Whats app-ஆல் அதிகரிக்கும் கள்ளக் காதல்!



இந்தியாவுக்கு என்று ஒரு பெருமை உண்டு. அது நமது குடும்ப அமைப்பு. உலகத்தில் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லாத சிறப்பு அம்சம் இது.
தெற்காசிய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு வலுவாக இருந்தாலும் குறிப்பாக இந்தியாவைப் போல அவை சிறந்தவையாக இருப்பதில்லை. நியூக்ளியர் குடும்பங்கள் வந்துவிட்ட காலத்திலும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் இந்தியாவில் மட்டுமே உள்ளனர்.

இப்படி கதம்பமாக வாழும் குடும்ப அமைப்பு என்பதால்தான் இந்தியாவில் விவாகரத்து வழக்கு குறைவாக இருந்தது. இப்போதுகூட இந்தியாவில் விவாகரத்து எண்ணிக்கை வெறும் ஒரு சதவீதம்தான். அதாவது ஆயிரம்திருமணங்களில் பதிமூன்று மட்டுமே விவாகரத்தில் முடிகிறது.

இப்படி நம் சமூக அமைப்பு பற்றி பெருமை பேசினால் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், மறுபுறம் இந்த ஒரு சதவீத விவாகரத்து என்பது நாள்தோறும் மெல்ல வளர்ந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். விவாகரத்துக் கோரி நீதிமன்ற வளாகங்களில் நின்று கொண்டிருக்கும் தம்பதிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. புதிதாக மணமான தம்பதிகள் முதல் திருமண வயதில் குழந்தைகள் உடைய மத்திய வயதினர், திருமணமான குழந்தைகளை உடைய முதியவர்கள் வரை விவாகரத்து கோரி நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகின்றனர்.

என்னதான் ஆயிற்று நம் சமூகத்துக்கு என்று சமூக ஆர்வலர்கள் அங்கலாய்க்கிறார்கள். நம் நாட்டில் விவாகரத்து பெருகுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது முறை தவறிய உறவு. துரோகத்தில் பெரிய துரோகம்மனைவிக்குக் கணவனோ, கணவனுக்கு மனைவியோ செய்யும் துரோகம்தான் என்பார்கள். ஆனால், அது இன்று சர்வசாதாரணமாக நடக்கிறது. ஏன் இப்படி ஆகிப் போனது? பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் பிரதானமானது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிக்டொக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் செல்போனை அறிமுகம் செய்யும் போது அதன் நிறுவனர் ஒரு வணிக இதழுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர், ‘இந்தக் கருவி இந்தியாவில் மிகப் பெரிய கலாசாரப் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது’ என்றார். சூழ்ந்திருந்த நிருபர்கள், ‘இந்த கையடக்கக் கருவி என்ன பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போகிறது’ என அலட்சியமாய் கேட்டதற்கு ‘ஆணோடு பெண் எளிதாய் பேச இயலுமே… அது போதாதா?’ என்று சூசகமாய் கேட்டார்.

அவர் சொன்னதன் பொருள் அப்போது யாருக்குமே புரியவில்லை. இதோ இப்போது தெளிவாகப் புரிகிறது. இந்தக் கையடக்கப் பொருள் எவ்வளவு பெரிய வேலை செய்யக்கூடியது என்று கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.அபிராமி விவகாரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. சாதாரண இல்லத்தரசி ஒருவர் உணவு டெலிவரிக்கு வரும் நபருடன் நெருக்கமாகி தன் குழந்தைகளையே கொல்லத் துணிந்த படுபாதகம். உண்மையில் அபிராமி விவகாரம் ஒரு பதம் சோறுதான்.

பூனேவில் ஒரு பெண் மருத்துவர். அவரின் பெயர் வேண்டாம். அழகான குடும்பம். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள், அன்பான கணவன். மகிழ்வான இல்லறம் என்று போய்க் கொண்டிருந்த வாழ்வில் எதிர்பாராத விதமாக நடந்தது ஒரு விருந்து நிகழ்வு.

அங்கு ஒரு நபரைச் சந்தித்தார். இருவரும் வாட்ஸ் அப் நம்பர்களைப் பரிமாறிக்கொண்டனர். முதலில் சாதாரண ஹாய், குட் மார்னிங் என்று தொடங்கியது. பரஸ்பர நலம் விசாரித்தல்கள் மெல்ல நெருக்கமாக... ஒரு கட்டத்தில் அந்தரங்கமான விஷயங்களைப் பகிரத் தொடங்கினர்.
இருவருமே அடல்ட்ஸ். மணமானவர்கள் என்பதால் மனம் விட்டுப் பேச முடிந்தது; எல்லா விஷயங்களையும் கூச்சமின்றிப் பகிர்ந்தனர்.

