எஸ்.சி எஸ்.டி உறுப்பினர்களின் விகிதாசாரப் பங்கு பாராளுமன்றத்தில் குறைவாக உள்ளதா..?



பதில் அளிக்கிறார் விழுப்புரம் தொகுதி எம்பியான ரவிக்குமார்

பாராளுமன்றத்தில் எஸ்.சி / எஸ்.டி உறுப்பினர்களின் விகிதாசாரப் பங்கு குறைவாக இருப்பதாகவும்; பல்வேறு குழுக்களில் (Parliamentary Standing Committee) அவர்களின் இருப்பு இல்லை என்பதும் ‘இந்தியாஸ்பெண்ட்’ தளம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை வழியே தெரிய வந்துள்ளது. இது, நாட்டின் மிக உயர்ந்த சட்டமியற்றும் குழுவுக்குள் எஸ்.சி / எஸ்.டி உறுப்பினர்களுக்கு குறைந்த செல்வாக்கை கொண்டுள்ளதா என்கிற கேள்வியை எழுப்புவதோடு, பாராளுமன்றத்தில் பிரச்னைகளை எழுப்ப அவர்களுக்கு வாய்ப்பு உள்ளதா... குழுத் தலைவர்களாக முக்கியமான முடிவெடுக்கும் பதவிகளுக்கு அவர்களுக்கு அதிகாரங்கள் உள்ளதா... அவர்கள் மாறுபட்ட நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்க
ளாக இருக்கிறார்களா… போன்ற கேள்விகளும் எழுகிறது.

இந்தக் கேள்விகளின் அடிப்படையில் விழுப்புரம் தொகுதி எம்பியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான ரவிக்குமாரை சந்தித்தோம்.  பாராளுமன்ற நிலைக் குழுவின் அதிகாரம் மற்றும் செயல் பாடுகள் என்ன..?  சட்டம் இயற்றுவதற்கு மசோதாக்கள் வரும். அந்த மசோதாக்கள் சட்டம் இயற்றுவதற்கு முன் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படும். அந்தத் துறை சார்ந்த நிலைக்குழுக்கள் மசோதாக்களைப் பரிசீலித்து, ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளைக் கொடுக்கும். அப்படி கொடுக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு அந்த மசோதாக்களில் திருத்தம் செய்து புதிய வடிவில் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும். சில சமயம் அரசு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்போது நிலைக்குழுக்களின் பரிந்துரைகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே சட்டங்கள் இயற்றப்படும்.

அந்த நிலைக்குழுக் களிலும் ஆளும் கட்சியினர்தான் அதிகப்படியாக இருப்பார்கள். அதில் மெஜாரிட்டி - மைனாரிட்டி போட்டு எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நிலைக் குழு எதிர்ப்பு தெரிவித்தாலும், அரசு அதை நிறைவேற்றும் சட்டமாக பார்க்கிறது. நிலைக் குழுவுக்கு அதிகாரம் இருந்தாலும் சமீப காலங்களாக அது குறைந்து கொண்டே வருகிறது.  நிலைக்குழு சொல்கிற பரிந்துரைகளை அரசு மற்றும் நிறுவனங்கள் எந்த அளவில் எடுத்துக் கொள்கிறது என்பதிலிருந்துதான் அதன் மதிப்பு இருக்கும்.

நிலைக்குழுக்களின் அறிக்கைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் போது, அந்த குழுக்களுக்கான மதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணிக்கப்படுகிறது. அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பட்டியல் இன மக்களின் கட்சிகள்... இவற்றில் எது பாராளுமன்ற செயல்பாடு களில் பட்டியல் இன  பிரதிநிதி களின்  செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது?பட்டியல் இன கட்சிகள் என்றாலும் எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..? அனுபவத்திற்குத் தகுந்த மாதிரிதான் அந்தக் குழுக்களில் இடம் பெறுவார்கள்.

முதல் முறை உறுப்பினர் என்றால் கற்றுக் கொள்ளும்படி இருக்கும் துறைகளில் நியமிப்பார்கள். எஸ்.சி / எஸ்.டி உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் தேர்வாகிப் போவதென்பது ஒப்பீட்டளவில் குறைவு. சீனியாரிட்டி அடிப்படையில் இரண்டாவது, மூன்றாவது முறை போகும்போது முக்கியமான குழுக்களுக்கு நியமனம் நடக்கும். இந்த மாதிரியான வாய்ப்புகள் பொதுவாக எஸ்.சி / எஸ்.டி உறுப்பினர்களுக்கு தேசிய - மாநில அரசியல் கட்சிகளிலேயே கிடைப்பதில்லை. கட்சிகளில் அவர்களுக்கான அதிகாரப் பரவல் இருந்து, வாய்ப்பு கிடைத்து சீனியாரிட்டியில் போனால்தான் பிரதான குழுக்களுக்குள் போக முடியும், குழுக்களின் தலைவராக முடியும். அல்லது திறமையைப் பொறுத்து இருக்கும். அந்தத் திறமையை நிரூபிக்கவும் பல முறை தேர்வு செய்து வரவேண்டும்.   

நிலைக்குழு விதிகளின் படி உறுப்பினரின் பாராளுமன்ற அனுபவம் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. அப்படி இருக்க பட்டியல் இன பிரதிநிதிகள் தொடர்ச்சி யாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற அல்லது போட்டியிட முடியாத சூழலில், மேற்கண்ட விதிமுறையை எவ்வாறு எதிர்கொள்வது?பட்டியல் இன பிரதிநிதிகள் மட்டுமல்ல, மற்ற எல்லா பிரதிநிதிகளுக்கும் அது குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒரு குழுவில் அறிக்கை வருகிறது என்றால் அதை எப்படி படிக்க வேண்டும்... எப்படி அணுக வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சட்டம் இயற்றும் அவைதான் பாராளுமன்றமும், சட்ட மன்றங்களும். எம்.எல்.ஏ / எம்.பி என்பவர்கள் சட்டம் இயற்றுதல் பற்றிய புரிதலும், அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.

இது இன்று குறைந்து கொண்டே வருகிறது. அரசியல் ரீதியாக எதிர்ப்பது, விவாதம் செய்வது வேறு. ஒரு மசோதாவில் திருத்தம் கொண்டு வருகிறார்கள் என்றால் அதனால் என்ன பாதிப்பு, என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதெல்லாம் அதில் பெரியதாக இருக்காது. இந்தியா முழுக்க தாக்கம் விளைவிக்கக் கூடிய, அந்த சட்டங்கள் - மசோதாக்கள் பற்றிய புரிதல் கொண்ட ஒரு நபர் உறுப்பினராக இருக்க வேண்டும். அந்த மாதிரியான உறுப்பினர்கள் இன்று குறைவாகத்தான் இருக்கிறார்கள். ஓர் உறுப்பினர் போனார் என்றால் எந்த அளவில் அவரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதைப் பார்ப்பதில்லை. மாறாக, ‘இவர் எப்படி வெற்றி பெறுவார், எவ்வளவு செலவு செய்வார்’ என்பதைத்தான் கட்சிகளும் பார்க்கிறது.

பொதுவாகவே உறுப்பினர்களின் தேர்வில் இது மாதிரியான விஷயங்களில் கட்சிகளே ஆர்வம் காட்டாத போது, எஸ்.சி / எஸ்.டி-களுக்கான பிரதிநிதித்துவம் மட்டுமல்ல, ரெஸ்பான்ஸும் குறைவாக இருக்கிறது. நிலைக் குழுக்களில் முக்கியமான இடம் கொடுக்கவில்லை என்பது ஓர் அம்சம் என்றாலும், அப்படி இடம் கிடைத்தாலும் அவர்களின் செயல்பாடு ஒப்பீட்டளவில் குறைகிறது. ரிசர்வ் தொகுதியில் ஓர் உறுப்பினரை நிற்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. இதற்கு மேலாக அதற்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதில்லை. இதுமாதிரி பல விஷயங்கள் இருக்கின்றன.

