலிகளாகிவிடாது.  

தாங்கள் முட்டாள்கள் என தெரிந்துகொள்ளாத முட்டாள்களால் எந்த சிறிய பிரச்னையும் இல்லை. அவர்கள் உள்ளாடையில் இருக்கும் ஓட்டைகள்.
ஆனால், தாங்கள் புத்திசாலிகள் என நம்பும் முட்டாள்கள்தான் பெரிய பிரச்னை. இவர்கள் ஓசோன் லேயரில் இருக்கும் ஓட்டைகள் என்ற இந்த கருத்தை எழுத்தே இல்லாத புத்தகத்தில் கழுத்தே இல்லாத கவிஞர் கூறியிருக்கிறார்.

அதிகாரமிக்க பலரின் சமீபத்திய பேச்சுக்கள், இவர்கள் எதையாவது சாப்பிடவும் யாரையாவது பேரை சொல்லி கூப்பிடவும் மட்டும் வாயை திறந்தால் போதும் என நினைக்க வைக்கிறது. மூளையற்றவர்களின் முழக்கங்கள் வார்த்தைகள் எடுக்கும் வாமிட்கள் என்கிறார் ஆப்ரிக்காவில் ஆடு மேய்க்கும் அறிஞர் ஒருவர். முட்டாள்தனமாக உளற விடுவது, இருக்கிற பிரச்னையை திசைதிருப்பி அந்த முக்கியமான பிரச்னையை பிசுபிசுக்க செய்யற டெக்னிக்.
நாட்டுல மும்பை சிட்டி, பெங்களூர் சிட்டி, சென்னை சிட்டின்னு எத்தனையோ சிட்டி இருக்கிறப்ப, இவங்களுக்கு புடிச்சது பப்ளிசிட்டி மட்டும்தான். மண்புழுவை காட்டின்னா கூட அதை பெண்புழுவாய் காட்டும் நம்ம சினிமா இன்டஸ்ட்ரி கூட ஆவிகள் டிரண்ட் விட்டு வந்திடுச்சு. ஆனா, இந்த பாவிகள் மட்டும் இந்த டிரெண்டை விட்டு வரமாட்டாங்க.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு, ரயில்வே கோட்டப் பணியிடங்களில் தமிழ் தெரியாதவர்கள் 70% வெளியிடங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதைப் பற்றி கேட்டபோது, தமிழக இளைஞர்களின் திறமையின்மைதான் காரணம் என்று பதில் சொன்னார் தமிழ் தெரிந்த, தமிழர்களை தெரிந்த, தமிழ் இளைஞர்களின் திறன் வளத்தை மேம்படுத்த வேண்டிய அமைச்சர் ஒருவர்.

நாட்டாமை கைல சொம்பு தாங்கய்யா, பிறகு அவரு பஞ்சாயத்துக்கு போறதும் பாத்ரூம் போறதும் அவர் அவசரத்தை பொறுத்தது. அதை விட்டுட்டு, ஆடுறதுக்கு மேடை கேட்டவனுக்கு கட்டித் தர வக்கில்லாம, படுக்கிறதுக்கு பாடை கட்டி தந்த கதையா இருக்கு.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஐஸ்வர்யா ராய் எல்லாருக்கும் பொண்டாட்டியாகிவிட முடியுமா’ என கிண்டலடிக்கிறேன் என நினைத்து மெண்டல்தனம் செய்திருக்கிறார் கர்நாடகா அமைச்சர்.

அண்ணே அமைச்சரண்ணே, வீடு எரியறப்ப அணைக்க வர ஃபயர் வண்டிக்கு கியர் இருக்கலாம். ஆனா, மாடு இழுத்து லோடு அடிக்கிற டயர் வண்டிக்கு எதுக்குண்ணே கியரு? ஐஸ்வர்யா ராய்க்கு முகத்துல அழகுன்னா, அருந்ததி ராய்க்கு எழுத்துல அழகு. எல்லா பொண்ணுகளுக்கும் ஏதோ ஒண்ணு அழகுதானே? தைச்சா டைட் சுடிதாரு, வாங்குனா ஒயிட் சுடிதாருன்னு போறவங்கண்ணே நாங்க.

யானைக்கு ஆயிரம் சிறப்பு இருந்தால் என்ன, நான் கோயில்ல கட்டி பிச்சைதான் எடுப்பேங்கிற வகையில், ‘இராணுவத்தில் சேர்ந்தால் ரம் கிடைக்கும், அதை இலவசமாக குடிக்கலாம்’ என்று திருவாய் திறந்திருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். இதில் கவனிக்க வேண்டியது, அவர் கவனிப்பது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை.

நீ டைனோசரை புடிச்சு டம்ளருக்குள்ளதானே அடைப்ப, நான் திமிங்கலத்தையே புடிச்சு சங்குக்குள்ள அடைப்பேன்ங்கிற கதையா, நீ மோசமானவன்னா, நான் மோசமானவங்கள்லையே முக்கியமானவன்னு, அந்த மேற்கூறிய கேவலமான கருத்திற்கு கடும் போட்டி தரும் வகையில் இன்னொரு முத்து.

‘டாஸ்மாக்கை எப்போ மூடுவீங்க’ன்னு கேட்டதுக்கு, ‘திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும்’ என்ற அரிய கருத்தை பரிசளித்தார்
தமிழக அமைச்சர் ஒருவர். ஐம்பது வருடங்களாக, ஐநூறு அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து, ஐயாயிரம் கோடி செலவு செய்தும் கண்டுபிடிக்க முடியாமல் போன விஷயத்தை அசால்ட்டா டீல் பண்ணியிருக்கார் நம்ம அமைச்சர்.

