என்னை அமித்ஷாவுடன் முதலில் ஒப்பிட்டது வண்ணத்திரை தான்!



அப்பா - மகன் ஜாலி சந்திப்பு

கோலிவுட்டில் இது வாரிசுகளின் சீஸன்! விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவானது போல, இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி மகன்
சஞ்சய்பாரதி, இப்போது ‘தனுசு ராசி நேயர்களே’ மூலம் இயக்குநராகியிருக்கிறார். திருவான்மியூரில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு சென்றால், அப்பா - மகன் சகிதமாக வரவேற்கிறார்கள். ஹாலில் அமித்ஷா கெட்டபில் ஓவியமாக புன்னகைக்கிறார் சந்தானபாரதி!

‘‘ஆக்‌சுவலா என்னை அமித்ஷாவுடன் ஒப்பிட்டு முதல்ல சொன்னது ‘குங்குமம்’ குழுமத்துல இருந்து வர்ற ‘வண்ணத்திரை’ல தான்! என் போட்டோவை போட்டு, அமித்ஷானு கிண்டல் பண்ணியிருந்தாங்க. வண்ணத்திரையில் வந்ததால, அமித்ஷா ஒரு ஆக்டர் போலனு நினைச்சிருந்தேன்.
அப்புறம் ஒருமுறை ஏர்போர்ட் போனப்ப செக்யூரிட்டிகள் ரெண்டு பேர் என்னை உத்துப் பார்த்து சிரிச்சாங்க. ‘ஏன் என்னை பாத்து சிரிச்சீங்க’னு டென்ஷனானேன். அப்பத்தான் அவங்க ‘யூ லுக் லைக் அமித்ஷா’னு சொன்னாங்க.

அப்புறம், ஒரு பத்திரிகையில தோள்ல காங்கிரஸ் துண்டோடு கேலியும் ஜாலியுமா என்னை அமித்ஷா போல ஓவியர் பண்ணினதை பார்த்து, நானே அந்த ஓவியரை பாராட்டி பேசி, அந்த படத்தை கேட்டு வாங்கினேன்...’’ குலுங்கி சிரிக்கிறார் சந்தானபாரதி. கலகலக்கிறது ஸ்பாட். அவரே தொடர்கிறார்.

‘‘சஞ்சய் டைரக்ட் பண்ணின படத்தை பார்த்தேன். இயக்குநரா ஜெயிச்சிருக்கார். பத்திரிகைகள்ல ரெவ்யூஸ் எல்லாம் படிச்சேன். எல்லாமே திருப்தியா இருந்துச்சு. என்னோட நட்பு வட்டத்திலும் ‘உன் பையன் கலக்கிட்டான்பா’னு சந்தோஷப்படறாங்க. அவர் நல்ல படம்தான் எடுத்திருக்கார். தப்பான ஒரு படத்தை பண்ணலைங்கறதுல இன்னும் சந்தோஷம். படமும் இந்த ஜென்ரேஷன் கதையா, கலர்ஃபுல்லா இருந்துச்சு...’’ திருப்தியில் புன்னகைக்கும் சந்தானபாரதியிடம் அன்பாக வந்து ஒட்டிக்கொள்கிறார் சஞ்சய்பாரதி.

அவரிடம், ‘நீங்க டைரக்டர் ஆனதுக்கு பிள்ளையார்சுழி போட்டது உங்க அப்பாதானா?’ எனக் கேட்டால், கண்களை சுருக்கி அதிரச் சிரிக்கிறார்
சந்தானபாரதி.‘‘நோ... நோ... என்னோட பையன்கள் ரெண்டுபேரையுமே இப்படித்தான் வரணும்னு நான் கோடு போட்டதில்ல. பசங்க தோளுக்கு மேல வளர்ந்தவங்க. தோழர்கள். ஸோ, அவங்க விருப்பத்துக்கு விட்டுட்டேன்.

சஞ்சய் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் போனபோதே, ‘ஜர்னி ஆஃப் லைஃப்’னு குறும்படம் பண்ணியிருக்கார். அவர் எம்சிஏ படிக்க ரெடியான போது, ‘அமராவதி’ இயக்குநர் செல்வா என் பையனை ஒரு ஃபங்ஷன்ல பார்த்துட்டு, ‘உங்க பையன் செம ஸ்மார்ட்டா இருக்கார். அவர் சினிமாவில் நடிப்பாரா’னு கேட்டார்.

