மறுமுகம் - ஓவியர் பொன்வண்ணன்



இயக்குநர், ரைட்டர், குணசித்திர நடிகர், வில்லன் என பன்முகமாக பளபளப்பவர் பொன்வண்ணன். ‘அன்னை வயல்’ படத்தின் மூலம் இயக்குநரானவர்.
விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றால், அறை முழுவதும் வண்ணங்களும், தூரிகைகளும், புத்தகங்களும், உலகப்பட டிவிடி கலெக்‌ஷன்களும் பரந்து விரிந்து புன்னகைக்கின்றன. பக்கவாட்டில் டிராயிங் ஸ்டாண்ட்டில் பொன்வண்ணனின் கைவண்ணத்திற்காக முற்றுபெற காத்திருக்கிறதுஒரு மாடர்ன் ஆர்ட்.

‘‘ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி, ‘கலைமகள்’ ஜி.கே.மூர்த்தி, ராமு, கோபுலு இவங்க கோடுகள்எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் கோபுலுவின் ஓவியங்களில் ஒரு மரபுத் தன்மை மிளிரும். நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் முகத்தைக் கூட அப்படியே நேர்த்தியாக கொண்டு வந்திருப்பார் அவர். இவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் ஓவியரானேன்.

உதவி இயக்குநராக வேலை பார்த்த டைம்ல கூட, ஓவியம் வரையறதை கைவிடலை. அப்பவும் வரைவேன். ஸ்பாட்டுல, ஷூட்டுலனு
பென்சிலும், பேனாவும் கையுமா இருந்திருக்கேன். என்ன ஷாட்? என்ன ஃபிரேம் வைக்கறாங்க? நடிகர்கள் எந்தப் பக்கம் நின்னாங்க? காஸ்ட்யூம் ெதாடர்ச்சினு அத்தனையையும் ஓவியங்களாகவே ஸ்டிரிப்பா வரைஞ்சிடுவேன்.

என்னோட வேலையை ஸ்டோரி போர்ட்டாகவே வரைஞ்சிடுவேன். அதுவே எனக்கு பல இடங்கள்ல வேலை வாய்ப்பையும் வாங்கி கொடுத்திருக்கு...’’ ஆச்சரியம் பொங்க விவரிக்கும் பொன்வண்ணன், பத்திரிகை சிறுகதைகளுக்கு படமும் வரைந்திருக்கிறார்.

‘‘உதவி இயக்குநரா, நடிகரா பிசியா பரபரக்கும் போதும் கூட வார, மாத பத்திரிகைகளின் சிறுகதைகளுக்கு படங்கள் வரைஞ்சு கொடுத்திருக்கேன். ‘விகடன்’லஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘கேள்விக்குறி’ தொடர் வரும் போது, முழுத் தொடருக்கும் படம் வரைஞ்சிருக்கேன். ரசிச்சு பண்ணின ஒர்க் அது.
எண்ணங்கள்தான் வண்ணங்களாகுது. கான்சப்ட்தான் வண்ணங்களை தீர்மானிக்குது. லைட் அண்ட் ஷாடோஸ், மட்டுமல்ல, கறுப்பு, வெள்ளை கலந்து வரைவதும் பிரியமானதுதான்.  

சினிமாவை போல ஓவியத்துறையிலும் இப்ப டிஜிட்டல் புகுந்திடுச்சு.  போட்டோ ஷாப் 7, கோரல்டிரானு ஆரம்பிச்சு அதோட லேட்டஸ்ட் வெர்ஷன் வரை தொழில்நுட்ப ரீதியாகவும் ஓவியத்துல அப்டேட்டடா இருக்கேன். இதுக்காகவே வெளிநாட்டுல இருந்து ஒரு வேக்கம்போர்டு இறங்குமதி பண்ணினேன். அதுலேயும் ஒர்க் பண்றேன்.

