நான்... ரமணி சந்திரன்



எனக்கு சந்தோஷமான முடிவுகள்தான் பிடிக்கும். அதனால்தான் என் கதைகள்ல சோகத்தைப் பிழியறதில்ல. சோகமான, அழுத்தமான முடிவுகள்தான் புத்தக விற்பனைக்கு உதவும்னு சொல்லுவாங்க. இந்த மாய வலைல நான் விழலை. என் நாவல்கள் படிச்சா ஒரு நிறைவு கிடைக்கணும். இதை மனசுல வைச்சுதான் எழுதறேன். கதைக்குத் தேவைப்படும்போது மட்டும் கொஞ்சம் உருக்கமான முடிவுகள் கொடுப்பேன்.

சுபம் என்கிற வார்த்தைதான் எவ்வளவு அழகானது! இந்த உணர்வு எனக்கு வந்ததுக்கு காரணம் எங்கம்மா கமலம். நல்ல கற்பனை வளம் அவங்களுக்கு உண்டு. வீட்ல இருக்கற சின்னப் பசங்களை எல்லாம் ஒண்ணுசேர்த்து நாடகம் எல்லாம் போடுவோம். அப்ப நாடகம் போடற மேடைக்குப் பின்னாடி துணி அலங்காரம் இருக்கணுமே... அதை எல்லாம் அம்மாதான் தயார் செஞ்சு தருவாங்க. நாடகத்தை இயக்கறதும் அம்மாதான்.

எங்க வீடு எப்பவும் சிரிப்பும் சந்தோஷமுமா இருக்கும். கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள், இராமாயணம், தமிழ் கதைகள், பாடல்கள், வெண்பாக்கள்னு அம்மா எங்களுக்கு தினமும் சொல்லிக் கொடுத்துகிட்டேதான் சாப்பாடு ஊட்டுவாங்க. இரண்டு மூன்று நாட்களுக்கு அப்புறம் அதுல இருந்து கேள்வி கேட்பாங்க. சரியா சொல்லலைனா அடிப்பாங்க!

அப்ப எல்லாம் அப்பா வீடு, அம்மா வீடுனு ரெண்டு அறைகள் இருக்கும். அப்பா வீடு வரவேற்பறை, ஒரு படுக்கையறை சகிதமா வெளியாட்கள் வந்து போக  வசதியா இருக்கும். அப்பா வீட்டுக்குப் பின்பக்கம் அம்மா வீடு, பெரிய சமையலறை, படுக்கையறை சகிதமா இருக்கும். அம்மா வீட்டுக்கு வெளியாட்கள் பெரும்பாலும் வர மாட்டாங்க. யாராவது வந்தா அப்பா சொல்லி அனுப்புவார். தண்ணி, காபி, டீ, உணவு... இப்படி எதுவானாலும் அம்மா இங்க இருந்து எடுத்துட்டுப் போவாங்க.

இப்ப இருக்கற இளசுகள்கிட்ட இப்படி எங்க வீடு இருந்ததுனு சொன்னா சிரிப்பாங்க! நிறைய மாற்றங்கள் காலவெள்ளத்துல நிகழ்ந்திருக்கு. இந்த மாற்றங்களை எல்லாம் வரவேற்கறேன். அன்னைக்கு வெளியாட்களை நாங்க பார்க்கவே முடியாது. ஆனா, இன்னைக்கு என் பேத்தி உட்கார்ந்து பேசி சிரிச்சு கேள்விகள் கேட்டு தன்னுடைய வெளி அறிவை வளர்த்துக்கறா.  

1938ல பிறந்தேன். எங்க மாமா எஸ்.டி.ஆதித்தன், சுதந்திரப் போராட்டத் தியாகி. ஒருமுறை போராட்டம் நடக்கறப்ப எங்கப்பா என்னை தூக்கிட்டுப் போய் காட்டியிருக்கார். இதுதான் எனக்கும் சுதந்திரப்போராட்டத்துக்குமான பிணைப்பு.திருச்செந்தூர்ல பிறந்தேன். அருமையான கிராமத்து வாழ்க்கை. வில்வண்டிதான் போக்குவரத்துக்கு. பாம்புகள் இருக்கற தோட்டங்களுக்குள்ள போய் பழம் பறிச்சு சாப்பிட்டு விளையாடுவோம். வீட்டுக்குத் தெரியாமதான். தெரிஞ்சா அடிவிழும்.

