ரத்த மகுடம்-84



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

சிவகாமி தனக்குள் புன்னகைத்தபடி அலட்சியமாகத் திரும்பினாள். கரிகாலனும் சீனனும் அங்கு நிழலோடு நிழலாக மறைந்தபடி நிற்பதைக் கவனித்தாளா... அல்லது ஊகித்தாளா..?தெரியாது.
ஆனால், தன் பேச்சை அவள் நிறுத்தவுமில்லை. யாரோ மறைந்து நின்று நாம் உரையாடுவதைக் கவனிக்கிறார்கள் என எச்சரிக்கையையும் மற்றவர்களுக்குச் செய்யவில்லை.மாறாக தன் முன்னால் நின்றிருந்த சாளுக்கிய, பாண்டிய சேனாதிபதிகளை சிவகாமி உற்றுப் பார்த்தாள்.

‘‘அங்கென்ன பார்வை..? இங்கே கவனியுங்கள்...’’ என்றபடி அவர்களின் கவனத்தை தன் முன்னால் பரப்பப்பட்டிருந்த வெண்மைநிற பட்டுத் துணியின் மீது திருப்பினாள். தன் கையில் இருந்த அரக்கைச் சுற்றியபடியே பேசத் தொடங்கினாள்.

‘‘மகேந்திரவர்ம பல்லவருக்கும் நமது மாமன்னர் இரண்டாம் புலிகேசிக்கும் நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்களுக்கே தெரியும். ‘ஹைஹொளே’ கல்வெட்டு சாளுக்கியர்களின் வெற்றி குறித்து முரசறைந்து சொல்கிறது. பல்லவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வேங்கி நாட்டை இந்தப் போரில்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார்.

ஆனால்...’’நிறுத்தியவள் மீண்டும், தான் வட்டமிட்ட பகுதியிலேயே இன்னொரு வட்டத்தைப் பெரியதாக அரக்கினால் வரைந்தாள்.
‘‘கைப்பற்றிய பகுதியை... வேங்கி நாட்டைச் சுதந்திரமாக ஆளும் பொறுப்பை... தன் சகோதரரான விஷ்ணு வர்த்தருக்கு கொடுத்தார். இப்போதும் வேங்கிப் பகுதியை ஆண்டுவருவது விஷ்ணுவர்த்தர்தான். இதனால் இரு சாளுக்கிய அரசுகள் நிலவுகின்றன. இப்படி ஒரு தேசம் இரண்டாகப் பிரிந்திருப்பது நல்லதல்ல...’’‘‘யாருக்கு..?’’ இடைமறித்தான் சாளுக்கிய உபசேனாதிபதி.

‘‘எதிரிகளுக்கு...’’ சட்டெனப் பதிலளித்தாள் சிவகாமி.
‘‘பல்லவர்களை குறிப்பிடுகிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதி தன் புருவத்தை உயர்த்தினான்.
‘‘இல்லை...’’ சிவகாமி கண் சிமிட்டினாள்.
‘‘பிறகு..?’’ சாளுக்கிய உபசேனாதிபதி உறுமினான்.

‘‘சோழர்களுக்கு சாதகமாகலாம்!’’
சிவகாமி இப்படி சொல்லி முடித்ததும் பாண்டிய சேனாதிபதி கடகடவென சிரித்தான்.‘‘இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது மாறவர்மரே...’’ பெயர் சொல்லி அவரை அழைத்த சிவகாமி, தானே தொடர்ந்தாள். ‘‘இன்று சோழர்கள் குறுநில மன்னர்களாக இருக்கலாம். கையளவு நிலப்பகுதி அவர்களின் ஆளுகையின் கீழ் நிலவலாம். ஆனால், என்றுமே அவர்கள் புலிகள்தான். ஆயிரம் ஆண்டுக்கால குருதி அவர்களின் உடலில் பாய்கிறது. என்றேனும் ஒருநாள் நிச்சயம் பேரரசை ஸ்தாபிப்பார்கள்... அடிபட்டு பதுங்கி வாழும் புலியின் வன்மம் எவ்வளவு ஆபத்தானது என்பதை வேட்டைக்காரர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்...’’

‘‘அப்போது பாண்டியர்களாகிய நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்போம் என்று நினைக்கிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன் உறுமினார்.‘‘நிச்சயம் மாட்டீர்கள். ஏனெனில் சோழர்களும் பாண்டியர்களும் ஜென்மாந்திரப் பகைவர்கள்... யுகம் யுகமாக உங்கள் பகை நிலவுகிறதோ என்றுகூட நான் சந்தேகப்படுகிறேன்... சரி... நடப்புக்கு வருவோம்.

