ஆபாச வீடியோக்கள் பார்ப்பது தனி மனிதக் குற்றமல்ல!



ஆபாச வீடியோக்கள் பல ரகம். அண்மையில் கூட குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள், பகிர்ந்துகொண்டவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் என சுமார் 3000 பேரின் பட்டியலைத் தயாரித்த சென்னை சைபர் போலீசார், அதில் 60 பேருக்கு சம்மன் அனுப்பி ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.

எந்த அடிப்படையில் இந்த பட்டியலை காவல்துறை தயாரித்தது என்ற கேள்வி எழுகிறது. காரணம், இன்று ஆபாசப் படங்களை பார்ப்பவர்களைக் கணக்கிடுவது கடற்கரை மணலை எண்ணுவதற்குச் சமம். இது ஒரு புறம் இருக்க, வட மாநிலங்களில் ‘கேங் ரேப்’ வீடியோக்களை 20 ரூபாய் முதல் 300 ரூபாய்க்கு கள்ளச்சந்தைகளில் கையைப்பிடித்து திணிக்கிறார்கள். எல்லாம் ரியல் டைம் வீடியோக்கள்.

‘‘ஆபாச வீடியோ என்பது ஒரு பெரும் கேள்வியின் சிறு துளி. நம் சமூகம் இந்த பெரும் நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்காமல் அதை ஒரு தனிமனிதப் பரிமாணத்துடன் சுருக்குவதுதான் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளி. ஒரு காலத்தில் நாஜி பிரச்னையைத் தனிமனிதரான ஹிட்லருடன் மட்டுமே பொருத்திப் பேசினார்கள். ஆனால், ‘அது ஒரு தனிமனிதப் பிரச்னை அல்ல; மொத்த சமூகத்தின் கோளாறு...’ என சரியாக இனம் கண்டார் உளவியலாளரான வில்லெம் ரீச்.

இதுபோலத்தான் ஆபாச வீடியோ பிரச்னையும்...’’ என்று ஆரம்பித்தார் தேனி மருத்துவக் கல்லூரியின் உளவியல் மருத்துவரான சஃபி. ‘‘இந்தியச் சமூகத்தில்தான் கஜுராஹோ, காமசூத்ரா, கொக்கோகம் போன்ற பாலியல் சார்ந்த விஷயங்கள் இருந்தன. அண்மையில் ஓவியர் சந்ரு கூட திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் உள்ள சின்னையநாயக்கன் குளத்தில் பாலியல் ரீதியான சிலைகள் இருப்பது பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

மதம் என்பது அந்தக் காலத்தில் ஆன்மீகம், நம்பிக்கை, சமூக ஒழுக்கம், அதிகார மையம், கலைகளின் கூடாரமாக திகழ்ந்தது என்றும் பக்தியை அறுவை சிகிச்சை செய்வதற்கான சாதனமாக இந்தச் சிலைகள் இருந்தது பற்றியும் அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இதுதான் பாலியல் சார்ந்த சிலைகள் பற்றிய சரியான பார்வையாக இருக்கும். ஆனால், சிலைகளையும் ஆபாசப் படங்களையும் ஒப்பிட முடியாதுஏனெனில் சிலைகள் உணர்ச்சிகளை இலகுவாக தூண்டாது. சிலைகள் மட்டுமல்ல பாலியல் ரீதியான இலக்கியங்கள் கூட இருக்கின்றன. முன்பு அவற்றுக்கும் பல தடைகளை அதிகார மையங்கள் விதித்தன. உதாரணமாக டி.எச்.லாரன்ஸின் நாவல்கள்.

அப்படிப் பார்த்தால் நம் ஊர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ நூலுக்கும் தடை விதிக்கலாம்.
உண்மையில் சிலை, இலக்கியங்களைவிட ஒலி மற்றும் ஒளி சார்ந்த படங்கள்தான் பெரும் விளைவுகளைத் தரும் என்று பொதுச்சமூகம் நம்புகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக ஒரு விஷயம் அறிமுகமாகும்போது அதில் ஒரு பதற்றம் இருப்பதை நம்மால் காண முடியும். இந்தியச் சமூகத்தில் ஆபாச வீடியோ பிரச்னை 90களிலேயே ஆரம்பித்துவிட்டது. அப்போது சிடியாக வெளிவந்த ஆபாசப் படங்களை இப்போது கைபேசியிலே பார்த்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டதால் இது பரவலாகி வேகம் எடுத்திருக்கிறது.

