நியூஸ் சாண்ட்விச்



மாணவர்களைத் தத்தெடுக்கும் முதியவர்கள்

தனிமை நம் மாடர்ன் உலகின் புதிய நோயாகியிருக்கிறது. வயதானவர்கள், இளைஞர்கள் என யாரையும் இந்த நோய் விட்டுவைப்பதில்லை.
இதைப் போக்க ‘பெட்டர் மிலன்’ என்ற அமைப்பு இத்தாலியின் மிலன் நகரில் வயதானவர்களையும், கல்லூரி மாணவர்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சுமார் 70% மாணவர்கள் வெளியூர்களிலிருந்து வருபவர்கள்தான். மேலும் மிலன் நகரில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான வயதானவர்கள், பெரிய வீடுகளில் தனியாக வசிக்கின்றனர். ஆக தங்குவதற்கு வீடு தேடும் மாணவர்களை இந்த முதியவர்களிடம் அனுப்பி, குறைந்த பணம் கொடுத்து, நிறைய நேரத்தை இவர்களிடம் செலவிடச் செய்கின்றனர்!

தெருவில் உறங்கிய  மக்கள்

சில நாட்களுக்கு முன், 52 நாடுகளில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் உறங்கினர்.
வீடற்று, தெருவில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருப்பது உலகளாவிய பிரச்னையாக மாறி வருகிறது. இதை அரசாங்கத்தின் கவனத்திற்கும், உலக மக்களின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லவே World’s Big Sleep Out  என்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

ஒரே நாளில் காஷ்மீரான ராஜஸ்தான்

ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துவருகிறது. இதனை தொடர்ந்து பாலைவன இடமான இந்த மாநிலம், திடீரென பனிப்பொழிவுடன், சாலை எங்கும் வெள்ளைப் பனியால் மூடி காஷ்மீர் போல காட்சியளித்து வருகிறது. இந்த திடீர் பருவநிலை மாற்றம் சிலரை மகிழ்ச்சியிலும் பலரைப் பயத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மரத்துக்கு ஸ்வெட்டர் அணிவிக்கும் பெங்களூர் மக்கள்

பெங்களூரில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இதனால் ஏழைகளும் சாலையோரம் வசிப்பவர்களும் பனியில் சரியான உடைகள் இல்லாமல் இந்த ஆண்டும் தவிக்கும் நிலை.இச்சூழலில் வெளிநாடுகளில் இதுபோன்ற பனிக்காலங்களில் ஏழைகளுக்காக மரங்களில் ஸ்வெட்டர் தொங்கவிடுவது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவியது.

இதையடுத்து பெங்களூர் இளைஞர்கள் சிலர் புது கோட்கள் வாங்கி, அதை மரத்தில் தொங்க விடத் தொடங்கினர். சில நிமிடங்களிலேயே வறுமையில் வாடும் மக்கள், அதை நன்றியுடன் பெற்றுக்கொண்டனர். இப்போது இந்த டிரெண்ட் பெங்களூர் முழுக்க பரவிவருகிறது.

குப்பையைக் கொடுத்தால் சாப்பாடு இலவசம்!

இந்தியாவில்,  சட்டீஸ்கரை அடுத்த அம்பிகாபூர் என்ற நகரத்தில், முதல் முறையாக ‘கார்பேஜ் கஃபே’ திறக்கப்பட்டுள்ளது. மக்கள் ப்ளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, இங்கு வந்து கொடுத்தால், அதற்குப் பதிலாக சுவையான உணவைச் சாப்பிடலாம்!பசியையும், ப்ளாஸ்டிக் குப்பை
களையும் ஒரே நேரத்தில் ஒழிக்கும் இந்த திட்டத்தை அனைவரும் வரவேற்றுள்ளனர். இதனால் நகரமும் சுத்தமாகி வருவதால், மக்கள் பொறுப்புடனும் செயல்பட்டுவருகின்றனர்.

வீட்டு கேமராவையும் ஹேக் செய்யலாம்

பொதுவாக குழந்தைகளின் பாதுகாப்பிற்காக வீட்டில் கேமரா பொருத்துவதுபெற்றோர்களின் வழக்கமாகி வருகிறது. இந்த பாதுகாப்பு கேமரா மூலம், பெற்றோர்கள் வேலையில் இருக்கும்போது கூட தங்கள் கம்ப்யூட்டரிலும் மொபைலிலும், குழந்தைகளைக் கண்காணித்து, கேமரா மூலம் குழந்தை
யிடம் உரையாட முடியும். பாதுகாப்பு என்றிருந்த இந்த விஷயம் இப்போது ஆபத்தோ என எண்ண வைக்கிறது.

காரணம் அமெரிக்காவில் நடந்த சம்பவம்.ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஹேக் செய்து அங்கிருந்த 8 வயதுச் சிறுமியிடம் முகம் தெரியாத மனிதன் ஒருவன் உரையாடியிருக்கிறான்.பயந்துபோன சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க... அவர்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். விசாரணை நடந்துவருகிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்