சினிமாவை கற்றுத்தந்தது மணிரத்னம் ... நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது அமீர்! கார்த்தி பளீர்



‘பொன்னியின் செல்வனி’ல் மீண்டும் இதயம் தொட வருகிறார் மணிரத்னம்! கார்த்தி தாய்லாந்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார். ‘‘இந்தப் படம் எனக்குஆசிர்வாதம்! எம்ஜிஆர், கமல்னு ஜாம்பவான்கள் நடிக்கணும்னு ஆசைப்பட்ட காவியம். அப்படிப்பட்ட படத்துல நமக்கும் ஓர் இடம் இருக்குன்னா அது கடவுளின் பரிசு.

காலம் காலமாக வந்தியத்தேவனும், ஆதித்த கரிகாலனும், அருள்மொழிவர்மனும், சுந்தர சோழனும், குந்தவையும், நந்தினியும், பழுவேட்டரையரும் வாழ்ந்திட்டு இருக்கிறது ரொம்பவும் அபூர்வம். ஏதோ ஓர் இடத்தில் எல்லோருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ எமோஷனலாக அட்டாச் ஆகியிருக்கு.
இப்பப் பாருங்க, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’னு முடிச்சிட்டு இதோ இந்தப் பக்கம் வந்தாச்சு. திரும்ப குதிரையிலே ஏறி பயணம் போற மாதிரி கனவுகள்.

பரபரனு மணி சார் அவ்வளவு திட்டங்களோட வந்து இங்கே இறங்கியிருக்கார். எப்பேர்ப்பட்ட கதை, உணர்வுகள், சாகசங்கள், அந்த மனிதர்களின் சுகம், துக்கம், சந்தோஷம் எவ்வளவு விஷயங்கள் இதிலேயிருக்கு! அத்தனையும் கைகோர்த்திட்டுக் கதை சொல்ற கல்கி. ஷூட் ஆரம்பிச்சு நாலைந்து நாள் ஆகியிருக்கு. வந்துறேன்… நிச்சயம் அனுபவங்களின் வாசலில் நின்னு பேசலாம்...’’ என்கிறார் கார்த்தி. தமிழ்ச் சினிமாவின் வியாபாரத்தில் இன்று கார்த்திக்கு அதிமுக்கிய இடம்.

‘கைதி’யில் தனிச்சு நின்னு காட்டிட்டீங்க…
‘கைதி’யில் நடிச்சது என் கேரியரில் ரொம்ப நல்ல விஷயம். ‘கடைக்குட்டி சிங்க’மும் என்னை எளிய மனிதர்கள்கிட்டே கொண்டு போய் சேர்த்தது. எங்கே என்னை பார்த்தாலும், வேட்டியை மடிச்சுக்கட்டி, பைக்கில் விரட்டி, ‘தலைவா, பின்னிட்டிங்க’னு கை வலிக்கிற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள்.

‘கைதி’ பாட்டு, ஹீரோயின் இல்லாமல், ஒரே ராத்திரியில் நடக்கிற கதை. சொன்னதும் பிடிச்சது. நடிக்கிற ஸ்கோப் இருந்தது. எனக்கு மட்டுமில்லை. டெக்‌னீஷியன்களுக்கும் பெயர் வந்திருக்கு. ஒரு கட்டுக்குள் அடங்காதது தமிழ்ச் சினிமானு பரிசோதனை செய்து பார்க்க ‘கைதி’ தூண்டியிருக்கு. எமோஷனை பேலன்ஸ் பண்ணினது, குடும்பம், கிராமம்னு நகர்த்திட்டு போனது இன்னும் நல்ல படியாக அமைஞ்சது.