எதிர்காலம் குறித்து நாம் பேசி பொழுதைக் கழிக்க வேண்டாம்... எனது ஊகத்தை தெரியப்படுத்தினேன். கண்டிப்பாக சோழர்கள் வருங்காலத்தில் பேரரசை ஸ்தாபிப்பார்கள் என்ற என் உள்ளுணர்வை அறிவித்தேன். அவ்வளவுதான். மற்றபடி இரு சாளுக்கிய தேசங்கள் நிலவுவது இப்போதைக்கு நமக்கு... அதாவது விக்கிரமாதித்த மாமன்னர் ஆட்சி செய்யும் சாளுக்கிய தேசத்துக்கும் பாண்டியர்களுக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது...’’

சில கணங்கள் அமைதியாக இருந்த சிவகாமி, அரக்கினால் மூன்று முறை பட்டுத் துணியின் மீது தட்டிவிட்டு தொடர்ந்தாள்.
‘‘மாமன்னர் புலிகேசியின் தலைமையிலான சாளுக்கியப் படையை எதிர்கொள்ள முடியாமல் மகேந்திரவர்ம பல்லவர் காஞ்சிக்குள் ஒளிந்து கொண்டார். சாளுக்கியப் படைகள் வேங்கியை கைப்பற்றின. இதன் பிறகும், தான் மறைந்திருப்பது அழகல்ல என மகேந்திரவர்மருக்கு புரிந்தது. தன் படைகளுடன் வெளிப்பட்டு சாளுக்கியப் படைகளை புள்ளலூரில் நேருக்கு நேர் எதிர்கொண்டார். இந்தப் போர் வெற்றி தோல்வி இன்றி முடிந்தது. பல்லவ நிலப்பரப்பு சுருங்கியது. சாளுக்கிய தேசம் விரிவடைந்தது.

ஆம். நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசி பாணர் தலைவரான இரண விக்கிரமனை சிம்பிகைப் போரில் முறியடித்து அவன் நாட்டையே சூறையாடினார். இந்த நேரத்தில்தான் கன்னோசி பேரரசர் ஹர்ஷவர்த்தனர் தென்னாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாவதை அறிந்தார். உடனே புயலென புறப்பட்ட மாமன்னர் இரண்டாம் புலிகேசி, கன்னோசியை சின்னாபின்னமாக்கினார். ஹர்ஷவர்த்தனர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதன் பிறகு நம் மாமன்னர் நினைத்திருந்தால் வடக்கு நோக்கி தன் படைகளை நகர்த்தி மேலும் மேலும் ராஜ்ஜியங்களைக் கைப்பற்றியிருக்கமுடியும்.

ஆனால், பல்லவர்களை வேரோடு வேராக சாய்க்க வேண்டும் என்பதுதான் இரண்டாம் புலிகேசி மாமன்னரின் நோக்கம். எனவே வடதிசை மன்னர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார். இதற்குள் பாணர்கள் மீண்டும் தங்கள் பலத்தை பெருக்கிக் கொண்டு சாளுக்கியர்களை எதிர்த்தனர். தண்டக்கல், முனயத்தூர் என பல்லவ நாட்டுக்கு வடதிசையில் இருந்த ஊர்களில் பாணர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் போர் நடந்தது.

இவை எல்லாம் நடக்கையில் பல்லவ நாட்டில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. புள்ளலூர் தோல்வியைத் தொடர்ந்து மன அமைதியை இழந்த மகேந்திரவர்மர் அதிக நாள் வாழவில்லை. காலமானார். இதன் பிறகு பல்லவ நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நரசிம்மவர்மர், தங்கள் பரம்பரைக்கு ஏற்பட்ட இழுக்கை, அவப்பெயரைத் துடைக்க முடிவெடுத்தார். படைகளைத் திரட்டினார்.

இதே நேரம் பல்லவர்களை நிர்மூலமாக்க நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியும் படைகளுடன் மீண்டும் தெற்கு நோக்கி வந்தார். பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய மூன்று இடங்களிலும் பல்லவர்களும் சாளுக்கியர்களும் நேருக்குநேர் அடுத்தடுத்து மோதினார்கள்.

