கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-42



கோடிகோடியாக வரங்களை அள்ளித் தரும் கோடீஸ்வரர்‘‘என்ன தாத்தா சொல்றீங்க..? ஸ்போர்ட்ஸ்ல சாதிச்சு முன்னேற கோயில் இருக்கா..?’’ கண்ணன் நம்ப முடியாமல் நாகராஜனை பார்த்து கேட்டான்.

அவன் அருகில் அமர்ந்திருந்த ஷ்யாமின் முகத்திலும் அதே ஆச்சர்யம்.இருவரையும் பார்த்து நாகராஜன் புன்னகைத்தார். ‘‘ஆமா... கொட்டையூர் பந்தாடு நாயகி சமேத கோடீஸ்வரர்தான் அந்த சுவாமி...’’ ‘‘பந்தாடு நாயகியா! பேரே வித்தியாசமா இருக்கே...’’ ஷ்யாம் வியந்தான்.
‘‘அவரோட சரித்திரமும் ஆச்சர்யமானதுதான்... தாத்தா சொல்லி முடிச்சதும் நீங்களே அதைப் புரிஞ்சுப்பீங்க...’’ ஆனந்தவல்லி சிரித்தாள்.தன் மனைவியை ஆமோதித்தபடியே நாகராஜன் சொல்லத் தொடங்கினார்.

‘‘உணர்ந்துவிட்டேன் சுவாமி! உணர்ந்து விட்டேன்...’’ அந்த ஆமணக்குக் காட்டில் ஒலித்தது அந்தக் குரல். குரலில் ஆச்சரியத்தின் தாக்கம் பாரபட்சம் இல்லாமல் இருந்தது. அந்த அடர்ந்த ஆமணக்குக் காட்டில் அவர் எதைத்தான் கண்டாரோ... அவரது முகத்தில் ஆச்சரியத்தோடு ஆனந்தம், பக்தி, உருக்கம் என அனைத்து உணர்ச்சிகளும் வழிந்தோடியது.

தனது இரு கரங்களையும் சிரத்தின் மேல் குவித்திருந்தார். ஞான ஒளி வீசும் அவரது விழிகளில் நீரின் தேக்கம். நெற்றி கொள்ளாத திருநீற்றின் பூச்சு. கட்டான உடல், அவரது இடையறாத ஜபம் தவம் யோகத்தை உணர்த்தியது. இடையில் ஒற்றை காவி வேஷ்டியை அழகாக இறுகக் கட்டியிருந்தார்.
இப்படி முனிவருக்குரிய எல்லா அம்சங்களும் அவரிடம் குடிகொண்டிருந்தன.

அவரது உருக்கத்திற்கு காரணம் எதிரே ஒன்றல்ல இரண்டல்ல கோடிகோடி ரூபங்களோடு நின்றிருந்தது! செஞ்சடைக் காட்டில் கங்கை வீற்றிருக்க, அந்த கங்கையின் சலசலப்போடு கொன்றைப் பூ வாசமும் சேர்ந்திருக்க. சூரியனைப் போல பொன்னொளி வீசும் அந்த ரூபத்தின் உச்சியில் சந்திரன் பிரகாசித்த படி இருக்க... புலித்தோலை அறையில் கட்டி, தாயின் கருணையை முகத்தில் காட்டிக்கொண்டிருந்தது சிவ பரம்பொருள்.
அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல... கோடி உருவெடுத்து நின்றிருந்தது!