இதுவரைக்கும் பார்த்த கருத்துக்கள் கண்ணு முன்னால வெடிச்ச வெடிகுண்டுன்னா, மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி இந்த வாரம் சொன்ன, ‘சமிஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும்’ங்கிற கருத்து காதுக்குள்ள வெடிச்ச அணுகுண்டு.

இவரெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல தன்னோட தத்துவத்த வெட்டி வைக்கலாம். அதை விட தில்லில ஒரு சுவர் விடாம போஸ்டரா ஒட்டி வைக்கலாம். அப்படியே ‘கிரேக்கம் படிச்சா கிட்னிக்கு நல்லது, லத்தீன் படிச்சா லிவருக்கு நல்லது, பிரெஞ்சு படிச்சா ப்ளட் பிரஷர் ஏறாது, மலாய் படிச்சா மஞ்சளா யூரின் போகாது, கொரியன் படிச்சா குறைப்பிரசவம், ஸ்பானிஷ் படிச்சா சுகப்பிரசவம்’ன்னு, இந்த அறிவியல் யுகத்துலயும் மண் விளக்குல ஊத்த வேண்டிய எண்ணெய்யை கொண்டு போய் மின் விளக்குல ஊத்துறானுங்க.

ரஷ்ய மொழி தெரிஞ்சவனா அப்ப நீ லங்ஸ் ஸ்பெலிஸ்ட், ஜெர்மன் தெரிஞ்சவனா அப்ப நீ ஹார்ட் ஸ்பெலிஸ்ட்ன்னு டீச்சருங்க கூட்டியாந்து டாக்டருங்கன்னு மாத்திவிட்டுடுங்கய்யா!மல்லிகைப் பூ விலை ஜாஸ்தியாயிடுச்சுன்னு மத்தாப்பூவை தலைல வைக்க முடியுமா? வெயில்ல நடக்கணும்னா செருப்புக்கு பதிலா சாமந்திப்பூவை அணிய முடியுமா?  இவனுங்களுக்கு ரங்கம் டவரும் செல்போன் டவரும் வேறன்னு புரிய வைக்கிறதுக்குள்ள நமக்கு நாக்கு நாலு இன்ச் வெளிய தள்ளி, மூக்கு மூணு இன்ச் உள்ள போயிடும் போல.

‘கண்ணாடிக்கு முன்னால நின்னா நம்ம முன் பக்கம் தெரியுது, கண்ணாடிக்கு பின்னால நின்னா ஏன் நம்ம பின் பக்கம் தெரிய மாட்டேங்குது’ன்னு ஆராய்ச்சி செய்யற சயின்டிஸ்ட் செல்லூரார் லேட்டஸ்ட்டா சொன்ன ‘எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது’ங்கிறதுதான் இந்த வாரம் ஃபேஸ்புக் வாட்ஸ் அப்ல ஹாட் டாபிக்.

குங்பூன்னா குஷ்பூவோட தங்கச்சினு நினைச்சு வாழுற ஆளு இவரு. செம்பருத்திப் பூவை பறிச்சு கொண்டு போய் ‘இது செவ்வாய்க் கிரகப் பூ’ன்னு சொன்னாலே நம்பிடுவாரு. அந்த அமுல் பேபிய போய் எகிப்து வெங்காயம், போர்ச்சுகல் பெருங்காயம்ன்னு அள்ளிவிட சொன்னதெல்லாம் ரொம்ப அநியாயம்யா!

தங்களுக்கு தெரியாத விஷயத்தை கிளறி, அதைப்பற்றி கண்டபடி உளறி, தானொரு தத்தி என நிரூபித்து சுற்றியிருப்பவர்களை கலகலக்க வைப்பவர்கள் ஒரு சைடுன்னா, வேட்டிய உதறிக் கட்டி, களரி சண்டைக்கு கிளம்புற மாதிரி, கேள்வி கேட்டவங்களே ஏன்டா கேட்டோம்னு நினைக்கிற மாதிரி சிடுசிடுக்கிறவங்க ஒரு சைடு.

‘ஏரியை திறந்துட்டானுன்னு எச்சரிக்கை செய்யறப்ப, வெயில்ல காயப் போட்ட ஸேரியை மறந்துட்டேன்’னு பதில் சொல்ற மாதிரி, வெங்காய விலை ஏறிக்கிடக்கேன்னு கேட்டதுக்கு நான் வெங்காயம் திங்கிறதில்லைன்னு சொல்றாங்க மத்திய அமைச்சர்.

கொசுத் தொல்லை அதிகமா இருக்கேன்னு கேட்டா, நாங்க வீட்டுல கொசு வளர்க்கல, பசுதான் வளர்க்கறோம்ன்னு சொல்வாங்க. நாட்டுல திருட்டு அதிகமாயிடுச்சுன்னு கேட்டா, நைட்டு இருட்டுல வெளிய போகாதீங்கன்னு வார்னிங் செய்வாங்க.என்ன செய்யறது மண்ணுக்கு மேல இருக்கிற வரைதான் ஜனங்க, மண்ணுக்குள்ள போயிட்டா நாம எல்லோருமே பொணங்க!  

 - தோட்டா ஜெகன்