மூன்று இடங்களிலும் பல்லவர்களின் கையே ஓங்கியது. சாளுக்கியப் படைகளை அவர்கள் ஓடஓட விரட்டினார்கள். ‘யானைக் கூட்டத்துக்குச் சிங்கம் போன்றவனும், நரசிங்கப் பெருமானை ஒத்தவனும், வணங்கா முடிமன்னர் மகுடத்தின் மேல் இருக்கும் சூடாமணியைப் போன்றவனுமான நரசிம்மவர்மன் வெற்றி என்னும் பதத்தை புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின் மீது எழுதினான்’ என பல்லவ தேசம் முழுக்க பேசும்படி அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

பின்வாங்கி பின்வாங்கி ஓடிய சாளுக்கியப் படைகளைத் துரத்திக்கொண்டே வாதாபி வரை பல்லவர்கள் வந்தார்கள். சாளுக்கியர்களின் தலைநகரையே எரித்து தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டார்கள்.இந்தப் படுதோல்விக்கு பழிவாங்கத்தான் நம் மாமன்னர் இரண்டாம் புலிகேசியின் மகனும் நம் பெருமைக்குரிய மன்னருமான விக்கிரமாதித்தர் இப்போது படைதிரட்டி வந்திருக்கிறார்.

முன்பு இப்படி நாம் படைதிரட்டி வந்தபோது மகேந்திரவர்மர் காஞ்சியில் ஒளிந்துகொண்டார். அப்படிப்பட்ட மனிதரின் வம்சத்தை சேர்ந்தவர்தானே இப்போதைய பல்லவ மன்னரான பரமேஸ்வர வர்மர்... எனவே இவரும் ஓடி ஒளிந்துவிட்டார்... என்ன காஞ்சியில் பதுங்காமல் நாட்டையே நம்மிடம் ஒப்படைத்துவிட்டு எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து வாழ்கிறார்.

இப்போது சாளுக்கிய மன்னர்தான் பல்லவ நாட்டையும் ஆள்கிறார். ஆனால், நம் மன்னர் விக்கிரமாதித்தருக்கு இது போதுமானதாக இல்லை. எப்படி நரசிம்மவர்மர் போரில் தங்களைத் தோற்கடித்தாரோ அப்படி சாளுக்கியர்களும் யுத்தத்தில்தான் பல்லவர்களை வீழ்த்த வேண்டும்... அதுதான் தன் தந்தைக்கு, தான் செய்யும் மகத்தான கைம்மாறு என சாளுக்கிய மன்னர் நினைக்கிறார்.

அவர் எண்ணத்தை நிறைவேற்றவே இப்போது நாம் மதுரைக்கு வந்திருக்கிறோம்... நிச்சயம் நம் மன்னரின் கனவு ஈடேறும். அதற்கு நாம் ஓர் இடையூறை சமாளிக்க வேண்டும்...’’ நிறுத்திய சிவகாமி அங்கு நின்றுகொண்டிருந்தவர்களை இமைக்காமல் பார்த்தாள்.‘‘என்ன இடையூறு..?’’ சட்டென சாளுக்கிய சேனாதிபதி கேட்டார்.‘‘இப்போதைய பல்லவ இளவரசர் ராஜசிம்மரை குறிப்பிடுகிறீர்களா..?’’ பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன் படபடத்தார். ‘‘நாங்களும் கேள்விப்பட்டோம்... ராஜசிம்மரின் வீரம் குறித்தும் அவரது கலை ஆர்வம் பற்றியும்... மாமல்லபுரகடற்கரைக் கோயில்களை விட மகத்தான படைப்பை தன் ஆட்சியில் அவர் ஏற்படுத்தப் போகிறாராமே..?’’

‘‘அதற்கு ராஜசிம்மர் பல்லவ அரியணையில் ஏற வேண்டுமே...’’ அலட்சியமாக பதில் சொன்னார் சாளுக்கிய சேனாதிபதி. ‘‘எங்கள் மன்னர் விக்கிரமாதித்தர் தலைமையில் நாங்கள் பெரும் படையாகத் திரண்டிருக்கிறோம்... நிச்சயம் இம்முறை பல்லவர்கள் வேரோடு சாய்க்கப்படுவார்கள்.

அதன் பிறகு புல்கூட முளைக்காது...’’‘‘நல்லது... இந்த நம்பிக்கை உங்களிடம் இருப்பது போருக்கு உதவும்... ஆனால்...’’ மாறவர்மர் சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு சிவகாமியை ஏறிட்டார். ‘‘என்ன இடையூறு என்று இன்னமும் நீங்கள் சொல்லவில்லையே..?’’‘‘ஒரு மனிதன்...’’ நிமிர்ந்து அமர்ந்தபடி சிவகாமி பதிலளித்தாள்.‘‘யார்..?’’ அனைவரும் ஒரே குரலில் கேட்டார்கள்.மெல்ல ஆனால், அழுத்தமாக சிவகாமி பதில் சொன்னாள். ‘‘கரிகாலன்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்