ஒன்றாக விளங்கும் தெய்வம் இப்படி பல வடிவங்கள் எடுத்து முன்னால் நின்றால் யார்தான் உருகிப்போக மாட்டார்கள்?
அந்தக் கோடி ஈஸ்வர ரூபமும் இப்போது ஒரு உருவாக மாறி அவர் முன் நின்றது. கருணை மேலிட வாய் மலர்ந்து பேசவும் செய்தது.
‘‘பத்திர யோகியே! இடையறாத தவத்தின் பயனாக இன்று எனது பல வடிவத்தை கண்டாய். கண்டவுடன் ‘உணர்ந்து விட்டேன் சுவாமி!’ என்று சொல்லி திக்குமுக்காடிப்போய் நிற்கிறாய்! அப்படி நீ உணர்ந்த விஷயம்தான் என்ன?’’ ஈசன் குரலில் இருந்த அன்பு, ‘தாயில் சிறந்த தயாவான தத்துவனே’ என்ற மாணிக்கவாசகரின் சொல்லுக்கு மவுனமாக உரை எழுதியது.

மெல்ல தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார் பத்திரயோகி.‘‘சிறுவயது முதல் நான் வேதம் படிக்கிறேன் சுவாமி. சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையைப் போல, வாத்தியார் சொன்னதை அப்படியே மீண்டும் உச்சரித்து மனப்பாடம் செய்தேன். பலமுறை வேத வாக்கியங்கள் சொன்ன போதும் ஒரு முறை கூட அதை உணர முயற்சித்ததே இல்லை. ஆனால், இன்றோ தங்கள் தரிசனமும் கிடைத்துவிட்டது. வேதமும் விளங்கி விட்டது. அதனால்தான் அவ்வாறு சொல்லிவிட்டேன் சுவாமி!’’

‘‘என்னை மறைத்து, மறைத்து சொல்லுவதால்தான் அதற்கு மறை என்றே பெயர். ஆனால், நீயோ, இன்று மறைபொருளை உணர்ந்துவிட்டேன் என்கிறாய்! அப்படி நீ உணர்ந்தததை விளக்கிச் சொல் பார்ப்போம்!’’ ‘‘‘சஹஸ்ர சீருஷா புருஷ: சஹராக்ஷ சஹஸ்ரபாத்’ என்ற வேத வசனத்தின் பொருளை மூளையின் நரம்பில் ஊடுருவும் படி விளக்கி விட்டீர்கள் சுவாமி!’’‘‘எண்ணற்ற கைகள் கால்கள் உடல்கள் உடையவன் பரம் பொருள் என்பதே இதற்குப் பொருள். இதை நான் இன்று கோடி வடிவத்தை உனக்குக்காட்டிய பின் உணர்ந்தேன் என்கிறாய்! சரிதானே?’’ ஈசனின் குரலில் ஏளனமும் ஓர் ஓரத்தில் இழையோடியது.

அதை முனிவர் கவனித்தாரா என்று தெரியாது. ஆனால், மெல்ல பதில் தர ஆரம்பித்தார். ‘‘இல்லை சுவாமி! இங்கு வேதம் சொல்ல வருவது வேறு. ஒரு
மனிதன் ஞானத்தை எப்படி அடைகிறான்?’’‘‘கண்களால் நூல்களைப் படித்து. காதால் உபதேசங்களைக் கேட்டு. அதை அறிவால் உணர்ந்து அவன் ஞானத்தை அடைகிறான்...’’ நொடியில் வந்தது ஈசனின் பதில்.‘‘நீங்கள் சொன்ன கண், காது, மூளை இவை அனைத்தும் எங்கு இருக்கிறது?’’
‘‘இது என்ன கேள்வி! இவை அனைத்தும் மனிதனின் முகத்தில் இருக்கிறது! அதனால்தான் ‘எண் ஜாண் உடலுக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள்!’’

‘‘எண்ணற்ற தலைகள் என்று இங்கு வேதம் சொல்வது, உண்மையில் தலைகளை அல்ல, ஞானத்தை! ஆம்... ஞானமே வடிவான தங்களின் ஞானத்தை யாரால் வரையறுத்துக் கூற முடியும்..? அதனால்தான் வேதம் தங்களது ஞானத்தை அளவற்றது என்கிறது...’’‘‘அற்புதம் பத்திரா! அற்புதம்! சரி எனக்கு எண்ணற்ற கை கால்கள் இருப்பதாக வேதம் சொன்னதன் பொருள் என்னவோ?’’ தனக்கு எதுவும் தெரியாதது போலக் கேட்டார் ஈசன்.
‘‘ஒரு பலசாலியை எப்படி விளக்குவார்கள் சுவாமி?’’ மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டார் யோகி.