இதைக் கண்டு சமூகம் பதற்றம் அடைவதும் ஆய்வுக்குரிய விஷயம்தான்...’’ என்ற சஃபியிடம் ‘இது மாதிரியான பதற்றத்துக்கும் இதனால் ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கும் சம்பந்தமிருக்கிறதா..?’ என்றோம்.‘‘ஆபாச வீடியோவை பார்ப்பவருக்கும், பாலியல் குற்றத்துக்குமான தொடர்பை அவ்வளவு துல்லியமாக கணக்கிடமுடியாது. இன்றைய காலத்தில் ஒவ்வொரு செயலுக்குமான அடிப்படைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் எல்லோருமே குற்றவாளிகள் என்றால் பார்க்காதவர்கள் குற்றம் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமாகி
விடும். குற்றம் என்பது சிக்கலான ஒரு விஷயம். காவல்துறைக்கு வேண்டுமென்றால் குற்றத்தின் அளவுகளைத் தீர்மானிக்க ஆதாரம், சாட்சி தேவைப்படலாம். ஆனால், சமூக ஆய்வாளன் இப்படி தன் ஆராய்ச்சியை குறுக்கிக் கொள்ள முடியாது...’’ என்றவர் இந்த விஷயத்தை திரைப்படத்துடன் ஒப்பிடத் தொடங்கினார்.

‘‘தமிழ்த் திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளைப் பார்க்கும் எல்லோருமே வெளியில் சண்டை போடுவதில்லை. அதற்காக திரையின் சண்டையையும், திரையின் பாலியலையும் மிக நெருக்கமான ஒன்றாக நாம் பாவித்துவிடக்கூடாது. சண்டை அதிகபட்சமாக உடல் சார்ந்தது. ஆனால், பாலியல் என்பது உடலும் உள்ளமும் சார்ந்தது. அதனால்தான் பெண்ணை அடிமைப்படுத்தும், காயப்படுத்தும், கீழ்மைப்படுத்தும் பல ஆபாச வீடியோக்களை பெண்கள் நலப் போராளிகள் எதிர்க்கிறார்கள்.

ஒரு பாலியல் செயலுக்கு அடிப்படையானது காதல், உணர்வு, ஒப்புதல். இந்தப் புரிதலை சமூகத்துக்கு ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படத்தாவிட்டால்  ஆண் பெண் உறவு என்பது  எதிர்மறையான எண்ணங்களையே ேதாற்றுவிக்கும் ஒரு  மாற்று கிைடக்கும் வரை கற்பனையான திருப்தியையாவது அரசு அனுமதிக்கலாம் அதை தடுப்பது பேச்சுச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பாலியல் சுதந்திரத்துக்கு எதிரானது...’’ என்று சொல்லும் சஃபி, இதை பாலியல் சுதந்திரத்துக்கான தேவையாகப் பார்க்கும் பார்வையையும் முன்வைத்தார்.

‘‘சுமோ குத்துச்சண்டையைப் பார்ப்பதே சண்டையை வெறுத்து சமாதானமாக வாழப் பழகுவதற்குத்தான் என ஜப்பான் சமூகமே சொல்கிறது.
துக்கமான நாடகங்களைப் பார்ப்பவர்களின் சொந்த துக்கம் குறையும் என்பது உளவியலின் கண்டுபிடிப்பு. இதுமாதிரியானதுதான் ஆபாச வீடியோவும்.
இன்று இந்தியா போன்ற நாட்டில் வேலையின்மை, திருமணம் தள்ளிப்போகும் நிலையில் உள்ள இளைய சமூகத்துக்குப் பாலியல் ரீதியான ஒரு வடிகால் தேவைப்படுகிறது.

இதுதான் இந்த வீடியோக்கள் பக்கம் அவர்களை ஈர்க்கிறது. வட நாட்டில்கூட ஆபாச வீடியோக்களைப் பார்க்கும் இளைஞர்கள் தங்களுக்கு ஆசுவாசம், அமைதி கிடைப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கின்றனர்...’’ என்கிற சஃபி இந்தப் பிரச்னை தொடர்பாக நம் அரசும் சமூகமும் செய்யவேண்டிய சில விஷயங்களைப் பட்டியலிட்டார்.

‘‘நம் இளைஞர்கள் பெண்களைப் போகப்பொருளாகத்தான் நினைக்கிறார்கள். தட்டிப் பறித்து அனுபவித்தாலும் அது தப்பில்லை என்பதாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று மொத்த சமூகமே பதில் சொல்லவேண்டும். இதை தனிமனிதர்களின் பிரச்னையாகச் சுருக்கினால் என்கவுன்ட்டர் என்னும் தீர்வுக்கே நம் சமூகம் தள்ளப்படும்.

இளைய சமூகத்துக்கான தேவைகளைப் புரிந்துகொண்டு அதை யொட்டிய செயல்களில் ஈடுபடுவதுதான் அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்பு. பாலியல் கல்வி என்று எல்லாம்  பேசினோம். அவை என்ன ஆனது என்று தெரியவில்லை.

மொத்த சமூகமே பாலியல் வறட்சியில் திண்டாடுகிறது. இதில் ஆண், பெண் வேறுபாடுகளே கிடையாது. ஆபாச வீடியோ பார்த்தான், ஆடியோவைக் கேட்டான் என்று குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எல்லாம் நம் தலையிலேயே மண்ணை வாரிப்போடும் செயல்...’’ அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சஃபி.       

டி.ரஞ்சித்