3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக இருக்கிறது!தமிழகத்தில் இப்போதுதான் இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தளர்வுடன் கூடிய ஊரடங்கில் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குள் இன்னும் ஆறு முதல் எட்டு வாரத்திற்குள் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும் என எச்சரிக்கிறார் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா.

இந்தியாவில் இரண்டாம் அலை டெல்டா வகை வைரஸால் வேகமெடுத்தது. இப்போது ‘டெல்டா பிளஸ்’ என்கிற திரிபு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே மூன்றாம் அலைக்கு வித்திடும் என்கிற கணிப்புகளும் உள்ளன. இதன் வீரியமும் இரண்டாம் அலையைவிட வேகமாக இருக்கும் என்கிறார்கள். அப்படியானால் இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலையில் அதிகம்பேர் பாதிக்கப்படலாம்.

தவிர, மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்கிற அச்சமும் நிலவி வருகிறது. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை எனப் பல்வேறு இக்கட்டான சூழ்நிலை நிலவியது. இதனால், இறப்பு விகிதம் அதிகரித்து பலரை நிலைகுலையச் செய்தது. இப்போது தடுப்பூசி போடுவது அவசியம் என்கிற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.

ஒருவேளை மூன்றாம் அலை வேகமெடுத்தால் அதற்குத் தமிழகம் தயாராக இருக்கிறதா... ஆக்ஸிஜனும், மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா... என்பதே பரவலான கேள்வி. ‘‘கடந்த மே மாதம் இரண்டாவது அலையின் தாக்கம் வேகமெடுத்தபோது வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் இறக்குமதி செய்தோம். கிரையோஜெனிக் கன்டெய்னர்கள், சிலிண்டர்கள் எல்லாம் வாங்கினோம். இப்ப உள்ளூரிலேயே ஆக்ஸிஜன் தயாரிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிட்டோம்...’’ என்று ஆரம்பித்தார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

‘‘பல அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமில்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்ட் போடப்பட்டிருக்கு. தனியார் மருத்துவமனையில் அவங்களே போட்டிருக்காங்க. உதாரணத்திற்கு, விருதுநகர் டிஆர்டிஓ, ராம்கோ சிமென்ட் நிறுவனம் உள்ளிட்டவற்றில் போட்டிருக்காங்க. புகளூர்ல இருக்கிற காகித ஆலை மூலமாகக் கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் வழியா ஐநூறு படுக்கைகள் அங்கு தயாராகி இருக்கு. கூடங்குளம் அணுஉலை மூலமாக அவங்க ஆக்ஸிஜன் உற்பத்தி பண்ணித் தர்றாங்க. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் போட்டுட்டு வர்றாங்க.

இதுல இரண்டு விதமா செய்றாங்க. ஒன்று அரசின் முயற்சி காரணமா வருது. மற்றொன்று பெரிய தொழில் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் ப்ளான்டை அவர்களின் சிஎஸ்ஆர் எனப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் அடிப்படையில் செய்றாங்க.போனமுறை நமக்கு 650 மெட்ரிக் டன் வரை உச்சபட்ச தேவை இருந்தது. அதை சமாளிச்சோம். இந்த முறை மத்திய அரசுக்கு ஆக்ஸிஜனை எப்படி பிரிச்சுக் கொடுப்பது என்பதில் நீதிமன்றமும் வழிகாட்டியிருக்கு. அதாவது, தொற்றின் அடிப்படையில் வழங்கணும்னு புதிதாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கு.

அதனால, தொற்று எப்படி எந்த சூழலில் வந்தாலும் நம்முடைய உற்பத்தி தவிர மத்திய அரசிடமிருந்தும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். கொரோனா அதிகரிப்பால் நாம் கோவிட் கேர் சென்டர் உருவாக்கினோம். இப்ப அங்கேயும் இந்த ஆக்ஸிஜன் படுக்கைகளைக் கொண்டு வந்திட்டோம். இதுதவிர, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நாளொன்றுக்கு 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து கொடுக்கிறாங்க. அப்புறம், அங்க இரண்டாவது ஆலையிலும் உற்பத்தி துவங்கியிருக்காங்க.