எனக்கு கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்துச்சு. ‘பையன்கிட்டேயே கேளுங்க... அவருக்கு விரும்பம் இருந்தா நடிக்கட்டும். எனக்கு அப்ஜெக்‌ஷன் இல்ல’னு சொன்னேன். சஞ்சய்யும் ஆடிஷன் போனார். பாசானார். நடிக்கறதுல இன்ட்ரஸ்ட்டா இருந்தார். ‘நாங்க’ படத்துல ஹீரோவா அறிமுகமானார்...’’ படபடவென சொல்லிக்கொண்டிருந்த சந்தான பாரதி, மகனைப் பார்த்து, ‘‘நான் ‘பன்னீர் புஷ்பங்கள்’ல இருந்து பேசிட்டு இருக்கேன்.

நிறைய பேசியாச்சு. இது உன் டர்ன். நீ பேசுப்பா...’’ என்றவர் நம்மிடம் திரும்பி, ‘‘மைக்கை அவர் பக்கம் நீட்டுங்க...’’ என கலகலத்தார்.
அப்பாவைப் பார்த்து புன்னகைத்த சஞ்சய், மைக் இருப்பதாக நினைத்து ‘‘மைக் டெஸ்டிங்...’’ என்றார். ஸ்பாட் கலகலப்
பானது.

‘‘ஹீரோவாகதான் அறிமுகமானேன். ‘நாங்க’, ‘பாடம்’னு சில படங்கள்ல நடிச்சேன். அப்புறம் இண்டஸ்ட்ரீ புரிய ஆரம்பிச்சது. ரூட்டை மாத்தலாம்னு விரும்பினேன். ஏ.எல்.விஜய் சார்கிட்ட ‘உங்ககிட்ட அசிஸ்டென்ன்டா சேர விரும்புறேன்’னு சொன்னேன். ‘தேவி’ல என்னை சேர்த்துக்கிட்டார்.

முதல் படமே மூணு லாங்குவேஜ்ல ஒர்க் பண்ற சான்ஸ். அப்புறம் ‘வனமகன்’, ‘வாட்ச்மேன்’, ‘கரு’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். அந்த அனுபவத்துல முதல் படத்தை எந்த படபடப்பும் இல்லாமல், எளிதா பண்ணிட்டேன்.

அப்பா சொன்னது மாதிரி, நான் தப்பான படம் பண்ணல. இப்ப சினிமா கை வந்திடுச்சு. கோ- டைரக்டருக்கும், டைரக்டருக்குமிடையே சின்ன கோடுதான் இருக்குனு உணர்றேன். முதல் நாள் ஷூட்ல டைரக்டரா போய் நின்னது பரவச அனுபவம். ‘உங்களுக்கு இது முதல் படம் மாதிரி தெரியல’னு எல்லாரும் சொன்னப்ப சந்தோஷமா இருந்துச்சு. ஃபாரீன்ல படிச்சிட்டிருக்கற என் அண்ணனும் படம் பார்த்துட்டு ‘ஜெயிச்சிட்ட... கலக்கிட்ட’னு சொன்னது இன்னும் உற்சாகமா இருக்கு...’’ பூரிக்கும் மகனின் பேச்சை தலையசைத்து ஆமோதிக்கிறார் அப்பா!

‘‘என் பையனுக்கு நான் எந்த அட்வைஸும் பண்ணல. அவர் படங்கள் நடிக்கும்போது கூட, படத்தை பார்த்துட்டு சின்னச் சின்ன விமர்சனங்கள் பண்ணியிருக்கேன். மத்தபடி, அது அவர் மைதானம். அவர் விளையாட்டு. நான் இண்டஸ்ட்ரிக்கு வந்தப்ப இருந்த நிலையை விட இப்ப ஆரோக்கியமா இருக்கு. புது இயக்குநர்கள் படங்கள்ல என்னை நடிக்க கேட்டு நிறைய ஆஃபர்ஸ் வருது. நானும் நடிச்சிட்டிருக்கேன்.