சாதாரண பென்சிலில் ஆரம்பிச்சு க்ரேயான்ஸ், வாட்டர் கலர்ஸ், ஆயில், அக்ரிலிக்னு ஓவியத்தின் அத்தனை பரிமாணங்கள்லேயும் பயணிக்கறேன். என்னோட திருப்திக்குத்தான் வரையறேன். விற்கணும், கண்காட்சி வைக்கணும்னு இக்கட்டான சூழல்கள் இல்லாததால தோணுற போது வரைய முடியுது.

பெயிண்ட்டிங்ஸ் மட்டுமில்ல. புத்தகங்கள் படிக்கவும் பிடிக்கும். கம்ப்யூட்டர்ல பெரியப் பெரிய கலெக்‌ஷன்ஸ் வச்சிருக்கேன். அதுல ஹிஸ்டரி கன்டன்ட்ஸ் அதிகம். என் போர்ட்ரெயிட் ஒர்க்ஸை எல்லாம் கண்காட்சியா வைக்கற ஐடியாவும் இருக்கு. அதை நோக்கியும் நகர்றேன்...’’ உற்சாகத்துடன் சொல்லும் பொன்வண்ணன், டிராயிங் மாஸ்டர் கோர்ஸ் முடித்தவர்.பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

‘‘ஈரோடு பக்கம் மொடக்குறிச்சிதான் எங்க ஊர். எங்க வீடு, பக்கத்து வீடுனு எல்லா இடங்கள்லேயும் கிறுக்க ஆரம்பிச்சிருக்கேன். என் முதல் ஓவியம் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. அப்ப நான் அஞ்சாங் கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். கிளாஸ்ல வாத்தியார் எல்லாரையும் வரையச் சொன்னார். நான் மடமடனு ஒரு ஜல்லிக்கட்டு காளையை வரைஞ்சேன். அதைப் பார்த்துட்டு வாத்தியார், என்னைத் தட்டிக் கொடுத்து சாக்லெட் பரிசளிச்சார்.

என் நடிப்பை பாராட்டி எத்தனையோ விருதுகள் கிடைச்சிருக்கு. ஆனா, அந்த சாக்லெட்டுக்கு ஈடாகாது. அதுதான் எனக்குள் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துச்சு.

அப்புறம், புத்தகங்களின் பக்க வடிவமைப்பு மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. ஓவியங்கள் இருந்ததால, காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஸ்புட்னிக், சோவியத் நாடுனு பல புத்தகங்கள்லயும் ஓவியங்களைதான் பார்த்து ரசிப்பேன். அப்ப ‘விகடகவி’னு ஒரு கையெழுத்து பத்திரிகையும் நடத்தியிருக்கேன்! அதுல ஓவியங்கள் வரைஞ்சிருப்பேன்.

சுயமா வரைஞ்சது குறைவு. ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி படங்களை பார்த்து வரைஞ்சது அதிகம். கோபுலு ஓவியங்கள் எல்லாம் ஈர்க்கவே டிராயிங் மாஸ்டராகணும்னு விரும்பினேன். என் அதிகபட்ச கனவும் அதான். அதுக்காகவே என்னை  தயார்படுத்திக்கிட்டேன். 9வது படிக்கும் போது டிராயிங் மாஸ்டருக்கான லோயரும், 11வது படிக்கும் போது ஹையரும் எழுதினேன்.

அப்புறம், பனிரெண்டாவது முடிச்சதும் டீச்சர் டிரெயினிங்கும் முடிச்சேன். காலேஜ் போனேன். பி.காம்ல சேர்ந்த சில மாதங்களில்அதை டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். ஒரு தனியார் பள்ளியில் லீவ் வேகன்ட்ல ஆசிரியராகவும் வேலை பாத்திருக்கேன். இப்படி ஓவியமும், எழுத்தும், இலக்கியமுமாக என் பாதையை அந்த வயசுல நானே வடிவமைச்சிக்கிட்டேன்...’’ கண்சிமிட்டுபவர், சினிமாவில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார்.

‘‘அந்த டைம்ல எதிர்பாராமல் சென்னை வரவேண்டிய சூழல். மதர்லாண்ட் பிக்சர்ஸ் பெரிய அளவுல கொடிகட்டிப் பறந்த நேரம் அது. கோவைத்தம்பி சார் ஹிட் படங்களா தயாரிச்சிட்டிருந்தார்.