ஆனா, வைலட் நிறப் பழங்களை சாப்பிட்டதும் அந்த வண்ணம் வாய்ல அப்படியே தங்கிடும். இதை வைச்சு நாங்க பாம்புத் தோட்டத்துல விளையாடினோம்னு வீட்ல கண்டுபிடிச்சு டோஸ் விடுவாங்க.கடலுக்குப் போய் குளிக்கறது அப்ப எங்களுக்கு அன்றாட பொழுதுபோக்கு. இவ்வளவு குப்பைங்க அப்ப கடல்ல இருக்காது!

பெரியப்பாவும் அப்பாவும் அக்கா, தங்கைகளை கட்டினவங்க. அதனால ஒரு தாய் வயித்துப் பிள்ளைகளாதான் எப்பவும் இருப்போம். முகச் சாயல்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். அவங்களுக்கு 8 பசங்க. எங்க வீட்ல 7. மொத்தம் 15 பசங்க. அப்படீன்னா வீடு எவ்வளவு கலகலனு இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அவங்களுக்கு லீவு விட்டா எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க.

சரவண ஐயர் ஆரம்பப் பாடசாலைலதான் பள்ளி வாழ்க்கை ஆரம்பமாச்சு. அடுத்து பஞ்சாயத்து போர்டு ஹைஸ்கூல். இரு பாலரும் படிக்கற பள்ளி. அதனால 12 - 13 வயசுல என்னை பள்ளிக்கூடம் போகாம நிறுத்திட்டாங்க.இந்த நேரத்துல எங்கம்மாவுக்கு ஒரு உடல்நல சிக்கல் ஏற்பட்டுச்சு. கடல் காத்து ஒத்துக்கல. அதனால நாங்க திருநெல்வேலி வந்தோம். அங்க பெண்களுக்கான தனி ஸ்கூல் இருந்தது. சாரா டக்கர் ஹைஸ்கூல்ல ஓர் இடைவெளிக்கு அப்புறம் சேர்ந்தேன்.

அப்பா பஞ்சாயத்து போர்டு பிரசிடென்ட். அதனால் எனக்கு ஊர் நூலகங்கள்ல அனுமதி கிடைச்சது. நூலகத்துல இருந்த ஒரு புத்தகத்தையும் விடாம படிச்சேன். ஒரு கட்டத்துல ஆங்கிலப் புத்தகங்கள் மேல ஆசை வந்தது. பியூசி முடிச்சதும் சாரா டக்கர் கல்லூரிலயே இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சேன். படிக்கறப்பவே எனக்கு கல்யாணம் முடிவாச்சு.

வீட்ல பார்த்து முடிச்ச திருமணம். அவர் சென்னைல ‘தினத் தந்தி’ நாளிதழ்ல வேலை பார்த்துட்டு இருந்தார். திருமணத்துக்கு பிறகு அவருக்கு தஞ்சாவூருக்கு மாற்றல் வந்தது. அவருக்கும் சொந்த ஊர் திருச்செந்தூர்தான். எங்க ஊருக்குப் பக்கம்தான்.

தஞ்சாவூர்ல மூணு வருஷங்கள் இருந்தோம். அங்கதான் என் வாழ்க்கைல எழுத்து நுழைஞ்சது. அக்கம் பக்கத்துல இருக்கறவங்களுக்கு கடிதம் எழுதித் தருவேன். ஒருமுறை அதை என் தங்கச்சி வீட்டுக்காரர் பார்த்தார். அவர் ‘ராணி’ வார இதழ்ல நடந்த கதைப் போட்டிக்கு எழுதச் சொன்னார். அவர்தான் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியர். எழுதி அனுப்பினேன்.

அந்தக் கதைதான் ஆரம்பம். கதை முடிவு சோகமா இருக்கும். மிலிட்டரி மக்களுக்கு ஒரு வாரம்தான் விடுமுறைனு அதுல எழுதிட்டேன். கதை பிரசுரமானதும் அது தப்பான தகவல்னு ஒருத்தர் கடிதம் எழுதினார். அப்புறம் 21 வயசு பொண்ணு எப்படி அவ்வளவு பெரிய முடிவை எடுப்பானு ஏகப்பட்ட கேள்விகள். ஒருத்தர் கதை அளவுக்கு கடிதம் எழுதினார்.