‘தம்பி’ இன்னும் கவனத்திற்கு வந்திருக்கு…

பதினைந்து வருஷம் கழிச்சு காணாமல் போன பையன் திரும்பி வர்றான். அப்புறம் எல்லாமே நிகழ்கிறது. Unusual கதை. இரண்டு வருஷத்திற்கு முன்னாடியே பேச ஆரம்பிச்சது. சிஸ்டர் கேரக்டர் அருமையாக இருந்தது. அண்ணிக்கு சொல்லிப் பார்த்து அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சது.
உறவுகளை சார்ந்து வெளிப்படுத்த நல்ல உணர்ச்சிகள் இதிலிருக்கு. இப்பப் பாருங்க, சினிமாவில் பாட்டினு ஒருத்தர் கூட வர்றதில்லை. எல்லோரும் தனித்தனி தீவா இருக்காங்க. கதை எழுதுறவங்களும், ஃப்ரண்ட்ஸ், காதல்னு எழுதுறாங்க. இதில் சௌகார் ஜானகி அம்மா நடிக்கிறாங்க. எல்லோர் கூடவும் சேர்ந்து நடிக்கிற படம். எனக்கு மனநிறைவா இருக்கு.

பெரிய பெரிய நடிகர்களுடன் நடிக்கிற போது ஊடே நமக்கும் ஓர் ஒளி கிடைக்குது. 400 படத்திற்கு மேலே நடிச்சிருங்காங்க. எனக்கு என்ன ஒரு சௌகரியம்னா, பத்து வருஷம் நடிச்ச அனுபவத்தில் கேமிராவை பார்த்த உடனே எல்லாம் மறந்திடுது. எதிரே இருக்கிறவங்கதான் அப்பா, அம்மானு ஆகிடுது.

ஜீத்து ஜோசப் பெரிய பலம். அவருக்கு மொத்தப் படத்தோட ஓட்டம், வடிவம், சிந்தனை எல்லாம் அப்படியே தெரியும். ஃபாசில் சார் படிப்படியா உணர்வுகளை மேலே மேலே கொண்டு போகிற மாதிரிசெய்திருக்கார் ஜீத்து.அவர், திலீப் படங்கள் பண்ணியிருக்கார்.

இதில் நகைச்சுவையில் நல்ல வாய்ப்பிருக்கு. முதல் நாள் எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைச்சு, ‘இது டீம் வேலை. எல்லோரும் ஐடியா சொல்லுங்க. உங்க உழைப்பைக் கொடுங்க. சேர்ந்து ஒரு நல்ல படம் எடுப்போம்’னு சொன்னார். ஒரு மணி நேரம் எடுக்கிற சீனை டிஸ்கஷன் பண்ணிட்டு எது பிடிச்சிருக்கு, பிடிக்கலை, எது நல்லாயிருக்குனு பேசிட்டு அடுத்து பட்பட்னு எடுத்து முடிச்சிடுவார். எனக்கு இதெல்லாம் புதுசு.
சத்யராஜ், சௌகார்னு அனுபவஸ்தர்கள் இருக்காங்களே...

சத்யராஜ் சாரோட இது எனக்கு இரண்டாவது படம். நிச்சயமாக அவர்தான் செய்ய முடியும்னு உங்களுக்கு கண்டிப்பாக தோணும். சில இடங்களில் அவர் நடிக்காமல் இருந்தது கூட அவருக்கு ஸ்கோர் ஆகியிருக்கு. சௌகார் அம்மாவிற்கு 88 வயசாகிடுச்சு. யாரையும் உதவிக்கு நம்புறதில்லை.
நமக்கு இப்ப 40 வயதில் போர் அடிக்குதுனு சொல்றோம். பேத்தி, கொள்ளுப் பேத்தினு செட்டில் பண்ணிட்டு இப்ப,தானே சமைச்சி சாப்பிட்டுகிட்டு நம்பிக்கை, உழைப்பு, சந்தோஷம்னு வாழ்றாங்க. பார்க்க நமக்கே உத்வேகமா இருக்கு.

அண்ணி கூட நடிக்கிற அனுபவம்…

இப்பத்தான் அவங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கிறேன். ‘ராட்சசி’யில் இரண்டு நிமிஷம் வர்ற சிலம்பக் காட்சிக்கு ஆறு மாதம் பயிற்சி எடுத்துகிட்டாங்க. எது செய்தாலும் அதை சின்சியராக செய்கிற ஆசை. முதலில் செய்ததை விட அர்த்தமுள்ள படங்கள் செய்யணும்னு சொல்றாங்க.