அவரை யதார்த்தமா சந்திக்கற வாய்ப்பு அமைஞ்சது. என் கையெழுத்து பத்திரிகையை பார்த்தவர், ‘சினிமாவில் சேர்ந்துடறீயா’னு கேட்டார். அந்த காலகட்டத்தில் சென்னை மவுன்ட் ரோட்டுல பெரியப் பெரிய பேனர்ல சினிமா பட விளம்பரங்கள், பீடி விளம்பர பேனர்கள்னு ஓவியங்கள் கோலோச்சும். நான் பிரமிச்சிருக்கேன். அதுவும் கவர்னர் பீடி விளம்பரம் எனாமல்ல வரைஞ்சிருப்பாங்க. ஜே.பி.கிருஷ்ணா ஆர்ட்ஸ் அவ்ளோ அட்ராக்ட் பண்ணும்.

பிரமாண்ட பேனர்ஸ் சுண்டி இழுந்ததுல ‘சினிமாவுல எழுத்து துறை வேணாம், ஓவியத்துறையில சேர விரும்புறேன்’னு அவர்கிட்ட சொன்னேன்.
மதர்லாண்ட் பிக்சர்ஸின் பேனர் ஆர்ட்டிஸ்டான ஆர்ட்லாண்ட்டில் என்னை சேர்த்துவிட்டார்.

ஆனா, அங்க போனதும்தான் தெரிஞ்சது, நாற்பது வருடமா ஆளுமையோடு இருந்த பேனர் துறை அழிவின் விழிம்பில் இருக்குனு. ‘இந்த டைம்ல இந்த துறைக்கு வந்திருக்கேயப்பா’னு அங்குள்ளவங்க என்னை பாத்து பரிதாபப்பட்டாங்க. ஒரு வருஷத்துல சினிமாவில் ஆர்ட் ஒர்க்கிற்கான மவுசு குறைஞ்சு, அது அரசியல் கட்சிக்கான கட் அவுட்கள் வரையற துறையா மாறிச்சு.

அது பிடிக்காமல் மறுபடியும் கோவைதம்பி சாரை போய் சந்திச்சேன். ‘நீங்க சொல்லித்தானே நான் வந்தேன்’னு என் குமுறலை கொட்டினேன். அப்ப அவர் ‘இதயக்கோவில்’ தயாரிச்சிட்டிருந்தார். மணிரத்னம் சார் அசோசியேட் சுபாஷை கூப்பிட்டு, ‘இந்த பையனை மணிகிட்ட சேர்த்து
விட்டுடுங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க’ன்னார்.

என்ன காரணமோ... மணி சார் என்னை சேர்த்துக்கவே இல்ல. ஆனாலும் நான் மதர்லாண்ட்லதான் இருந்தேன். கோவைத்தம்பி சார் அப்ப எம்எல்ஏ ஆக இருந்தார். அவரோட பர்சனல் அசிஸ்டெண்ட் மாதிரி ஆகிப்போனேன். தவிர, படத் தயாரிப்பு வேலைகளையும் கவனிச்சிட்டிருந்தேன்...’’ சிறிது நேர மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

‘‘ஒரு கட்டத்துல ஓவியமும் இல்லாமல், இயக்கமும் இல்லாமல் ஒரு தயாரிப்பு நிர்வாகியா அஞ்சு படத்துக்கு வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ‘நம்ம டிராவல் இப்படி ஆகிப்போச்சே’னு ஒருநாள் ஃபீல் ஆச்சு. இங்கிருந்தா, நான் அசிஸ்டென்ட்டா ஆகவே முடியாதுனு நினைச்சேன்.

அதை உதறிட்டு, வெளியே வந்தேன். ‘சோலைக்குயில்’ கிடைச்சது. அந்தப் படத்தயாரிப்பாளர் தமிழ்மணி சார் மூலமா இயக்குநர் ராஜன் சார்கிட்ட உதவி இயக்குநரா ஒர்க் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. அவர்கிட்டத்தான் ஜனநாதன் சாரும் ஒர்க் பண்ணிட்டிருந்தார். அந்த நட்பு இன்னிக்கு வரை ட்ராவல் ஆகுறது தனிக்கதை.