பயந்துட்டேன்! போதும்... இனிமே கதையே எழுத வேண்டாம்னு கூட தோணிச்சு. ஒருநாள் திடீர்னு ஓர் எண்ணம். உண்மையாவே கதை நல்லா இருந்ததுனால பிரசுரம் செஞ்சாங்களா இல்ல நான் உறவுக்காரப் பெண்ணா இருந்ததால பிரசுரம் ஆச்சா..? நானே இதை சோதிச்சுப் பார்க்க விரும்பி பக்கத்து வீட்ல இருந்த மகாலட்சுமி என்கிறவரிடம் ‘உங்க பெயர்ல கதை எழுதவா’னு கேட்டேன். சந்தோஷமா சரினு சொன்னாங்க. எழுதி அனுப்பினேன். அதுக்கு பரிசும் கிடைச்சது!

இடைல நாங்க திருச்சிக்கு மாற்றலாகி கொஞ்ச காலம் இருந்துட்டு திரும்பவும் தஞ்சாவூர் வந்தோம். பார்த்தா... மகாலட்சுமி அழுதுட்டு இருந்தாங்க.விஷயம் என்னன்னா அவங்க குணத்தையும் கதைல வர்ற பெண்ணுடைய குணத்தையும் தொடர்புப்படுத்தி கடிதங்கள் வந்திருக்கு. ‘என் பெயரே கெட்டுப் போச்சு’னு அதீத மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாங்க.

இனிமே கதையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு தூக்கி வெச்சவதான்.... எழுதவேஇல்ல. பிறகு சென்னைக்கு வந்தோம். மகன் பிறந்து ஒரு வருஷம் ஆச்சு. ‘கதை எழுது’னு தங்கச்சி நச்சரிக்க ஆரம்பிச்சாங்க. ‘முடியாது’னு பிடிவாதமா இருந்தேன். விடாம ‘நீ எழுதறே, விளம்பரம் போட்டாச்சு’னு தங்கச்சி சொல்லிட்டாங்க. பதினைந்து நாட்கள்ல கதை எழுதணும்னு கெடு.

எழுதிக் கொடுத்தேன். சில தப்புகள் இருக்கறதாகவும், தமிழ் வார்த்தைகள்ல சில மாற்றங்கள் செய்யச் சொல்லியும் கொடுத்தாங்க. புதுசாவே ஆரம்பிச்சு தவறெல்லாம் திருத்தி எழுதிக் கொடுத்தேன். சக்ஸஸ். எனக்கு பெரிய சப்போர்ட் என் கணவர். நான் வீட்டை விட்டு வெளிய போனதே இல்ல. ஏதாவது ஒரு தகவலைப் பத்தி எழுதப்போறேன்னா அவர்தான் அதுக்கான முழு விவரங்களையும் சேகரிச்சுக் கொடுப்பார். நான் எழுதற நேரம் கூட யாருக்கும் இடையூறு இல்லாத இரவுகள்தான். எந்த வகைலயும் என் எழுத்து என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதுனு தெளிவா இருந்தேன்.

என் கதைகள்ல வர்ற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு எல்லாம் நான் போனதே இல்ல. விபரங்கள் கணவர் கொடுப்பார். அதேமாதிரி என் எழுத்து எப்ப பிரபலமாச்சு... எப்ப முதல் பலருக்கும் என்னை பிடிக்க ஆரம்பிச்சதுனு செவி வழியாதான் கேட்டுக்கிட்டேன். மத்தபடி வெளி உலகத்தோடு தொடர்பே இல்ல.

முதல் முறையா என் புகைப்படத்தை போடணும்னு சொல்லியிருந்தாங்க. இதுல சிறப்பு என்னன்னா என் மகன் கல்யாணம் எல்லாம் முடிஞ்சு அதன் பிறகுதான் என் புகைப்படமே ரிலிஸ் ஆச்சு! அதுவரை நான் ஆணா பெண்ணானு எல்லாரும் குழம்பிட்டு இருந்தாங்கனு பிறகுதான் தெரிஞ்சுது!

இப்படிப்பட்ட வேளைலதான் ‘குங்குமம்’ பத்திரிகைல ‘பால்நிலா’ தொடரை எழுதினேன். அதைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு மதுரைல இருந்து என்னைத் தேடி வந்துட்டா.