நட்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. கணவருக்குச் சந்தேகம். மனைவியின் செல்போனை எதேச்சையாய் பார்ப்பது போல் நோட்டமிட்டவர் அதிர்ந்தார்.ஆண் நண்பருடன் அவர் மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ரகசியப் பேச்சுக்கள் எல்லாம் காணக் கிடைத்தன. இப்போது கணவனும் மனைவியும் நீதிமன்றத்தில் நிற்கிறார்கள்.

இப்படி பல நூறு கதைகள் நாள்தோறும் நடந்துகொண்டிருக்கின்றன. வாட்ஸ் அப் வந்த பிறகுதான் இப்படியான முறை தவறிய உறவுகள் உருவானது என்று சொன்னால் அது அபத்தம். ஆனால், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல வாட்ஸ் அப்தான் இந்த விபரீதங்களை எல்லாம் தூண்டி விடுகிறது என்பது நிதர்சனம்.

முடிவு எடுப்பதில் மனித மனதின் இயல்பைப்பற்றி உளவியலாளர்கள் ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது இக்கட்டான சூழ்நிலைகளில் மனிதன் முடிவெடுக்கும் விதம் இன்னமும் ஆதி மனிதனின் மனநிலையோடுதான் இருக்கிறது என்கிறார்கள்.

ஆம். நம் ஆழ்மனம் இன்னமும் ஆதி மனித இயல்புகளோடுதான் இருக்கிறது. அதன் ஆசைகள், தேவைகள் அனைத்துமே அந்த இயல்புகளால்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய இப்போதைய நாகரிகசமூகம் என்பது மிகச் சில நூற்றாண்டுகள் மட்டுமே நாம் வளர்த்தெடுத்தது.

உறவு சார்ந்த உணர்வுப்பூர்வமான சிக்கல்கள் வரும்போது நம் ஆழ்மனம் நம்முடைய சமகாலச்சமூக எதார்த்தங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதைவிடவும், காலங்காலமாக அதற்குப் பழக்கப்பட்ட வழிமுறைகளில் முடிவெடுப்பதையே விரும்புகிறது. அதனால்தான் ஆணோ பெண்ணோ துணிந்து முறையற்ற உறவுகளில் இறங்குகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்க முடியும். சாட் ஹிஸ்டரியை நீக்க முடியும் என்பதைப் போன்ற வசதிகள் எல்லாம் தங்கள் இணையருக்கு அல்லது மற்றவர்களுக்குத் தெரியாமல் சாட் செய்வதற்கான கள்ளத்தனத்தை ஊக்குவிக்கின்றன.

இதில் ப்ளாக் அன் பிளாக் வசதிகளும் இருப்பதால் அவசியம்இல்லை எனில் ஒருவரோடு உரையாடுவதைத் தடை செய்துகொள்ளவும் முடியும். இது ஒரு நல்ல பாதுகாப்பு என்று பயனாளர்கள் நினைக்கிறார்கள். முறையற்ற உறவுகளிடமும் யாரென்றே தெரியாத மூன்றாம் நபர்களிடம் உரையாடவும் இதுவும் ஒரு காரணம்.

சமீபத்தில் மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ நீக்கியுள்ளது. திருமணமான ஒரு பெண்ணோடு அவரது கணவரின் அனுமதியின்றி ஓர் ஆண் பாலுறவில் ஈடுபட்டால் அந்த ஆணுக்குத் தண்டனை வழங்கும் சட்டம் இது.

இந்த சட்டத்தையும் இப்போது நீக்கிவிட்டதால் அடல்ட்ரி என்னும் மணங்கடந்த உறவுக்கு சட்ட அங்கீகாரமும் கிடைத்தது போல் ஆகிவிட்டது! வேண்டுமானால் இந்த கள்ள உறவை கணவனால் நிரூபிக்க முடிந்தால் அவர் விவாகரத்து கேட்கலாம் என்று உச்சநீதி மன்றம் பரிந்துரைக்கிறது. வழக்கு நிரூபணமானால் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்கத் தேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுக்குள் நம் சமூகம் நுழைந்து சில நூற்றாண்டுகள் மட்டுமே ஆகியிருந்தாலும் அதுதான் நமது குடும்ப அமைப்பையும் சமூக அமைப்பையும் கட்டிக் காக்கும் முக்கியமான தூண். இந்த அடிப்படையையே தகர்க்கும் வேலையைத்தான் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் சத்தமின்றிச் செய்து கொண்டிருக்கின்றன. எனவே, இதனைப் பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன்