தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்... ஒரு சிறுமியின் மரணமும் ராஜஸ்தானின் அவலமும்!ராஜஸ்தானில் ஐந்து வயதுச் சிறுமி குடிக்கத் தண்ணீர் இல்லாமல் நா வறண்டு இறந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியிருக்கிறது.ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூரைச் சேர்ந்தவர் சுகிதேவி. வயது 60. இவரது மூத்த மகள் வயிற்றுப் பேத்தி அஞ்சலி. இந்த சின்னஞ்சிறு பிஞ்சு தன் பாட்டியுடன் சித்தி வீட்டுக்கு (சுகிதேவியின் இளைய மகள்) கிளம்பிச் சென்றது. ஜலூர் மாவட்டத்தில் உள்ள துலியாவில் இருக்கிறது சுகிதேவியின் இளைய மகள் வீடு.

வண்டி செல்லும் பாதையில் சென்றால் பத்தொன்பது கிலோ மீட்டர் தொலைவு. அவ்வளவு தூரம் நடப்பதற்கு பதிலாக பாலைவன மணல் குன்றுகள், பாறைக்குன்றுகள் வழியே ஏறி இறங்கினால் வெறும் ஒன்பது கிலோமீட்டர்தான் என்பதால் பேத்தியை அந்தக் குறுக்கு வழியில் அழைத்துச் செல்ல விரும்பினார் சுகிதேவி.அடிக்கடி அவர்கள் செல்லும் வழிதான் இது. வழக்கமாக இந்தப் பாதையைக் கடந்து செல்ல இரண்டு பகல்கள் ஓர் இரவு ஆகுமாம். நாற்பது டிகிரி கொதிக்கும் வெயிலில் பாட்டியும் பேத்தியுமாக பகல் முழுதும் நடந்திருக்கிறார்கள்.  வழியில் ஒரு பாலைவன மலையிலேயே இரவைக் கழித்திருக்கிறார்கள்.

அன்று மாலையே சிறுமிக்கு தண்னீர் தாகம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. கையில் எப்போதும் தண்ணீர் கேன் எடுத்துச் செல்வது வழக்கமாம். அன்று கையில் தண்ணீர் எடுக்கவில்லை. அதாவது கிடைக்கவில்லை. இரவு முழுதும் பாட்டியும் பேத்தியும் குடிக்க நீரும் இல்லாமல் உண்ண சோறும் இல்லாமல் ஆளரவமற்ற பாலைவனக் குளிரில் வாடிக் கிடந்திருக்கிறார்கள்.
சோர்வில் உடல் எல்லாம் வற்றிப் போனாலும் மறுநாள்  விடிந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஜலூர் அருகே உள்ள ரோடா என்ற கிராமத்தை நெருங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டருக்கு முன்பு பாட்டியும் பேத்தியும் சுயநினைவின்றி வாடி மயங்கிச் சரிந்துவிட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து அந்த வழியே சென்ற நாக்ஜிராம் என்ற இடையர் இவர்கள் இருவரையும் கண்டிருக்கிறார். அவர் உடனடி யாக தன்னுடைய மகனுக்கு தகவல் சொல்ல, அவர்  அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவருக்கு தகவல் சொல்லி, அவர் காவல்துறையை அழைத்து வந்திருக்கிறார். சிறுமியும் பாட்டியும் அருகில் உள்ள ராணிவாரா அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி அஞ்சலி  உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று அறிவித்தார்கள்.

சிறுமி உயிரிழந்த துயரச் செய்தி மீடியாவில் பரபரப்பாக, ராஜஸ்தான் அரசைக் குற்றம் சாட்டியும் மத்திய அரசைக் குற்றம் சாட்டியும் வாதப் பிரதிவாதங்கள் நடக்கத் தொடங்கியிருக்கின்றன.‘ராஜஸ்தானில் நர்மதா கால்வாய் உள்ளிட்ட திட்டங்களாலும் ஆழ்குழாய்க் கிணறுகளாலும் நபர் ஒருவருக்கு தொண்ணூறு லிட்டர் தண்ணீர் வழங்கும் அளவுக்கு நீர் வளம் நிறைந்திருக்கிறது’ என்கிறார் சம்பவம் நடந்த இடத்தின் தலைமை பொதுப்பணித்துறை அதிகாரி.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வாட், ‘எல்லோருக்கும் குழாய் நீர் வழங்கும் திட்டத்தில் இந்தியாவில் உள்ள 33 மாநிலங்களில் 29வது இடத்தில் ராஜஸ்தான் இருப்பது ஏன்?’ என ராஜஸ்தான் முதல்வரை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.ராஜஸ்தானின் பொதுப்பணித்துறை அமைச்சரோ, ‘பாலைவனத்தை கடந்து செல்பவர்கள் தண்ணீர் எடுத்துச் செல்லவில்லை என்றால் அதற்கு அரசு நிர்வாகமா பொறுப்பு’ என்று அலட்சியமாய் ஒரு கேள்வி கேட்கிறார்.

ராஜஸ்தானின் கிராமப் புறங்களில் உள்ள ஒரு கோடியே ஒரு லட்சம் குடும்பங்களில் வெறும் இருபது லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் தன்னிறைவான தண்ணீர் விநியோகம் கிடைக்கிறது என்கிறது பிஹெச்இடி-யின் கடந்த மாத அறிக்கை. இது மாநில அரசின் செயலின்மைக்கு ஒரு சான்று.

மறுபுறம், ராஜஸ்தான் போன்ற ஒரு கடுமையான வறட்சி நிலவும் மாநிலத்துக்கான குடிநீர்த் தேவைக்கான செலவில் நாற்பத்தைந்து சதவீதம்தான் மத்திய அரசால் ஏற்கப்படுமாம். நாற்பத்தைந்து சதவீதத்தை மாநில அரசும், எஞ்சிய பத்து சதவீதத்தை அந்தந்த கிராமப் பஞ்சாயத்தும் எதிர்கொள்ள வேண்டுமாம். ஒரு சிறிய கிராமப் பஞ்சாயத்தால் எப்படி இந்த நிதிச் சுமையைத் தாங்க முடியும் என்று கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒரு பிரச்னை என்று வந்தால் யார் பொறுப்பேற்பது எனத் தள்ளிவிடுவதில்தான் அரசுகள் மும்முரமாக இருக்கிறதே தவிர, அதைக் களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குத்தான் ஆளில்லை. மறுபுறம் அஞ்சலி போன்ற சின்னஞ்சிறு பிஞ்சுகளின் நிலைதான் கொடூரம். இந்த அவல தேசத்தை நம்பிப் பிறந்த பாவத்துக்கு, அநியாயமாக தங்கள் உயிரை விடவேண்டியதாக இருக்கிறது.

இளங்கோ கிருஷ்ணன்