‘‘புஜபல பராக்ரமசாலி என்பார்கள்!’’‘‘அதேதான்! கைகளும் கால்களும் ஒருவனது பலத்தைக் குறிக்கிறது. ஆகையால் உங்களுக்கு எண்ணற்ற கைகள் என்று வேதம் சொல்லுவது கைகளை அல்ல; உங்களுக்கு இருக்கும் அளவற்ற பலத்தை, சக்தியை! ஆதிசக்தியின் பிராணநாதன் அல்லவா தாங்கள்?’’
‘‘அருமை! இது மட்டும்தானா, இல்லை இன்னமும் இருக்கிறதா?’’ கனிவு வழிந்தோடியது ஈசனின் குரலில்.

அதைக் கவனித்த முனிவர் பயபக்தியோடு தொடர்ந்தார். ‘‘அண்டத்தையும், அதைக் கடந்தும் நீங்கள் வியாபித்து நிற்கிறீர்கள்! நீங்கள் இந்த உலகை எப்படி தாங்குகிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ஆம். என் கண்ணெதிரே பூமியில் நீங்கள் நின்றிருந்தாலும் உண்மையில் பூமி உங்களைத் தாங்கவில்லை... நீங்கள்தான் பூமியைத் தாங்குகிறீர்கள்!’’

‘‘அது எப்படி சாத்தியமாகும் யோகி?’’ விளங்காதது போல நடித்தார் பரமன்.‘‘ஓர் அழகான கோபுரம். அதில் இருக்கும் பதுமைகள் அந்த கோபுரத்தின் நிலைகளை தாங்குவது போல அது அமைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு ஒரு மூடன் கோபுரத்தைத் தாங்குவது அந்த பதுமைகளே என்று நினைக்கிறான். ஆனால், உண்மையில் அந்த பதுமையையும் அந்த கோபுரத்தையும் சேர்த்து தாங்குவது அந்த கோபுரத்தின் அஸ்திவாரம்தானே?!
அது போலவே, இந்த உலகம், தன்னால் இயங்குவதுபோல காட்சி தந்தாலும் அதை உள்ளிருந்து தாங்குவதும், இயக்குவதும் தாங்கள்தான்!

அதனால்தான் வேதம் இந்த உலகத்தின் உள்ளும் புறமும், பரவிக் கடந்து நின்று இதை இயக்குவது தாங்கள்தான் என்கிறது! ‘ச பூமிம் விஷ்வதோ விருத்வான் அத்ய திஷ்டத் தசாங்குலம்’ என்ற வாக்கியத்தின் பொருள் இதுவே!’’ திட்டவட்டமாகச் சொன்னார் முனிவர்.
அவர் சொல்லி வாயை மூடவும் ஈசனின் திருவுருவம் மின்னலைப் போல மறையவும் சரியாக இருந்தது.

முனிவர் விக்கித்துப் போனார். பருகிக் கொண்டிருந்த அமுதத்தை நொடியில் ஒருவர் பிடுங்கிக்கொண்டதுபோல உணர்ந்தார். ‘‘ஈசா! சர்வேசா! மகேசா!’’ என்று அரற்றினார். அப்போது அங்கு கோடி சூர்ய பிரகாசம் மீண்டும் தோன்றியது. ஆனால், முன்பைப் போல அது பொன்னொளி வீசாமல் மாணிக்க ஒளி வீசியது. முனிவர் விஷயம் விளங்காமல் பரிதவித்தார். மெல்ல ஒரு சிரிப்பொலி கேட்டது. அதில் பெண்மையின் கனிவு. வீணையின் குழைவு. கூடவே ஒரு சிங்கத்தின் கர்ஜனையும் கேட்டது.