ஏன் இவர்கள் சரியாகச் செயல்பட முடியவில்லை என்றால், தேசிய - மாநில கட்சிகளில் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்கிற வாய்ப்புகள் அவர்களுக்கு குறைவு.  இதனால் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியாமல், செயல்பாடுகளும் குறைவாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் இந்த உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்றும் பிரதிநிதித்துவம் சரியாக இருப்பது ஜனநாயகத்திற்கு அவசியம். ஜனநாயகத்தை மேம்படுத்த அரசியல் கட்சிகளில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

கட்சிக்குள் பெயரளவில் எஸ்.சி / எஸ்.டி உறுப்பினர்களை வைத்திருந்தால் அவர் அங்கேயும் பெயரளவில்தான் இருப்பார். அப்படி இல்லாமல் செயல்படுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும். கட்சிக்குள் அதிகார பலத்தோடு இருந்தால், நிச்சயமாக பாராளுமன்றத்திலும் அதிகாரமாகச் செயல்பட முடியும். இது கட்சியிலிருந்து துவங்கப்பட வேண்டும். ஏனெனில் கட்சிக்கும் அதற்கும் நேரடி தொடர்பிருக்கிறது.பா.ஜ.க அரசின் பாராளுமன்ற செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன..?

பா.ஜ.க அரசில் மொத்த பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான மதிப்பு குறைந்திருக்கிறது. பாராளுமன்ற விவாதம், முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் சொல்லும் விமர்சனங்களை எடுத்துக் கொள்ளாதது… என எல்லாவற்றிலும் அது வெளிப்படுகிறது. சொல்லப் போனால் பாராளு மன்றம் நடத்தும் நாட்களே குறைந்திருக்கும் நிலையில், அந்த சமயங்களில் கூட மூத்த அமைச்சர்கள் முழுமையாக இருப்பதில்லை. அவர்கள் இருக்கும் போதுதான் எதிர்க் கட்சிகள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பு இருக்கும்.

அவையை அதிக நேரம் நடத்துகிறோம் என்கிற ரெக்கார்டை க்ரியேட் செய்ய நள்ளிரவு வரை நடத்துகிறார்கள். 0 ஹவர் கொடுப்பதும் நள்ளிரவு 11 மணியாக இருக்கிறது. அந்த நேரத்தில் பேச வேண்டும் என்கிறவர்களைத் தவிர மற்ற உறுப்பினர்கள் அவையில் இருப்பதில்லை.இதேபோல் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அல்லது அதற்கு முதல் நாளில்தான் திடீரென மசோதாக்களை அறிமுகம் செய்கிறார்கள். அந்த மசோதாக்கள் மீது விவாதங்கள் ஏதும் இல்லாமல், பெரும்பான்மை இருக்கிறது என அப்படியே நிறைவேற்றுகிறார்கள். இது ஜனநாயகத்தை கொஞ்ம் கொஞ்ச மாக பலவீனப்படுத்துகிறது.
                        
பாராளுமன்றத்தில் 24 துறை சார்ந்த நிலைக்குழுக்கள் உள்ளன. இதில் 16 மக்களவையாலும், 8 மாநிலங்களவையாளும் கையாளப்படுகிறது. Estimates, Public Undertakings, Public Accounts என்று மூன்று நிதி சார்ந்த குழுக்களும் உள்ளன. இதில் துறை சார்ந்த உறுப்பினர்களை மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் தங்களது அவையிலிருந்து பரிந்துரைக்கின்றனர். மூன்று நிதிக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மட்டும் இரு அவைகளின் எம்.பி-க்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 17வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 534 உறுப்பினர்களில், 138 அல்லது 25.4% எஸ்.சி / எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அன்னம் அரசு