அடுத்து, திருநெல்வேலியில் இரண்டு இடத்தில் புதிதாக ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள் உற்பத்தி துவங்கும் நிலையில் இருக்கு. மூன்றாம் அலையில் ஆக்ஸிஜன் தேவைனு வந்தால் அதை சமாளிக்கக்கூடிய அளவில் எல்லா மாவட்டங்களும் தயாராயிருக்கு. மூன்றாவது அலை வரும்பட்சத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படும்னு ஆளுநர் உரையிலும் சொல்லியிருக்காங்க. அது பட்ஜெட்டில் வந்திடும். அப்புறம், டிட்கோவில் நாம் கேட்டதிலிருந்து முப்பது பேர் புதிதாக ஆக்ஸிஜன் தொழிற்சாலைகள் தொடங்க விண்ணப்பம் கொடுத்திருக்காங்க. அவங்களுடன் டிட்கோ இணைத் தயாரிப்பா இருந்து கூட்டாண்மை முறையில் பண்ண ஆய்வு பண்ணிட்டு இருக்கோம்.

தவிர, சிப்காட்ல நாம் பத்தாயிரம் சிலிண்டர்கள் வாங்கணும்னு சொல்லியிருந்தோம். 5 ஆயிரம் சிலிண்டர்கள் வரை வந்திருக்கு. சிலிண்டர்களும் நிறைய கையிருப்பு இருக்கிறதால பதட்டம் தேவையில்ல. நாம் இரண்டாம் அலையில் செய்திருக்கிற கட்டுமானம், மூன்றாம் அலை வந்தால் பயன்படும். அதாவது, மூன்றாம் அலையில் நாளொன்றுக்கு 850 மெட்ரிக் டன் தேவைனு வந்தால் கூட நம்மால் சமாளிக்க முடியும்...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.  தொடர்ந்து மருத்துவக் கட்டமைப்பு பற்றி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம்.

‘‘முதல் அலைக்கும் ரெண்டாவது அலைக்குமான வித்தியாசம் இரண்டாவது அலையில் வைரஸின் வீரியமும், வேகமும் அதிகம் என்பதுதான். ஆனா, முதல் அலையின்போது கடந்த அதிமுக ஆட்சியினர் கூடுதலாக போடப்பட்ட படுக்கைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை திடீர்னு எடுத்துட்டாங்க. அதனால, இரண்டாம் அலையின் வேகத்திற்குத் தேவையான படுக்கைகளும், ஆக்ஸிஜனும் இல்லாமல் பெரிய திண்டாட்டமா இருந்தது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மே 7ம் தேதி அன்று தொற்றின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 465 ஆக இருந்தது. அடுத்த பதினைந்து நாட்களில், அதாவது 20ம் தேதியைக் கடக்கும்போது 36,184 ஆக உயர்ந்தது. அந்நேரத்துல ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துச்சு. அப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அமைச்சர்களும், அதிகாரிகளும் தீவிரமா செயல்பட்டோம். முதல்வரும் நேரடியாக மத்திய அரசிடம் பேசி ரூர்கேலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து ஆக்ஸிஜனை வரவச்சு அந்தப் பிரச்னையைத் தீர்த்தார்.

அதேநேரத்தில், ரெம்டெசிவர் மருந்தினை தனியார் மருத்துவர்கள் எல்லோருக்குமே எழுதித் தர ஆரம்பிச்சாங்க. அதனால, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொடுக்கப்பட்டது. அங்கே கூட்ட நெரிசல் அதிகமாக சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட ஆறு இடங்களில் ரெம்டெசிவர் மருந்து வாங்கலாம்னு விரிவாக்கம் செய்தோம்.
அப்படியும் கூட்ட நெரிசல் அதிகமாச்சு. உடனடியா, தனியார் மருத்துவமனைகள் தங்கள் தேவைகளை ஆன்லைன்ல சொல்லி அவங்க உதவியாளரை அனுப்பி வாங்கிக்கலாம்னு ஒரு சிஸ்டத்தை ஏற்படுத்தினோம். இதனால், பொதுமக்கள் ரெம்டெசிவர் மருந்துக்காக கால்கடுக்க நிற்கவேண்டிய நிலையைத் தவிர்த்தோம்.

அதுமட்டுமல்ல. அப்ப ரெம்டெசிவிர் மருந்தின் தேவை நமக்கு 20 ஆயிரமாக இருந்தது. மத்திய அரசு கொடுத்தது 7 ஆயிரம்தான். அதையும் முதல்வர், பிரதமரிடம் பேசி அதிகப்படுத்தினார். பிறகு, அந்தத் தட்டுப்பாடும் நீங்கியது. அப்புறம், ஏதாவது ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கை கிடைச்சா போதும்ங்கிற நிலை இருந்தது. அரசு துரிதகதியில் செயல்பட்டு இன்னைக்கு 80 ஆயிரம் கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தியிருக்கோம். இப்ப நம்மகிட்ட சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் படுக்கைகள் இருக்குது. இதில் பெரும்பாலானவை ஆக்ஸிஜன் படுக்கைகள்.