நாங்கள்லாம் ஒரு நாள்ல நாலஞ்சு சீன்ஸ் எடுப்போம். இப்ப ஒரு நாளைக்கு ஒரு சீன் மட்டுமே எடுக்கறாங்க. ஷூட்டிங் டேட்ஸ் அதிகமாகறதால, படத்தோட பட்ஜெட்டும் ஹெவியா வந்து நிக்குதுனு சொல்றாங்க. நாங்க அறுபது நாள்ல மொத்த படத்தையும் முடிச்சுடுவோம். இப்ப சில படங்களோட முதல் ஷெட்யூலே அறுபது நாட்கள் ஆகுது. என் பையனுக்கு என் படங்கள்ல ‘சின்ன மாப்ளே’ ரொம்ப பிடிக்கும்னு நினைக்கறேன். அடிக்கடி அந்த படத்தை பார்த்துட்டிருப்பார்...’’ என அப்பா நிறுத்த, தொடர்கிறார் மகன்.

‘‘என் குருநாதர், ஏ.எல்.விஜய் சார் ‘தனுசுராசி நேயர்களே’ பார்த்துட்டு, ‘என் சாயல் கொஞ்சமும் இல்ல. உங்களுக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு’னு சொல்லி சந்தோஷப்பட்டார். என் முதல் படத்துல ஹரீஷ் கல்யாணை கமிட் பண்ணினதுக்கு ஒரு காரணம் இருக்கு. நான் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஸ்டண்ட்ஸ் கத்துக்க போன அன்னிக்குத்தான் ஹரீஷும் ஃபைட்ஸ் கத்துக்க வந்திருந்தார். அப்ப இருந்து நாங்க ஃப்ரெண்ட்ஸ்.

ஹரீஷ் செம சின்ஸியர், செமையா பர்ஃபார்ம் பண்ணுவார். அதுவும் க்ளைமாக்ஸ் போர்ஷனை ஒரே நாள்ல ஷூட் பண்ணினது மறக்கவே முடியாது. இந்த படம் கிடைக்க காரணமே சுரேஷ் சந்திரா சார்தான். ‘கோமாளி’ பட ஷூட்டிங்கப்ப இந்த வாய்ப்பு தேடி வந்துச்சு...’’ என்கிறார் சஞ்சய்.
டாபிக் கமலின் ‘மகாநதி’ பக்கம் தாவியது.

‘‘‘மகாநதி’யில் வர்ற எல்லா கேரக்டர்களின் பெயர்களும் நதிகளின் பெயர்கள்தான். கமல் சாருக்கு பழைய கறுப்பு வெள்ளைப் படங்களின் டைட்டில் ரொம்ப பிடிக்கும். முதல்ல வேற ஒரு டைட்டில்தான் வைக்க நினைச்சோம். திடீர்னு ‘மகாநதி’ க்ளிக் ஆச்சு. அந்த படம் வெளியானப்ப நிறையப் பெண்கள் பயந்தாங்க. ‘பெண் குழந்தைகளை வெளிய அனுப்பவே பயமா இருக்கு’னு பதற்றமானாங்க. அப்படி ஒரு இம்பாக்ட் அந்த படத்துக்கு உண்டு.

‘மகாநதி’ வந்து 25 வருஷங்கள் ஆகிடுச்சு. என் பையன் படத்தை கமல் சார் இன்னும் பார்க்கல. அவர் கால் ட்ரீட்மென்ட்டுக்கு பிறகு ரெஸ்ட்ல இருக்கார். தொல்லை கொடுக்காமல் இருக்கேன்...’’ என்ற சந்தானபாரதி, கமலின் கட்சியில் உறுப்பினராகவும் உள்ளார். ‘‘கமர்ஷியல் படங்கள்தான் என் சாய்ஸ். ஃபேமிலி எண்டர்டெயின்மென்ட்டும் இருக்கும். அப்பாவோட ‘குணா’, ‘மகாநதி’ மாதிரியெல்லாம் என்னால இந்த ஏஜ்ல பண்ண முடியாது. அப்படி படங்கள் பண்றதுக்கு இன்னும் டைம் இருக்கு.

அதுக்கான அனுபவங்கள் கிடைக்கற வரை கமர்ஷியல்ல என் ட்ராவல் இருக்கும். ஆனா, அப்பா மாதிரி வேற வேற ஜானர்ல நானும் பயணிப்பேன்...’’ நம்பிக்கையுடன் சஞ்சய் சொல்ல... பெருமையுடன் மகனைப் பார்க்கிறார் அப்பா சந்தானபாரதி.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்