முனிவருக்கு மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. மேலும் அவரைச் சிந்திக்க விடாமல் அந்த ஒளி ஒரு பெண்ணாக மாறியது.
அந்தப் பெண் ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்திருந்தாள்! தேவியின் அற்புத வடிவைக் கண்டதும் ‘‘தாயே ஜெகன் மாதா! எமை ஈன்ற உமையே சரணம் சரணம்...’’ என்று அவளது பாதத்தில் விழுந்தார்.

அதைக் கண்ட அம்பிகை கனிவாக ஒரு புன்னகை பூத்தாள். கோடி வடிவம் எடுத்து பிரம்மாண்டமாகக் காட்சித் தந்தாள். அந்த அற்புதத்தை கண்ட முனிவர் மெய்மறந்து போனார். ஆனால், இந்த அற்புதக் காட்சியும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அம்பிகை சட்டென மறைந்து போனாள்.
தான் செய்த தவறென்ன என்று தெரியாமல் முனிவர் கரைய ஆரம்பித்தார்.

அப்போது ‘வருந்தாதே...’ என்பது போல ஒரு யானையின் பிளிறல் கேட்டது. முதலில் முனிவர் அது ஒரு காட்டு யானையின் ஒலி என்றே நினைத்தார். ஆனால், அடுத்தடுத்த நொடிகளில் அவர் கண்ட காட்சிகள் அவரது எண்ணம் எவ்வளவு பெரிய ஒரு அபத்தம் என்று சொல்லாமல் சொல்லியது.
ஆம் ஒற்றை யானையின் பிளிறல் இப்போது கோடி கோடி யானைகளின் பிளிறலாக மாறியது! அந்த பிளிறல்களின் ஊடே கோடிகோடியாக விநாயகரைத் தரிசனம் செய்தார் முனிவர்.

நடப்பது என்ன என்று புரியவில்லை அவருக்கு. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடவும் மனம் வரவில்லை. அந்த யானைமுகனின் பாத கமலத்தில் விழுந்து அஞ்சலி செய்தார் முனிவர். அதைக் கண்ட கணேசன் ஒரு மர்மப் புன்னகை பூத்தபடியே கரைந்து மறைந்துபோனார்.
மீண்டும் முனிவர் ஆளவந்த தெய்வத்தைக் காணாமல் அரற்ற ஆரம்பித்தார்.

மீண்டும் ஒரு செந்நிற ஒளி தோன்றியது. ஒளியின் நடுவே சித்திர கலாப மயில் ஒன்று நின்றிருந்தது. அந்த எழிலான மயில் மீது அழகே வடிவாக அமர்ந்திருந்தார் முருகப் பெருமான். அவரும் கோடி கோடியாகப் பல்கிப் பெருகி காட்சித் தந்தார்.

‘‘சிங்கார ரூப மயில் வாகனா நமோ நம கந்தா குமார சிவ தேசிகா நமோ நம...’’ என்று கை நழுவிய பொருளைப்போல விழுந்து விழுந்து வணங்கினார் முனிவர். முருகனும் மர்மப் புன்னகை பூத்தபடியே மறைந்து போனார்!மீண்டும் முனிவரை சோகம் சூழ்ந்தது. பிரிவாற்றாமையால் புலம்ப ஆரம்பித்தார்.
அப்போது மெல்ல மீண்டும் பொன்னொளி வீசியது.

ஈசன் மீண்டும் எழிலுற காட்சி தந்தார். கருணை பொங்க அற்புத நகை செய்தார். ‘‘இப்போது என்ன விளங்கியது முனிவரே?’’ அன்போடு வினவினார்.  
முனிவர் ஏதோ பெரிதாக விளங்கியது போல புன்னகைத்தார்!

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்