வீட்டுல ஏதோ சண்டை. சொல்லாம வந்துட்டா. ‘எனக்கு வேலை வாங்கிக் கொடுக்கம்மா’னு நின்னா. என் எழுத்து இந்தளவு உணர்வுகளை ஏற்படுத்துதானு எனக்கு ஆச்சர்யம். போட்டோ பிரசுரம் ஆன பிறகு பல இடங்கள்ல என்னைப் பார்த்துட்டு ‘நீங்கதானே ரமணி’ன்னு
கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். பொது இடங்கள்ல இப்படி தேடி வந்து கேட்டு பேச ஆரம்பிச்சதும் கூச்சமாவும் பயமாவும் இருந்தது. வளர்ந்த விதம் அப்படி. எந்த எழுத்தாளர்கள் சந்திப்புலயும் நான் கலந்துக்கலை. அனுராதா ரமணன், சிவசங்கரி எல்லாம் என்னை ‘வெளில வாங்க ரமணி’னு கூப்பிட்டுக் கூப்பிட்டு அலுத்துப் போனாங்க.

 ‘நீங்களே பப்ளிகேஷன் ஆரம்பிங்க’னு பலரும் சொல்லிட்டாங்க. எனக்கு அதுல உடன்பாடில்லை. இதுவரை 183 நாவல்கள் எழுதியிருக்கேன். இந்த கணக்கும் என் மருமகள் சொல்லித்தான் தெரியும். சிறுகதைகள் எனக்கு சவாலா இருக்கு. அனுராதா ரமணன் போன்ற எழுத்தாளர்களுடைய சிறுகதைகள் இப்பவும் ஆச்சர்யத்தைதான் ஏற்படுத்துது. எப்படி இவ்வளவு நேர்த்தியா எழுதறாங்கனு வியந்துபோறேன்.

எங்கம்மா எனக்குக் கொடுத்த ஞானம்தான் இப்ப வரை எனக்கு பக்கபலமா இருக்கு. நான் பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்ல. என் கற்பனைகளைப் பயன்படுத்தறேன். அது க்ளிக் ஆகுது. சீரியல்கள், சினிமாக்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதச் சொல்லிக் கேட்கறாங்க. அங்க போயி உட்கார்ந்து எழுதணும். இதனால என் குடும்ப வாழ்க்கை பாதிக்கும்னு மறுத்துட்டேன். நிறையப் பெண்கள் வீடு, வேலைனு ரெண்டையும் சமாளிக்கறாங்க. அவங்களை எல்லாம் பார்த்தா ஆச்சர்யமா இருக்கும். ஆனா, எனக்கு என்னவோ அதுல விருப்பம் இல்ல.

என் கணவர் பாலசந்திரன் ஒரு புத்தகக் கடை நடத்திட்டு இருந்தார். சென்ற வருடம் அவர் காலமானதால அந்தக் கடையை மூடலாம்னு சொன்னோம். ஆனா, மருமகள் சுஜாவும் மகனும் அதுக்குத் தயாரா இல்ல. அப்பாவின் தொழிலை நடத்துவோம்னு சொல்லிட்டாங்க. இதோ இப்பகூட மருமக கடைக்குத்தான் போறாங்க. அதனாலதான் என் கதை எண்ணிக்கைகளும் மருமகளுக்கு நல்லாவே தெரியுது.

இப்பவும் என் கதைக்கு எந்த அளவுக்கு விற்பனை இருக்கு, ஆன்லைன் எவ்வளவு, ராயல்டி விவரம், எவ்வளவு வாங்கணும்... இதெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது. அவங்களே கொடுப்பாங்க. உயர்த்தியும் கொடுப்பாங்க. எதையும் கேட்டுக்கறதில்ல. அப்பா பெயர் கணேஷ். அம்மா பெயர் கமல சுந்தரதேவி (எ) கமலம். ஒரு பையன் அரவிந்தன். ஒரு பொண்ணு அகிலா கிரிராஜ்குமார்.

பையன் மாடர்ன் ரைஸ் மில் பிஸினஸ் பண்றார். பேரன் பேத்திகள் காரணமா எப்பவாவது தியேட்டர்ல படம் பார்க்கவும் சில கோயில்களுக்கும் குடும்பமா போவோம். மத்தபடி வீடுதான் என் உலகம்.பேசும்போது கூட வார்த்தைகளை அளந்துதான் பேசுவேன். அதனாலயே பெரும்பாலும் பேட்டிகள் தர்றதில்ல. இது என் சுபாவம். அதையும் மீறி இந்த ‘நான்’ல நிறைய பேசிட்டேன்! எனக்கே அது ஆச்சர்யமாதான் இருக்கு!        
                   
ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்