‘சோலைக்குயி’லுக்கு பிறகு எதேச்சையா பாரதிராஜா சாரை சந்திச்சேன். முதல் சந்திப்பிலேயே ‘நீங்க என்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்ந்திடுறீங்களா’னு கேட்டார்.என் வாழ்க்கையின் திருப்புமுனைகள் எல்லாமே ஒரே நாள், ஒரே கேள்வில அமைஞ்சதுதான். கேள்வியை ஒண்ணு நான் கேட்டிருப்பேன். இல்லனா, அவங்க என்கிட்ட கேட்டிருப்பாங்க. ஆனா, எல்லாமே ஒரே நாள்ல நடந்ததுதான்.

‘என் உயிர்தோழன்’ல உதவியாளரா சேர்ந்தேன். அப்புறம், ‘புது நெல்லு புதுநாத்து’ல நடிகராவும், வசனகர்த்தாவாகவும் ஆனேன். ‘நாடோடித் தென்றல்’ வரை ஒர்க் பண்ணிட்டு வெளியே வந்து ‘அன்னை வயல்’ என்ற படத்தை இயக்கினேன். அது வியாபார ரீதியா சில பிரச்னைகளை சந்திக்கும் போது, தயாரிப்பாளரே பிரச்னையானார்.

கருத்தியல் ரீதியான முரண்பாட்டால நான் நினைச்சது வரல. அடிப்படைல நான் இலகுவானவன்தான். ஆனா, என்னால் காம்பரமைஸ் பண்ணிக்க முடியாத சூழல். படமும் தோல்வியாகிடுச்சு. மறுபடியும் உதவி இயக்குநரா ‘கிழக்குச் சீமையிலே’ல ஒர்க் பண்ணினேன். ‘கருத்தம்மா’வில் இருந்து நடிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சு, அங்கிருந்து வெளிய வந்தேன்.

ஓர் இயக்குநரா தோத்த பிறகு, என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர் எங்க டைரக்டர் பாரதிராஜா சார்தான். நான் வெரி பிராக்டிகல். இந்த வாழ்க்கையை ரசனையா வாழணும்னா, பொருளாதார தன்னிறைவு அடையணும்னு தெளிவா இருந்தேன். அதே சமயம், கிடைச்ச நேரங்கள்ல ஓவியங்கள் வரைவதையும் விடல...’’ மகிழ்ச்சியுடன் சொல்லும் பொன்வண்ணன், வரலாற்று தொடர்பான புத்தகம் ஒன்றை ஆவணப்படுத்த உள்ளார்.

‘‘எகிப்திய வரலாற்று நூல்களை படிக்கிறப்ப தமிழக வரலாற்றில் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பது புரிஞ்சது. ஏன்னா, எகிப்திய பிரமிடுகளில் சாதாரண எளிய மக்களின் வாழ்க்கையை படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. ஆனா, சங்க இலக்கியங்கள்ல கூட அப்படி எளிய மனிதர்களின் வாழ்க்கையை விவரிச்சதில்ல.

இப்ப ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த தமிழர்களின் மரபை ஓவியங்களா, எழுத்துக்களா ஆவணப்படுத்தும் வேலைல இருக்கேன். சங்க இலக்கியத்தை, அதன் வாழ்க்கையை ஓவியம் சார்ந்த ஒரு புத்தகமாக பண்ணும் வேலையிலும் இறங்கியிருக்கேன். அதுல அகழ்வாராய்ச்சியும் ஓவியமாக மிளரும். தொல்லியல் தொடர்பும் அதில் இருக்கும்.

மரபும், தொல்லியிலுமான அந்த கான்சப்ட் வேலைகள்தான் இப்ப போயிட்டிருக்கு. வெறுமன ஓவியங்களா மட்டுமில்லாம மரபுக்கும் மொழிக்குமான பதிவாகவும் அது இருக்கும்...’’ கனவு மின்ன சொல்கிறார் பொன்வண்ணன். காத்திருக்கிறோம்!             

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்