நாம் பதவியேற்ற அன்று ஆக்ஸிஜன் தேவை நாளொன்றுக்கு 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. அதையும் இன்னைக்கு 900 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்த்தியிருக்கோம். இதுமட்டுமில்லாமல் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான சிகிச்சை மையங்கள் 77 இடங்கள்ல திறக்கப்பட்டிருக்கு.மக்களுக்காக ஏற்படுத்தின இந்த மருத்துவக் கட்டமைப்பை எந்த இடத்திலும் எடுக்க வேண்டாம்னு முதல்வர் அறிவுறுத்தியிருக்காங்க. அதனால, மூன்றாவது அலை வந்தாலும் படுக்கைகளுக்கான தட்டுப்பாடோ, ஆக்ஸிஜன் தட்டுப்பாடோ, மருந்துகள் தட்டுப்பாடோ நிச்சயம் இருக்காது.

அதுமட்டுமல்ல. கொரோனா நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த நீரிழிவு நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகிறாங்க. இன்றுவரை 3 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இவங்களுக்குனு தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரம் படுக்கைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருது. கரும்பூஞ்சையைக் குணப்படுத்தும் மருந்துகளான ஆம்போடெரிசின், போசகோனசோல் மருந்துகள் தேவையான அளவு வாங்கி தனியார் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப சப்ளை செய்திட்டு இருக்கோம். இப்ப இதுவும் பிரச்னையில்ல.

கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்பால் வருகிற நோயிலிருந்து காப்பாற்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனி வார்டு ஏற்படுத்தணும்னு இப்ப முதல்வர் சொல்லியிருக்காங்க. அதுக்கான பணிகளும் நடந்திட்டு இருக்கு. அடுத்து வரும் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்கிற அச்சம் இருப்பதால் அதுக்கும் தயார் நிலையில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கென வார்டுகள் ஏற்படுத்தியிருக்கோம். அங்க ஐம்பது முதல் நூறு படுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கு.  

மூன்றாம் அலையை உருவாக்கும்னு சொல்ற டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் ஒன்பது பேருக்குக் கண்டறியப்பட்டுச்சு. இவங்களுக்கு கடந்த மே மாத மத்தியில் சேம்பிள் எடுக்கப்பட்டுச்சு. அதுக்கான ரிசல்ட் இப்ப பெங்களூரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து வந்தது. இதில் ஒருவர் இறந்தபிறகு சேம்பிள் எடுத்து அனுப்பியிருக்காங்க. அவர் தவிர்த்து மற்ற எட்டு பேரும் ரொம்ப நல்லா இருக்காங்க.இந்த டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வுக்கூடமும் ஏற்படுத்த இருக்கோம்.

இப்ப ஆர்டிபிசிஆர் ஆய்வுக்கூடங்கள் தமிழகத்துல 273 இடங்கள்ல இருக்கு. அதுல டெல்டா ப்ளஸ் வைரஸை கண்டறிய முடியாது. அதுக்கான ஆய்வுக்கூடங்கள் இந்திய அளவில் ஐசிஎம்ஆர் நடத்துறது 14 இடங்கள்ல இருக்கு. அதைத் தவிர்த்து மாநில அரசின் சார்பில் எங்கயும் இல்ல. அதனால, தமிழ்நாட்டுல முதல்முறையா சென்னையில் இன்னும் இருபது நாட்களில் அமைக்கலாம்னு ஏற்பாடு செய்திட்டு வர்றோம்.

இதுவரை சுமார் ஒன்றரை கோடிப் பேர் தடுப்பூசி போட்டிருக்காங்க. மூன்றாவது அலை வருவதற்குள் 60 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி போட்டுடணும்னு முதல்வர் பிரதமருக்கு கடிதங்கள் வாயிலாகவும், தொலைபேசியிலும், நேரிலும் வேண்டுகோள் வைத்திருக்கார். இவையெல்லாம் அரசு செய்தாலும் பொதுமக்களும் அரசின் அறிவுறுத்தல்களை கடைப்
பிடிக்கணும். எல்லோரும் தயக்கமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கணும். இரண்டாவது அலை குறைஞ்சிடுச்சுனு அசாதாரணமா இருக்கக்கூடாது. வெளியே போகும்போது கட்டாயம் முகக்கவசம் அணியணும். கைகளை சுத்தமாகக் கழுவணும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கணும்.

ஊரடங்கில் என்னதான் தளர்வுகள் கொடுத்திருந்தாலும் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம்...’’ என உறுதியாகச் சொல்கிறார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

பேராச்சி கண்ணன்