பட்டாசு தொழிற்சாலைகளில் ஏன் வெடி விபத்துகள் ஏற்படுகின்றன..?இருப்பவன் காசைக் கரியாக்குவான்; இல்லாதவன் காசுக்காக உடலைக் கரியாக்குவான்.
இதுதான் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கரிக்காசு’ நாவல் சொல்லவரும் சேதி. பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் விளிம்புநிலை மக்களைப் பற்றி தமிழின் முதல் நாவல் இது. எழுதியிருப்பவர் மு.தமிழ்ச்செல்வன்  என்ற இளைஞர்

சாத்தூருக்குப் பக்கத்தில் உள்ள நடுச்சுரம்பட்டி என்ற கிராமம்தான் தமிழ்ச்செல்வனின் பூர்வீகம். குடும்ப வறுமை காரணமாக சிறு வயதில் தீப்பெட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். பின்பு பட்டாசு தயாரிக்கும் வேலையும் செய்திருக்கிறார். இதுபோக சிவகாசியைச் சுற்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு தன்னார்வ நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இன்று தேனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் மேலாளர் இவர். ‘‘எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஆந்திராவில் உள்ள ஒரு மிட்டாய்க் கடையில் வேலை செய்தேன். படிப்பை இப்படி விட்டுவிட்டோமே என்ற கவலை என்னை வாட்டியது. வேலை செய்துகொண்டே படிக்க முடியும் என்பது தெரியவந்தது. உடனே சிவகாசியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக சொற்ப சம்பளத்துக்கு இணைந்தேன்.

2007 முதல் 2010 வரை அங்கே வேலை செய்தபோது பல வகையான கிராம மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டோரும் அடக்கம். இப்படி போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையில் பெரிய இடி விழுந்தது. 2012ல் என் சித்தப்பாவின் மகன் ஒரு பட்டாசு விபத்தில் இறந்துபோனார். 2014ல் என் பெரியம்மாவின் மகனும் இதேபோன்ற ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இது என்னை மன அழுத்தத்துக்கு இட்டுச்சென்றது.

சிவகாசி களப்பணியின் போதும் இதுபோன்ற மரணங்களை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தச் சம்பவங்கள்தான் இந்த நாவலை எழுதத்தூண்டியது. இதற்கிடையில் பி.ஏ வரை அஞ்சல் வழியில் கற்று தேர்ச்சியானேன்....’’ என்று ஆரம்பித்த தமிழ்ச்செல்வன், சிவகாசி மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிலின் பின்னணியை விவரித்தார்.‘‘இன்றைக்கு சுமார் 5 லட்சம் தொழிலாளர்களாவது பட்டாசுத் தொழிலில் இருப்பார்கள். 100 வருடங்களுக்கு முன்பே சிவகாசியில் பட்டாசு தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
1920களில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. இங்கிருந்தவர்களில் சிலர் கொல்கத்தாவுக்குச் சென்று பட்டாசுத் தொழிலைக் கற்றுக்கொண்டு வந்தனர். தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து தொழிலை சிறிய அளவில் ஆரம்பித்ததாகச் சொல்வார்கள்.

பிறகு 1960களில் இந்தத் தொழில் இங்கே பிரபலமானது. ஆபத்தான தொழில்தான். ஆனால், பசியைப் போக்க வேண்டுமே. அதனால்தான் இல்லாதவர்கள் இதில் ஆர்வம் காட்டினார்கள்; காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...’’ என்கிற தமிழ்ச்செல்வன் பட்டாசுத் தொழிலில் உள்ள ஆபத்துகள் பற்றியும் பகிர்ந்தார்.‘‘பட்டாசுத் தொழிலுக்கு என்று சட்டவிதிமுறைகள் உண்டு. ஆனால், முதலாளிகளும் அதிகாரிகளும் சட்டவிதிகளைக் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் பல விபத்துகள் நடக்கின்றன.

உதாரணத்துக்கு, ஒரு காலத்தில் சின்ன வகை பட்டாசுகள்தான் உற்பத்தியாகின. அப்போது ஆபத்துகள் குறைவு. ஆனால், இன்று 300 வகையான பட்டாசுகள் தயாராவதாக சொல்கிறார்கள். முன்பு தரையில் வைத்து வெடிக்கும் பட்டாசுகள்தான் அதிகம். ஆனால், இன்று ஃபேன்சி பட்டாசுகள் எனும் வாணவேடிக்கை வகையான பட்டாசுகள் வந்துவிட்டன. இவை மிகவும் ஆபத்தானவை. இவை வானத்தில் போகும்போது எழுப்பும் சீற்றத்தை கவனித்திருப்பீர்கள். மண்ணைப் பிராண்டிக்கொண்டு மேலே செல்லும். இதற்குக் காரணம் அதில் உள்ள மணிமருந்து எனும் ஒரு வகை வெடிப்பொருள்...’’ என்றவர் சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘பட்டாசுத் தொழிற்சாலைகள் 3 வகையாக உள்ளன. ஒன்று, நாக்பூர் லைசென்ஸ் வைத்திருக்கும் தொழிற்சாலைகள். இவை 60 முதல் 100 அறைகள் கொண்ட கூடமாக இருக்கும். இரண்டாவது, கலெக்டர் லைசென்ஸ் தொழிற்சாலை. இதில் சுமார் 15 அறைகள் இருக்கும். இறுதியாக டி.ஆர்.ஓ எனும் மாவட்ட வருவாய்த்துறை மூலம் லைசென்ஸ் பெறப்பட்டு நடத்தப்படும் தொழிற்சாலை. இது 6 அறைகள் கொண்ட தொழிற்கூடம். அறைகள் தொழிற்கூடமாக இருந்தால் மட்டும்தான் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பானது.

