ரேப்பிஸ்டுகளின் வாக்குமூலம்!



மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளிகளைச் சந்தித்து தனது குற்றவியல் படிப்பிற்கான முனைவர் பட்ட ஆய்வுக்காக பேட்டி காண திகார்  சிறைக்குச் சென்றார் 22 வயதான மதுமிதா பாண்டே.

‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படம் பார்த்துவிட்டு தனது நண்பரோடு நள்ளிரவில் பேருந்தில் பயணித்த ஒரு பெண், கூட்டுபலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய அந்த சம்பவத்திற்கு ‘நிர்பயா’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தையே தனது முதல் பாடமாக எடுத்து ஆய்வு மேற்கொண்டார் மதுமிதா.

2012ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறை கலாசாரத்தை எதிர்த்து நிர்பயா ஆயிரக்கணக்கான இந்தியர்களை வீதிக்கு அழைத்து வந்தார்.அந்த ஆண்டு பாலின வல்லுனர்கள், ஜி-20 நாடுகளில் பெண்கள் பாதுகாப்பில் மோசமான நாடாக இந்தியாவை மதிப்பிட்டனர். இது ஆண்கள் மேற்பார்வையில் வாழும் சவுதி அரேபிய பெண்களின் நிலையைக் காட்டிலும் மோசமானது.

தில்லியில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது நகரை நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு ஒரு புதிய வெளிச்சத்தில் பார்த்த மதுமிதா, “இந்த மனிதர்களைத் தூண்டுவது எது? இதுபோன்ற ஆண்களை உருவாக்கும் சூழ்நிலைகள் எவை?” என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டார்.

இதற்கான பதிலைத் தேடி திகார் சிறையில் பல வாரங்கள் கழித்தார். அங்கு அவர் சந்தித்த பெரும்பாலான ஆண்கள் படிக்காதவர்கள். ஒருசிலரே உயர்நிலைப் பள்ளி வரை சென்றிருக்கிறார்கள். பலர் மூன்றாம், நான்காம் வகுப்போடு படிப்பைக்கைவிட்டவர்கள்.    

“நான் ஆராய்ச்சிக்குச் சென்றபோது, இவர்களை அரக்கர்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்களிடம் பேசும்போது உண்மையில் சாதாரணமானவர்கள் என்பதை உணர்ந்தேன். அவர்களின் இந்தச் செயலுக்கு வளர்ப்பும், சிந்தனைச் சூழலுமே காரணமாகப் பார்க்கிறேன்...” என்கிறார் மதுமிதா.    

‘‘அதிகம் படித்த இந்தியக் குடும்பங்களில் கூட தனது கணவனின் பெயரை உச்சரிக்கத் தயங்கும், அஞ்சும் பெண்களைக் காண நேரிடுகிறது. இங்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று கடந்துவிட முடியாது. காரணம், எல்லோருமே தராசின் ஒரே தட்டில்தான் நிற்கிறோம். பணம் படைத்தவர், அதிகாரத்தில் உள்ளோர் இதே குற்றத்தைச் செய்வதற்கும், சாதாரண நபர் செய்வதற்குமான வேறுபாடுகள் இருப்பதையும் பார்க்கிறோம்.

பெண்களை அடிபணிந்தவர்களாகப் பார்க்கும் ஆண்கள், ஆண்மை பற்றி தவறான கருத்துகளைக் கற்றுக் கொள்கிறார்கள்...” என்று கூறும் மதுமிதா, ‘‘கற்பழிப்பாளர்களிடம் இயல்பாகவே ஏதோ ஒரு தவறு இருப்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் நமது சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் வேறொரு உலகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் அல்ல. தாங்கள் செய்ததை பாலியல் வன்கொடுமை என்று கூட அவர்கள் உணரவில்லை. சம்மதம் என்றால் என்னவென்று அவர்களுக்குப் புரியவில்லை...” என்கிறார்.

இந்தியாவில், சமூக அணுகுமுறைகள் மிகவும் பழமை வாய்ந்ததாக இருக்கிறது. பாலியல் கல்வி பெரும்பாலான பள்ளிப் பாடத்திட்டங்களில் விடுபட்டிருக்கிறது. பெற்றோர்களும் ஆண், பெண் உறுப்புகள் பற்றியும், செக்ஸ் பற்றியும் தங்கள் குழந்தைகளிடம் உரையாடு வதற்குத் தயங்குகிறார்கள்.

மதுமிதா  சந்தித்த  நபர்களில் பலர் மனம் திருந்துவதாகவும், சிலர் தாங்கள் செய்த தவறை நியாயப்படுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். அதில் ஒருவர் ஐந்து வயது சிறுமியை வன்கொடுமை செய்ததற்கு மோசமானவராக உணர்ந்ததோடு, வெளியே வந்ததும் அந்தப் பெண்ணையே திருமணம் செய்வதாகக் கூறியிருக்கிறார்.   

இந்தப் பிரச்னை நம் ஊரில் மட்டும் நிகழ்கிறது என்று சுருக்கிவிட முடியாது. உலகம் முழுவதும் புற்றீசல் போல் பரவிக் கிடக்கிறது. பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல்… இதற்கான அடிநாதமாக இருக்கிறது. இது போன்ற நபர்களிடம் உலகம் கனிவோடு நடந்து கொள்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

பலர் பார்வையாளராக இருக்கும் சூழலில் ஒருசிலர் வெகுண்டு ஆரம்பத்தில் தங்களது கோபத்தை வெளிப்படுத்து கின்றனர். ஆனால், இது வெறும் சமூகம் சார்ந்த பிரச்னை கிடையாது. ஆழமான மெய்யியல் அணுகுமுறையால் புரிந்துகொள்ளும் போது உண்மையான பிரச்சினையை அடையாளம் காணலாம்.                                  

அன்னம் அரசு