கல்யாணம் ஆகிட்டு பெண்கள் வீட்டுலதான் இருக்கணும்னு சொல்லாம, குழந்தைகளை பார்த்துக்கிட்டு, வீட்டுப்பாடம் வரைக்கும் சொல்லிக் கொடுத்திட்டு... பெரிய விஷயம்தான். முன்னாடி சீன் பேப்பர் வாங்கிட்டுபோய், வந்த ஜோரில ‘கடகட’னு சீன் முடிக்கிறாங்க. என்னதான் வீட்டில அண்ணினு பேசிட்டு இருந்தாலும், ஷூட்டிங்கில் அழகா ஒரு பெர்ஃபெக்‌ஷன் காட்டுறாங்க. 50 படம் போல செய்திருக்காங்க. அந்த அனுபவமெல்லாம் எங்கே போகும்?!

ஒரு நல்ல நடிகராகவும் நீங்க ஃபார்ம் ஆகிட்டிங்க…

அந்தப் பெருமையெல்லாம் அமீர் சாருக்குத்தான் சேரும். சேரணும். அமீர் சார்தான் இவனைப் பார்த்து, இவனை நடிக்க வைக்க முடியும்னு நடிக்க வைச்சது. அவர்தான் எப்படி ஒரு கதாபாத்திரமாகவே உள்ளே இறங்கணும்னு சொல்லிக் கொடுத்தார். ஒரு நல்ல ஆசான் மாதிரி இருந்து வேலை செய்யும் போது எந்தளவுக்கு உண்மையா இருக்கணும்ங்கிறதும் அவர் சொல்லிக் கொடுத்ததுதான். மணி சார்கிட்டே இருந்து நான் சினிமாவை கத்துக்கிட்டேன். அமீர் சார்கிட்டே இருந்து நடிப்பை கத்துக்கிட்டேன். நடிப்பில் ஒன்றிரண்டு பெயர் வருதுன்னா, அதுக்கு முழு முதற்காரணம் அமீர் சார்தான்.

பத்து வருஷ அனுபவம் என்ன சொல்லுது..?

வெற்றி, தோல்வி இரண்டையும் ஒண்ணா வைச்சுப் பார்க்கிற மனோபாவம் வேணும்னு சொல்வாங்க. சொல்றது சுலபம். இத்தனை வருஷம் தாண்டி தோல்வியை அனுபவமாக எடுத்துக்கிட்டால்தான் நாம ஒரு நிலைக்கு வரமுடியும். தோல்வியில் மட்டுமே கத்துக்க நிறைய இருக்கு. அதாவது வெற்றிக்குப் போகிற ஒரு சந்தர்ப்பமும் அங்கேதான் இருக்குது. எனக்கு சந்தோஷத்தைவிட நிம்மதிதான் முக்கியம். மத்தவங்க வாழ்க்கையோட நம்மளை ஒப்பிட்டுக்கிட்டே இருக்கோம். அது சரியில்லைனு புரியவே ெராம்ப நாளாகிடுச்சு.

மத்தவங்க வாழ்க்கையை நாம ஒரு நிமிஷம் வாழமுடியுமா? அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்கனு முடிவு எடுக்கிறதை விட, நம்ம முடிவை நாமதான் எடுக்கணும். ‘தோத்துறக் கூடாதுடா, தோத்துற கூடாதுடா’னு சுத்தி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதையே மனசில் வைச்சுக்கிட்டே இருக்கக்கூடாது. இன்னிக்கு வரைக்கும் வெற்றியின் ரகசியம் எதுனு ஒரு வார்த்தையில யாராலும் பதில் சொல்ல முடியல. அதனால் நம்ம கடமையை குறைஞ்சபட்ச நேர்மையோட செய்திட்டு போலாம்னு இருக்கேன்!

நா.கதிர்வேலன்