உதாரணமாக, ஒவ்வொரு அறையிலும் நான்கு புறமும் கதவுகள் இருக்கவேண்டும். கதவின் வாயிற்படிகளில் இருந்துகொண்டுதான் தொழிலாளர்கள் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும். இதன்படி பார்த்தால் ஓர் அறையில் 4 பேர்தான் தொழில் செய்ய முடியும். விபத்துகள் ஏற்பட்டால் உடனே தொழிலாளர்கள் வெளியே ஓடிவிடலாம். ஆனால், இன்றைய தேதியில் ஓர் அறையில் மட்டுமே 8 முதல் 10 பேர் வரை தொழில் செய்கிறார்கள். அதிலும் பல தொழிற்சாலைகள் அதிகமாக விற்பனையாகும் ஃபேன்சி பட்டாசுகளைத்தான் தயாரிக்கின்றன.

அறையில் கூடுதலான ஆட்கள் இருக்கும்போது காற்றோட்டம் இருக்காது. ஆபத்தான ஃபேன்சி பட்டாசு மருந்துகள் சூடாகி வெடிக்கும் சூழலை ஏற்படுத்தும்...’’ என்கிற தமிழ்ச்செல்வன் பட்டாசுத் தொழிலில் நடக்கும் முறைகேடுகளையும் அதனால் உண்டாகும் ஆபத்துகளையும் விவரித்தார்.‘‘சில வருடங்களுக்கு முன்பு வரை தினக்கூலி அடிப்படையில்தான் இந்தத் தொழில் நடந்தது. ஒரு வாரம் வேலை செய்தால் 1000 ரூபாய்வரை சம்பாதிக்கலாம். ஆனால், இன்று பல இடங்களில் ஒப்பந்தமுறை வந்துவிட்டது. இதன்படி ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு எவ்வளவு பட்டாசுகளைத் தயாரிக்கிறார் என்பதைக் கணக்கு செய்து கூலி வழங்கப்படும். அதிகம் தயாரித்தால் அதிக கூலி. இது முதலாளிகள் போட்ட ஆசை வார்த்தை.

இதனால் தொழிலாளிகள் ஏற்கனவே உள்ள நெருக்கடியான அறைகளில் போட்டிபோட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். இலகுவாகப் பற்றிக்கொள்ளும் வெடிமருந்துகள் இந்த போட்டி போடும் களேபரத்தால் ஒன்றுடன் ஒன்று உரசி வெடிக்கும் அபாயமும் இருக்கிறது...’’ என்கிற தமிழ்ச்செல்வன் இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் பட்டியலிட்டார்.‘‘பட்டாசுத் தொழிலுக்கான பயிற்சி மையம் சிவகாசியில் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களால்தான் தொழிலில் ஈடுபட முடியும். ஒருநாள் பயிற்சிதான். ஆனால், போலியான சான்றிதழ்ககளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது முதலாளி கூட்டம்.

உண்மையில் இந்த விபத்துகளில் இறக்கும் ஒரு தொழிலாளி யின் உடலை அடையாளம் காண்பதுகூட பெரிய பிரச்னையாக இருக்கிறது. பல நேரங்களில் உடலானது கரிக்கட்டையாகத்தான் கிடைக்கும். உறவினர்கள் குத்துமதிப்பாகத்தான் உடலை வாங்கிச்சென்று அடக்கம் செய்கிறார்கள். இப்படி வருடத்துக்கு 100 பேராவது இறக்கிறார்கள். காசுக்காக கரிக்கட்டையாகும் மனிதர்களை மனதில் வைத்துத்தான் நாவலுக்கு ‘கரிக்காசு’ என்று பெயர் வைத்துள்ளேன்.

தவிர, சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் சுமார் 20 சதவீதம் கள்ளப்பட்டாசுகள். இது ஒரு குடிசைத் தொழில் போல நடக்கிறது. வெடிமருந்து வாங்குவதிலிருந்து, அதை செய்வது. சந்தைப்படுத்துவது முதற்கொண்டு சிறிய சிறிய வீடுகளில்தான் கள்ளப்பட்டாசு தொழில் நடக்கிறது. இங்கேயும் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படும். ஆனால், பெரிய விபத்துகள் மட்டும்தான்  செய்தி களாகின்றன. பல சிறிய விபத்துகள் மூடி மறைக்கப்படுகின்றன. இந்த அவலங்களைத்தான் ‘கரிக்காசு’வின் பாத்திரங்கள் பேசுகின்றன...’’ என்று முடித்தார்
தமிழ்ச்செல்வன்.

டி.ரஞ்சித்